COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, April 13, 2017

எழுக செங்கொடிகள்!

எஸ்.குமாரசாமி

இயற்கை வளக் கொள்ளைக்கெதிராக எழுக செங்கொடிகள்
தமிழ்நாட்டில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாக்குகளுக்காக கோடி கோடியாய் பணம், தரப்பட்டதாக, தேர்தல் ஆணையம் சொல்கிறது. பணம் கொடுப்பதில், பழனிச்சாமி - தினகரன் வகையறா முதலிடத்திலும், பன்னீர்செல்வம் - மதுசூதனன் வகையறா இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திலும் இருந்ததாக, இகக(மா) குற்றம் சுமத்தியிருந்தது.

இதே காரணங்களால்தான், தஞ்சாவூர் அரவக்குறிச்சி தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டன. திமுகவின் கே.சி.பி.சிவராமனிடம் ரூ.1.84 கோடியும் அஇஅதிமுகவின் அன்புநாதனிடம் ரூ.4.77 கோடியும் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இது சொற்பப்பணம் என்பது நமக்குத் தெரியும்.
இவர்கள் எல்லாம் அம்பானிகள், அதானிகள் அளவுக்குக் கூட சொத்து குவித்திருப்பார்கள் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அப்படியே இல்லாவிட்டாலும், அவர்கள்  பில்லியன் டாலர் பார்ட்டிகள் (பில்லியன் டாலர் = ரூ.6,500 கோடி) எனச் சொல்கிறார்கள்.
எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்? எப்படி சேர்த்தது இவ்வளவு சொத்துக்கள்? முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கும் முதலாளித்துவ அரசியலுக்கும் சாரமான பாலம் ஊழல் என்றும், முதலாளித்துவப் பொருளாதார இயந்திரத்தை உரசல் இல்லாமல் இயங்க வைக்கும் எந்திர எண்ணை (கிரீஸ்) ஊழல் என்றும், இகக (மாலெ) தொடர்ந்து வலியுறுத்துகிறது. நகர்மயமாதலில் தொழில்மயமாதலில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில், பறித்தெடுத்தலின் மூலமான மூலதனத் திரட்சி என்பது, முதன்மை சொத்துக் குவிப்பு வழியாகும்.  சமூகத்தின், மக்களின், விவசாயிகளின், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன. இரண்டாவது வழியில், அரசாங்க கஜானாவை வசதி படைத்தவர்களுக்கு திறந்துவிட்டு, செல்வம் மலை எனக் குவிய வழி செய்கிறார்கள். மூன்றாவது வழி, குறைந்த கூலி கொடுத்து கூடுதல் லாபம் பெறும் வழியாகும். குறிப்பாக இந்த முதல் இரண்டு வழிகளிலும் கொள்ளை அடிக்க சூறையாட வசதி படைத்தவர்களுக்கு உதவுவதன் மூலம் ஊழல் பணம் பெற்று, கழக அரசியல்வாதிகள் சொத்து குவித்துள்ளார்கள். தமிழ்நாட்டின் கழக அரசியல்வாதிகள், டொனால்ட் டிரம்புக்கு சவால் விடுபவர்கள். மாறனிலிருந்து சசிகலா குடும்பத்தினர் வரை, இவர்களே தொழில் அதிபர்கள். தொழிலதிபர் - அரசியல்வாதி என்ற பலம் கொண்டு, அதிகாரிகளை வளைத்துப் போட்டு விட்டார்கள்.
கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, ஆற்று நீர் கொள்ளை, நிலப்பறி என முல்லை, மருதம், குறிஞ்சி, பாலை என்ற நால்வகை  நிலங்களிலும் நடந்த கொள்ளையில், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சகாயம் நவம்பர் 2015ல் கிரானைட் சூறையாடல் பற்றி மட்டும் அறிக்கை தந்தார். 03.03.2017 அன்று, அறிக்கையை வெளியிடக் கோரி, ஒரு பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசு பதில் தர 6 வார கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
23.11.2015 தேதியிட்ட சகாயம் அறிக்கை, பல பரிமாண பேரழிவு - பிரும்மாண்ட மோசடி, முதன்மையான விவசாய நிலங்கள் பாழாதல், நீர்நிலைகள் அழிந்து போதல், பாதைகள் மறிக்கப்படுதல், கோயில்கள் சிதைக்கப்படுதல், பல்லுயிர் பெருக்கம் ஒழிக்கப்படுதல், சூழல் மாசாதல், மக்கள் வஞ்சிக்கப்பட்டு இடம் பெயர்தல், என்ற எல்லா அநீதிகளையும், கிரானைட் மாஃபியா தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் -அதிகாரிகள் கூட்டு 1990களில் இருந்து நிகழ்த்தி வருவதாகவும், இந்தச் சூறையாடலால் அரசுக்கு இழப்பு ரூ.1,09,437.72 கோடி என்றும், குற்றம் சுமத்துகிறது. கூடவே கருப்புப் பணம் வெள்ளையாதல் கருப்புப் பணம் வெளிநாடு போதல், வெள்ளையாய் இந்தியா திரும்புதல் நடந்ததாகவும் சொல்கிறது.
சகாயம் அறிக்கை சொல்லும் காலத்தில், 1991 - 1996, 2001 - 2006, 2011 - 2016 ஜெயலலிதா ஆட்சி, 1996 - 2001, 2006 - 2011 கருணாநிதி ஆட்சி நடந்தன என்பதை நாம் நினைவில் கொள்ளலாம். இதேபோல் ககன்தீப் என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, கடல் மணல் கொள்ளை பற்றி அறிக்கை தந்தார். சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த வழக்கறி ஞர் டாக்டர் சுரேஷ் அறிக்கைப்படி, நெல்லையில் 412.99 ஏக்கரில் 90,29,838 டன், குமரியில் 4.05 ஏக்கரில் 54,446 டன் கடல் மணல் கொள்ளை அடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நீதிமன்றம் சட்ட விரோதக் கொள்ளையர்க்கு மத்திய மாநில அரசுகள் ராயல்டி தர வேண்டாம் எனச் சொல்லி உள்ளது. வைகுந்தராஜனின் வி.வி.மினரல்ஸ் குற்றவாளிக் கூண்டில் நிற்க வாய்ப்பு உள்ளது.
கஜானா கொள்ளைக்கு ஓர் உதாரணம், அய்க்கிய அமெரிக்க சான்மினா கம்பனிக்கு தமிழக அரசின் இண்டஸ்ட்ரீஸ் (எம்அய்பி 1) துறை அரசாணை (எம்எஸ்) எண்.176 நாள் 03.07.2007 மூலம் அரசு அளித்துள்ள சலுகைகளாகும். 19 நாடுகளில் 80 பிளாண்ட் வைத்துள்ள சான்மினாவின் 2006 வருவாய் ரூ.44,000 கோடி. வேலை பார்த்தவர்கள் எண்ணிக்கை 50,000. அந்த நிறுவனம் ரூ.300 கோடி - ரூ.350 கோடி வரை முதலீடு போடும், 4000 பேர் வரை வேலைக்கு வைக்கும் என்ற அடிப்படையில், தமிழக அரசு, அந்த நிறுவனத்திற்கு, 100 ஏக்கர் நிலம் தந்தது. ஓர் ஏக்கருக்கு ரூ.4 லட்சம் மான்யம் தந்தது. முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம் வாங்கவில்லை. மூலதன மான்யம் ரூ.1ணீ கோடி தந்தது. முதலீடு போடப்படும் அளவுக்கு வரிச்சலுகையாம். (அப்படியானால், முதலீடு இல்லாமலே லாபம் என்றாகாதா?) போதாக்குறைக்கு தொழிலாளி வேலை நிறுத்தம் செய்யத் தடையாக, பொதுப் பயன்பாட்டு சேவை என்ற அறிவிப்பு தரப்பட்டது. தொழிலாளி பாதுகாப்புக்கு ஒரு ஷரத்தும் இல்லை. சங்கம் அமைத்தால் நிர்வாகம் பேசுவதில்லை. 10 வருடங்களில் பல நூறு தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டது. 10 வருடங்களுக்கு மேல் தொழிலாளி சர்வீஸ் போட்டும் மாதச் சம்பளம் சராசரியாய் ரூ.12,000 வாங்கக் கூட முடியவில்லை. 4,000 பேருக்கு வேலை என்று உறுதி தந்த நிர்வாகம், 1000 பேருக்குக் கூட வேலை தரவில்லை. பணத்தை முதலீடாகப் போட்டவர்களுக்கு எல்லாம் உண்டு. வாழ்க்கையை இரத்தத்தை வியர்வையை முதலீடாகப் போட்டவர்களுக்கு எதுவும் இல்லை.
மக்கள் பணம் சூறையாடப்பட்டுள்ளது. கழகங்கள் என்ன சம்பாதித்தார்கள் எனத் தெரியவில்லை. சான்மினாவின் ஆதாயங்களோடு ஒப்பிடுகையில், சமூகத்திற்கும் தொழிலாளிக்கும் நஷ்டம்தான் மிஞ்சும்.
ஆற்று நீர், ஆற்று மணல், கனிம வளங்கள், விளைநிலங்கள் விஷயத்திலும் சூறையாடல் நடந்திருக்கிறது. பொதுப் பணித்துறையில் இருந்து எல்லா துறைகளிலும் பிரும்மாண்டமான கொள்ளை நடக்கிறது. மீத்தேன், அனல் மின் நிலையம், இறால் பண்ணை, ஹைட்ரோகார்பன் திட்டங்களும் பறித்தெடுத்தல்களே! மொத்தத்தில், சமூகத்தின் உழைப்பால் எழுந்த பொருளாதாரம், செல்வம், வருமானம், ஒரு சிறு கூட்டத்திடம் குவிந்துள்ளது. ஏகப்பெரும்பான்மை மக்களுக்குச் சொந்தமானவை பறித்தெடுக்கப்பட்டன; அபகரிக்கப்பட்டன. ஒரு பக்கம் மட்டும் செல்வம் குவிவதால்தான், வறுமை மறுபக்கம் பரவுகிறது.

மே நாளில், கோவையில், இயற்கை வளக் கொள்ளைகளுக்கெதிராக அரசு கஜானா கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, எழுக செங்கொடிகள்!
மக்களுக்கான பயன்கள் பறித்தெடுப்பதற்கெதிராக,
மக்களுக்குச் சேர வேண்டியவற்றை தர மறுப்பதற்கு எதிராக எழுக செங்கொடிகள்!

முதியோர், கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்டோர் ஓய்வூதியம், உதவித் தொகை தரப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறார்கள். தேசிய வேலை உறுதித் திட்ட கூலி பாக்கிகள் மறுக்கப்படுகின்றன. ஊரை வளைத்துப் போட்டு கொள்ளையடிக்கும் கூட்டம், ஏழை வீட்டு உலை பற்ற வைக்க, பணம் தர மறுக்கிறது. மத்திய உணவுப் பாதுகாப்பு  சட்டத்திற்கு வரவேற்பு தந்து, ரேஷன் அரிசி, சக்கரை, பருப்பு, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. பாக்கிகள் வழங்கக் கோரி உணவுப் பாதுகாப்பு கோரி எழுக செங்கொடிகள்!
மக்கள் கோரிக்கை சாசனத்தை நிறைவேற்ற வலியுறுத்தி
எழுக செங்கொடிகள்
ஏஅய்சிசிடியுவும் அஇவிகிதொசவும் தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களுக்கான ஒரு சாசனத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். அந்த சாசனம் கோரியது:
  • விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும். உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.20,000 சம்பளம் வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நாள் கூலி ரூ.500, ஆண்டில் 300 நாட்கள் வேலை, குடும்பத்தில் இரண்டு  பேருக்கு வேலை வேண்டும். திட்டம் பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும்.
  • வீடில்லா மக்களுக்கு வீட்டுமனை உரிமை, வீட்டுவசதி உரிமை சட்டபூர்வமான தாக்கப்பட வேண்டும். கோயில், மடம், அறக்கட்டளை, அரசுநிலங்களில் குடியிருக்கும் வறியவர்களுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்பட்டு பட்டா வழங்கப்பட வேண்டும்.
  • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் பணி நிரந்தரம் வேண்டும். நிலையாணைகள் திருத்தச் சட்டம் 2008 மூலம், பயிற்சியாளர்கள், தற்காலிக, தற்செயல் மற்றும் பிற நிரந்தரமற்ற தொழிலாளர்கள், நிரந்தரமாக்கப்படவும், நிரந்தரத் தொழிலாளர்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் 5% தாண்டாமலும் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். பெரும்பான்மை தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட சட்டத் திருத் தம் வேண்டும். முதலீட்டு வருகை, முதலீட்டாளர்களுக்குத் தரப்படும் சலுகைகள் பற்றிய வெள்ளையறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியம் மாதம் ரூ.7,500 வேண்டும். வாரிய நலப்பயன்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகள், சாராயக் ஆலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மனித கழிவகற்றுதல் எந்திரமயமாக்கப்பட வேண்டும்.
  • நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியாரிடமும் உழைக்கும் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அனைத்தும் தழுவிய நிலச் சீர்திருத்தம், விவசாய உள்கட்டுமான மேம்பாடு, கட்டுப்படியாகும் விவசாயம், விளைநிலங்கள் பாதுகாப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி உள்ளிட்ட நீர் உரிமை, நீர்ப்பாசன உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். மீனவர்களின் மீன்பிடி உரிமைகள், வாழ்வுரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். கல்வியும் மருத்துவமும் முழுவதும் அரசின் பொறுப்பாக வேண்டும். வேலையில்லா காலப்படி மாதம் ரூ.7,500 என உயர்த்தப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கை திரும்பப் பெறப்பட வலியுறுத்த வேண்டும்.
  • சாதியாதிக்கக் கொலைகள், குற்றங்களைத் தடுக்க, தண்டிக்க, கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகளைக் களைய, அனைத்து சாதியக் கொடுமைகளுக்கும் முடிவு கட்ட, சாதி சமத்துவம் நிலைநாட்ட, பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தலித் மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் மீட்டுத் தரப்பட வேண்டும். பழங்குடியினர் நில உரிமை, வாழ்வுரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
  • ஊழலை தடுக்க, தண்டிக்க திறன் வாய்ந்த லோக்பால் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். இயற்கைவளக் கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற ஆபத்தான மக்கள் விரோதத் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அவதூறு, தேசத் துரோக சட்டப் பிரிவுகள் நீக்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • பெண் தொழிலாளர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் நிலைமைகளை கண்டறிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரைகள் 6 மாதங்களில் அமலாக்கப்பட வேண்டும். பெண்கள் மீதான வன்முறை தடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

மாணவர் இளைஞர்களின் கவுரமான எதிர்காலத்திற்காக, தலித்துகளின் சுயமரியாதை சமத்துவத்திற்காக, இசுலாமியர் இதர சிறுபான்மையினர் நலன்களுக்காக, பெண்களின் அச்சமற்ற சுதந்திரத்திற்காக, எழுக செங்கொடிகள்!
தமிழ்நாட்டில் குடிக்க பயிர்வைக்க தண்ணீர் இல்லை. ஆனால், நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகள் கூடாது என உச்சநீதிமன்றம் சொன்னதால், ஊர்களுக்குள் டாஸ்மாக் சாராயம் ஆறாகப் பெருகப் போகிறது. எதிர்த்திடும் மக்களை, சசிகலா கும்பலும் காவல் துறையும் வெறி கொண்டு தாக்குகிறார்கள். ஏடிஎஸ்பி ஒருவர் வன்மத்துடன் ஒரு பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார்.
டாஸ்மாக் வேண்டாம் சாராய ஆலைகள் வேண்டாம், மக்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வேண்டும், சசிகலா - பழனிச்சாமி - தினகரன் ஆட்சி பதவி விலக வேண்டும் என எழுக செங்கொடிகள்!
முதலாளித்துவ அரசியலுக்கெதிராக
பாட்டாளி வர்க்க அரசியலுக்காக எழுக செங்கொடிகள்!
உழைக்கும் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுதான், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுகிறார்கள். முதலாளிகள் பணக்காரர்கள் வாக்குகளால் ஒருபோதும் ஆட்சிகள் அமையாது. ஆனால் நமது வாக்குகளை வாங்கி, முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிறார்கள். தயங்காமல் சாதிப் பெரும்பான்மை அரசியலிலும், மதவாத அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். பதவிக்கு வந்தபின், நம்மிடம் சொல்லாமலேயே நமக்கெதிரான, பணக்காரர் களுக்கு ஆதரவான, சட்டங்களைப் போடுகிறார்கள். திட்டம் தீட்டுகிறார்கள். நமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறுகிறார்கள். கொடிய சுரண்டலால் உடல் சோர்ந்து போவதால், அறிவு முடங்குவதால், நாம் ஜனநாயகத்தில் இருந்து, அரசியல் போராட்டங்களிலிருந்து, விலக்கி நிற்க வைக்கப்பட்டுள்ளோம். சாதி, மத, மொழி, இன அடையாளங்களால், கட்சி அரசியலால் சமூகத்தில் நம்மைப் பிளவுபடுத்துகிறார்கள். பணியிடத்திலும், சமூகத்தில் அம்பேத்கர் சொன்னபடியும், உழைப்பாளர்கள் மத்தியில் பிளவு உள்ளது. பணியிடங்களில் குடியிருப்புகளிலும் ஒன்றுபடுவோம்! மக்களை அமைப்பாக்கி களத்தில் இறங்குவோம். மக்கள் மூலம் மாற்றத்திற்கு முயல்வோம். ஜனநாயகத்தை பலப்படுத்துவோம்.
நாமின்றி நாடில்லை, நாடோ நமதில்லை. நாமே நாடாவோம், நாட்டை நமதாக்குவோம் என நாம் நமக்கான வர்க்கமாவோம்.
முதலாளித்துவ அரசியலுக்கெதிராக, பாட்டாளி வர்க்க அரசியலுக்காக, மக்கள் ஜனநாயகத்திற்காக, சோவியத் புரட்சியின் நூறாவது ஆண்டில், நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டில் எழுக செங்கொடிகள்!
வேட்டையாடும் முதலாளித்துவத்திற்கெதிராக
மானுடத்தை மீட்கும் சோசலிசத்திற்காக எழுக செங்கொடிகள்!
உலகத்தில் இரண்டு வாய்ப்புகளே தேர்வுகளே உள்ளன. சந்தைக்காக உற்பத்தி  நடக்க வேண்டும். லாபத்திற்காக உற்பத்தி நடக்க வேண்டும். அதற்காக வளர்ச்சி முன்னேற்றம் வேண்டும். இது ஒரு வாய்ப்பு/தேர்வு. இது வேட்டைக்கார முதலாளித்துவத்தில் வாய்ப்பு/தேர்வு.
மற்றொரு வாய்ப்பு/தேர்வு உண்டு. லாபத்திற்காக அல்லாமல், மக்கள் தேவைக்காக உற்பத்தி நடக்க வேண்டும். சந்தைக்கேற்ப, மனம் போன போக்கில் ஆபத்துகளில் தள்ளும் உற்பத்தி போல் அல்லாமல், திட்டமிட்ட உற்பத்தி நடக்க வேண்டும். எதுவும் வீணாகக் கூடாது. சிந்தாமல் சிதறாமல் சமூக உற்பத்தியின் பயன்கள், செல்வத்தை உருவாக்கியவர்களுக்கே கிடைக்க வேண்டும்.
யாருக்கு வளர்ச்சி என்ன விலை கொடுத்து வளர்ச்சி என அளந்துபார்த்து, மக்கள் நலன்களுக்கான வளர்ச்சிக்கு மட்டுமே, முன் உரிமை தர வேண்டும். லாபமா, மக்களா என்ற கேள்விக்கு, மக்களே முதன்மை என, முடிவாக வேண்டும்.

மதவெறி பரப்பி, பெரும் தொழில் குழும வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தும் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறது. அஇஅதிமுக, ஜெயலலிதாவின் மரணத்துடன் சிதைவு அடைந்து வருகிறது. இரு துருவ அரசியல் இல்லை. திமுக மீதான அதிருப்தி நீங்கவில்லை. மதிப்பிழந்து போன கட்சிகள் தலைவர்கள் பின் ஓடாமல், தகுதியற்றவர்களை தலைவர்களாக ஏற்காமல், மக்கள் நலன் காக்கும் போராட்ட இடதுசாரி அரசியல், போராட்ட செங்கொடிகள், தமது சொந்தப் போராட்டங்கள் மூலம் மக்கள் அரசியலைப் பலப்படுத்துவது ஒன்றுதான், தமிழக மக்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதமாகும்.

லாபங்கள் முதன்மை அல்ல. மக்களே முதன்மையானவர்கள்!
வேட்டையாடும் முதலாளித்துவம் வேண்டாம். மானுடத்தை மீட்கும் சோசலிசமே வேண்டும்!

எழுக செங்கொடிகள்!

Search