COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Thursday, April 13, 2017

தொழிலாளர்களின், விவசாயிகளின்
பொருளாயத நிலைமைகளை மேம்படுத்துவதில்
முதல் அய்ந்தாண்டு திட்டத்தின்
நான்காண்டுகளில் ஏற்பட்ட விளைவுகள்

ஜனவரி 7 - 12, 1933 தேதிகளில் நடந்த மத்திய கமிட்டி மற்றும் மத்திய கட்டுப்பாட்டு கமிசனின் கூட்டு கூட்டத்தில் ஜனவரி 7, 1933 அன்று முதல் அய்ந்தாண்டுத் திட்டத்தின் விளைவுகள்என்ற தலைப்பில் தோழர் ஸ்டாலின் முன்வைத்த அறிக்கையில் இருந்து

தொழிலிலும் விவசாயத்திலும் நாம் கண்டுள்ள வெற்றிகள் பற்றி, சோவியத் ரஷ்யாவில் தொழிலிலும் விவசாயத்திலும் நடந்த முன்னேற்றங்கள் பற்றி நான் பேசினேன். தொழிலாளர்களின், விவசாயிகளின் பொருளாயத நிலைமைகளை மேம்படுத்துவது என்ற நோக்கில் இந்த வெற்றிகளின் விளைவுகள் என்ன? உழைக்கும் மக்களின் பொருளாயத நிலைமைகளில் அடிப்படை மாற்றம் என்ற பொருளில் தொழிலிலும் விவசாயத்திலும் நாம் கண்ட வெற்றிகளின் முக்கிய விளைவுகள் என்ன?

முதலாவதாக, வேலைவாய்ப்பின்மை ஒழிக்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் மத்தியில் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை ஒழிக்கப்பட்டுவிட்டது.
இரண்டாவதாக, கிட்டத்தட்ட எல்லா ஏழை விவசாயிகளும் கூட்டுப் பண்ணை முறைக்குள் கொண்டு வரப்பட்டு விட்டார்கள்; இந்த அடிப்படையில், குலக்குகள், ஏழை விவசாயிகள் என்ற பாகுபாடு அற்றுப்போய்விட்டது; இதன் விளைவாக, கிராமப்புறங்களில் வறுமையும் ஒட்டாண்டித்தனமும் ஒழிக்கப்பட்டுவிட்டது.
மிகப்பெரிய சாதனைகளை நாம் செய்திருக்கிறோம், தோழர்களே! மிகவும் ஜனநாயகமானது என்று சொல்லிக் கொள்ளும் ஒரே ஒரு முதலாளித்துவ அரசாங்கம் கூட கனவு காணக் கூட முடியாததை நாம் சாதித்திருக்கிறோம்.
நமது நாட்டில், சோவியத் ரஷ்யாவில்.... மூன்று ஆண்டுகளுக்கு முன் 15 லட்சம் பேர் வேலைவாய்ப்பற்றவர்களாக இருந் தார்கள். வேலை வாய்ப்பின்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்மை என்பதை மறந்துவிட்டார்கள்; அதன் சுமையை, அந்த பயங்கரத்தை மறந்துவிட்டார்கள். முதலாளித்துவ நாடுகளைப் பாருங்கள். வேலைவாய்ப்பின்மையால் விளையும் பயங்கரத்தைப் பாருங்கள். அந்த நாடுகளில் 3 கோடி முதல் 4 கோடி பேர் வரை வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.....
ஒவ்வொரு நாளும் அவர்கள் வேலை கிடைக்காதா என்று முயற்சி செய்கிறார்கள். வேலை தேடி அலைகிறார்கள். எப்படிப்பட்ட வேலை நிலைமைகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் தேவையற்றவர்கள்’. வசதி படைத்தவர்களுக்கு வேண்டப்பட்டவர்களின், முதலாளிகள், நிலப்பிரபுக்கள் வாரிசுகளின் விருப்பங்களை திருப்திப்படுத்த மிகப்பெரிய அளவில் பொருட்கள் வீணடிக்கப்படும் போது, இப்படி நடக்கிறது.
வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உணவு மறுக்கப்படுகிறது; ஏனென்றால், அதை வாங்க அவர்களிடம் பணம் இல்லை. அவர்களுக்கு இருப்பிடம் மறுக்கப்படுகிறது. ஏனென்றால் வாடகை தர அவர்களிடம் பணம் இல்லை. அவர்கள் எப்படி வாழ்வார்கள்? பணக்காரரின் மேசையில் இருக்கும் மிச்சமீதியில் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள்; தூக்கியெறியப்பட்ட உணவு கிடைக்குமா என்று குப்பைத் தொட்டிகளில் தேடுகிறார்கள். பெருநகரங்களின் குடிசைப் பகுதிகளில் அவர்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலும் நகரங்களுக்கு வெளியில் அட்டைப் பெட்டிகளில் இருந்து, மரப்பட்டைகளில் இருந்து வேலை வாய்ப்பற்றவர்கள் உருவாக்கிய கூடாரங்களில் வசிக்கிறார்கள். இது மட்டுமல்ல. வேலை வாய்ப்பின்மையால் வேலைவாய்ப்பற்றவர்கள் மட்டுமல்ல, வேலை வாய்ப்பு இருக்கிற தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். வேலை வாய்ப்பற்றவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதால், ஆலைகளில் இருப்பவர்கள் நிலையும் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. அவர்களுடைய எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை எழுகிறது. இன்று அவர்களுக்கு வேலை இருக்கிறது; ஆனால், நாளை விடிந்து எழுந்தால் வேலையில் இருந்து விரட்டப்பட மாட்டார்கள் என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாது.
அய்ந்தாண்டு திட்டத்தின் நான்காண்டுகளில் நாம் வேலை வாய்ப்பின்மையை ஒழித்து சோவியத் ரஷ்யாவின் தொழிலாளர்களை வேலைவாய்ப்பின்மை பயங்கரத்தில் இருந்து பாதுகாத்துள்ளோம்.
விவசாயிகள் தொடர்பாகவும் இதேபோல் சொல்ல முடியும். குலக்குகள், ஏழை விவசாயிகள் என்று பிரிக்கப்படுவதை அவர்கள் மறந்துவிட்டார்கள். ஏழை விவசாயிகள் குலக்குகளால் சுரண்டப்படுவதை, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஏழை விவசாயிகள் ஏதிலிகளாக்கப்படும் அழிவை மறந்து விட்டார்கள். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், நமது நாட்டின் மொத்த விவசாய சமூகத்தின் 30% பேர் ஏழை விவசாயிகளாக இருந்தார்கள். அவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக இருந்தது. அதற்கும் முன்பு, அக்டோபர் புரட்சிக்கு முன்பு, விவசாய சமூகத்தின் 60% பேர் ஏழை விவசாயிகளாக இருந்தார்கள். யார் அவர்கள்? விவசாயம் செய்ய அவர்களிடம் விதைகள் இல்லை. அல்லது குதிரைகள் இல்லை. அல்லது விவசாயத்துக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை. அல்லது இவை அனைத்தும் இல்லை. அந்த நாட்களில் அவர்கள் குலக்குகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் கொத்தடிமைகளாக வாழ்ந்தார்கள்; எப்போதும் அரை வயிற்று உணவு மட்டுமே அவர்களுக்குக் கிடைத்தது. சில ஆண்டுகள் முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகள் தெற்கு நோக்கி, வடக்கு காகசுக்கும் உக்ரேனுக்கும் குலக்குகளிடம் வேலை செய்யச் சென்றார்கள். அதற்கும் முன்பு குலக்குகளிட மும் நிலப்பிரபுக்களிடமும் வேலை செய்யச் சென்றார்கள். இன்னும் அதிகம் பேர் ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடி ஆலை வாயில்களுக்கு வந்தார்கள். வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது. ஏழை விவசாயிகள் மட்டுமின்றி, நடுத்தர விவசாயிகளில் பாதி பேர் இதே போன்ற ஏழ்மை நிலைமைகளில் இருந்தார்கள்.
அய்ந்தாண்டுத் திட்டம் நான்காண்டுகளில் ஏழை விவசாயிகளுக்கும் நடுத்தர விவசாயிகளின் அடித்தட்டு பிரிவினருக்கும் என்ன தந்தது? குலக்குகளை ஒரு வர்க்கமாக பின்னுக்குத் தள்ளி ஒழித்தது. குலக் அடிமைத்தனத்தில் இருந்து ஏழை விவசாயிகளையும் நடுத்தர விவசாயிகளின் அடித்தட்டு பிரிவினரையும் விடுவித் தது. அவர்களை கூட்டுப் பண்ணைகளுக்குள் கொண்டு வந்து அவர்களை பாதுகாப்பான நிலையில் வைத்தது. குலக்குகள் - ஏழை விவசாயிகள், சுரண்டுபவர் - சுரண்டப்படுபவர் என்று விவசாய சமூகம் பிளவுண்டு இருக்கும் சாத்தியப்பாட்டை ஒழித்தது. கிராமப்புறங்களில் ஆதரவற்றோர் என்ற நிலையை ஒழித்தது. கூட்டுப் பண்ணைகளில் பாதுகாப்பான நிலைக்கு ஏழை விவசாயிகளையும் நடுத்தர விவசாயிகளின் அடித்தட்டு பிரிவினரையும் கொண்டு வந்து விவசாய சமூகம் அழிந்து போகும், ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் இயக்கப்போக்குக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இப்போது, தொலைதூர இடங்களில் வேலை தேடி ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வீடுகளை விட்டுச் செல்வதில்லை. ஒரு விவசாயியை அவரது சொந்த கூட்டுப் பண்ணைக்கு வெளியே வேறு இடத்தில் வேலைக்கு அனுப்ப வேண்டும் என்றால், இப்போது அந்தக் கூட்டுப்பண்ணையுடன் ஒப்பந்தம் போட வேண்டும். அத்துடன் அந்த கூட்டுப் பண்ணை விவசாயிக்கு ரயில் கட்டணம் தர வேண்டும். ஆலை வாயில்களில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் காத்துக் கிடப்பது இப்போது நமது நாட்டில் நடப்பதில்லை. இப்போது விவசாயி ஒரு பாதுகாப்பான நிலையில் இருக்கிறார். அவர், ட்ராக்டர்கள், விவசாய கருவிகள், விதைக்கான நிதி, வைப்பு நிதி ஆகியவை கொண்ட ஒரு கூட்டுப் பண்ணையின் ஓர் உறுப்பினர்.
இதைத்தான் அய்ந்தாண்டுத் திட்டம் ஏழை விவசாயிகளுக்கும் நடுத்தர விவசாயிகளின் அடித்தட்டு பிரிவினருக்கும் தந்தது.
தொழிலாளர்களின் விவசாயிகளின் பொருளாயத நிலைமைகளை மேம்படுத்துவதில் முதல் அய்ந்தாண்டு திட்டம் அடைந்த முதன்மையான வெற்றிகளின் சாரம் இதுதான்.
தொழிலாளர்களின் விவசாயிகளின் பொருளாயத நிலைமைகளை மேம்படுத்துவதில் அடைந்த முதன்மையான வெற்றிகளின் விளைவால், முதல் அய்ந்தாண்டு திட்ட காலத்தில் நாம் பின்வருவனற்றை கொண்டு வந்துள்ளோம்:
அ) 1928 நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் பெருவீத ஆலைகளில் தொழிலாளர்கள், பிற ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளோம். இந்த விசயத்தில் அய்ந்தாண்டு திட்டம் 57% கூடுதலாக நிறைவேற்றப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.
ஆ) 1932ல் நாட்டின் வருமானம் 45,100 மில்லியன் ரூபிள்களாக அதிகரித்துள்ளது - அதனால், தொழிலாளர்களின், விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது - இது 1928ல் இருந்ததை விட 85% கூடுதல்.
இ) 1928 நிலைமைகளுடன் ஒப்பிடுகை யில் பெருவீத ஆலைகளில் தொழிலாளர்கள், பிற ஊழியர்களின் சராசரி ஆண்டு சம்பளம் 67% அதிகரித்துள்ளது. இந்த விசயத்தில் அய்ந்தாண்டு திட்டம் 18% கூடுதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈ) 1928 நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் சமூகக் காப்பீட்டு நிதி 292% அதிகரித்துள்ளது. (1928ல் 1050 மில்லியன் ரூபிள். 1932ல் 4120 மில்லியன் ரூபிள்). இங்கு அய்ந்தாண்டு திட்டம் 111% கூடுதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
உ) முக்கியமான ஆலைகளின் தொழிலாளர்களின் 70% பேருக்கு உணவளிக்கும் விதம் பொது உணவுக் கூடங்கள் அதிகரித்துள்ளன. இங்கு அய்ந்தாண்டு திட்டம் 500% கூடுதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் விவசாயிகளின் பொருளாயத தேவைகளை முழுமையாக நிறைவேற்றிவிட்ட நிலையை நாம் இன்னும் எய்தவில்லை என்பது உண்மைதான். அடுத்த சில ஆண்டுகளிலும் அது முடிந்துவிடாது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் விவசாயிகளின் பொருளாயத நிலைமைகள் மேம்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையை நாம் அடைந்துவிட்டோம் என்பதில் கேள்விக்கு இடமில்லை. சோவியத் ஆட்சியின் எதிரிகளுக்கு, முதலாளித்துவ பத்திரிகைகளின் சில பிரதிநிதிகளுக்கு - அவர்களின் மாஸ்கோ நிருபர்களுக்குக் கூட - அபிசினியாவின் பேரரசனுக்கு உயர்கணிதம் பற்றி எவ்வளவு தெரியுமோ அதை விட அதிகமாக நாடுகளின் பொருளாதாரம், உழைக்கும் மக்களின் நிலை மைகள் பற்றி எதுவும் தெரியாத அவர்களுக்கு, இந்த விசயத்தில் அய்யங்கள் எழலாம்.
முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களின் விவசாயிகளின் பொருளாயத நிலைமை  என்ன?
அதிகாரபூர்வ விவரங்களைப் பார்ப்போம்.
முதலாளித்துவ நாடுகளில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை பேரழிவுமிக்க விதத்தில் அதிகரித்துவிட்டது. அதிகாரபூர்வ விவரங்கள்படி அய்க்கிய அமெரிக்காவில், உற்பத்தித் தொழிலில் மட்டும் 1928ல் 85,00,000 என இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 1932ல் 55,00,000 என குறைந்துவிட்டது. அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு தரும் விவரங்கள்படி, எல்லா தொழில்களுமாகச் சேர்த்து அய்க்கிய அமெரிக்காவில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 1932ல் 1 கோடியே 10 லட்சம். அதிகாரபூர்வ விவரங்கள்படி பிரிட்டனில், 1928ல் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 12,90,000. 1932ல் இது 28,00,000 என அதிகரித்தது. அதிகாரபூர்வ விவரங்கள்படி ஜெர்மனியில், 1928ல் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 13,76,000. 1932ல் இது 55,00,000 என அதிகரித்தது. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் இதுதான் நிலைமை. மேலும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் ஒரு விதியாக வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும்; முதலாளித்துவ நாடுகளில் வேலை வாய்ப்பற்றோரின் மொத்த எண்ணிக்கை மூன்றரை கோடியில் இருந்து நான்கு கோடி இருக்கும்.
தொழிலாளர்களின் கூலியும் திட்டமிடப்பட்டவிதத்தில் வெட்டப்படுகிறது. அதிகாரபூர்வ விவரங்கள்படி, அய்க்கிய அமெரிக்காவில் சராசரி மாத ஊதியம், 1928 நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் 35% வெட்டப்பட்டுவிட்டது. இதே காலகட்டத்தில் பிரிட்டனில் 15%, ஜெர்மனியில் 50% கூலி வெட்டப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு தரும் விவரங்கள்படி, 1930 - 1931ல் கூலி வெட்டால் அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்கள் 35,000 மில்லியன் டாலருக்கும் மேல் இழந்துவிட்டனர்.
பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் ஏற்கனவே குறைவாக இருந்த தொழிலாளர் காப்பீட்டு நிதி கணிசமான அளவு குறைந்துவிட்டது. அய்க்கிய அமெரிக்காவிலும் பிரான்சிலும் வேலை வாய்ப்பற்ற கால காப்பீடு என்பது இல்லை. அல்லது ஏதோ ஓரளவு இருக்கிறது. விளைவாக, வீடற்ற தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் எண்ணிக்கை, குறிப்பாக அய்க்கிய அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகளின் நிலைமைகளும் மேலானவையாக இல்லை. விவசாய நெருக்கடி விவசாயத்தை பெரிதும் பாதிக்கிறது; இதனால் அனைத்தையும் இழந்த விவசாயிகள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

சோவியத் ரஷ்யாவின் உழைக்கும் மக்க ளின் பொருளாயத நிலைமைகளை முன்னேற்றுவதில் அய்ந்தாண்டு திட்டத்தின் நான்காண்டுகளில் கொண்டு வரப்பட்ட விளைவுகள் அப்படிப்பட்டவை.

Search