COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Friday, March 17, 2017

தலையங்கம்

போராட்டக் களங்களில் தமிழக மக்கள்
ஆளும் தகுதியை இழந்துவிட்ட மத்திய, மாநில ஆட்சியாளர்கள்

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஆளும் தகுதியை இழந்து விட்டார்கள் என்று சமீபத்திய தமிழ்நாடு மிகத் தெளிவாக ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் விவசாயிகள், மீனவர்கள், அவர்களுக்கு ஆதரவாக மாணவர், இளைஞர், பொது மக்கள், அறிவாளிப் பிரிவினர், கலைத்துறையினர் என தமிழ்நாட்டின் வீதிகளும் வெளிகளும் போராட்டக்காரர்களால் நிறைந்திருக்கின்றன. பலவீனமான மாநில அரசுக்கு எதிராக மட்டுமின்றி பலமான மத்திய அரசுக்கு எதிராகவும் வலுவாக, விடாப்பிடியாக தமிழக மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.

மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை செல்வாக்கை இழந்துவிட்ட முதலாளித்துவ கட்சிகள், தங்கள் வழக்கமான பாராமுகம், மழுப்பல்கள் ஆகியவற்றை வேறு வழியின்றி கைவிட்டு மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். போராடுகிற சாமான்ய மக்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல், பெரும்எண்ணிக்கையில் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகும் பிரிவினருடன் அவர்களுக்கு ஆதரவாக மற்றவர்களும் அணி திரண்டு போராட்டக் களத்தில் நிற்பதால், காவல்துறையை ஏவி தங்கள் வழக்கமான ஒடுக்குமுறை பாணியில் போராட்டத்தை ஒடுக்கவும் முடியாமல் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் திணறுகின்றனர். மக்கள் எழுப்புகிற பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கவில்லை என்றாலும் போராட்டக் களத்துக்கு நேரில் சென்று போராடும் மக்களுடன் தரையில் அமர்ந்து சமாதானம் பேசுகின்றனர். பிரச்சனைகள் தீர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் அளிக்கின்றனர். மோடி அரசு, தமிழ்நாட்டின் மக்கள் போராட்டங்களை கண்டும் காணாமல் நகர முடியவில்லை.
ஆயினும், மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மக்கள் போராட்டங்கள் முன் தங்கள் கார்ப்பரேட் விசுவாசத்தை கை விட்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. நெடுவாசலுக்குச் செல்பவர்களை கைது செய்வது, நெடுவாசலுக்கு ஆதரவு போராட்டங்கள் என்றால் அனுமதி மறுப்பது என காவல் துறையும் தமிழக அரசும் அக்கம்பக்கமாக தமது ஒடுக்குமுறை முகங்களை காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
மத்திய பாஜக தனது தந்திரமான விஷம வாதங்களை முன் நகர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் மக்களின் 22 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டுக்கு நன்மை விளையும் என்றால் ஒரு பகுதியை தியாகம் செய்வது தவறில்லை என்று இல.கணேசன் ஒரு பக்கம் சொல்ல, போராட்டத்தைக் கைவிடுங்கள், அமைச்சருடன் பேச நேரம் வாங்கித் தருகிறேன் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார். மாநில அமைச்சர் விஜய பாஸ்கர், திட்டத்துக்கு எந்த விதமான அனுமதியும் தமிழ்நாடு அரசாங்கம் தராது என்று சொன்னதன் அடிப்படையில், மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுவிட்டது என்று மத்திய அரசோ, தமிழக பாஜக தலைவர்களோ எந்த உறுதியும் தராத பின்னணியில், மாணவர்களின் தேர்வு நேரத்தை கணக்கில் கொண்டு, நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மறுபக்கம் திட்டத்துக்கு எதிராக நல்லாண்டார்கொல்லையில் 24ஆவது நாளாக, வடகாட்டில் 7ஆவது நாளாக பகுதி மக்கள் போராட்டத்தைத் தொடர்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாலப்பூர் கோயில் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ள ஆழ்துளை குழாயில் இருந்து புகை வெளியே வருவதாகவும் மக்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படுவதற்கு முன்பு அரசும் நிறுவனமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.
நெடுவாசல் போராட்டத்திலும் ஓர் உயிரை மத்திய, மாநில அரசுகள் பலிகொண்டுவிட்டன. ஒப்பாரி போராட்டம் நடத்திய பொன்னம்மாள் அன்று மாலையே மரணமுற்றுவிட்டார்.
பாஜககாரர்கள் கூடன்குளத்தையும் நெடுவாசலையும் ஒப்பிடுகிறார்கள். கூடன்குளம்  நல்ல திட்டம், அதற்கும் எதிர்ப்பு வந்தது, இப்போது நல்ல திட்டமான ஹைட்ரோகார்பனுக்கும் எதிர்ப்பு வருகிறது என்கிறார்கள்.
இந்தத் திட்டங்களால் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், எதிர்காலம் என அனைத்தும் நாசமாகிப் போகும், எனவே இரண்டு திட்டங்களையும் தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள் இரண்டு திட்டங்களிலும் உடனடி மற்றும் எதிர்கால ஆபத்துகள் உண்டு என்பவை பொதுவானவை. ஆனால், திட்டங்களின் தன்மையும் அவற்றின் உடனடி மற்றும் எதிர்கால ஆபத்துகளும் வேறு வேறு. 
நாம் இன்னும் கூட போபால் விஷ வாயுக் கசிவின் விளைவுகளை அனுபவித்துக் கொண் டிருக்கிறோம். எங்கிருந்தோ வந்தான். ஆலை அமைத்தான். விஷக்காற்றை பரவவிட்டான். நச்சுக்காற்றை சுவாசித்த பலர் சுருண்டுபோய் மாண்டுபோனார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அழிந்து கொண்டிருந்தபோது, கொலைகாரனை பிடித்து வைத்து, நட்ட ஈடு வாங்கிக் கொண்டு சிறையில் அடைக்க வேண்டிய ஆட்சியாளர்களே அந்த கொலைகாரனை பத்திரமாக அனுப்பி வைத்தார்கள். இன்று அடுத்த தலைமுறையும் பாதிப்புக்கு உள்ளாகி தீர்வு கிடைக்காமல் தவிக்கிறது. அழித்தவன் சொகுசு பங்களாவில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து விட்டு செத்துக் கூட போய்விட்டான்.
கூடன்குளத்தில் உள்ள அணுமின்நிலையம் ஆபத்துக்கு அப்பாற்பட்டது என்று எந்த விஞ்ஞானியாவது சான்றிதழ் தந்துவிட முடியுமா? போபாலில் இருந்து, பாடம் கற்காத நாம் புகுஷிமாவில் இருந்தாவது பாடம் கற்க வேண்டாமா? விரட்டி விரட்டி ரூபெல்லா தடுப்பூசி போடுகிறார்களே, அணுஉலை விபத்தைத் தடுக்க வழி கண்டுபிடித்துள்ளார்களா?
அணுக் கழிவை என்ன செய்கிறார்கள், என்று இது வரை வெளிப்படையாக எதுவும் சொல்லப்படவில்லை. என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. இன்னும் கூட கழிவை அகற்ற வாளி தொழில்நுட்பம்தான் நம்மிடம் இருக்கிறது. இந்த நிலையில் விபத்து ஏற்பட்டால் தமிழகமே அழிந்துபோகும். இதுதான் யதார்த்தம். இந்த அழிவான யதார்த்தம் வேண்டாம் என்றுதான் இன்னும் கூட தமிழக மக்கள் சொல்கிறார்கள்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தின் அருமை பெருமை பற்றியும் பாஜக தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு மின் உற்பத்தி நடப்பதால்தான் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறைக்கு முடிவு கட்டப்பட்டு தொழிலுக்கு தாராளமாக மின்சாரம் வழங்கப்படுகி றது, தொழிலாளர்கள் வாழ்க்கை செழிக்கிறது என்கிறார்கள். அட அறிவாளிகளே, இப்போதுதான் பிரதமரைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி கூடன்குளத்தில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரமும் தமிழ்நாட்டுக்கே வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அங்கு உற்பத்தி என்ற ஒன்று சீராக துவங்கும் முன்பே, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறி விட்டது என்று ஜெயலலிதா அறிவித்துவிட்டார். தமிழ்நாட்டுக்கு தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் விலை தந்து மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நடப்பு.
காங்கிரஸ் காலத்தில் துவக்கப்பட்டு அமலாக்கப்பட்ட திட்டம்தானே கூடன்குளம் அணுமின் நிலையம். இப்போது அதை ஏன் பாஜககாரர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும்? கார்ப்பரேட் நலன் தான் பாஜகவுக்கும் முக்கியம் என்பதற்கு இதை விட உதாரணம் இன்னும் என்ன வேண்டும்?
அணுஉலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். அந்த ஆபத்தின் மீதுதான் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆபத்து இல்லை என்பதால், இருக்கிற ஆபத்துகள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் கூடன்குளம் அணுஉலை நியாயமாகி விடாது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தில் நீரியல் விரிசல் முறையைத்தான் பயன்படுத்தப் போவதாகவும், அதாவது மீத்தேன் எடுத்திருந்தால் எந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பார்களோ, அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எரிவாயு எடுக்கப் போகிறார்கள் என்றும் மீத்தேன் திட்டத்தால் என்ன பாதிப்புகள் இருக்குமோ அதே பாதிப்புகள்தான் இதிலும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மீத்தேன் வேண்டாம் என்று அதனால்தான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். திட்டமும் ரத்தானது. இப்போதும் அதே நிலைதான்.
அய்ம்பது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு தமிழ்நாடு வறட்சி மாநிலம் என்ற பெரும்பேற்றை பெற்று விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே நெடுவாசலில்தான் சற்று பசுமை இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள். அதனை உடனடியாக நிச்சயமாக இந்தத் திட்டம் அழித்து விடும். நிலத்தடியில் இருக்கும் எரிவாயுவை எடுக்கும்போது நிலத்தடி நீர் பாதிக்கப்படும், நிலத்துக்கடியில் ஆழத்தில் வெற்றிடம் ஏற்பட்டால் அதற்குள் கடல்நீர் புகும் என்பதை விஞ்ஞானிகள் சொல்ல வேண்டியதில்லை. சூரியனைப் பார்த்து சரியான நேரம் சொல்லும் நமது கிராமத்து மக்களின் அனுபவம் போதும்.
ஹைட்ரோகார்பன் எடுப்பது உடனடியாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கிற பிரச்சனை. பகுதியில் சிலர் புற்றுநோயால் இறந்து போனார்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். பாஜக தலைவர்கள் இந்தச் சாவுகளை கூட கொச்சைப்படுத்துவார்கள். உடனடியாக நிலம் பாழாகும். நிலத்தடி நீர் பாழாகும். பிறகு விவசாயம் பாழாகும். உணவு இல்லாமல் போகும். பிறகு மக்கள் வாழ்க்கை பாழாகும். புற்றுநோய் வந்து சாவதற்கு முன், பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டோ, அதிர்ச்சியிலோ செத்துவிடுவார்கள். இதற்கு மேல் என்ன நாசம் நடந்தால் ஆபத்து என்று பாஜக தலைவர்கள் ஒப்புக்கொள்வார்கள்?
வளர்ச்சித் திட்டங்களை தடுப்பதே இங்கு சிலருக்கு வேலையாகப் போய்விட்டது என்று பாஜக தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். அய்யா எங்களுக்கு எங்கள் விவசாயம் வளரட்டும், எரிவாயு வேண்டாம் என்கிறார்கள் விவசாயிகள். அவர்கள் நிலம். அவர்கள் விருப்பம். விவசாயம் அவர்களுக்கு வாழ்வாதாரம் மட்டுமல்ல. அது அவர்களது வாழ்விலும் உணர்விலும் கலந்தது. அது அவர்களுக்கு பெருமிதம் தருவது. அது அவர்களுக்கு உயிர் போன்றது. அதனால்தான் விவசாயம் பொய்த்தால் விவசாயி உயிரை விட்டுவிடுகிறான். நெடுவாசல் மக்கள், உங்கள் ஹைட்ரோகார்பனால் வரும் வருமானத்தை விட எங்கள் விவசாயத்தால் கிடைக்கும் வாழ்வும் வளமும் மகிழ்ச்சியும் பரவசமும் முக்கியம் என்கிறார்கள்.
ஹைட்ரோகார்பன் உடனடி ஆபத்து. வாழ்வை இன்றே, இப்போதே நாசமாக்குவது. அது எங்களுக்கு வேண்டாம். ஏற்கனவே எங்களை கூடன்குளம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் உற்பத்தியை நிறுத்துங்கள். அடுத்தடுத்த அணு உலைகள் அமைக்கும் பணிகளை நிறுத்துங்கள். கூடன்குளத்தை அமலாக்குவதில் வெற்றி கண்டுவிட்டதால் நெடுவாசலையும் வெற்றி கொண்டு விடலாம் என்று கனவு காணாதீர்கள்.
நெடுவாசல் மக்கள் பொறுமை காக்கிறார் கள். நாங்கள் விஞ்ஞானிகள் அல்ல, விவசாயிகள், எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்காதீர் கள், எங்களை வாழ விடுங்கள் என்று கேட்கிறார்கள். அரசாங்கத்திடம் எங்களை வாழ விடுங்கள் என்று சாமான்ய மக்கள் கெஞ்சும் நிலை வந்து விட்டதற்காக பாஜக தலைவர்கள் வெட்கப்பட வேண்டும். ஆனால் அவர்களது பதில் வினை தலைகீழானதாக இருக்கிறது. போராட்டத்தை தூண்டி விடுபவர்கள் பின்னணி பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தீவிரவாத சக்திகள் போராட்டத்துக்குள் நுழைந்துவிட்டனர் என்றும் தேசவிரோதசக்தி என்ற விஷம ஆயுதத்தை எடுக்கிறார்கள்.
இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டுப் பேசுவதில் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தவருகிற செய்திகள் உள்ளன. கூடன்குளம் பிரச்சனையிலும் இப்படித்தான் எதிர்ப்புக்கள் எழுந்தன, எப்படியும் நாங்கள் அமலாக்குவோம், எதிர்ப்பு போராட்டம் நடத்துவது வீண், அந்தப் போராட்டத்தில் தேசத்துரோக வழக்கு முதல் பல்வேறு ஒடுக்குமுறை ஏவப்பட்டதுபோல் இப்போதும் சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள்.
நாங்கள் உறுதியாக இறுதி வரை போராடுவோம் என்கிறார்கள் நெடுவாசல் மக்கள். கூடன்குளத்தில் முதல் கட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதைப் போல் நெடுவாசல் ஆகி விடாது என்பதையும் பாஜகவினருக்கு நெடுவாசல் மக்கள் உணர்த்துவார்கள்.
உத்தரபிரதேச வெற்றி தந்த துணிச்சலில் எச்.ராஜா தலைமையில் கிறித்துவ நிறுவனங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் இந்துத்துவ கும்பல் போராட்டம் நடத்துகிறது. மக்கள் போராட்டங்கள் ஒன்றே மாற்று என்று முன்செல்பவர்களுக்கு, கருமேகங்களுக்கு நடுவில் தெரியும் போராட்ட ஒளிக் கீற்றுக்கள் நம்பிக்கை தருகின்றன.

நெடுவாசலில் பகுதி மக்களும் அவர்களுக்கு ஆதரவாக பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டு 15 நாட்களுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கிற போராட்டத்தில் மார்ச் 2 அன்று இகக மாலெ புதுக்கோட்டை மாவட்டத் தோழர்கள் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் விஜயன், ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைக்கு கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.
மார்ச் 4 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் அவிகிதொச குழுவும் மார்ச் 6 அன்று புரட்சிகர இளைஞர் கழகத்தின் குழுவும் நெடுவாசலுக்குச் சென்று போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தன.

பெண்களின் போராட்ட தினமான மார்ச் 8 அன்று ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று போராடிக் கொண்டிருந்த பொன்னம்மாள் மரணமுற்ற செய்தியறிந்து புதுக்கோட்டை மாவட்ட இகக மாலெ மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி தலைமையிலான குழு மார்ச் 9 அன்று நெடுவாசலுக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியது. மார்ச் 11 அன்று புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட இகக மாலெ தோழர்கள் கொண்ட குழு 24ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிற நல்லாண்டார்கொல்லைக்குச் சென்று போராட்டக்காரர்களைச் சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது.

Search