COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Friday, March 17, 2017

மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களால்
முற்றுகையிடப்பட்டுள்ள கிராமப்புற வறிய மக்கள்

அமிர்தலிங்கம்

ஜன்தன், ஆதார், மொபைல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நாட்டின் வறிய மக்களுக்கு வளர்ச்சி உருவாக்குவது மோடி அரசின் மாபெரும் சாதனை என்று பாஜக, ஆர்எஸ்எஸ் பாசிச கூட்டம் பெருமை பேசுகிறது. ஜன்தன் கணக்குகள் கோடிக்கணக்கில் துவக்கப்பட்டதாலேயே நாட்டின் வறிய மக்கள் வளர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று கூட பேசுகிறது அந்தக் கூட்டம். நலத்திட்ட பயன்கள் உரியவர்களுக்கு சரியாக சென்று சேர இந்த மூன்றும் அவசியம் என்கிறது.

சீர்காழியின் சில ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமப்புற வறிய பெண்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஜன்தன்னும் ஆதாரும் அவர்களுக்கு எதிராகச் செயல்படுத்தப்படுவதை தெரிந்துகொள்ள முடிந்தது.
மார்ச் 8 அன்று சீர்காழியில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கமும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒரு பெண், நூறு நாள் வேலைத் திட்ட கூலி கேட்டால் ரேகை பதியவில்லை என்று சொல்கிறார்கள் என்றார். இன்னொருவர் செய்த ஆறு நாட்கள் வேலைக் கான கூலியை கடனுக்காக கழித்துக் கொண்டார்கள் என்றார். சுயஉதவிக் குழுவில் பெண்கள் வாங்கிய கடனை கட்டாய வசூல் செய்வதற்கு எதிராக அவிகிதொச தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, இது தொடர்பாக இன்னும் கூட அதிர்ச்சி தரும் நடைமுறைகள் தெரிய வந்தன. கிராமப்புற வறிய மக்கள், அரசின் மக்கள் விரோதத் திட்டங்களால் கிட்டத்தட்ட முற்றுகையிடப்பட்டிருப்பது போன்ற ஒரு நிலைமை இருக்கிறது.
நுண்கடன் நிறுவனம் ஒன்று தங்களிடம் கட்டாயப்படுத்தி கடன் வசூல் செய்வதாக திருமுல்லைவாசல் அருகில் உள்ள ராதாநல்லூரின் பெண்கள் சொன்ன செய்தியைத் தொடர்ந்து அது பற்றி விசாரிக்க இகக மாலெ நாகை - தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன் மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் தோழர் அமிர்தலிங்கம் அங்கு சென்றனர்.
அவர்கள் சென்றபோது கிராம மக்கள் ஓரிடத்தில் கூடியிருந்தனர். விசாரித்தபோது முதியோர் ஓய்வூதியம் வாங்கச் சென்ற முதியவர்கள் இரண்டு பேர் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக தங்களுக்குச் செய்தி வந்துள்ளது எனச் சொல்ல, தோழர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று அங்கிருந்து அந்த முதியவர்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த முதியவர்கள் இரண்டு பேரில் ஒருவர் பார்வையிழந்தவர். மற்றவர் நடக்கக் கூட சிரமப்படுபவர். நடக்கக் கூட சிரமப்படும் முதியவர் உதவியுடன் பார்வையிழந்த முதியவர் சென்றிருக்கிறார். அரசு தருகிற ரூ.1,000 ஓய்வூதியத்தைப் பெற அவர்கள் சென்றிருக்கிறார்கள். வங்கிக் கணக்கு, ஆதார் என்று வந்த பிறகு, தபால் நிலையம் மூலம் அவர்களுக்கு வீட்டுக்கே ஓய்வூதியம் வந்து சேரும் முறை நின்றுபோனது. முதியவர்கள், அவர்கள் நிலை எப்படி இருந்தாலும், அவர்களே நேரில் சென்று அந்த ரூ.1,000 பெற வேண்டும். நேரில் சென்றே ஆக வேண்டும். அந்தக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் ரேகை வைத்தால்தான் அந்தக் கணக்கு திறந்து வழி விடும்.
இதற்கும் அவர்கள் வங்கிகளுக்குச் செல்வதில்லை. பாங்க் கரஸ்பான்டன்ட் என்ற வங்கி தொடர்பாளரிடம் சென்று வாங்குகிறார்கள். தபால்காரரின் இடத்தில் வங்கி தொடர்பாளர் வந்துவிட்டார். தபால்காரருக்கும் வங்கி தொடர்பாளருக்கும் வேறுபாடுகள் பல உண்டு. தபால்காரர் அரசு ஊழியர். ஓய்வூதியத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவரது பணி. செய்வார். காடு, மேடு, மழை, வெயில் பாராமல் அலைவார். சம்பளம் அரசு தரும்.
வங்கி தொடர்பாளர் வங்கியின் ஊழியர் அல்ல. அவர் பெரும்பாலும் உள்ளூர்காரர். வங்கி தொடர்பாளராக அமர்த்தப்படுவதற்கு ஊராட்சித் தலைவரின் பரிந்துரை பெறுகிறார். எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் ரூபாயை வங்கியில் முன்பணமாக செலுத்துகிறார்.
சில குறிப்பிட்ட ஊராட்சிகளில் முதியோர் ஓய்வூதியத்தை விநியோகம் செய்ய வங்கியில் இருந்து பணம் பெறுகிறார். தபால்காரர் போல் பயனாளியின் இருப்பிடத்துக்குச் சென்று பட்டுவாடா செய்ய வேண்டும். ஆனால் அப்படிச் செய்வதில்லை. பயனாளிகளான முதியவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அவரிடம் இருக்கும் அந்தக் கருவியில் ரேகை வைத்து தங்கள் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். இதற்கு வங்கி கமிசன் தருகிறது. பயனாளிகளிடமும் ஆளுக்கு ரூ.20, ரூ.30 என வாங்கிக் கொள்கிறார்கள்.
இந்த வங்கி தொடர்பாளர்கள் பலரும் வெகுசீக்கிரமே சொந்த வீடு கட்டத் துவங்கி விடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, கொள்ளிடம் அருகில் உள்ள புளியந்துறையில் முதியவர் ஒருவர் தனது ஓய்வூதியத்தைப் பெற வங்கி தொடர்பாளரிடம் செல்கிறார். ரேகை வைக்கிறார். வங்கி தொடர்பாளர் பணம் வரவில்லை, அடுத்த மாதம் வா என்கிறார். முதியவர் அடுத்த மாதம் செல்கிறார். ரேகை வைக்கிறார். வங்கி தொடர்பாளர் பணம் வரவில்லை, அடுத்த மாதம் வா என்கிறார். மீண்டும் அடுத்த மாதம் செல்கிறார். இப்படி ஆறு மாதங்களாக அவர் தனது ஓய்வூதியத்தைப் பெறவில்லை. பகுதியில் உள்ள தோழர் அரிகிருஷ்ணனிடம் இதுபற்றி பேசும் போது, அவர் வங்கி தொடர்பாளரிடம் விசாரிக்கிறார். ஆவணங்களைப் பார்க்கிறார். ஆறு மாதங்களும் அந்த முதியவர் ஓய்வூதியம் வாங்கியதாக கணக்கு இருக்கிறது. அடுத்த அய்ந்து நிமிடங்களில் அந்த முதியவர் ரூ.6,000 மொத்தமாகப் பெறுகிறார். அந்த முதியவர் போல், சற்று விவரமறிந்தவரின் உதவியை நாட வேண்டும் என்று கூட தெரியாதவர்கள், வங்கி தொடர்பாளர் சொல்வதை நம்புபவர்கள் கூடுதலாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
இன்னொரு உதாரணம். ஒரு மூதாட்டி தனது ஓய்வூதியத்தைப் பெறச் செல்கிறார். ரேகை வைக்கிறார். பணம் வரவில்லை, அடுத்த மாதம் வர வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் அவருக்கு பணம் கிடைக்கிறது. ஓர் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இருப்பார்கள். திருமுல்லைவாசல் போன்ற பெரிய ஊராட்சியில் 500 பேர் இருக்கக் கூட வாய்ப்புள்ளது. அந்த ஒரு மாதப் பணத்தை வங்கி தொடர்பாளர் சுற்றுக்குவிட்டு சற்று சம்பாதித்துக் கொள்கிறார். அவர் அப்படி சம்பாதிக்கும் அந்தக் கால கட்டத்தில் அந்த முதியவர்கள் பட்டினி கிடப்பது, உற்றார் உறவினரால் அவமானப்படுத்தப்படுவது என பல துன்பங்களைச் சந்திப்பார்கள்.
இந்த வங்கி தொடர்பாளர் மூலம்தான் நூறு நாள் வேலைத் திட்டக் கூலியும் தரப்படுகிறது. வேலை செய்தவர்கள் ரேகை வைக்க வேண்டும். அவர் கணக்கில் ரூ.1600 இருந்து ரூ.700தான் இருக்கிறது என்று வங்கி தொடர்பாளர் சொன்னால் அதை வாங்கிக் கொண்டு வர வேண்டும். அந்தக் கணக்கைப் பார்க்க, படிக்க தெரியாதவர்கள், அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பி அவர்கள் தருவதை வாங்கிக் கொள்ள வேண்டும்.
சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் வாங்கும் கடன் பாக்கி இருந்தால், அது சில நேரங்களில் நூறு நாள் வேலைத் திட்ட கூலியில் கழித்துக் கொள்ளப்படும். இப்படி சரி கட்ட வங்கிக்கு அல்லது வங்கி சார்பாக செயல்படுபவருக்கு பயனாளியின் ஒப்புதல் இருக்க வேண்டும். ஏதோ காகிதத்தைக் காட்டி கைநாட்டு வைக்கவோ கையெழுத்து போடவோ சொன்னால் போட்டு விடக்கூடும். அது என்ன என விசாரிக்கிற, விளங்கிக்கொள்கிற நிலையில் அவர்கள் இருப்பதில்லை. அடுப்பில் உலையை வைத்துவிட்டு கூட இந்தப் பணத்தை வாங்க வந்திருக்கலாம். எனவே, நூறு நாள் வேலைத் திட்டக் கூலி பெண்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நுண்கடன் நிறுவனங்களுடன் வங்கி தொடர்பாளர் உறவுவைத்துள்ளார்.
வங்கி தொடர்பாளர்களின் ஏச்சுகளுக்கும் சில சமயங்களில் ஆளாக வேண்டும். அவர்களுக்காக காத்திருக்க வேண்டும். வங்கி தொடர்பாளர் மனநிலைக்கேற்ப இன்னும் பல அவமானங்களையும் சகித்துக் கொள்ள வேண்டும். உழைப்பை விற்கும்போது கவுரவத்தையும் சேர்த்து விற்றுவிட நேர்கிறது. வங்கிகளுக்குச் சென்றால் அங்கும் தாங்கள் இழிவுபடுத்தப்படுவதாக பெண்கள் சொல்கிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட நமது வங்கிகளில் கடன் வாங்கினால் அம்பானிகள், அதானிகள் போல் வாங்க வேண்டும். அந்தக் கடன் தள்ளுபடியும் ஆகும்.
கிராமப்புற வறிய மக்களின், பெண்களின் கல்லாமையை, அறியாமையை, இயலாமையை வங்கி தொடர்பாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மட்டத்திலும் ஆளாளுக்கு இடையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருட்டுகிறார்கள். வங்கி தொடர்பாளருக்கும் வங்கி மேலாளருக்கும் இடையில் உறவுஇருக்கிறது. இவர்கள் இருவருக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் உறவுஇருக்கிறது. ஒருவரை ஒருவர் பாதுகாக்கிறார். வறிய மக்கள் வயிற்றில் அடிக்கிறார்கள். எல்லாம் ஜன்தன், ஆதார் வந்த பிறகுதான் நடக்கிறது.
இவற்றையெல்லாம் செய்தால் பயன் நேரடியாக பயனாளிக்குச் செல்லும் என்பதற்கு நேரெதிராக, பலப்பல வழிகளில் சேராமல் தடுக்கப்படுகிறது. ஓய்வூதியமும் முதியோர் அனைவருக்கும் தரப்படுவதில்லை. இத்தனை பேருக்குத்தான் தர வேண்டும் என்று அறிவிக்கப்படாத உத்தரவு தங்களுக்கு இருப்பதாக அதிகாரிகள் சொல்கின்றனர். அதனால், தட்டிக் கழிக்க என்ன காரணங்கள் எல்லாம் சொல்ல முடியுமோ அனைத்தையும் சொல்கிறார்கள்.
அரசு அறிவித்த நலத்திட்டம் தங்களுக்கு வராமல் போவதற்கு அரசுதான் காரணம் என தெரிந்துகொள்ள முடியாமல், அது வரவே வராது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல், அதை எப்படியாவது பெற்றுவிடுவது என் பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது, அடுத்தடுத்த வாழ்வாதாரக் கொள்ளைகள் நடந்து விடுகின்றன.
முதலாளித்துவம் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னைப் போலவே மாற்றுகிறது என்று முதலாளித்துவத்தின் இயல்பு பற்றி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொல்கிறது. மோடி அரசாங்கம் அது மக்களை ஏமாற்றும் கொள்கைகளை அமலாக்குவதை மறைக்க தன்னைப் போல ஏமாற்றுபவர்கள் சிலரை ஏதோ ஒரு மட்டத்தில் உருவாக்கிவிடுகிறது. மக்கள் கண்ணுக்குத் தெரியாத பெரிய திருடனை நம்பிவிட்டு, கண்ணுக்குத் தெரிகிற, உடனடி பாதிப்பு ஏற்படுத்துகிற மிகச்சிறிய திருடனை எதிரியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். பெரிய திருடன் தியாகி போல கூட பேசிக் கொண்டிருப்பான். சிறிய திருடனை ஒழிக்கிறேன் பார் என்று கூட சத்தம் போடுவான். இறுதியில் மக்களுக்கு எதுவும் சென்று சேர்ந்திருக்காது. ஜன்தன்னில், ஆதாரில் சேருங்கள் என்று மக்கள் பணத்தை விரயம் செய்து விளம்பரப்படுத்தி, மோடி அரசாங்கம் செய்திருப்பது வறிய மக்கள் கைகளில் இருப்பதையும் பறிப்பது மட்டும்தான். மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசின் மூலம்தான் அமலாகின்றன. மக்களுக்காக நான் என்று சொல்லிச் சென்றவர்கள் இப்படித்தான் மக்கள் நலத் திட்டங்களை அமலாக்கினார்கள்.

(சீர்காழி தாலுகாவில் சுயஉதவிக் குழுவில் பெண்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற இகக மாலெ மற்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் தோழர்கள் மக்களை நேரில் சந்தித்ததில் இந்த விசயங்களை தெரிந்துகொண்டார்கள். அடுத்த கட்டமாக, இந்த நடவடிக்கைகளில் அதிகாரிகளைச் சந்தித்து அவர்களிடம் பணப்பட்டு வாடாவில் நடக்கும் குளறுபடிகள், முறைகேடுகள் பற்றி பேச திட்டமிட்டிருக்கிறார்கள்).

Search