COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Friday, March 17, 2017

பெங்களூருவில் சாக்கடை அடைப்பை அகற்றும்போது
மூன்று தொழிலாளர் பலி

மார்ச் 2017. ஆந்திரா சென்ற மூவரை பெங்களூரு திரும்ப அழைத்தது. ஒருவர் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இரண்டு பேர் ஆந்திராவின் சிறிகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பேரும் அனந்தராஜா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற ஒப்பந்ததாரர் மூலம் ராம்கி இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் அடைப்பு அகற்றும் வேலையைச் செய்தவர்கள். இந்த நிறுவனம், பெங்களூரு குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் வேலைகளைப் பார்க்கிறது.

பெங்களூரு மாநகரம், இந்தியாவின் உயர்தொழில்நுட்ப நகரம், மேலேயும் கீழேயும், குப்பைகள் இல்லாமல் சாக்கடை அடைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் அல்லவா? மார்ச் 5 அன்று பெய்த மழையால், சாக்கடை கள் அடைத்துக்கொண்டு சாக்கடை நீர் வெளியில் ஓடியது. அனந்தராஜா கன்ஸ்ட்ரக்சனின் நிர்வாக இயக்குனர், மேற்பார்வையாளர் ஆஞ்சனேய ரெட்டியை அலைபேசியில் அழைக்கிறார். ஆஞ்சநேய ரெட்டி, ஓட்டுனர் தாட்டா தாவிட்டய்யாவையும் துப்பரவுத் தொழிலாளி தாந்தா யர்ரய்யாவையும் மார்ச் 6 அன்று இரவு சாக்கடை அடைப்பை எப்படியும் அகற்ற வருமாறு அழைத்தார். மூவருக்கும் சம்பள பாக்கி இருந்தது.
ஒவ்வொருவருக்கும் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். சாக்கடை சுத்தம் செய்யப் போன இடத்தில், தாந்தா யர்ரய்யா முதலில் மேன்ஹோல் (சாக்கடையில்) நுழைந்தார். அவர் வெளியே வராததால் அவரைக் காப்பாற்ற முயன்ற ஓட்டுனர் தாட்டா தாவிட்டய்யா உள்ளே சென்றார்; அவரும் வெளியே வராததால் மேற்பார்வையாளர் ஆஞ்சநேய ரெட்டியும் சாக்கடையில் இறங்கினார். ஆழமான சாக்கடையில் விஷ வாயு தாக்க மூவரும் இறந்தனர்.
நரேந்திர மோடியும், காந்தியும், துப்புரவுப் பணி ஆன்மிகப் பணி, ஆண்டவன் பணி என்கிறார்கள். ஆனால், எந்த ஆண்டவனும் இந்தத் தொழிலாளர்களைக் காப்பாற்ற வரவில்லை. சாமியோ ஆளும் அரசாங்க ஆசாமிகளோ 2017 வரை, மனிதர் மனிதக் கழிவகற்றுவதை, அந்த நேரத்தில் ஏற்படும் மரணங்களை தடுக்கவில்லை. உத்தரபிரதேச தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் மோடிக்கு, ஆன்மிகப் பணியான ஆண்டவன் பணியான சாக் கடை அடைப்பு அகற்றுதலில் மூன்று இந்தியர்கள் இறந்த செய்தியைச் சொல்லி, அவரது நல்ஆளுகையில், வல்லரசு நோக்கிய வளர்ச்சிப் பாதையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என எடுத்துச் சொல்வோம். அந்நிய நேரடி முதலீட்டு வருகை, ஜியோ, பேடிஎம் வளர்ச்சி, டிஜிட்டல் பிளாஸ்டிக் பணம் பற்றிப் பீற்றிக் கொள்ளும் மோடியிடம், சாக்கடை அகற்ற எந்திர தொழில்நுட்பம் கொண்டுவர பலப்பல ஆயிரம் கோடி மூலதனம் செலுத்தச் சொல்வோம்.
மடிந்த துப்புரவு தொழிலாளி யர்ரய்யாவின் மனைவி யர்ரம்மாவும் துப்புரவுத் தொழிலாளி. இவரும் சாக்கடை சுத்த வேலையில் ஈடுபடுபவர். யர்ரய்யாவின் நாள் சம்பளம் ரூ.500. யர்ரம்மாவின் நாள் சம்பளம் ரூ.200. இந்த சம்பளம் மற்றும் சம்பள பாக்கிக்காக யர்ரய்யா உயிர் போனது. பின் இரவில் சாக்கடையில் இறங்குவதற்கு முன்பு மனைவியிடம் யர்ரய்யா அலைபேசியில் பேசி உள்ளார். மறுநாள் அவரது 6 வயது மகன் மணி கந்தாவும் 2 வயது மகள் திவ்யாவும் தந்தையின் இறந்த உடûலைத்தான் பார்த்தார்கள். மரணத்தைப் பற்றி அந்தக் குழந்தைகளுக்கு புரிந்திருக்கக் கூட முடியாது.
தாட்டா தாவிட்டய்யாவின் மனைவி தாட்டா கானம்மா. அவர்களுக்கு கார்த்திக் (4 வயது), முரளி (6 வயது) என்ற இரு மகன்கள் உண்டு. சாக்கடையில் பாதுகாப்பில்லாமல், மனிதர், கழிவுகளை அகற்றுவது சட்டவிரோதம் என்று சொன்னபோது, அவர், எப்படி எட்டு ஆண்டுகளாக என் கணவரை சட்ட விரோதமான ஒரு வேலையைச் செய்யச் சொன்னார்கள் என்று  கேட்டார்.
ஆஞ்சனேய ரெட்டிக்கு சிறிதேவி என்ற இளம் மனைவி இருக்கிறார். 2 மாத கைக் குழந்தையும் இன்னொரு பெண் குழந்தையும் அவர்களுக்குண்டு.
யர்ரய்யா, தாவிட்டய்யா, ஆஞ்சனேய ரெட்டி ஆகிய மூவரும், ஊர் உறங்கிய பிறகு, வாகன/மக்கள் நடமாட்டம் இல்லாதபோது, சாக்கடையில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டு சாகடிக்கப்பட்டார்கள். மனிதர், கழிவகற்றும் போது நடக்கும் ஒவ்வொரு மரணமும், நிறுவனப் படுகொலையே என நாம் உரத்துக் குரல் கொடுப்போம்.


பல்வேறு இடதுசாரி இயக்கங்களும் முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும், கழிவகற்றும் பணிகளில் இனி மனிதர் வேலை செய்வதை நிறுத்த, குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த முயற்சியில், களப்பணியாளர் திவ்யபாரதி, இந்த தீண்டாமை குற்றம் ஒழிய வேண்டும் என்று செய்தி சொல்லும் ஆவணப்படம் ஒன்றை கக்கூஸ்என்று பெயரிட்டு, இடப்பக்க குழுவின் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளார். சில ஊடகங்களாவது கக்கூஸ்ஆவணப்படம் எடுத்த திவ்யபாரதியின் முயற்சி பற்றி செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் மனிதர், கழிவகற்றுதல் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் களப் போராட்டங்களும் வலுப்பெற கக்கூஸ்ஆவணப்படம் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் செல்லும் என நம்புகிறோம். இந்தப் படத்தைத் தடை செய்யும் முயற்சிகளைக் கண்டனம் செய்யும் விதம் அகில இந்திய மக்கள் மேடை எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் வெற்றி பெறச் செய்வோம்.

Search