10 லட்சம் கையெழுத்து இயக்கம்
பாட்டாளிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் புறப்பட்டுவிட்டார்கள் என சங்கே முழங்கு!
எஸ்.குமாரசாமி
போற்றி போற்றி அம்மா போற்றி
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு எனச் சொன்ன பெரியாரின் தமிழ்நாட்டில், மானம் போக வைத்தார்கள் எனச் சொல்லி, 16.05.2011 முதல் 28.07.2016 வரை, பல்வேறு கட்சியினர் மீது, பத்திரிகைகள் மீது ஜெயலலிதா அரசு 213 அவதூறு வழக்குகள் போட்டுள்ளது. அரசாங்கம் என்றால் விமர்சனம் வரும், விமர்சனத்துக்கு எல்லாம் மானம் போனதாகச் சொல்லி வழக்கா என உச்சநீதிமன்றம் ஆலோசனை சொன்ன பிறகும், அவதூறு வழக்குகளில் ஜெயலலிதா அரசு பிடிவாதமாக நின்றது. அஇஅதிமுகவின் அமைச்சர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மானமும் அறிவும் ஒரு பொருட்டே அல்ல என்பதை சட்டமன்ற நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டின. சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி போட்டு பாட்டுப் பாடியும் நீட்டி முழக்கிப் பேசியும் அம்மா புகழ் பாடினார்கள். அம்மா தவ வாழ்க்கையின் ஒரு பகுதியாக பக்தர்களின் புகழ் மாலைகளை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். அம்மா, சேர, சோழ, பாண்டியர்களின் ஒருங்கிணைந்த நல்லாளுகையை தருவதாக ஒரு புகழ் மாலை; நாளுக்கொரு சாதனை அம்மா நிகழ்த்த, கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என நான்கு திசைகளும் அம்மாவைப் போற்றி வணங்குவதாக மற்றொரு புகழ் மாலை. ஆகஸ்ட் 2, 2016 அன்று சட்டமன்ற உறுப்பினர் ராமு அனைவரையும் விஞ்சி, அம்மாவின் நலம்புரி ஆட்சி கண்டு உத்வேகம் பெற்றுத்தான் ஹிலாரி கிளின்டன் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகச் சொன்னார். இந்த முறை 120 கோடி மக்கள் வாழும் இந்தியாவுக்கு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தன என்பதில் அனைவருக்கும் வருத்தம் உள்ளது. அரசியல் தலைவர் முன் குனிந்து வளைவது, அரசியல் தலைவர் புகழ் பாடுவது ஆகியவை ஒலிம்பிக் விளையாட்டுகளாகச் சேர்க்கப்பட்டால் அஇஅதிமுகவினரே இந்த விளையாட்டுக்களில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய அனைத்துப் பதக்கங்களையும் வெல்வார்கள். உசேன் போல்ட் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பீஜிங், லண்டன், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்றதையும் விஞ்சி அஇஅதிமுகவினர் வாழ்நாள் சாதனையாளர்களாகி விடுவார்கள். போற்றி, போற்றி அம்மா போற்றி. மானமும் அறிவும் அஇஅதிமுக தலைவர்களுக்கு இழிவு.
எதிர்க்கட்சிகளின் கூத்து
தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்கும் வலியும் வேதனையும் அதிகரிக்க அதிகரிக்க, சட்டமன்ற எதிர்க்கட்சியான திமுகவின் கேலிக் கூத்துக்களும் அதிகரித்தன. வெளிநடப்பு, இணை சட்டமன்றம் என நாளும் நடந்தன. கருணாநிதியின் பெயரை, கருணாநிதி என்று சொன்னதற்காக ஒரு வெளிநடப்பு நடந்தது. சோழ மாமன்னரை பெயர் சொல்லி அழைக்கலாமா? அரச குலங்கள் பற்றி சாமான்யர்கள் சாதாரணமாக எண்ணி விட மாட்டார்களா? மு.க.ஸ்டாலின், டில்லியின் அர்விந்த் கேஜ்ரிவால், உழைப்போர் அனைவருக்கும் ரூ.14,000 முதல் ரூ.17,000 வரை குறைந்தபட்சக் கூலி அறிவித்துள்ளார்; இந்த அரசு ஏன் ரூ.20,000 அறிவிக்கக் கூடாது என்று கேட்டாரா?
கோகுல்ராஜ், சங்கர் முதல் மாரியப்பன் வரை சாதியாதிக்க சக்திகளால் கொல்லப்படும் நிலையை தடுக்க, தண்டிக்க, தலித் மக்களின் வழிபாட்டு உரிமை தொடர்ந்து பறிக்கப்படுவதற்கு எதிராக, பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட, சட்டங்கள் வேண்டும், உறுதியான நடவடிக்கைகள் வேண்டும் எனப் பேசினாரா?
வீடற்ற நாட்டுப்புற, நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் 3 சென்ட் வீட்டுமனை என 2011 தேர்தலில் ஜெயலலிதா தந்த வாக்குறுதியை ஆட்சிக் காலம் முழுவதும் நிறைவேற்றாமல், 2016 தேர்தலில் சத்தமில்லாமல் அந்த வாக் குறுதியை கைவிடவும் செய்தார். வீடற்றவர்களுக்கு வீட்டுமனை கோரும் தீர்மானம், இணை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதா?
எதிர்க்கட்சி பெரும்பலத்தோடு, கிட்டத்தட்ட சமமான வாக்குகள் பெற்று சட்டமன்றத்தில் இருப்பதால் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும் என தொலைக்காட்சி விவாத அரசியல் நிபுணர்கள் எல்லாம் சொன்னார்களே!
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. மக்களுக்கு திகைத்துப்போய் எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற ஆழ்ந்த கரிசனம் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் நிறையவே உண்டல்லவா?
தமிழ்நாட்டைக் காட்டிலும் நாட்டு நிலைமைகள் மேலானவையா?
அய்க்கிய அமெரிக்காவுடன் ஆபத்தான ராணுவ ஒப்பந்தம் போட்டுள்ள மோடி அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் இலச்சினை தூதராகிவிட்டார் (பிராண்ட் அம்பாசிடர்). மற்ற பொருட்களுக்கு, சேவைகளுக்கு, ஆண், பெண் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் விளம்பர மாடல்களாக இருப்பது வாடிக்கை. ஆனால் அம்பானிக்கோ, நாட்டின் பிரதமரே விளம்பர மாடல். மேக் இன் இந்தியாவும் டிஜிட்டல் இந்தியாவும் சந்திக்கும் புள்ளியல்லவா ரிலையன்ஸ் ஜியோ?
ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதாரமே அலைக்கற்றை. 2ஜி ஊழலுக்குப் பிறகு ஏல முறையில் 3ஜி, 4ஜி அலைக்கற்றை விற்கப்பட்டன. வெறும் ரூ.3 கோடி மட்டுமே மதிப்புடைய பங்கு மூலதனம் கொண்ட இன்ஃபோடெல் பிராட் பேண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஏலம் முடிந்த அன்றே தன் பெயரில் இருந்த பிரைவேட் என்ற சொல்லை நீக்கிவிட்டு, தன் பங்கு மூலதன மதிப்பை ரூ.6,000 கோடிக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. அதன் நான்கில் மூன்று பங்கு ரிலையன்சுக்குச் சென்றது. இந்த இன்ஃபோடெல் நிறுவனம், ஒரே ஒரு வாடிக்கையாளர், சில லட்சம் ரூபாய் வியாபாரம் மட்டுமே கொண்டிருந்த நிறுவனம், 20 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.12,847.44 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என ஒரு திரைப்பாடலுக்கு ரஜினிகாந்த் வாயசைத்திருப்பார். மன்மோகன் ஆண்டாலும் மோடி ஆண்டாலும் அம்பானிக்கு ஒரு கவலையும் இல்லை. 120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டின் சந்தையை நரேந்திர மோடி, திருபாய் அம்பானியின் மகன் முகேஷ் அம்பானிக்கு அர்ப்பணித்துவிட்டார். முகேஷ் அம்பானியும் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா கனவுக்கு ரிலையன்ஸ் ஜியோ அர்ப்பணிக்கப்பட்டதாக தெரிவித்துவிட்டார்.
மோடியின் குஜராத்தில்தான் டாடாவின் நானோ கார் நிறுவனம் துவங்க சனாந்தில் 1,100 ஏக்கர் நிலம் தரப்பட்டது. ஒரு சதுர மீட்டர் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.10,000 இருந்தபோது, குஜராத் அரசு டாடாவுக்கு ஒரு சதுர மீட்டரை ரூ.900க்குத் தந்தது. அரசுக்கு இழப்பு ரூ.33,000 கோடிதான்! ரஹேஜா குழுமம் 3,76,561 சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ.470 என குஜராத் அரசிடம் இருந்து பெற்றது. ராணுவத்தின் தென்மேற்கு விமானப் படைத் தலைமைக்கே இதே அரசு 4,04,700 சதுர மீட்டர் நிலத்தை ரஹேஜா குழுமத்துக்குத் தந்ததை விட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு கூடுதல் விலைக்கு சதுர மீட்டர் ரூ.1,100 என விற்றது. எப்பேர்பட்ட தேசபக்தி?
நாட்டின் இயற்கை வளங்கள், மனித வளங்கள் சூறையாடப்படும்போது, மோடி அரசு, பாகிஸ்தான், காஷ்மீர் பயங்கரவாதம், தேசியம் என்ற வெகுமக்களை திசைத் திருப்பும் ஆயுதங்களை (ரங்ஹல்ர்ய்ள் ர்ச் ஙஹள்ள் ஈண்ள்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்), பசு என்ற ஒரு கல் கொண்டு இசுலாமியர், தலித்துகள் என்ற இரண்டு பெரும்மக்கள் பிரிவினரை வேட்டையாட, இந்துக்களை சாதி இந்துக்களை செலுத்த முயற்சிக்கிறது.
இடதுசாரிகளின் எதிர்காலத்துக்கு ஒரு சான்று?
இடதுசாரிகளுக்கு எதிர்காலமே இல்லை என்ற ஒரு காலத்திய வெற்றிவாதக் கூச்சல் உலகெங்கும் இப்போது ஓய்ந்துவிட்டது. மக்கள் சார்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல், லத்தீன் அமெரிக்காவில் எழுகிறது, விழுகிறது, திரும்பவும் ஏதோ ஒரு வடிவத்தில் எழுகிறது. நம் தலைநகர் டில்லியில், இளைய மனங்கள் நஞ்சூட்டப்பட்டு தேச விரோதிகளின் கூடாரமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மாற்றப்பட்டுள்ளதாக சங்பரிவார் கூட்டம் ஊளையிட்டது. அங்கே 09.09.2016 அன்று மாணவர் சங்கத் தேர்தல் நடந்தது. இந்தியாவின் இளைய தலைமுறை மீது இடதுசாரிகள் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை உறுதி செலுத்தும் விதம் இககமாலெவுக்கு நெருக்கமான அகில இந்திய மாணவர் கழகமும் இகக மாவுக்கு நெருக்கமான இந்திய மாணவர் சங்கமும் முறையே தலைவர், இணைச்செயலாளர், மற்றும் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளை சங் பரிவாரின் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தை தோற்கடித்துக் கைப்பற் றினார்கள். நக்சல்பாரி காலங்களில் சீனத்து உழவன் செய்த சாதனை இங்கென்ன முடியாதா என்ற ஒரு பாடல் பிரபலமாக இருந்தது. டில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் செய்ததை இந்தியாவின் மற்ற பகுதிகளின், மற்ற பிரிவுகளின் மக்கள் செய்ய மாட்டார்களா என்ன?
சாத்தியமான, தேவையான, தவிர்க்க முடியாத இடதுசாரி அரசியல்
ஏகாதிபத்தியம் ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற இரட்டை நிலையை (பைனரி) முன்வைத்துத்தான் 11.09.2001க்குப் பிறகு ‘இசுலாமிய எதிர்ப்பு’ பயங்கரவாத எதிர்ப்புப் போரில் இறங்கியது. சங் பரிவார் சாராம்சத்தில் எப்போதும் ‘இந்துக்கள் எதிர் இந்து அல்லாதவர்கள்’ என்ற இரட்டை நிலையை எழுப்பி வருகிறது. ஆனால், இன்றைய உலகில், ‘1% எதிர் 99%’ என்ற முழக்கம் முன்வந்துவிட்டது. இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசம் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் புதுவீச்சும் வேகமும் பெற்றுள்ளன. எங்கும் எப்போதும் மக்கள் திரள் அரசியலே, இடதுசாரி அரசியலாகும். சிறுபான்மையினர், தலித், பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் அரசியலே இடதுசாரி அரசியல். பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்காக, ஜனநாயகத்துக்காக, மக்களின் சுதந்திரத்துக்காக, நாட்டின் இறையாளுமைக்காக குரல் கொடுப்பதே இடதுசாரி அரசியலாகும். ஏகப்பெரும்பான்மை மக்கள் சுரண்டப்படும்போது, ஒடுக்கப்படும்போது, அவர்கள் நலன்களை முன்னிறுத்தும் இடதுசாரி அரசியல் சாத்தியமானதும் அவசியமானதும் மட்டுமல்ல, தவிர்க்க முடியாததும் ஆகும்.
தேவை ஓர் இடதுசாரி நிகழ்ச்சி நிரல்
காங்கிரசோடு, பிராந்தியமட்ட ஆளும் வர்க்கக் கட்சிகளோடு, மக்கள் சார்பு அரசிய லோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களோடு கூட்டு சேர்ந்தால்தான், பாஜக, அஇஅதிமுக போன்ற பலமான சக்திகளை வீழ்த்த முடியும் என்பது கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன நாடாளுமன்ற முடக்குவாத, நாடாளுமன்ற வால்பிடி வாத, தாராளவாத தற்காப்புக் குரலாகும். 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஒரு மக்கள் சார்பு தேர்தல் அறிக்கையை முதலில் வைத்தது. விஜய்காந்த், வாசனை சேர்த்துக் கொண்ட பிறகு, தனது சொந்தத் தேர்தல் அறிக்கையை தானே கைவிட்டது. சாராயமில்லாத, ஊழல் இல்லாத கூட்டணி ஆட்சி என்ற பொத்தாம்பொதுவான வர்க்க உள்ளடக்கம் மழுங்கடிக்கப்பட்ட முழக்கங்களோடு தேர்தலைச் சந்தித்தது. கூடாநட்புக்குக் கிடைத்த படுதோல்வியில் இருந்து பாடம் கற்காமல், காசு வாங்கி வாக்களித்த மக்கள் என நேரடியாகவோ, சுற்றி வளைத்தோ மக்கள் மீது பழிபோட்டது. இந்தப் பின்னணியில்தான், உழைக்கும் மக்கள் மீது, பெண்கள் மீது, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, சிறுபான்மையினர் மீது, சுற்றுச்சூழல் மீது, ஜனநாயகத்தின் மீது ஓர் ஒன்றிணைந்த தாக்குதல் தொடுக்கப்படும்போது, இடதுசாரி அரசியல் நிகழ்ச்சிநிரல் அவசரத் தேவையாகியுள்ளது.
இகக மாலெயின் இடதுசாரி நிகழ்ச்சிநிரல்
ஜெயலலிதா 2016ல் வெற்றி பெற்று ஆளத் துவங்கிய பிறகு பெரும்திரள் போராட்டம் என நடந்தது, வழக்கறிஞர்கள் போராட்டமே ஆகும். இந்தப் போராட்டம் அஞ்சாமல், நீதித் துறையில் இருந்து வந்த தாக்குதல்களை எதிர் கொண்டது. முற்றுகை வரை துணிந்து முன்னேறியது. துவக்கம் முதல் விடாப்பிடியாய் நேரடியாய் இககமாலெ, இந்தப் போராட்டத்தை ஆதரித்தது. கட்சிக்கு நெருக்கமான ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் இந்தப் போராட்டம் நீடிப்பதில் வகித்த முன்னோடிப் பங்கு, எல்லா இடதுசாரி முற்போக்கு சக்திகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
தமிழகத்தின் பல லட்சக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்கும் திருத்த மசோதா 47/2008க்கு உயிர் தர, கட்சியும் அதன் தொழிற்சங்க மய்யமுமே இடைவிடாமல் முயற்சி எடுத்தன. மசோதா சட்டமாகி, உரிய திருத்தங்கள் கொண்டு வர நீதிமன்றமும் இப்போது காலவரையறை வைத்துள்ளது. உரிய திருத்தங்கள், பிற மாநில நிலைமைகள் பற்றி மாலெ கட்சியின் ஏஅய்சிசிடியு எழுத்து பூர்வமான ஆலோசனைகள் தந்துள்ளது. பிற சங்கங்களின் ஆதரவை நாடுகிறது, திரட்டுகிறது. காஷ்மீர் பிரச்சனையில் இருந்து கூடங்குளம் பிரச்சனை வரை விடாப்பிடியான, விட்டுக்கொடுக்காத, அனைத்தும் தழுவிய ஜனநாயக நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இப்போது செப்டம்பர் 12ல் இருந்து தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான அனைத்தும் தழுவியதோர் மக்கள் கோரிக்கை சாசனத்துடன் 10 லட்சம் கையெழுத்துக்கள் வாங்க காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை, தமிழ்நாட்டு மக்களை சந்திக்கத் துவங்கியுள்ளது.
கையெழுத்து இயக்கம் மூலம் என்ன சாதிக்க விழைகிறது?
அகம், புறம் என்பதை உள்ளே, வெளியே என்று சொன்னால், கட்சிக்கு வெளியே தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை கோரிக்கைகளை, அரசியல் களத்தின் மய்ய நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது. மக்கள் மனங்களில் இந்தக் கோரிக்கைகள் வேரூன்றினால், மக்கள் இந்தக் கோரிக்கைகள் மீது களம் இறங்கினால், தமிழ்நாட்டின் இடதுசாரி திசைப் பயணம் உறுதியாகும். இடதுசாரி இயக்கத்துக்கு உள்ளே, சுதந்திரமான பாட்டாளி வர்க்க அரசியல் பலப்படும், விரிவடையும். இகக மாலெ மூன்று முனைகளில் முன்னேற இந்த 10 லட்சம் கையெழுத்துக்கள் இயக்கம் உதவும் என நம்புகிறது.
- கட்சியின், அதன் வெகுமக்கள் அமைப்புகளின் சமூக அடித்தளம் சுருங்கியுள்ளது. கூர்மையான, மக்கள் திரள் வர்க்க மோதல்கள், போராட்டங்கள் அரிதாகவே உள்ளன.
- மக்கள் திரள் அரசியல் செல்வாக்கு, நமக்கு இன்னமும் பிடிபடவில்லை.
- துடிப்பான, அன்றாட அமைப்புச் செயல்பாடும் கடினமான சவாலாகவே உள்ளது.
இந்த மூன்று முனைகளிலும் முன்னேற இந்த 10 லட்சம் கையெழுத்து இயக்கம் உதவும் என உறுதியாக நம்புகிறோம். கண்ணுக்குத் தெரிவது கைக்கு எட்டுவது வரையிலான வேலைகள், சாத்தியமானவற்றையே அவசியமானவை என சுருக்குவது என்பவற்றால்தான் கட்சியும் வெகுமக்கள் அமைப்புக்களும் தேங்கி முடங்கி நிற்கின்றன. நமது சிந்தனையின் செயல்பாட்டுத் தளத்தின் எல்லைகள் விரிவடைய வேண்டியுள்ளது. ஞானக்கூத்தன் கவிதை ஒன்று நம் பிரச்சனையை சொல்கிறது.
‘அறியாமையின் கதவுகள்
இரண்டே இரண்டுதான்.
ஒன்றின் பெயர் அறியாமை
மற்றதன் பெயர் அதை அறியாமை’.
புதிய சூழலுக்கு ஏற்ப வினையாற்றுவதில், நடப்புக்களை அறிவதில், நம் சொந்த செயல்பாட்டை விருப்பு வெறுப்பின்றி பரிசீலிப்பதில், வெகுமக்கள் வேலை - ஊழியர் வளர்ப்பு - கட்சி முடிவுகள் அமலாக்கம் - ஆகியவற்றில் நம் வேலைகளை புரட்சியை தொழிலாகக் கொண்டவர்களின் வேலைகள் என்று சொல்ல முடியுமா என்று அறிவதில் அறியாமையும், இந்த அறியாமை பற்றிய அறியாமையும் நம்மை ஆட்டி வைக்கின்றன. 10 லட்சம் கையெழுத்துக்கள் வாங்குவது நிச்சயம், தனி தோழர்களுக்கு, அமைப்புகளுக்கு, மக்கள் திரள் மத்தியில் அரசியல் முனைப்புடன் அமைப்பாக்கப்பட்ட வேலை பார்த்தாக வேண்டிய புறநிலை நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறது. தோழர் வினோத் மிஸ்ரா சொன்ன, அளவே பண்பாகும் என்ற விசயம் வெகுமக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும். ஒரு கோப்பை நீரில் ஒரு துகள் உப்புப் போட்டால் கரிக்காது. ஒரு துகள் சர்க்கரை போட்டால் இனிக்காது. ஆனால், ஒரு தேக்கரண்டி உப்பு போட்டால் கரிக்கும். ஒரு தேக்கரண்டி சர்க்கரை போட்டால் இனிக்கும். அளவுக்கும் பண்புக்கும் உள்ள உறவை உணர்ந்துதான் 10 லட்சம் என்ற எண்ணிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 7 கோடியே 20 லட்சம் தமிழக மக்கள் என்று பார்க்கும்போது, 10 லட்சம் என்பது ஒரு சிறிய எண்ணிக்கையே. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் பெற்ற 5,000 வாக்குகளோடு ஒப்பிடுகையில் 10 லட்சம் அப்படி ஒன்றும் சுலபமாக தொட்டு விடும் தூரத்தில் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள எல்லா சக்திகளையும் சிந்தாமல் சிதறாமல் கருத்தியல் அரசியல்ரீதியாக அமைப்புரீதியாக திரட்டிக் கொண்டால் மட்டுமே, நம் இலக்கு வசப்படும். பிரச்சனைகள் தீர வழி பிறக்கும்.
மக்கள் முன்பு மோடியும் பணிய வேண்டியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தின் முன்பு ஸ்மிருதி இரானியும் குஜராத் தலித் மக்கள் போராட்டத்தின் முன்பு குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலும் பதவி இழக்கிறார்கள். ஜெயலலிதா மக்களைக் கண்டு அஞ்சுகிறார். மாநகராட்சி மேயர் பதவி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறையை ரத்து செய்துவிட்டார். அவர்கள் அஞ்சுகிற, தயங்குகிற நேரத்தில், நாம் முன்னேறியாக வேண்டும்.
10 லட்சம் கையெழுத்துக்களை எப்படிப் பெறப் போகிறோம்?
கோவையில் 3 லட்சம், காஞ்சி உள்ளிட்ட சென்னையில் 3 லட்சம், திருவள்ளூர், புதுக்கோட்டை, விழுப்புரம் தலா 1 லட்சம், நெல்லை, குமரி தலா 50,000, சேலம், நாமக்கல், திண்டுக்கல், கரூர் தலா 25,000, மற்ற மாவட்டங்களில் சிற்சில ஆயிரங்கள் கையெழுத்துக்கள் பெறுவதாக முடிவு செய்துள்ளோம். ஆனால் எப்படி எங்கு செய்வது என்பது மிகவும் முக்கியமானது. சந்தைகளில், திருவிழாக்களில் கையெழுத்து வாங்குவதில் பெரிதாகப் பயன் இருக்காது. குறிப்பிட்ட மக்கள் பிரிவினரை, குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட தோழர்களுடன், குறிப்பிட்ட அமைப்பு வடிவம் கொண்டு கையெழுத்துக்கள் வாங்கப்பட வேண்டும். விசயத்தை விளக்க கோவை பற்றி மட்டும் சற்று விரிவாகக் காண்பது நல்லது. கோவையில் தோழர் வேல்முருகன் மாமன்ற உறுப்பினராக இருந்து செயலாற்றிய பகுதியிலும் அதற்கு அக்கம்பக்கமாகவும் 50 பேரைத் திரட்டி, 20,000 கையெழுத்துக்கள் பெற வேண்டும். சாந்தி கியர்ஸ் நிரந்தர, நிரந்தரமற்றத் தொழிலாளர்கள், அந்தப் பகுதியில் நமக்குப் புதிதாகக் கிடைத்துள்ள தொழிற்சங்கத் தொடர்புகள் ஆகியோர் கொண்டு 200 பேரை 20 குழுக்களாகப் பிரித்து, தொழிலாளர் வாழ் பகுதிகளில் ஒரு குழு 4,000 வீதம் கையெழுத்துக்கள் பெற வேண்டும். பிரிக்கால் பிளான்ட் 1 தொழிலாளர்கள் 300 பேர் 30 குழுக்களாக வீரபாண்டி, கூடலூர் கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளை யம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளிலும் துடியலூர் வரையிலும் 1,20,000 கையெழுத்துக்கள் பெற வேண்டும். பிளான்ட் 3 தொழிலாளர்கள் 200 பேர், அய்டிபிஎல், அய்டிசி தொழிலாளர்களின் உதவியையும் பெற்று 80,000 கையெழுத்துக்கள் வாங்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் கையெழுத்துக்கள் பெறுவது இயக்கத்துக்கு நல்லது.
சென்னையும் காஞ்சியும் அம்பத்தூர், திருபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிகளின் குறிப்பான பகுதிகளில் மற்றும் அவற்றுக்கு அக்கம்பக்கமாக கவனம் செலுத்தி 1,000 பேர் வரை வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். கிராமப்புற மாவட்டங்கள், தேர்வு செய்யப்பட்ட ஒன்றியங்களில், ஊராட்சிகளில் கவனம் செலுத்தலாம். சாதி ஒடுக்குமுறையை உறுதியாக எதிர்க்கும்போதே, அனைத்து சாதி, மத உழைக்கும் மக்களின் கோரிக்கைகளையும் எழுப்புவதால், விரிந்த அளவில் கையெழுத்துக்கள் பெற வாய்ப்புண்டு. புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் தலா 500 தோழர்களையும் குமரி, நெல்லை, தஞ்சை - நாகை தலா 250 தோழர்களையும் சேலம், நாமக்கல், திண்டுக்கல், கரூர் தலா 150 தோழர்களையும் வேலையில் ஈடுபடுத்துவது இலக்காக இருப்பது நல்லது.
இடையில் உள்ளாட்சித் தேர்தலில் போட் டியிட நேருகிற இடங்களில், தேர்தல் போட்டியும் கையெழுத்து இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தப்படாமல் ஒன்றுக்கொன்று உதவுவதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்களில் மழை பெய்யலாம். அதையும் எதிர்கொண்டாக வேண்டும். ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு துவக்கத்தை நவம்பர் 7 அன்று ஒரு பொதுக் கூட்டம் மூலம் புதுக்கோட்டையில் அனுசரிக்க உள்ளோம். அதனை ஒட்டி நவம்பர் 6 அங்கு நடைபெறும் மாநில ஊழியர் கூட்டத்தில் தீப்பொறி சந்தா இலக்கு மற்றும் கையெழுத்து இயக்க இலக்கு 50% முதல் 75% வரை நிறைவேற்றியதை தெரிவிப்பது நல்லது.
இந்த எண்கணிதமும் எண்களும் இறுதி ஆராய்ச்சியில், இடதுசாரி அரசியல் மற்றும் இடதுசாரி அமைப்பு கணக்குகளில் கூட்டல்களாகவும் பெருக்கல்களாகவும் மாறும்.
துடிப்பான, சுதந்திரமான, இடதுசாரி அரசியலைப் பலப்படுத்த 10 லட்சம் கையெழுத்துக்கள் இயக்கத்தை வெற்றி பெறச் செய்வோம்.
சாதியாதிக்கக் கொலைகள், குற்றங்களை தடுக்க தண்டிக்க சட்டம் இயற்று!
பத்து லட்சம் கையெழுத்து இயக்கம் துவக்கம்
நெல்லை மண்ணில் களப் பலியான தோழர் சுப்புவின் நினைவு தினமான செப்டம்பர் 13 அன்று, நெல்லையில் தோழர்கள் சுப்பு, மாரியப்பன் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. சிபிஅய் (எம்எல்) நெல்லை நகரச் செயலாளர் தோழர் எம்.சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். சிபிஅய் (எம்எல்) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, மாவட்டச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் கே.கணேசன் உரையாற்றினர். சாதியாதிக்கக் கொலைகள், குற்றங்களைத் தடுக்க, தண்டிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும், அனைத்துச் சாதிக் கொடுமைகளுக்கும் முடிவு கட்ட, சாதி சமத்துவம் நிலை நாட்ட சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக மக்களின் கோரிக்கைகள் மீது ஏஅய்சிசிடியுவும் அவிகிதொசவும் இணைந்து நடத்தும் 10 லட்சம் கையெழுத்து இயக்கமும் துவக்கப்பட்டது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் கருப்பசாமி, ரவி டேனியல், அன்புச்செல்வி, சபாபதி, ராமையா மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆவுடையப்பன், சங்கர், சிவகாமிநாதன், ஜானகிராமன், சேக் முகமது, திலகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தோழர் மாரியப்பன் குடும்பத்திற்கு நெல்லை மாவட்டக்குழு சார்பாக ஏற்கனவே ரூ.50,000 நிதி தரப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பாக ஒரு லட்சம் ரூபாயை மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி மாவட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். அந்தத் தொகை தோழர் மாரியப்பனின் மனைவி தோழர் நித்யாவின் பெயருக்கு வங்கியில் வைப்புநிதியாக வைக்கப்படும்.
வீடு, வீட்டுமனை, அடிப்படை உரிமையாக்கும் சட்டம் வேண்டும்
அவிகிதொச மாநில கருத்தரங்கம்
வீடு மற்றும் வீட்டுமனையை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் மாநில கருத்தரங்கம் செப்டம்பர் 12 அன்று விழுப்புரத்தில் தோழர் சுப்பு நினைவரங்கில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தோழர் ஸ்வப்பன் முகர்ஜி படத்துடன் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பரமசிவம் அவிகிதொச கொடியை ஏற்றி வைத்தார். மேடையில், மறைந்த தோழர்கள் பாலன், சுப்பு, மாரியப்பன், டி.கே.எஸ்.ஜனார்த்தனன், அம்மையப்பன், அண்ணாதுரை ஆகியோரது படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஸ்வப்பன் வாழ்க்கை குறிப்பை முன்வைத்தும் திருநெல்வேலியின் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் மாரியப்பன், தியாகிகளான தோழர்கள் சுப்பு, பாலன், ஆகியோர் பற்றி குறிப்பிட்டும் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பழ.ஆசைத்தம்பி அஞ்சலி தீர்மானம் முன்வைத்தார். அவிகிதொச விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் கலியமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
அவிகிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாலசுந்தரம், அகில இந்திய மக்கள் மேடையின் மாநிலப் பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் வித்யாசாகர் கருத்துரை வழங்கினர். தமிழக உழைக்கும் மக்களின் கேந்திரமான கோரிக்கைகள் மீது தமிழகம் முழுவதும் 10 லட்சம் கையெழுத்துக்கள் பெற ஏஅய்சிசிடியுவும் அவிகிதொசவும் இணைந்து நடத்த இருக்கிற இயக்கம் பற்றி இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி உரையாற்றினார்.
அன்று மதியம் அவிகிதொசவின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் இளங்கோவன், தோழர் சுசீலா, தோழர் சண்முகம்), தோழர் ராஜாங்கம், தோழர் தெய்வசிகாமணி தலைமை வகித்தனர். கையெழுத்து இயக்கம் பற்றி விரிவான விவாதம் நடைபெற்றது. பொதுக்குழுவில் பேசிய இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தின் நோக்கம் பற்றி குறிப்பிட்டு, கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்து, அது அவிகிதொசவுக்கு பரந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார். அவிகிதொசவின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் பாலசுந்தரம் அவிகிதொசவின் அடுத்த கட்ட வேலைத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றினார். கையெழுத்து இயக்க இலக்குகள் முடிவு செய்யப்பட்டன. அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
(மாலெ தீப்பொறி 2016 செப்டம்பர் 16 – 30 தொகுதி 15 இதழ் 4)