COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, February 15, 2016

மாலெ தீப்பொறி 2016 பிப்ரவரி 16 – 29 தொகுதி 14 இதழ் 14

தலையங்கம்
ஜெயலலிதா ஆணையிட்டால்
ஊழல் செய்யும் உயரதிகாரி மாட்டிக்கொள்ள மாட்டார்!
அரசு ஊழியர்களை இது வரை யாரும் இந்த அளவுக்கு பாதுகாத்தது இல்லை என்று பெயரெடுத்து விட ஜெயலலிதா திட்டமிட்டாரா? தேர்தல் நெருங்குவதால் இந்த நடவடிக்கை கை கொடுக்கும் என்று கணக்குப் போட்டாரா? ஏற்கனவே, அரசு ஊழியர்களிடம் வாங்கிய வலுவான அடி அவருக்கு மறந்திருக்காது என்றாலும், இந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அது தள்ளியிருக்குமா? இந்த அரசாணை மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்திக்கும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான விமர்சனத்துக்கும் எள்ளலுக்கும் உள்ளாக்கப்படும் என்று தெரிந்தே, நீதிமன்றத்தில் நிற்காது என்று தெரிந்தே ஜெயலலிதா ஏன் இப்படிச் செய்தார்? உயர் அதிகாரிகள் ஊழல் செய்தால், அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் ஊழல்கள் பற்றி கேள்வி எழுப்பும் சாத்தியப்பாடு உருவாகும் என்றால், அப்படி எதுவும் நடக்காமல் இருக்க இப்படிச் செய்தாரா? இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதா விளக்கம் தருவாரா?
அரசு ஊழியர்கள் எந்தப் பிரிவினரானாலும், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் எழுப்பப்பட்டால் தலைமைச் செயலரின், அதாவது, அரசாங்கத்தின் அனுமதியின்றி அவர்கள் மீது விசாரணை நடத்த முடியாது என்கிறது பிப்ரவரி 2 2016 அன்று வெளியிடப்பட்ட அந்த அரசாணை.
தமிழ்நாட்டில் பணியில் இருக்கும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் மீது, ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டால் அதை விசாரிக்கும் முன்பு அரசாங்கத்திடம் முன்அனுமதி பெற வேண்டும் என்ற மாநில அரசின் மூன்று அரசாணைகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.புகழேந்தி 2010ல் பொது நல வழக்கு தொடர்கிறார். 1992, 1996, 1998 ஆண்டுகளில் இந்த அரசாணைகள் வெளியிடப்பட்டபோது அஇஅதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளன.
வேறு ஒரு வழக்கில் டில்லி சிறப்புக் காவல் சட்டத்தின் பிரிவு 6 எ, சமத்துவ கோட்பாட்டுக்கு எதிராக இருப்பதாகச் சொல்லி உச்சநீதிமன்றம் அந்தப் பிரிவை ரத்து செய்தது. இணைச் செயலாளர் மற்றும் அவருக்கு மேல் பதவியில் உள்ள அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றது அந்தப் பிரிவு. இந்த வழக்கில் ஓர் அரசு ஊழியரின் தகுதியோ அவர் வகிக்கும் பதவியோ, மற்றவர்களைப் போல் அல்லாது, வேறு விதமாக நடத்தப்படுவதற்கு அவருக்கு தகுதி வழங்காது, இரு வேறு பிரிவுகளில் இருப்பவர்கள் என்றாலும் அவர்கள் ஊழல் செய்தவர்கள் என்பதால் அவர்கள் இருவருக்கும் ஒரேவிதமான விசாரணைதான் இருக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் சொன்னது. இந்தத் தீர்ப்பையும் திரு.புகழேந்தி பொது நல வழக்கில் சுட்டிக்காட்டுகிறார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 7 அக்டோபர் 2015ல், அந்த அரசாணைகளை மறுபரிசீலனை செய்வதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் சொல்கிறது. மூன்று மாதங்களுக்குள் இது தொடர்பாக அரசு அறிக்கை தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளிப் போடுகிறது.
பிப்ரவரி 2 அன்று வெளியிடப்பட்ட தனது அரசாணை மூலம் வழக்கில் உள்ள அந்த மூன்று அரசாணைகளில் இருப்பதாகச் சொல்லப்படும் பாரபட்சத்தை நீக்கிவிட்டதாக பிப்ரவரி 5 அன்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சொல்ல, இது உச்சநீதிமன்ற அவமதிப்பு என்பதுடன், உயர்நீதிமன்றத்தில், முன்பு தான் சொன்னதையும் அரசு செய்யவில்லை என்ற நிலையில், மனுதாரர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லி, வழக்கை மார்ச் 18க்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது.
ஊழல் வழக்குகளை காலந்தாழ்த்துவதில் ஜெயலலிதா டாக்டர் பட்டம் பெறும் தகுதி உடையவர் என்பதை நாடு பார்த்திருக்கிறது. 19 ஆண்டுகளாக ஓர் ஊழல் வழக்கு நடக்கிறது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு தகுதியில்லை என்று ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது, தமிழ்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. குமாரசாமி போட்ட கணக்கு சரியாகத்தான் இருப்பதாகவும் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலைக் கடந்து விடலாம். தேர்தல் முடிந்த பிறகு மனம் போன போக்கில் இன்னும் ஏதாவது சில கேள்விகள் எழுப்பிவிட்டு கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கப் போய் விடலாம்.
இப்போது, அம்பலமான, இன்னும் அம்பலமாகாத, அம்பலமாகிவிடக் கூடிய ஊழல்களில் ஈடுபட்ட அஇஅதிமுக அமைச்சர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் பலரும் சிக்கிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. மவுலிவாக்கம் விபத்து, ஆவின் ஊழல், டிசம்பர் மாத மழை வெள்ளம் ஆகியவற்றில் குற்றச்சாட்டுகள் அதிகாரிகளை நோக்கி நீள்கின்றன. கள்ளக்குறிச்சி மாணவர்கள் தற்கொலை என்று சொல்லப்பட்டதும் அவர்கள் கிணற்றில் மூழ்கி இறக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பொய்யாகிவிட்டது. இந்த ஆட்சியில்தான் மய்யப்படுத்தப்பட்ட ஊழல் நடக்கிறது என்றும் அதிகாரிகள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து தமிழ்நாட்டை சூறையாடுவதாகவும், அஇஅதிமுக உள்விவகாரங்களை நன்கறிந்த பழ.கருப்பையா மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறார். வேலூர் கல்லூரியில் வெடித்தது வானில் இருந்து விழுந்த எரிகல்லா, அங்கேயே பாறைகளை உடைக்க வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளா என்று சர்ச்சை உள்ளது. அங்கும் ஓர் உயிர் பறிபோய் விட்டது.
நடந்த ஊழல்களில் எந்த மட்டத்தில் யார் எப்படி எங்கு சிக்குவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாதபோது, கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் யாராவது சிக்கிவிட்டாலும் அடுத்தடுத்து மேலே மேலே இருப்பவர்களுக்கு தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது. யாரையுமே, எந்த மட்டத்திலும் நேரடியாக விசாரணை செய்ய முடியாது என்றாகிவிட்டால் அதிஉயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு முழுப்பாதுகாப்பு.
தொடரப்பட்ட வழக்கே, பிற பிரிவுகளின் அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் எப்படி நடத்தப்படுகிறார்களோ, அதே விதிகள் படிதான் அதிஉயர் அதிகாரிகள் வரை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக. அதாவது உச்சநீதிமன்றம் டில்லி சிறப்புக் காவல் சட்ட விசயத்தில் சொன்னதுபோல், ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக. அதாவது பிற பிரிவுகளின் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் மீது விசாரணை நடத்த எப்படி அரசு அனுமதி தேவையில்லையோ, அதேபோல், உயரதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் அரசு அனுமதிக்காக காத்திருக்க தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக.
தமிழக அரசு, மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக கருதி, சமமாக நடத்தப்படுவதுதானே உறுதி செய்யப்பட வேண்டும் இதோ, உறுதி செய்துவிட்டோம் என்று அரசின் உயரதிகாரிகளுக்கு இருக்கும் பாதுகாப்பை அனைத்து ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தி பாரபட்சத்தை ஒழித்துவிட்டோம் என்கிறது.
இந்த அரசாணை தமிழக அரசின் இணையதளத்திலோ, அரசிதழின் இணையதளத்திலோ இல்லை. பிப்ரவரி 3 அன்று வெளியிடப்பட்ட பல்வேறு அரசாணைகள் அரசிதழில் பொது மக்கள் பார்வைக்கு உள்ளன. பிப்ரவரி 2 அன்று எந்த அரசாணையும் வெளியிடப்பட்டதாக அரசிதழில் இல்லை. ஜனவரி 27க்குப் பிறகு பிப்ரவரி 3 தேதியில்தான் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பிப்ரவரி 2 அன்று வெளியிடப்பட்ட இந்த குறிப்பிட்ட அரசாணையை அரசு அரசிதழில் வெளியிடாமல் இருப்பதற்கு சிறப்பு காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. அசாதாரணமான அரசாணைகள் என்று அரசிதழில் ஒரு பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலிலும் பிப்ரவரி 2, 2016 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எதுவும் இல்லை. எனவே அரசாணையில் இன்னும் என்ன இருக்கிறது என்று சாமான்யர்கள் தெரிந்து கொள்ள தற்போது முடியவில்லை. மற்ற அரசாணைகளை வெளியிட்டிருப்பதுபோல் இந்த அரசாணையை ஏன் அரசு வெளியிடவில்லை? நீதிமன்றத்தில் அதன் நகல் தரப்பட்டுள்ளபோது, இணையதளத்தில் ஏன் வெளியிடக்கூடாது?
ஊழல் குற்றச்சாட்டுகள் விசயத்தில் பாரபட்சத்தை ஒழித்துவிட்ட ஜெயலலிதா அரசு, அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிற எல்லாவிதமான பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டுமா? தமிழக அரசு ஊழியர்கள் 20 அம்சக் கோரிக்கைகள் மீது பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யச் சொல்கிறார்கள். உண்மையிலேயே அரசு ஊழியர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களை பாதுகாக்கும் அரசு என்றால், தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஜெயலலிதா அரசு இந்தப் பிரச்சனையில் ஓர் அரசாணை வெளியிடுமா? அவர்களுடைய நியாயமான 20 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமா?
பதவிக்காலம் முடிந்த பிறகும் சில மிகவும் முக்கியமான உயர்பதவிகளில் சில ‘நம்பகமான’ அதிகாரிகளுக்கு நீட்டிப்பு வழங்கப்படுகிறது. சாதாராண அரசு ஊழியர்களுக்கு 58 வயதுக்குப் பிறகு அப்படி நீட்டிப்பு வழங்கப்படுமா? உயரதிகாரிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகை களும் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் கிடைத்துவிடுமா? பாரபட்சத்தை ஒழிக்கும் நோக்கம் என்று ஜெயலலிதா அரசு சொல்வது ஊழல் செய்துள்ள உயரதிகாரிகளை பாதுகாக்கும், அதன் மூலம் அமைச்சர்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியேயன்றி வேறல்ல. அதிகாரிகளும் அமைச்சர்களும் செய்யும் ஊழல்களில் இருந்து கவனத்தைத் திருப்பும் முயற்சியும் இந்த அரசாணைக்குப் பின் உள்ளது. உண்மையில் ஜெயலலிதா அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவரையும் உள்ளாற்றல்மிக்க ஊழல் பேர்வழிகள் என்று, இந்த அரசாணை மூலம் சொல்கிறது.
அரசு ஊழியர்கள் வேலை செய்வதில்லை, காசு வாங்குகிறார்கள் என்ற குட்டி முதலாளித்துவ கருத்து மக்கள் மத்தியில் வலுவாக உள்ளது. இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே, ஒட்டுமொத்தமாக அனைத்து அரசு ஊழியர் மீதும் பழியை பங்கு போடுவதாகவே இந்த அரசாணை உள்ளது. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியாற்றுவதால்தான் இந்த அளவிலாவது அரசு இயங்குகிறது.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் எந்த வேலையும் காசு கொடுக்காமல் நடப்பதில்லை என்பது உண்மைதான். இந்த நிர்வாக சீர்கேட்டுக்குக் காரணம் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்தானே தவிர அரசு ஊழியர்கள் அல்ல. அந்த ரூ.500ம், ரூ.1,000மும் பூனையின் முகத்தில் குரங்கு தடவிய வெண்ணெய்தான். இதைப் பற்றி மூச்சு விடாமல் பேசுபவர்கள், பல ஆயிரம் கோடிகளில் நடக்கும் ஊழல், இயற்கை வளக் கொள்ளைப் பற்றி அதே அளவு வீறு கொண்டு பேசுவதில்லை. எல்லா அரசு ஊழியர்களும் கையூட்டு பெறுவதும் இல்லை.
பிரச்சனை மிகப்பெரியது. ஊழல்மயமாகி விட்ட அரசியல் வெளி, இயற்கைவளக் கொள்ளை, நிலப்பறி, ரியல் எஸ்டேட் மாஃபியா, கல்வி மாஃபியா, விதிகளுக்குப் புறம்பாக இயங்குகிற, கட்டப்பட்டுள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஆகியவை மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாட அனுமதித்து, அதை வேடிக்கைப் பார்க்கிறது. ஊழலுக்கு எதிராக ஆவேசமாகப் பேசித்தான் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். அந்த ஆட்சி இப்போது ஊழல் புதைச்சேற்றில் அமிழ்ந்துகிடக்கிறது. ஊழலுக்கு எதிராக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடந்த போராட்டங்களை கேலிக்குள்ளாக்கும் இந்த அரசாணை திரும்பப் பெறப்பட வேண்டும்.
மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 
சிங்கூர், சல்போனி போன்ற தோற்றுப்போய்விட்ட குறியீடுகளை பயன்படுத்தி
இககமா இழந்துவிட்ட அடித்தளத்தை மீண்டும் பெற முடியுமா?
திபங்கர் பட்டாச்சார்யா
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு களம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு, தனது பாரம்பரியமான வாக்கு அடித்தளத்தின் பெரும்பகுதியினர் பார்வையில் கூட நம்பகத்தன்மை இழந்துவிட்ட, ஆணவம்மிக்க 34 ஆண்டுகால இககமா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக, தாய் - நிலம் - சாமான்யன் என்ற ஈர்ப்பான விளிம்புநிலை பிம்பத்தை நிறுத்தி, ‘மாற்றம்’ என்ற மிகப் பெரிய வாக்குறுதியுடன் மமதா ஆட்சிக்கு வந்தார். செயலூக்கமிக்க, பதில்வினையாற்றுகிற, மக்களுடன் தொடர்புகளுடைய தலைவராக அவர் எழுந்து கொண்டிருந்தபோது, மறுபக்கம், சிங்கூரில் பலபோகங்கள் விளையும் விளைநிலத்தை கட்டாயமாக பறித்தது முதல், இககமா தவறுகள் மேல் தவறுகள் செய்துகொண்டிருந்தது; மக்கள் சீற்ற அலையின் வீச்சு திரிணா மூலை ஆட்சியில் அமர்த்தியது; 34 ஆண்டுகால இககமா ஆட்சி முடிவுக்கு வந்தது.
இப்போது அய்ந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘ஆட்சி மாற்றம்’ என்ற அரசியல் வாக்குறுதியை நிறைவேற்றியது தவிர, அவரது அரசாங்கத்தின் ‘சாதனைகள்’ என்று மேற்கு வங்க மக்களுக்குக் காட்ட மமதாவிடம் எதுவும் இல்லை. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் திரிணாமூலின் கட்டுக்கடங்காத எதேச்சதிகார மேலாதிக்கத்திற்கு கீழ்ப்படுத்தப்பட்டு மேற்கு வங்கம் இருப்பதால், ஜனநாயகத்தை மீட்பது என்ற வாக்குறுதியும் பொய்த்துப் போய்விட்டது. வடக்கு வங்கத்தின் தேயிலைத் தோட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பட்டினியால் சாகிறார்கள்; மேற்கு வங்க விவசாயத்தின் இதயப்பகுதியான பர்த்மானில் விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொள்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன; பொது விநியோகத் திட்டம் சீர்குலைந்து போய் விட்டது; ஆனால், இப்படி எதுவும் நடக்கவில்லை என்று அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது.
சாரதா சிட் பண்ட் ஊழல், சிறிய அளவில் சேமிப்பு வைத்திருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டது; அவர்கள் எல்லா சேமிப்புகளையும் இழந்துவிட்டனர்; முகவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்; பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் சீற்றத்தையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ‘போனது போனதுதான்’ என்று முதலமைச்சர் தனது வழக்கமான பேச்சின் மூலம் இந்த மெகாஊழலை புறந்தள்ளுகிறார்; மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட ஊழல் அமைச்சர் தனது அமைச்சரவையில் மாதக்கணக்கில் தொடர்வதையும் அனுமதிக்கிறார். ஆளும் கட்சியின் ஆதரவுடன் ஊழலிலும் அச்சுறுத்தலிலும் ஈடுபடும் மாஃபியா போன்ற எங்கும் நிறைந்திருக்கிற பணப்பறி ‘கும்பலின்’ கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் நடக்கும் நில பரிவர்த்தனைகள், கட்டுமான நடவடிக்கைகள் இருக்கின்றன.
நாட்டை உலுக்கிய பாலியல் வன்முறைச் சம்பவங்கள் மமதாவைப் பொறுத்தவரை, ‘இட்டுக் கதைகளாகின்றன’; ‘சிறிய வழமையான நிகழ்வுகளாகிவிடுகின்றன’; அவரது கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவர் - அவர் திரைப்பட நடிகரும் கூட - திரிணாமூல் கட்சியை எதிர்ப்பவர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவார்கள், கொல்லப்படுவார்கள் என்று மிரட்டியபோது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகள் கூட இருக்கின்றன. அரசியல் கைதிகள் விடு விக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவேயில்லை; மாறாக திரிணாமூல் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி - அவர் மமதாவின் உறவினர், திரிணாமூலின் வளர்ந்து வரும் நட்சத்திரம் - திரிணாமூல் ஆட்சியில் மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டதை, ஒரு பொதுக் கூட்டத்தில் பெருமையாகப் பேசினார். திரிணாமூல் குண்டர்கள், முழுக்க முழுக்க ஆளும் கட்சிக்கு ஆதரவான காவல் துறையினருடன் சேர்ந்து கொண்டு, இன்றைய மேற்கு வங்கத்தின் ‘சட்டம் ஒழுங்கை’ தீர்மானிக்கிறார்கள்.
பல்வேறு பிரிவு மக்கள் மத்தியில் ஆட்சி பற்றிய ஏமாற்றம் வளர்ந்து வருகிறபோதிலும், திரிணாமூல் மேற்கு வங்கத்தில் ஒரு பெரிய தேர்தல் சவாலை இன்னும் சந்திக்கவில்லை. 2014 மக்களவை தேர்தல்களில் பாஜக ஒரு பெரிய சக்தியாக எழுந்தது. ஆனால், இககமா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் இடங்களைப் பிடித்துத்தான் பாஜக வெற்றி பெற்றது; திரிணாமூலின் இடங்களைப் பிடித்து அல்ல. மோடி அலை சரிந்து நாடெங்கும் சக்திவாய்ந்த பாஜக எதிர்ப்புப் போராட்டங்கள் எழுந்து வரும்போது, மேற்கு வங்கத்திலும் பாஜகவின் வளர்ச்சி மீண்டும் கீழ் நோக்கிச் செல்கிறது; இது இககமாவின் தேர்தல் வெற்றிகளில் ஓரளவு மீட்சிக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆனால், சிங்கூர், நந்திகிராமுக்குப் பிறகு திரிணாமூலை நோக்கி நகர்ந்த கிராமப்புற வங்கத்தின் இடதுசாரிகளின் கருவான அடித்தளம் இன்னும் இடதுசாரிகள் பக்கம் திரும்ப வில்லை. இககமாவின் மிகப் பெரிய நெருக்கடியும் திரிணாமூலின் ஒப்பீட்டுரீதியான மிகப் பெரிய சாதக நிலையும், இங்குதான் உள்ளது.
கேரளாவில் அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படுவதால் அங்கு எதிர்க்கட்சியாக செயல்படும் அனுபவம் இககமாவுக்கு உள்ளது. மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய சவாலை அது புதிதாக எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், சாரதா சிட் பண்ட் மோசடி போன்ற ஒரு பெரிய பிரச்சனையில் கூட இககமா, திரிணாமூல் அரசாங்கத்துக்கு நெருக்கடி உருவாக்க முடியாமல் போனது; அந்த மோசடியில் மதன் மித்ரா மத்திய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்ட பிறகும் மமதா அவரை அமைச்சராகத் தக்க வைத்துக் கொள்வதையும் தடுக்க முடியாமல் போனது. தேயிலைத் தோட்டங்களில் பட்டினிச் சாவுகள், பர்தமானில் விவசாயிகள் தற்கொலைகள், கடுமையான மின்கட்டண உயர்வு, அவ்வப்போது நடந்த ஜனநாயக மீறல், மனித உரிமைகள் மீறல் பிரச்சனைகள் ஆகியவற்றில், ஒரு சக்திவாய்ந்த இடதுசாரி எதிர்க்கட்சியிடம் இருந்து மேற்கு வங்கம் எதிர்ப்பார்த்த நிர்ப்பந்தமோ கிளர்ச்சிகளோ உருவாகவில்லை.
தேர்தல்கள் வரவுள்ள நிலையில், கட்சியின் செயல்திட்டங்களில் வேகமான மாற்றங்கள் இருந்தபோதும், கிட்டத்தட்ட எல்லா பிரச்சனைகளிலும் அது சந்திக்கிற நம்பகத்தன்மை நெருக்கடி அதனை தொடர்ந்து தாழ்ந்த நிலையில் வைத்திருப்பதே இககமாவின் செயலின் மைக்கு முக்கிய காரணமாக இருக்க வேண்டும். இககமா ஆட்சியில் இருந்தபோது நடந்த இது போன்ற நிகழ்வுகளைச் சொல்லி இககமாவை எதிர்கொள்வதும் வாயடைப்பதும் இககமாவை விமர்சிப்பவர்களுக்கு எளிதானதாக இருக்கிறது. உண்மையான சுயவிமர்சனம் செய்து கொள்வதும் மக்களிடம் மன்னிப்பு கேட்பதும், நடைமுறையில் தவறுகளைத் திருத்திக் கொள்வதும்தான், இந்த நம்பகத்தன்மை நெருக்கடிக்கு துணிச்சலான, நேர்மையான பதிலாக இருக்க முடியும். ஆனால் இது நடக்கவில்லை. ‘கெட்ட காலங்கள்’ கடக்கட்டும் என்று நம்பி கட்சி ஒரு வேளை காத்திருக்கலாம்; மக்கள் கடந்த காலத்தை மறந்துவிடுவார்கள், திரிணாமூல் மீதுள்ள சீற்றத்தால் மீண்டும் இககமாவுக்கு திரும்பி விடுவார்கள் என்று கருதலாம்.
2014 மக்களவைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவில் குறைவான இடங்களையே இககமா பெற்றது; இதனால் கட்சியின் அரசியல் - செயல்தந்திர வழி பற்றி பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விசாகப் பட்டினம் காங்கிரசில் பேசப்பட்டது. ஆனால், அக்கறையற்ற, அரைவேக்காட்டுத்தனமான பரிசீலனை கடைசியில் எதுவும் இல்லாமல் முடிந்தது. இடதுசாரி இயக்கத்தின் சுதந்திரமான அறுதியிடலின், பரந்த கூடுதல் திறன்மிக்க இடதுசாரி ஒற்றுமையை கட்டி எழுப்புவதன் முதன்மை தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்று கட்சி பேசியது; ஆனால், மாநிலத்தின் குறிப்பான நிலைமைகள், விதிவிலக்கான சூழல்களில் நீக்குபோக்கான செயல்தந்திரம் என்ற பெயரில் எல்லாவிதமான சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணிகளுக்கும் கதவுகள் திறந்து விடப்பட்டன. எனவே, காங்கிரசுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தின் இககமா தலைவர்கள் பலரும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொல்வதை கேட்க முடிகிறது.
2008ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதுதான் 2011 மக்களவை தேர்தல் தோல்விக்கும் மேற்கு வங்கத்தில் ஆட்சியிழந்ததற்கும் காரணம் என்று இககமா தலைமையின் ஒரு பிரிவினர் சொல்லி வருகின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இயக்கப்போக்கில் திரிணாமூலுடன் கூட்டணி அமைக்க காங்கிரசை இககமா விரட்டியது என்றும் அதனால்தான் மேற்குவங்கத்தில் இககமா ஆட்சியிழந்தது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 2014 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ், திரிணாமூல் கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்டபோதும் இககமா பெற்ற இடங்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. இந்த நிலைமைகள் அவர்கள் எழுப்பும் கேள்விகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்க சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி நாற்காலிகளில் காங்கிரஸ் மீண்டும் அமர்ந்ததால், காங்கிரசுடன் நட்புப் பாராட்டி அதனுடன் மீண்டும் தேர்தல் கூட்டணி அமைக்கும் சாத்தியப்பாடுகளைக் கண்டறிய இககமா ஊக்கம் பெற்றுள்ளது. அய்க்கிய முன்னணி - அய்முகூ காலங்களில் காங்கிரஸ் - இடதுசாரி ஒத்துழைப்பு இருந்தபோது, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இககமாவின் ‘இரண்டாவது அணி’ என்று சொல்லியே, திரிணாமூல், காங்கிரசின் அடித்தளத்தை பிடித்து இககமாவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்தது உண்மைதான். ஆனால், இதை ஒரு விசயமாக எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் இககமாவுடன் கொண்டுள்ள சாரமான போட்டியை ஓரந்தள்ளிவிட்டு, 2019ல் பாஜக எதிர்ப்பு கூட்டணியில் இருக்கக் கூடிய ஒரு கூட்டாளியை பகையாக நிறுத்தும் என்று இககமா எதிர்பார்த்தால், அது மேற்கு வங்கத்தில் இககமாவின் கடுமையான அரசியல் கையறு நிலையையும் திவாலாத்தனத்தையுமே காட்டுகிறது.
சமீபத்தில் நடந்த இககமாவின் அமைப்பு மாநாடு, இந்த கையறு நிலையில் இருந்து இககமா மீள பெரிய பங்கேதும் ஆற்றவில்லை. காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றிய பிரச்சனைதான் மொத்த மாநாட்டு நிகழ்வுகளையும் ஆக்கிரமித்திருந்தது. மாநாட்டுக்கு முன்பு பிரிகேட் மைதானத்தில் நடந்த பேரணியில் கூட இதுவே முக்கியமான விசயமாக இருந்தது. மாநாட்டுக்குப் பிறகு, தேர்தல் போர்த்தந்திரத்தை மாநில கமிட்டிகள் முடிவு செய்யும் என்று இககமா தலைவர்கள் அறுதியிட்டுச் சொன்னது, ‘மர்மம் பற்றிய ஆர்வத்தை’ உயிரோட்டமானதாக வைத்திருந்ததோடு அந்த ஆர்வத்தை இன்னும் அதிகரிக் கவும் செய்துள்ளது. ஆனால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க இககமா காட்டும் ஆர்வம் பற்றி இன்னும் கூடுதல் அறிகுறி எதுவும் தேவை என்றால், அது, கட்சியின் மாநிலச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் மாநாட்டுக்குப் பிறகு சிங்கூர் முதல் சல்போனி வரை பயணம் செய்ததில் கிடைத்துள்ளது.
சிங்கூர் முதல் சல்போனி வரையிலான பயண நிகழ்ச்சி, சிங்கூருக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் கட்சி சந்தித்த சரிவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள இககமா தவறுவதை, அல்ல, மறுப்பதை தெளிவாகக் காட்டுகிறது. சிங்கூரில் பயணத்தைத் துவக்கி வைத்த இககமா தலைவர்கள், உச்சநீதிமன்றத்தில் இருக்கிற சிங்கூர் வழக்கை திரும்பப் பெறுவதாகச் சொன்னார்கள். சிங்கூரில் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்த மக்கள் நிலைமைகள் பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை; சிங்கூர் மக்களுக்கு திரிணாமூல் இழைத்த துரோகம் பற்றியோ, அவர்களுக்கு கவுரவமான உத்தரவாதமான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய திரிணாமூல் தவறிவிட்டது பற்றியோ எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை. மாறாக, இககமா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாடாவை மீண்டும் கொண்டு வருவதாக மக்களுக்குச் சொல்லவும் காங்கிரஸ் விரைவாக முடிவெடுத்து இககமாவுடன் கரம் கோர்க்க ‘கெடு’ விதிக்கவும், மொத்த நிகழ்ச்சியும் பயன்படுத்தப்பட்டது.
கார்ப்பரேட்டுகளுக்கு தொழில் துவங்க பெருமளவில் நிலம் தரப்பட்ட இடங்கள்தான் சிங்கூரும் சல்போனியும். டாடாக்கள் மேற்கு வங்கத்தில் தொழில் செய்யாமல் நரேந்திர மோடியின் குஜராத்துக்கு ஓடிப் போனார்கள். 0.1% வட்டியுடன் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வசதியுடன் ரூ.9,570 கோடி கடன், இலவச மின்சாரம், ஒரு துணைநகரம் அமைக்க அகமதாபாத்துக்கு அருகில் மேலும் 100 ஏக்கர் நிலம், நான்கு வழிச்சாலை போக்குவரத்து வசதி, கழிவகற்றும் ஆலை, மாநிலம் முழுவதும் மோடியும் டாடாவும் சேர்ந்திருப்பதுபோல் அரசாங் கம் பெரிய தட்டிகள் வைத்து நானோ காருக்கு இலவச விளம்பரம் என டாடாவுக்கு குஜராத் அரசாங்கம் பல்வேறு சலுகைகள் அளித்தது. ஆயினும் அரசாங்கம் தந்த இந்த பல்வேறு சலுகைகளையும் பல ஆண்டுகள் அனுபவித்து விட்டு, இப்போது, நானோ திட்டம் செயல்படாத திட்டம், தவறான பொருளாதார கருத்து என்று டாடாவே அறிவிக்கிறார்.
புத்ததேவ் பட்டாச்சார்யா ஆட்சியின் போது, மேற்கு மிதினிபூரில் உள்ள சல்போனியில், பழங்குடி மக்களும் பிற விவசாயிகளும் விவசாயம் செய்துகொண்டிருந்த 4,000 ஏக்கர் நிலங்கள், ‘தரிசு’ என்று அரசு தரப்பில் பொய்யாகக் காட்டப்பட்டு, உருக்காலைக்கும் மின் உற்பத்தி ஆலைக்கும் தரப்பட்டது. அப்போது முதல் பத்தாண்டுகளாக இந்தத் திட்டங்கள் தொடர்பாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. இப்போது, மமதா கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகு, தேர்தலுக்கு முன்பு, 134 ஏக்கர் நிலத்தில் சிமென்ட் ஆலை அமைக்க ஜிந்தால் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் 2018க்குள் அங்கு உற்பத்தி துவங்கி, 200 நிரந்தர வேலை வாய்ப்புகள் உட்பட 1,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
சிங்கூர் என்றால், மேற்கு வங்க மக்களுக்கு அங்கு வந்திருக்க வேண்டிய டாடா ஆலை பற்றிய கனவுகள் வருவதில்லை; மாறாக, காட்டுமிராண்டித்தனமாக, ஆணவத்துடன் புத்ததேவ் அரசாங்கம் நிலப்பறி செய்ததுதான் அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது. சல்போனி என்றால், அடுத்தடுத்த ஆட்சிகளும் ஜிந்தாலும் வேலை வாய்ப்பு பற்றிய வெற்று வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றியதுதான் அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது. விவசாய நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் வறுமை, ஏற்றத்தாழ்வு ஆகியவை நிறைந்த குரூரமான பொருளாதார யதார்த்தம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற தொழில்ரீதியாக வளர்ச்சியுற்ற மாநிலங்களில் கூட, கார்ப்பரேட் வழியிலான வளர்ச்சி, தொழில்மயம் என்ற புனைக்கதையை கிழித்தெறியும் நிலைமைகளில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கார்ப்பரேட் வழியிலான தொழில்மயம் என்ற நவதாராளவாத பொய்க்கதைக்கு எதிராக, வேலை வாய்ப்பு உருவாக்கும் மக்கள் சார்பு வளர்ச்சிக்காக போராடுவதற்குப் பதிலாக, மேற்குவங்கத்தில் இககமா இப்போது, இன்னும் கூடுதல் சலுகைகள் கொடுத்து கார்ப்பரேட் மூலதனத்தை ஈர்க்கப் பார்க்கும் மமதா பானர்ஜியின் முயற்சியை முந்திவிடப் பார்க்கிறது. சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், மமதா அவருக்கே உரிய பாணியில், ‘நீங்கள்தான் எனது முதலாளி, நான் உங்களது தொழிலாளி’ என்று முதலீட்டாளர்களிடம் சொன்னார். நிலப்பறி பிரச்ச னையில் மமதாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்ததால், இப்போது கார்ப்பரேட்டுகளை ஈர்க்கும் விசயத்தில் மமதாவுக்கு சவால் விடுத்து அவரை தோற்கடிக்க புத்ததேவ் விரும்புகிறார். ஒரு காலத்தில் தனக்கு மிகவும் விசுவாசமாக இருந்த ஒரு மிகப்பெரிய அடித்தளத்தின் பெரும்பிரி வினரை இழந்த ஒரு கட்சி, மக்கள் ஆதரவைத் திரும்பவும் பெற, நிச்சயம் இது வழியல்ல.
1977ல் நெருக்கடி நிலையின் தாக்குதல்களுக்குப் பிறகு ஜனநாயகத்தை மீட்பது என்று சொல்லி இககமா எதிர்பாராதவிதமாக ஆட்சிக்கு வந்தது. நிலமறு விநியோகம், ஆபரேசன் பர்கா, உள்ளாட்சி முறையை சீர்செய்தது ஆகியவற்றின் மூலம் அது தனது செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொண்டு, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், முப்பதாண்டுகள் கழித்து, நிலம், விவசாயிகள் உரிமைகள், ஜனநாயகம் என்ற அதே பிரச்சனைகளில் முழுவதுமாக நம்பகத்தன்மை இழந்து ஆட்சியை இழந்தது. இழந்ததை மீட்க குறுக்கு வழி ஏதும் இருக்க முடியாது; காங்கிரசின் முதுகில் ஏறி சவாரி செய்தோ, இன்னும் கூடுதல் சிங்கூர்கள், சல்போனிகள் வரும் என்று மேற்கு வங்க மக்களுக்கு ‘வாக்குறுதி’ அளித்தோ, இழந்ததை மீட்க முடியாது. கையறு நிலையில் இருந்து எடுக்கப்படும் இந்தத் தற்கொலைப் பாதையை புரட்சிகர இடதுசாரிகள் துணிச்சலுடன் புறக்கணிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் இடதுசாரி பதாகையை உயர்த்திப் பிடிக்க, எதேச்சதிகார திரிணாமூல் ஆட்சியின் பயங்கரத்தையும் துரோகத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது
கண்துடைப்பு முகாம்களின் குரூர நிழல்
‘வேலை வாய்ப்பு முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அதிர்ஷ்டத்தின் புன்னகை பட்டது’ என்ற தலைப்புடன் தி இந்து ஆங்கில நாளிதழில் பிப்ரவரி 7 அன்று ஒரு செய்தி வெளியானது. ‘அதிர்ஷ்டத்தின் புன்னகை பட்டது’ என்ற தலைப்பு சற்றும் பொருந்தாத செய்தி அது.
துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிப்ரவரி 6 அன்று குடிசை மாற்று வாரியமும் வேலை வாய்ப்பு மற்றும் திறன்வளர்ப்பு துறை யும் சேர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு என சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தின. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்த ஓர் இளைஞருக்கு ரூ.15,000 மாதச் சம்பளத்தில் விற்பனை பிரிவில் கிடைத்த வேலையே அன்று தரப்பட்ட வேலை வாய்ப்புகளில் மிகவும் கூடுதல் சம்பளம் கொண்ட வேலை. கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்.
வேலை வாய்ப்பு தர வந்த நிறுவனங்கள் வேலை வாய்ப்பு தேடுபவர்கள் பற்றிய தகவல் சேர்ப்பதில்தான் முனைப்பு காட்டின என்று அந்தச் செய்தி சொல்கிறது. இந்த முகாமில் பதிவு செய்த 6,022 பேரில் 568 பேருக்கு பணி நியமனை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,404 பேர் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு பதிவு செய்துகொண்டுள்ளனர்.
பணி நியமன ஆணை எனத் தரப்படுவது அடுத்த நாளே வேலைக்குச் சேர அல்ல. வேலை வாய்ப்பு வரும்போது அழைக்கப்பட. இதிலும் அதிகபட்சமாக ரூ.7,000தான் சம்பளம் தருவதாக நிறுவனங்கள் சொல்கின்றன. ஆக, உடைமைகள் அனைத்தையும் வெள்ள நீர் அடித்துச் சென்றுவிட, வாழும் இடத்தில் இருந்தும் அகற்றப்பட்டு, ஊருக்கு வெளியே விரட்டப்பட்ட நிலையில், வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்புடன் முகாமுக்குச் சென்ற படித்த இளைஞர்கள் வெறுங்கையுடன் திரும்பியதுதான் யதார்த்தம்.
வேலை தருவதாகச் சொல்லி முகாமுக்கு வந்த தனியார் நிறுவனங்கள், சுத்தம் செய்வது, எலக்ட்ரிகல், பிளம்பிங் போன்ற வேலைகளே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த வேலை களை அரசு முகாம் அமைத்துத் தேடித் தர வேண்டியதில்லை. மக்கள் தாங்களாக தேடிக் கொள்ளும் வேலைகள் இவை. இப்படித் தேடித்தான் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற முகாம்களில் கண்துடைப்பு நாடகமே நடக்கிறது.
வெள்ளத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4,000 குடும்பங்கள் பெரும்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர் ஆகிய, நகரில் இருந்து வெகு தூரம் தள்ளியுள்ள இடங்களுக்கு விரட்டப்பட்டன. இங்கு 36,000க்கும் மேற்பட்ட அய்டி நிறுவனங்கள் உள்ளன. இந்த அய்டி நிறுவனங்களிலும் வேலை தேடி, விரட்டப்பட்ட மக்கள் அலைகிறார்கள்.
தானும் தனது கணவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரத்தில் இருந்து பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட இந்த மூன்று மாதங்களில் வேலை தேடி பகுதியில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் ஏறி இறங்கியும் வேலை கிடைக்காமல் இருப்பதாக, இல்லப் பணி செய்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண், அமைச்சருடன் வந்திருந்தவர்களுடன் விவாதத்தில் இறங்கியிருக்கிறார்.
நாஞ்சில் சம்பத்தின் பதவிப் பறிப்புக்குக் காரணமான அந்த நேர்காணலில் அவர் பேசும் போது, அவர் தொனி ஆணவத்தின் உருவமாக இருந்தது. யானை, எறும்பு, இழவு, திருமணம் என்றெல்லாம் பேசி, அந்த ஆணவம் துன்பத்தில் இருந்தவர்களை ஏளனம் செய்தது. தவறுகள் செய்து கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டவர்கள், அதிகார ஆணவத்தில் அனைத்தையும் நியாயப்படுத்தி விடலாம் என்ற அவரது முயற்சி இறுதியில் பரிதாபமாக தோற்றுப் போனது.
இதே அதிகார ஆணவம்தான் வேலை வாய்ப்பு முகாமிலும் வெளிப்படுகிறது. துயரத்தில் இருப்பவர்களின் கையறு நிலையை பயன்படுத்தி, உயிரும் உணர்வும் உள்ள அந்த இளைஞர்களை அலைகழித்து, மதிப்பே இல்லாத காகிதம் ஒன்றை கையில் கொடுத்து திருப்பி அனுப்பி, அவர்களை வைத்து தேர்தல் அரசியல் நடத்த மட்டுமே முயற்சி நடந்திருக்கிறது. சாமான்ய மக்களின் துன்பத்திலும் தேர்தல் ஆதாயம் தேடும் இந்த குரூரம் நிச்சயம் திருப்பித் தாக்கும்.
இப்படியும் ஒரு நீதிபதி எழுதியுள்ளார்!
 ஒரு முதலாளிகள் சங்கம் நீண்டகாலம் செயல்பட்டு வந்திருந்த போதிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுகளைப் பற்றிய புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு உதிக்காது போனது எப்படி?
 வேலை நிறுத்தங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் நிபந்தனையை ஒப்புக்கொண்டால், வேலை நிறுத்தங்களை உடைக்க கருங்காலிகளை அமர்த்துவதில்லை என்று ஒப்புக்கொள்கிறீர்களா?
 சந்தா செலுத்தியவர்களுக்குத்தான் சங்கம் பிரதிநிதித்துவம் வகிக்க முடியும் என்று நிபந்தனை விதித்த முதலாளிகள், முதலாளிகள் சங்கத்தில் எத்தனை பஞ்சாலைகள் சேர்ந்திருக்கின்றன, சேர்ந்திருப்பவைகளில் எத்தனை பஞ்சாலைகள் ஒழுங்காக சந்தா செலுத்துகின்றன என்று சொல்ல முடியுமா?
 நிலையான தொழிற்சங்கங்கள் இல்லாததும், அவற்றை முதலாளிகள் அங்கீகாரம் செய்யாததும்தான் தொழிற்தகராறுகள் அதிகரிப்புக்குக் காரணம்.
 இரவு வேலையால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இரவு வேலை செய்பவர்களுக்கு 20% சம்பளம் சேர்த்துத் தர வேண்டும்.
 அடிப்படையாக அமைப்புகளின் அக்கறையற்ற மனப்பான்மையாலும், தொழிலாளர்களின் நன்மைகளை விட, லாபமே பெரிதெனக் கருதும் முதலாளிகளாலும் தொழிலாளர்களுடைய, அவர்களது குழந்தைகளுடைய கல்வி வெகுகாலமாக உதாசீனப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே தொழிலாளர் வசிக்கும் பகுதிகளில் உடனே பள்ளிக்கூடங்கள் துவக்க வேண்டும்.
 கூட்டுறவு சங்கங்களில் முதலாளிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும், அவர்களிடமே முக்கிய பதவிகள் இருக்க வேண்டும், தொழிலாளர் சம்பளத்தில் இருந்து மீதமுள்ள தொகையை பிடித்தம் செய்து முதலாளிகள் தர வேண்டும் என்பவை போன்ற நிபந்தனைகளை கூட்டுறவு இலாகா செயல்படுத்துவது கூட்டுறவு தத்துவத்துக்கே எதிரானது.
 தாங்கள் தரும் கூலிக்கு வேலை செய்ய ஏராளமான தொழிலாளர்கள் தயாராக உள்ளனர் என்று முதலாளிகள் கூறியபோது, அதைத்தான் சுரண்டல் என்பது, அதனைத் தடுக்கவே உலகில் தொழிற்சங்க இயக்கங்கள் தோன்றின.
 கோவையில் பெரிய அபிவிருத்திகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கு திரும்பினாலும் பெரும்பெரும் மாளிகைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. எனினும் தொழிலாளர்களுக்கு வீடுகள் இல்லை. மனிதன் வாழ்வதற்கு அருகதையற்ற குடிசைகளில்தான் அவன் வாழ வேண்டியிருக்கிறது...
 உயிர் வாழ்ந்தாலே போதும் என்ற காலம் போய்விட்டது. கால முன்னேற்றத்தில் தொழிலாளியின் வாழ்க்கை முறையிலும், அவன் போக்கிலும் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாலைகளின் லாபங்களில் தனக்கும் பங்கு உண்டு என்று அவன் உணர்ந்துவிட்டான். அது நியாயமானதே.
 போட்ட முதலுக்கு 6 சதவிகித வட்டி எடுத்தபின் உள்ள லாபத்தில் சரிபாதியை பங்கிட்டு தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
கோவை பஞ்சாலைத் தொழிலாளர்களின் போனஸ் போராட்டத்தை ஒட்டி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் பற்றிய விசாரணை நீதிமன்ற நீதிபதியாக, முன்னாள் மாவட்ட நீதிபதி எம்.வெங்கிட ராமையா நியமிக்கப்பட்ட ஆணை 1936, டிசம்பர் 29 அன்று வெளியிடப்படுகிறது. 1937 ஜனவரி 7 முதல் மூன்று மாதங்களுக்கு விசாரணை நடத்தப்பட்டு ஏப்ரல் 9 அன்று பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. விசாரணையின்போது நீதிபதி எழுப்பிய சில கேள்விகளும் அவரது சில பரிந்துரைகளும்தான் இவை. கோவை தொழிற்சங்க இயக்க வரலாறு பற்றி சி.கோவிந்தன் 1964ல் எழுதிய ‘தியாகி என்.ஜி.ராமசாமி வாழ்க்கை வரலாறு’ நூலில் இருந்து. இவர்களில் யாரும் கம்யூனிஸ்ட் இல்லை.
சரி... ரொம்ப தேங்ஸு...
டிசம்பர் மாத மழையில் துன்பப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக ஜெயலலிதா அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.
அந்தச் செய்தியை மிகவும் நிறுத்தி நிதானமாக ஜெயலலிதா படித்ததால் ஏற்பட்ட விளைவு இங்கு எழுத்தில் தரப்பட்டுள்ளது. ஒரு சாமான்யர், ஜெயலலிதா சொல்வதைக் கேட்டு அதை அப்படியே நம்பி ‘உம்’ கொட்டினால் எப்படி இருக்கும் என்பதை, சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழர் வஞ்சப் புகழ்ச்சியாய் கற்பனை செய்து அந்த ‘உம்’களையும் சேர்த்து அந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார். அந்த ஒலி வடிவத்தின் எழுத்து வடிவம் இது. ஒலியில் இருக்கும் சுவையை எழுத்தில் கொண்டு வருவது சிரமம். இருப்பினும் யாம் பெற்ற பேறு, கற்பனை வளம் கொண்ட தீப்பொறி வாசகர்களும் பெறுவதற்காக இது பிரசுரிக்கப்படுகிறது.
ஜெயலலிதா: .....கண்டிராத மிகப்பெரும் தொடர்மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம்.
சாமான்ய தமிழர்: சரி..
ஜெயலலிதா: இது உங்கள் அரசு
சாமான்ய தமிழர்: சரிம்மா....
ஜெயலலிதா: எதையும் எதிர்கொண்டு வெல்லும் சக்தியை
சாமான்ய தமிழர்: ம்....
ஜெயலலிதா: எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்
சாமான்ய தமிழர்: கண்டிப்பா கண்டிப்பா மா...
ஜெயலலிதா: உங்களுக்காக நான்
சாமான்ய தமிழர்: ஆ....
ஜெயலலிதா: உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன்.
சாமான்ய தமிழர்: கண்டிப்பா மா
ஜெயலலிதா: விரைவில்
சாமான்ய தமிழர்: ம்....
ஜெயலலிதா: இந்த பெரும் துன்பத்தில் இருந்து உங்களை
சாமான்ய தமிழர்: ம்....
ஜெயலலிதா: மீட்டு மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன்
சாமான்ய தமிழர்: கண்டிப்பா மா கண்டிப்பா மா....
ஜெயலலிதா: இது உறுதி
சாமான்ய தமிழர்: சரி... ரொம்ப தேங்ஸு மா ரொம்ப தேங்ஸு மா..
ஜெயலலிதா: போர்க்கால அடிப்படையில்
சாமான்ய தமிழர்: ம்.....
ஜெயலலிதா: மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும்
சாமான்ய தமிழர்: ஆ... ம்...
ஜெயலலிதா: புனரமைப்புப் பணிகளையும்
சாமான்ய தமிழர்: ஓ...
ஜெயலலிதா: முழுவீச்சில்
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: முடுக்கிவிட்டிருக்கிறேன்
சாமான்ய தமிழர்: அப்பிடியாôôôô....
ஜெயலலிதா: அமைச்சர்களும்
சாமான்ய தமிழர்: சரி....
ஜெயலலிதா: அரசு அலுவலர்களும்
சாமான்ய தமிழர்: சரி....
ஜெயலலிதா: காவல்துறையினரும்
சாமான்ய தமிழர்: சரி இ....
ஜெயலலிதா: தீயணைப்பு
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும்
சாமான்ய தமிழர்: ஓ... ஓ... ஓ... ஆ...
ஜெயலலிதா: முப்படையினரும்
சாமான்ய தமிழர்: ஆ... ஆ....
ஜெயலலிதா: தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும்
சாமான்ய தமிழர்: சரி சரி சரி
ஜெயலலிதா: தன்னார்வத் தொண்டர்களும்
சாமான்ய தமிழர்: அவுங்களுமா...
ஜெயலலிதா: அயராது
சாமான்ய தமிழர்: ம்....
ஜெயலலிதா: தோளோடு தோள் சேர்ந்து
சாமான்ய தமிழர்: ம்....
ஜெயலலிதா: உங்களுடன்
சாமான்ய தமிழர்: ம்....
ஜெயலலிதா: கடுமையாக உழைத்தார்கள்
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்
சாமான்ய தமிழர்: ம்... என்ன இப்படிச் சொல்லிட்டீய...
ஜெயலலிதா: எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது
சாமான்ய தமிழர்: ஏன்....?
ஜெயலலிதா: எனக்கென்று உறவுகள் கிடையாது
சாமான்ய தமிழர்: ஏன் அப்படிச் சொல்லுறீய....?
ஜெயலலிதா: எனக்கு சுயநலம் அறவே கிடையாது
சாமான்ய தமிழர்: அய்யய்ய...
ஜெயலலிதா: எனக்கு எல்லாமும் நீங்கள்தான்
சாமான்ய தமிழர்: ஏம்...
ஜெயலலிதா: என் இல்லமும் எண்ணமும்
சாமான்ய தமிழர்: ம்....
ஜெயலலிதா: தமிழகம்தான்
சாமான்ய தமிழர்: அய்யோ... அய்யோ...
ஜெயலலிதா: எனது பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை
சாமான்ய தமிழர்: ஆ...
ஜெயலலிதா: மறந்துபோகும் அளவுக்கு
சாமான்ய தமிழர்: ஆ...
ஜெயலலிதா: நீங்கள் அழைக்கின்ற அம்மா
சாமான்ய தமிழர்: அய்யோ...
ஜெயலலிதா: என்ற ஒரு சொல்லுக்காகவே
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: என் வாழ்நாட்களை
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: உங்களுக்காக அர்ப்பணித்து
சாமான்ய தமிழர்: அய்யோ...
ஜெயலலிதா: உழைத்துக் கொண்டிருக்கிறேன்
சாமான்ய தமிழர்: எங்களை எல்லா மொதலாளிங்கிறீங்க...
ஜெயலலிதா: இந்த அரசு....
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: இயற்கைப் பேரிடர்களை
சாமான்ய தமிழர்: ம்... ம்...
ஜெயலலிதா: எதிர்கொள்வதில்
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை
சாமான்ய தமிழர்: சரி... சரி...
ஜெயலலிதா: மீண்டும் ஒரு முறை நிலைநாட்டுவேன்
சாமான்ய தமிழர்: சரி... விடுங்க விடுங்க விடுங்க...
ஜெயலலிதா: எத்துயர் வரினும்
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: அத்தனையும் இத்தாயின் கரங்கள்
சாமான்ய தமிழர்: ம்...
ஜெயலலிதா: துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்
சாமான்ய தமிழர்: சரி... சரி...
ஜெயலலிதா: நன்றி
சாமான்ய தமிழர்: சரி... ரொம்ப தேங்ஸு..
கெயில் திட்டம்: கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக 
விவசாய நிலங்கள் சூறையாடல்
சந்திரமோகன்
கெயில்-இந்திய எரிவாயு ஆணையத்தின், கொச்சின் - குட்டநாடு - பெங்களூரு - மங்களூரு எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு, 2013ல், தமிழக அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர், தமிழகத்தின் ஏழு மேற்கு மாவட்டங்களின் (கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி) 136 கிராமங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு ஏற்கனவே அஇஅதிமுக அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது. கேரளாவில், குழாய் பதிக்கும் பணியை முடித்துவிட்ட பிறகு, தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தி குழாய்களை பதிக்கத் துவங்கிய பின்னர், பாதிக்கப்படும் விவசாயிகளும், விவசாய சங்கங்களும், கடும்எதிர்ப்பைத் தெரிவித்தனர். கிளர்ச்சிகள் வெடித்தன. இதனால், திட்டத்திற்கு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொண்ட தமிழக அரசு, விவசாய நிலங்களை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக, அதன் ஓரமாக குழாய்களை பதித்து திட்டத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து கெயில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தமிழக அரசாணைக்கு நீதிமன்றத்திடமிருந்து தடை உத்தரவையும் பெற்றது. தமிழக அரசாங்கம் உடனடியாக மேல் முறையீடு செய்ய, கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் அமர்வு, பிப்ரவரி 2 அன்று அளித்தத் தீர்ப்பில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.
‘பெட்ரோலியம் மற்றும் கனிமவள குழாய்கள் பதிக்கும் சட்டம் 1962ன் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. எனவே தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. கெயில் நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்த விவசாய நிலங்களின் வழியாகவே செயல்படுத்தலாம். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிலத்தின் சந்தை மதிப்பில் 40% இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்’.
பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ‘விவசாய நிலங்களில், எரிவாயு குழாய்கள் பதித்ததால், ஆந்திராவில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே, தனியார் விவசாய நிலங்களில், குடியிருப்புகள், கட்டிடங்கள் அருகே அமைக்க வேண்டாம். கேரளாவைப் போல் நெடுஞ்சாலைகள் அருகே அமைக்கலாம். மத்திய அரசு தமிழகத்தில் அறிவித்துள்ள அறிவிக்கையை திரும்பப் பெறலாம். மாற்றுப் பாதைக் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது. கெயில் நிறுவனமும் அதில் இணைய வேண்டும். 1962ம் ஆண்டு குழாய்கள் பதிக்கும் சட்டத்தை திருத்த வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கிய பிப்ரவரி 2 தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று அந்தக் கடிதம் சொல்கிறது. மேலும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவின் லாபமீட்டும் நவரத்தினா நிறுவனங்களில் கெயில் இந்திய எரிவாயு ஆணையமும் ஒன்று. இயற்கை எரிவாயுவை விற்பதும், விநியோகிப்பதும்தான் அதன் வருமானத்தின் அடிப்படை. வெளிநாட்டில், உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் இயற்கை எரிவாயுவை, குழாய்களை பதித்து எடுத்துச் சென்று, அனல் மின்நிலையங்கள், உரத் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கும் வலைப்பின்னலை அமைத்துள்ளது; தொடர்ந்து அமைத்தும் வருகிறது. ஏற்கனவே, 12,000 கி.மீ.க்கு குழாய்களை நாடு முழுவதும் அமைத்துள்ளது. அதில் ஒரு திட்டம்தான், கொச்சின்-குட்டநாடு-பெங்களூரு-மங்களூரு எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம். ரூ.3700 கோடி செலவாகுமென திட்டமிடப்பட்டு 600 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ள இத்திட்டம், 2007ல் துவங்கப்பட்டுவிட்டது. கேரளாவில் 505 கி.மீ., தமிழ்நாட்டில் 310 கி.மீ., கர்நாடகத்தில் 85 கி.மீ. குழாய் பதிக்கும் விளைநிலங்கள், வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு அறிவிக்கைகளும் அனுப்பப்பட்டுவிட்டன. கேரளாவில், 2011ல் இருந்து கடும் எதிர்ப்புகளை போராட்டங்களை இத்திட்டம் சந்தித்ததால், நெடுஞ்சாலை மூலமாக குழாய்கள் பதிக்கும் பணி மாற்றியமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. திட்டத்தின் மொத்த நீளம் 1114 கி.மீ.
பெட்ரோலியம் மற்றும் கனிமவள குழாய்கள் பதிக்கும் சட்டம் 1962 ஒரு படுமோசமான சட்டம். இச்சட்டத்தின் வாயிலாக, குழாய்கள் செல்வதற்கான உரிமையை பெறுவது (ரைட் ஆஃப் வே) மட்டுமே நோக்கம் எனப்படுகிறது. 20 மீட்டர் அகலத்திற்கு (சுமார் 66 அடி) நிலம் எடுக்கப்படும்; 5 அடி ஆழம் வரை குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்படும். இந்த நிலத்தைக் கையகப்படுத்தவில்லை எனவும், நிலம் பிறகு விவசாயிகளுக்கே திருப்பி அளிக்கப்படுகிறது எனவும் எரிவாயு குழாய்களுக்குச் சேதாரம் இல்லாமல் பயன்படுத்தலாம் எனவும் இச் சட்டம் தெரிவிக்கிறது. எனவே, இழப்பீடு என்பது, நிலத்தின் மதிப்பில் 10% மட்டும்தான் என வரை யறுத்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு நிலத்தை கையகப்படுத்துதல், பெருந்தொழிற்சாலைகளுக்கு நிலங்களை கையகப்படுத்துதல் போன்றவற்றிற் கானச் சட்டங்கள், இழப்பீடுகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது. கடுமையான போராட்டங்களின் பின்னணியில் நிறைவேற்றப்பட்ட 2015 நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றச் சட்டத்தின்படியான பயன்கள், எதுவும் கிடையாது. கர்நாடகாவில் இத்திட்டத்திற்கு எதிரானப் போராட்டங்கள் வெடித்த பின்னர், 60% இழப்பீடு வழங்கப்பட்டது.
திட்டத்தின்படி நிலத்தின் மீது விவசாயிகளுக்கு உரிமை உண்டா? எரிவாயுக் குழாய் செல்லும் இருபுறமும் குறைந்தது ஒரு கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். குழாய் செல்லும் பாதையிலோ, அதனருகிலோ ஆழமாக ஊடுருவும் பயிர்களை பயிரிடக் கூடாது. மரங்கள் வைக்கவே கூடாது, கிணறுகளோ, வாய்க்கால்களோ பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அமைக்கவே கூடாது. 2012 திருத்தச் சட்டத்தின்படி எரிவாயுக் குழாயின் கசிவு, வெடிப்பு ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பொறுப்பாவார். அவருக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை தரக் கூடிய வாய்ப்பு இச்சட்டத்தில் உள்ளது. 2014ல், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் நகரம் என்ற கிராமத்தில் எரிவாயுக் குழாய் வெடித்து 21 பேர் இறந்தனர். இன்று வரை கெயில் நிறுவனமோ, பெட்ரோலிய நிறுவனமோ, மத்திய அரசோ விளக்கம் கூட தரவில்லை. கெயில் நிறுவனம் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதோடு விவசாயிகளின் உயிரோடும் விளையாடுகிறது.
கட்சிப் பொதுத் திட்டம்- இந்திய சமூகம் பக்கம் 9ல் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது: ‘.....துரிதமான பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற பெயரில் ஆளும் வர்க்கங்கள் பெரும் தொழில்குழும சூறையாடல் நிகழ உதவுபவராக, உற்பத்தியில் நேரடிப் பாத்திரத்தைப் பெரிதும் குறைத்துக் கொள்வதாக அரசின் பாத்திரத்தை மறு வடிவமைப்பு செய்யும் போர்த்தந்திரத்தை ஆரத் தழுவியுள்ளனர். மக்களின் அடிப்படை நலன்களை உத்தரவாதப்படுத்தும் அரசின் பொறுப்பைத் துறந்துள்ளனர். பெருமூலதனம், அந்நிய நிறுவனங்களோடு நெருக்கமானக் கூட்டில் செயல்படும் பெரிய இந்திய நிறுவனங்கள் ஆகியவற்றால் தலைமைத் தாங்கப்படும் சந்தை சக்திகளிடம் பொருளாதாரத்தின் கடிவாளங்கள் ஒப்படைக்கப்படுகின்றன’.
கெயில் நிறுவனம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கத்தார், மலேசியா, சீனா எனப் பல்வேறு நாடுகளிலிருந்தும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. அழுத்தப்பட்ட மற்றும் திரவ வடிவில் இயற்கை எரிவாயு மாற்றப்பட்டு, கப்பல்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு, இந்திய துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டு, மீண்டும் எரிவாயுவாக மாற்றப்பட்டு, குழாய் பாதைகள் வழியாக நாடு முழுவதும் குறுக்கு நெடுக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. மின் நிலையங்களுக்கு எரிபொருளாகவும், உரத் தொழிற்சாலைகள் போன்றவற்றிற்காகவும், மாநகரங்களில் வீடுகளுக்கு (சிலிண்டருக்கும் மாற்றாக) குழாய்கள் மூலமாகவும் விநியோகம் ஆகின்றன. குழாய் பாதைகளை அமைப்பதில் பல்வேறு கட்டுமான கார்ப்பரேட் நிறுவனங்களும், வீடுகளுக்கான விநியோகததில் கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும் பயனடைகின்றன என்ற போதிலும், பெரும் ஆதாயம் பெறுவது பன்னாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் தானாகும். அவர்களுடன் கையெழுத்திடப்படும் ஒப்பந்தங்களை அமலாக்கத்தான், விவசாய நிலங்கள் கெடுபிடியாக அபகரிக்கப்படுகின்றன.
2011ல், கெயில் நிறுவனம், அய்க்கிய அமெரிக்காவின் சபைன் பாஸ் லிக்யூஃபேக்‘ன் என்ற நிறுவனத்துடன், (இது செனியரே எனர்ஜி பார்ட்னர்ஸ் என்ற பெருங்குழுமத்தின் துணை நிறுவனம்) 20 ஆண்டு காலத்திற்கு, திரவ வடிவிலான இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டது. இதன்படி, 2017ல் இறக்குமதி துவங்கும். ஒப்பந்தம் அதற்குப் பிறகும் கூட 10 வருடங்கள் நீட்டிக்கப்படலாம். தற்போதைய யூனிட் விலை 10 முதல் 11 அமெரிக்க டாலர்கள். இயற்கை எரிவாயு விலையின் ஏற்ற இறக்கம், அமெரிக்காவின் ஹென்றி ஹப் என்ற நிறுவனத்தின் நிர்ணயிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மறுபுறம், ஆஸ்திரேலியாவின் கோர்கோன் எரிவாயு நிறுவனத்துடன் 15 லட்சம் டன்கள் இறக்குமதி செய்ய, நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2016-17ல் இறக்குமதி துவங்கும். யூனிட் விலை 15.8 அமெரிக்க டாலர்கள். இதன் விலை ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிப்பதும் ஹென்றி ஹப்தான். இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பி.சி.திரிபாதிதான் கெயிலின் அப்போதைய, இப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர். 2015, அக்டோபரில் அவர் அறிவித்தார்: 2015ல் கெயிலின் லாப விகிதத்தில் 30% சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ரூ.10,000 கோடி கடன் உள்ளதாகவும், திட்டங்களை அமல்படுத்த வெளியிலிருந்து கடன் வாங்க வேண்டியுள்ளதாகவும், முக்கியமான சவால் இறக்குமதி எரிவாயு விலை எனவும், பி.சி.திரிபாதியே அறிவித்தார். (எக்கனாமிக் டைம்ஸ் 12.10.2015)
கெயில் நிறுவனம், ஏற்கனவே கத்தார் நாட்டின், ராஸ் கேஸ் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு எரிவாயுவை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஹென்றி ஹப் விலைகளை தீர்மானிக்க இலாபகரமான நவரத்னா அந்தஸ்து மிக்க கெயில் நட்டத்திற்குள் நுழைகிறது. இயற்கை எரிவாயுவின் விலை உயர்வானது, தொழிற்சாலைகளை பர்னஸ் ஆயில் நுகர்வை நோக்கித் தள்ளுகிறது. இதுவும் கெயிலை பாதிக்கும். இறுதிச் சுற்றில் குழாய் மூலமாக எரிவாயுவைப் பெறுகிற வீடுகளை/நுகர்வோரை விலை ஏற்றத்தில் கொண்டு தள்ளும்.
1962ம் ஆண்டு பெட்ரோலிய, கனிமவள குழாய்கள் பதிக்கும் சட்டம், 2012ம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவை, மென்மேலும் விவசாயிகளின் நிலங்களை அபரிக்கிற, விவசாயிகளை குற்றவாளிகளாக்குகிற சட்டங்களாகவே உள்ளன. கெயில் நிறுவனத்தின் கெடுபிடி நடவடிக்கைககளுக்கு எதிராக, நாடு முழுவதும் ஆங்காங்கு விவசாயிகள் போராட்டப் பாதையில் அணி திரண்டனர். நீதிமன்றங்களை நாடியும் சில நிவாரணங்களைப் பெற்றனர். புதிய விதிமுறைகளும் உருவாயின.
மகாராஷ்டிராவின் தபோல் முதல் கர்நாடகாவின் பெங்களூரு வரையிலான 780 கி.மீ. திட்டத்தின் மீதான வழக்கில் புதிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளன. இதன்படி திட்டத்திற்கான மொத்த நிலப் பகுதியில் 10% மட்டுமே விவசாய நிலத்தின் மீது அமைக்க வேண்டும்; அதிகபட்சமாக 5 கி.மீ. தூரம் மட்டுமே தொடர்ச்சியாக விவசாய விளைநிலத்தில் குழாய்களை பதிக்கலாம். பிப்ரவரி 2 தேதிய, தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பு இவற்றை மனதில் கொள்ளவில்லை. விளைநிலங்கள் வழியாக எரிவாயு பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில், அணிதிரள்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள், அந்நிய நாட்டு நலன்களுக்காக, விவசாயிகளின் வாழ்க்கையைப் பறிக்கும் கெயில் திட்டத்தை முறியடிக்க இடதுசாரிகள், விவசாய சமூகத்தோடு உறுதியாக கரம் கோர்த்துப் போராடுவார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநரும் பாடிய ஜெய புராணம்
ஜி.ரமேஷ்
20.01.2016 அன்று இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து தமிழக ஆளுநர் ரோசையா உரையாற்றினார். மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலன் பேணுவதையே அரசின் கொள்கைகளில் அடித் தளமாகக் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில், நலத்திட்டங்களைச் செயலாற்றுவதில் முன்னோடி மாநிலமாகவும் பிற மாநிலங்கள் பின்பற்றத்தக்க மக்கள்நல அரசாகவும் தமிழக அரசு உருப்பெற்றுள்ளது என ஜெயலலிதாவிற்கு பாராட்டு மழையை அதிமுக அமைச்சர்களை விஞ்சும் அளவு டிசம்பர் அடைமழையாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, அறிவுக் கூர்மையும் மதிநுட்பமும் வாய்ந்த அவரது தலைமையின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையை மீண்டும் நிலை நாட்டியுள்ளது என்று ஆளுநரும் கூட அதிமுக அரசியல் பேசினார். நுôறு ஆண்டு காலத்தில் பெய்யாத மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னேற்பாடுகளும் உயிரிழப்புகளைக் குறைக்க வழி வகுத்த போதிலும், மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்காக 7244 முகாம்களைத் திறந்தது. 23.51 லட்சம் மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு நாட்கள் இலவசப் பேருந்து அறிவிக்கப்பட்டு அதன் மூலம் 1.54 கோடி பயணிகள் பயன் பெற்றார்கள். 36,840 மருத்துவ முகாம்களைத் திறந்தது. சென்னை வெள்ளத்திற்குப்பின் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்த மாபெரும் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சரின் மதிநுட்பம் மிக்க தலைமையின் கீழ் இந்த அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மிகக் குறுகிய காலத்திற்குள் இயல்பு நிலையைக் கொண்டு வந்தது. இப்படி அதிமுக பிரதிநிதி போலவே ஆளுநர் உரையாற்றினார்.
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடியில் செயற்கை வெள்ளத்தால் உறவுகளை இழந்தவர்கள், உறைவிடத்தை இழந்தவர்கள், உடமையை இழந்தவர்கள் ஆட்சியர் அலுவலத்திற்கும் ஒப்புக்கு நடத்தப்படும் அரசு முகாம்களுக்கும் இடையே நாள் தவறாமல் ஓடி அலைந்து அல்லாடிக் கொண்டிருக்கிறார் கள். அரிசி பருப்பு அடுப்பு முதல் இடுப்புக்குக்கூட ஆடையின்றி அத்தனையையும் இழந்தவிட்டவர்களுக்கு அய்யாயிரம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குகளி லேயே வழங்கியது இந்த அரசின் பாராட்டத்தக்க சாதனையாகும் என்று கொஞ்சம்கூட முகஞ்சுழிக்காமல் உரையாற்றினார் ஆளுநர் ரோசய்யா. ஜெயலலிதா வெள்ளப்பாதிப்புக்கு முதலில் ரூ.8451 கோடி கேட்ட பொழுது மத்திய அரசு 1000 கோடி ரூபாய்தான் கொடுத்தது. ஆனாலும் அதற்கு நன்றியாம். அடுத்து டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கு மறு சீரமைப்பு செய்ய ரூ.17,432 கோடி (அவ்வளவு துல்லியமாக சேதத்தைக் கணக்கிட்டுள்ளார்களாம்) தேவை என மனு செய்துள்ளார். அதை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துகிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசு இதுவரை 2174 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாம். தலா ரூ.5000. மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து 5000 ரூபாய். வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்த 5 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.273.10 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் உள்ளது. அதாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5642 ரூபாய். ஆனால், கோடிகளில் தொகையைக் காட்டி, அள்ளிக் கொடுத்த மாதிரி ஆக்ஷன் போடுகிறார்கள். வீடுகளில், கடைகளில், சிறு நிறுவனங்களில் வெள்ளம் புகுந்ததால் சேர்ந்த சகதியை வெளியேற்றவே குறைந்த பட்சம் ரூ.4000 கொடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். பயிர் இழப்பினால் பாதிக்கப்பட்ட 4,81,975 விவசாயிகளுக்கு 451.15 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாம். சராசரியாக தலா ரூ.10,000 கூட வராது. பாதிக்கப்பட்டவர்கள் 4,81,975 மட்டும்தானா? மிச்ச விவசாயிகளை என்ன செய்ய? தமிழக அரசு ரூ.2640 கோடி வெள்ள நிவாரணத்திற்காக விடுவித்துள்ளதாம். யானைப் பசிக்கு சோளப் பொரி. தமிழகம் வெள்ளம் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், பயிர்க் கடன்கள் மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழிற்துறைக் கடன்கள் உள்ளிட்ட இதரக் கடன் வசூலையும் ஒத்தி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்கிறார் ஆளுநர். அதானிக்கும் அம்பானிக்கும் மல்லய்யாவுக்கும் அய்.டி. நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டால் அவர்களுக்கு கடன் தள்ளுபடி. அன்றாடம் காய்ச்சிகளான குறு, சிறு நடுத்தர விவசாயிகளுக்கும் சிறுதொழில்முனைவோருக்கும் கடன் தள்ளுபடி கிடையாதாம். வசூல் ஒத்தி வைப்பாம். வெள்ளம் பாதித்த பகுதிகளில், நிவாரணங்களை பறித் தது, ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டியது மட்டுமின்றி, நிவாரணங்களைக் கூட தாங்கள் சொல்பவர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என அதிமுகவினர் செய்த, செய்யும் அராஜகங்கள் அப்பட்டமாகத் தெரியும் போது, ஆளுநர் அரசின் நடவடிக்கை அருமை என்கிறார். சென்னையைச் சுத்தப்படுத்த, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்து தங்க, உண்ண எவ்வித வசதியும் இன்றி உயிர் காக்கும் உபகரணங்களும் இன்றி மனிதநேயத்தோடு துப்புரவுப் பணி செய்த அந்தத் தொழிலாளர்களை ஒரு வார்த்தை சொல்லி பாராட்டாத ஆளுநர், வெள்ளப் பகுதியை வான் வழியே சுற்றி வந்த ஜெயலலிதாவுக்கு புகழாராம் சூட்டுகிறார்.
வெள்ளப் பாதிப்பு தொடர்பாக சட்டப் பேரவையில் அமைச்சர் பன்னீர் செல்வம், 100 ஆண்டு இல்லாத மழையால் ஏற்பட்டது என்று அம்மா சொன்னதையே அடிபிறழாமல் சொல்லிக் கொண்டிருந்தார். அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ, செம்பரம்பாக்கம் ஏரி மட்டு மில்லை. 50க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து அந்தத் தண்ணீரும் அடையாற்றில் கலந்துவிட்டதால் இப்படி வெள்ளம் என்று சொல்லி ஏரிகள் சரியான பராமரிப்பில் இல்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டார். ஆனால், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, வெள்ளப்பாதிப்பு தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்று கோரியதற்கு இயற்கை சீற்றத்திற்கு நீதி விசாரணை கேட்கலாமா? என்கிறார். இந்த செயற்கை வெள்ளத்திற்கு எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது ஒரு காரணம் என்றால் நீர் நிலைகளை ஆக்கிரமித்து அய்டி நிறுவனங்களை, கல்லூரி களை, வணிக வளாகங்களை, குடியிருப்புகளை பாலங்களைக் கட்டியது மற்றொரு காரணம். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதற்கு நீதி விசாரணை கேட்கும் திமுகவோ மற்ற எதிர்க்கட்சிகளோ (இடதுசாரிகள் தவிர) நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் பற்றி ஒப்புக்கூட பேசத் தயாராக இல்லை.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பயனாளிகள் தேர்வு சிறப்பு முகாம் என்று ஒப்புக்கு நடத்திக் கொண்டிருக்கிறது அரசு. வேலைவாய்ப்பகத்தில் காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை 85 லட்சத்தைத் தாண்டிவிட்ட நிலையில், இந்த முகாம்களிலும் ஏதாவது கிடைக்காதா என்று இளைஞர்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எங்கு என்ன வேலை என்ற விவரங்கள் எதுவும் வெளிப்படையாக அந்த முகாம்களில் இல்லை. மறுபுறம் அம்மா சிறு வணிகக் கடன் உதவித் திட்டம். இதில் 5000 ரூபாய் வரை வட்டியில்லாக் கடன். 25 வாரங்களில் திருப்பி செலுத்திவிட்டால் 4 சதவீத வட்டிக்கு மீண்டும் 5000 ரூபாய் தருவார்களாம். இந்தப் பணம் வெள்ளத்தில் போன சாமான்களை மீட்பதற்கே பற்றாது.
தமிழகம் முழுவதும் சாதிஆதிக்க வெறியர்களால், மதவெறி சக்திகளால், கல்வி வியாபாரக் கொள்ளையர் களால், டாஸ்மாக் மதுக் கடைகளால் கொலை, கொள்ளை, தற்கொலை, வழிப்பறி, கடத்தல் என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்க, ஆளுநரோ, ஜெயலலிதாவின் மனஉறுதி மற்றும் செயல்பாட்டினால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளதால் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த அமைதிப்பூங்காவாக தமிழகம் மாறியுள்ளது என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய ஜெயலலிதா, மக்கள் தொகைப் பெருக்கம், வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாயச் சூழல் நகர்மயம் ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதுதான் பொதுவான நடைமுறை என்று கூறி, மறைமுகமாக குற்றங்கள் அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார். முந்தைய திமுக ஆட்சி காலத்தை விட தற்போது குற்றங்கள் குறைந்துள்ளதாக சதவீதக் கணக்கும் சொல்கிறார். 2010ல் 1 லட்சம் மக்கள் தொகைக்கு இந்திய தண்டனைச் சட்ட குற்றவிகிதம் 277.08 என்று இருந்தது 2015ல் 242.85 ஆகக் குறைந்துள்ளது என்று பெருமை பேசுகிறார். 2011ல் மக்கள் தொகை 72,138,958. 2015ல் மக்கள் தொகை 76,656,206. குற்ற எண்ணிக்கை அதே அளவில் இருந்தாலும் கொஞ்சம் கூடினாலும் மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கும்போது விகிதாசாரம் குறைவாகத்தான் காட்டும். வழக்குகள் பதியப்படாவிட்டாலும் எண்ணிக்கை குறையும்தானே. பல குற்ற வழக்குகளை ஜெயலலிதாவின் காவல்துறை பதிவு செய்வதே கிடையாது. அவர்கள் பதிவு செய்வது அம்மாவுக்காக அவதூறு வழக்குகளையும், போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகளையும்தான்.
சசிபெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தால் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த ஜெ. அரசு இப்போது அடாவடியாக மூடவே முடியாது என்கிறது. மதுவிலக்கு சாத்தியமில்லை. அண்டை மாநிலங்களில், மதுவிலக்கை அமல்படுத்தாதபோது இங்கு வரும் வருமானம் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிடும் என்று முன்னாள் முதல்வர் (கருணாநிதி) சொல்லியுள்ளார் என்றும் இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால், முதல் மாநிலமாக தமிழகத்தில் மதுவிலக்கை முதல்வர் அமல்படுத்துவார் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் சொல்கிறார். அரசுக்கு வருமானம் இல்லை என்று சொல்லி பால் விலையை, மின் கட்டணத்தை, பேருந்துக் கட்டணத்தை கூட்டினார் ஜெயலலிதா. அய்ந்து ஆண்டில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிக்காக, கடந்த அய்ந்து ஆண்டுகளாக அரசாங்கத்திற்கு பால் விலையேற்றத்தாலும் மின், பேருந்துக் கட்டண உயர்வாலும் அன்றாடம் நாம் பணத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அரசாங்கத்திற்கு வருமானம் வேண்டும் என்றால் மதுக் கடைகள் வேண்டும் என்கிறார். ஏனென்றால், நாம் கொடுக்கும் பணமெல்லாம் அரசாங்கத்தின் கஜானாவிற்குப் போகவில்லை. அவை மிக்ஸியையும் கிரைண்டரையும், மின் விசிறியையும் மது வகைகளையும் உற்பத்தி செய்யும் சசிகலாவின் மிடாஸøக்கும் மந்திரி களின் உறவினர்களுக்கும் செல்வதால்தான் அரசுக்குக் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 283 கோடியாக உள்ளது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையாவது குறைப்பீர்களா என்று சட்டப்பேரவையில் கேட்கும் ஸ்டாலினும் மதுவால் தமிழகப் பெண்கள் வாழ்க்கைச் சீரழிகிறது எனச் சொல்லும் கனிமொழியும் தங்கள் கட்சியில் உள்ள சாராய அதிபர்களின் ஆலையை முதலில் மூடச் சொல்ல வேண்டும்.
ஜெயலலிதா அரசு மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பதில் முதன்மையாக இருக்கிறதோ இல்லையோ எதிர்க்கட்சியினர் மீது அவதூறு வழக்குகள் போடுவதில், உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவருவதில் முதன்மை யாக இருக்கிறது. கருணாநிதி மீதான உரிமைக்குழு அறிக்கையை அடாவடியாகத் தாக்கல் செய்து சபையில் அமளியை உருவாக்கி, உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு ஜனநாயக உரிமைகள் பற்றி உறுப்பினர்களுக்கு போதிக்கிறார் பேரவைத் தலைவர் தனபால். பல்வேறு நிறுவனத் தொழிலாளர்கள், சத்துணவு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், சாலைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது பற்றியெல்லாம் சட்டமன்றத் தில் விவாதிக்கக் கூடாது என்கிறார்கள் ஆளுங்கட்சியி னர். சத்துணவு ஊழியர்கள் பிரச்சனை தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தோழர் சவுந்தரராஜன் பேசியதற்கு, அமைச்சர் வளர்மதி, சத்துணவு ஊழியர்கள் பிரச்சனை பற்றி நீங்கள் பேரவையில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், நாங்கள் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறோம், சத்துணவு ஊழியர்களுக்கு பல சலுகைகள் அளித்துள்ளோம், அவர்களுக்கு 700 ரூபாயாக இருந்த ஓய்வூதியத்தை ஆயிரமாக ஆக்கியவர் முதல்வர் என்று, 1000 ரூபாயில் அடுக்குமாடி குடியிருப்பே வாங்கி விடலாம் என்பதுபோல் பேசுகிறார்.
சட்டமன்றம் நடந்த அந்த வாரத்தில் மட்டும் 5 துப்புரவுப் பணி செய்த தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளார்கள். அவர்களுக்கு பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்கச் சொன்னதோடு சரி. அது தொடர்பாக சட்டமன்றத்தில் எந்த விவாதமும் இல்லை. ஜனவரி 23 அன்று சட்டமன்றத்தில், 4 1/2 ஆண்டு காலமாக 110 விதியின் கீழ் சொன்னது எதையும் நிறைவேற்றாத ஜெயலலிதா, 36 துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்ல 36 நாட்கள் வேண்டும். 2011ல் மாற்றத்தை ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் தமிழக மக்களின் வாழ்வு ஏற்றம் பெறச் செய்துள்ளோம். தொடரட்டும் இந்த அரசு என்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள் என்று சத்தமாகச் சொல்லி கொண்டிருந்த வேளையில்தான், கல்வி வியாபாரமாக்கப்பட்டதன் கொடுமையினால் கள்ளக்குறிச்சியில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேரின் உயிர் அநியாயமாகப் பறிபோனது.
இவற்றுக்கெல்லாம் ஜெயலலிதா அரசின் அராஜக, அலட்சிய, குற்றமய, சுயநல ஆட்சியே காரணம். ஆனால், எங்களுடைய திட்டங்கள், செயல்பாடுகள் எல்லாம் மக்களுக்காகத்தான், எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுயநலமும் இல்லை, பொது நலம்தான், மக்கள் நலன்தான், மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம், மக்களுக்காவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம் அதிமுக என்று முழங்கினார் ஜெயலலிதா. மக்களுக்காகவே இருப்பவர்கள் ஆட்சியில், இன்று மாணவர்களுக்காக நீதி கேட்பவர்கள் மீது, மாற்றுத் திறனாளிகள் மீது தடியடி நடக்கிறது. நிச்சயம் இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று எல்லா தரப்பினரும் இப்போது எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவை நாங்கள் இணைத்துக் கொள்கிறோம்
நீங்கள் அய்க்கிய அமெரிக்காவை இணைக்கப் பாருங்கள்
பேஸ்புக்கின் ப்ரீ பேசிக், ஏர்டெல்லின் ஏர்டெல் ஜீரோ ஆகிய, வேறு வேறு சேவைகளுக்கு வேறு வேறு கட்டணம் வசூலிக்கும் சேவைகளுக்கு, இணைய சமவாய்ப்புக்கு எதி ரான சேவைகளுக்கு ட்ராய் தடை விதித்து விட்டது. இரண்டாவது முறையாக, இணைய சமவாய்ப்பு என்ற ஜனநாயக உரிமை, இணைய குடிமக்களின் எதிர்ப்பு முயற்சிகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அம்பானியும் மிட்டலும் மார்க் சகர்பர்கும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ப்ரீ பேசிக்கை எப்படியாவது இந்தியச் சந்தையில் நுழைத்துவிட பேஸ்புக் நிறுவனர் மார்க் சகர்பர்க் விதவிதமான முயற்சிகள் மேற்கொண்டார். அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஒரு வகையில் அவர் எடுத்த ஒரு முயற்சி திருப்பித் தாக்கிவிட்டது. ப்ரீ பேசிக் வேண்டும் என்று கருத்து தெரிவிப்போர் எண்ணிக்கையை கூடுதலாக்க பேஸ்புக் எடுத்த முயற்சிகளை குரூரமான பெரும்பான்மைவாதம், செயற்கையாக உருவாக்கப்பட்ட கருத்துக் கணிப்பு என்று ட்ராய் சாடியது.
ப்ரீ பேசிக் தடை செய்யப்பட்ட பிறகு அது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள மார்க், இன்னும் கூடுதல் இந்தியர்களுக்கு இணைய வசதியை கொண்டு சேர்க்கும் தனது லட்சியம் தொடரும் என்று சொல்கிறார். ‘இந்தியாவை இணைப்பது ஒரு முக்கியமான லட்சியம். அதில் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. ஏனென் றால் இந்தியாவில் 100 கோடி பேருக்கும் மேல் இணைய வசதி இல்லை. அவர்களை இணைத் தால் மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வர முடியும்; பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்; கல்வி வாய்ப்புக்களை பரவலாக்க முடியும். நாங்கள் இந்த மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறோம். எனவேதான் அவர்களை இணைக்கும் கடப்பாடு கொண்டிருக்கிறோம்’ என்று பேஸ்புக் செய்தி ஒன்று சொல்கிறது.
இந்தச் செய்திக்கு ஆயிரக்கணக்காக லைக்குகள் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாமும் லைக் செய்வோம். நாம் அன்லைக் செய்ய வேண்டிய யதார்த்தம் பற்றிய செய்தி ஒன்றும் வந்துள்ளது.
‘அனைவருக்கும் வாய்ப்பு: குறை வருமான குடும்பங்களில் தொழில்நுட்பமும் கற்றலும்’ என்ற சமீபத்திய அறிக்கை அய்க்கிய அமெரிக்க மக்கள் தொகையின் மிகப்பெரும் பிரிவுக்கு முறையான இணையதள வசதி இல்லை என்று சொல்கிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் 33% குடும்பங்களுக்கு அலைபேசி மூலம் மட்டுமே இணையதள வசதி இருக்கிறது என்றும் இந்த வசதியை முழுவதுமாக நம்ப முடியாது என்றும் அறிக்கை சொல்கிறது. 52% குடும்பங்கள் மிகவும் மெதுவாகச் செயல்படும் இணைய சேவை மட்டுமே வைத்திருப்பதாகவும், 52% குடும்பங்களில் ஒரு சேவையை பலரும் பயன்படுத்துவதாகவும், 20% குடும்பங்களில் கட்ட ணம் செலுத்த முடியாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், 29% குடும்பங்களில் அவர்கள் செலுத்திய கட்டணத்துக்கான வரம்பு எட்டப்பட்டுவிட்டதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
இணைய சேவை பெறுவதில் இனவெறியும் குறுக்கிடுவதாக இந்த அறிக்கை சொல்கிறது. குடியேறிய 10% ஹிஸ்பானிக் குடும்பங்களுக்கு இணைய வசதியே இல்லை. அய்க்கிய அமெரிக்காவிலேயே பிறந்த ஹிஸ்பானிக் குடும்பங்களில் 7% குடும்பங்களுக்கு இணைய வசதி இல்லை.
வாய்ப்புக்களின் பூமி என சிலாகிக்கப்படும் அய்க்கிய அமெரிக்காவில், சமரசம் உலாவும் இடம் என்று சொல்லப்படும் இணைய சேவை பெறுவதில் கூட மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை இந்த அறிக்கை போதுமான அளவு எடுத்துரைக்கிறது.
இந்தியாவில் கல்வி, வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் அதீத அக்கறை காட்டும் மார்க், அய்க்கிய அமெரிக்காவில் இன்னும் லட்சக்கணக்கானவர்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படும் நிலைமையை மாற்ற முதலில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மார்க் சகர்பர்க் அவர்களே, இந்தியாவை நாங்கள் இணைத்துக் கொள்கிறோம். நீங்கள் முதலில் அய்க்கிய அமெரிக்காவை இணைக்கப் பாருங்கள்.
09 பிப்ரவரி 2016
சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான பிரச்சார இயக்கம்
ரோஹித் வேமுலாவின் நிறுவனமயப்படுத்தப்பட்ட கொலை, திருநாள்கொண்டசேரி தலித் தம்பதிகளின் அவலங்கள், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியின் மாணவிகள் மரணம், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொடர் மரணங்கள், சாட்சியங்களுக்குப் புறம்பாக 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும், கல்யாணபுரம் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக் கோரியும் பிப்ரவரி 2 அன்று அம்பத்தூர் கல்யாணபுரம் வார்டு 81ல் புரட்சிகர இளைஞர் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் இணைந்து தெருமுனைக் கூட்டம் நடத்தின. கூட்டத்திற்கு புஇக தோழர் சங்கர் தலைமை வகித்தார். இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மோகன், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் முனுசாமி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் சீதா, புஇக தேசிய செயலாளர் தோழர் பாரதி ஆகியோர் உரையாற்றினர்.
திருநாள்கொண்டசேரி தலித் வன்கொடுமையை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் 
ஜனவரி 30 அன்று மயிலாடுதுறையில் இகக(மாலெ) தஞ்சை - நாகை மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன் தலைமையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் வீரச்செல்வன், கண்ணையன் முன்னிலை வகித்தனர். திருநாள்கொண்டசேரி பிரச்சனையில், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை டிஅய்ஜி ஆகியோரை கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், புரட்சிகர இளைஞர் கழக மாநிலச் செயலாளர் தோழர் தனவேல், இகக (மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன், இகக (மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி, அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக்குழு உறுப்பினர் தோழர் சிம்சன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
கோவை சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் மத்தியில் தீப்பொறி வாசகர் வட்டக் கூட்டம்
பிப்ரவரி 7 அன்று அன்று சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் மத்தியில் தீப்பொறி வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 70 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஏஅய்சிசிடியு தேசிய செயற்குழு கூட்டத்தில் அதன் அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி முன்வைத்து, தீப்பொறியில் பிரசுரமாகியுள்ள அறிக்கை படித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தோழர் குமாரசாமி கலந்து கொண்டு பேசினார். பிரிக்கால் பிளான்ட் 3 தொழிலாளர்களின் கூட்டம் பிப்ரவரி 8 அன்று நடைபெற்றது. பிளாண்ட் 1 தொழிலாளர்களின் கூட்டம் பிப்ரவரி 9 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டங்களிலும் தோழர் குமாரசாமி கலந்துகொண்டார்.
கரூர் மாவட்டத்தில் கட்சி விரிவாக்கம்
இகக, இகக(மா)விலிருந்து இகக(மாலெ)யில் இணைந்தனர்
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவில் இகக(மா)வின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கோபாலகிருஷ்ணன், இகக குளித்தலை முன்னாள் ஒன்றியச் செயலாளர் தோழர் சுப்புரத்தினம் ஆகியோர் தலைமையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 42 பேர், பிப்ரவரி 2 அன்று குளித்தலையில் நடைபெற்ற கூட்டத்தில் இகக (மாலெ)யில் இணைந்தனர். இகக (மாலெ)யை அறிமுகப்படுத்தி கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் இராமச்சந்திரன் உரை நிகழ்த்தினார். இன்றைய அரசியல் சூழலில் இடதுசாரிகளின் பாத்திரம் குறித்து இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கே.ஜி.தேசிகன் உரையாற்றினர். ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பால்ராஜ் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களை வாழ்த்திப் பேசினார். குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களைச் சேர்ந்த முன்னணிகள் உடனடியாக மாநில மாநாட்டுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், அடுத்த கட்ட கட்சி, வெகுசன அரங்க வேலை குறித்து திட்டமிட்டுக் கொண்டு செயல்படவும் முடிவு செய்தனர். இகக (மாலெ) ஜிந்தாபாத் என்ற தோழர்களின் முழக்கத்தோடு கூட்டம் நிறைவு பெற்றது. ஏற்கனவே அரவக்குறிச்சி பரமத்தி தாலுகாக்களில் இருந்து இகக(மா)விலிருந்து இகக(மாலெ)யில் தோழர்கள் இணைந்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மரணத்தில் அரசே முதல் குற்றவாளி
பிப்ரவரி 4 அன்று இகக(மாலெ), புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் சின்னசேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கல்லூரிக்கு அனுமதி வழங்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் மீதும், மாணவர்களின் புகார் மனுக்கள் மீது குற்றமய அலட்சியத்துடன் செயல்பட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்திலுள்ள சுயநிதி, தனியார் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்திட கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சிறப்பு ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் தோழர் ஜான்பாட்சா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் புஇக தோழர்கள் தனவேல், ராஜசங்கர், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக இறந்த மூன்று மாணவிகள் நினைவாக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தோழர்கள் கஜேந்திரன், வெற்றிவேல் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். 
குமரகிரிப்பேட்டை உள்ளூர் கமிட்டி மாநாடு 
ஜனவரி 31 அன்று சேலம் மாவட்டத்தின் குமரகிரிப் பேட்டை உள்ளூர் கமிட்டி மாநாடு நடத்தப்பட்டது. 18 பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் தோழர்கள் வையாபுரி, தங்கராஜ், சண்முகம் ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்டக் குழு பார்வையாளர் தோழர் ஜெயராமன், அம்மாப்பேட்டை உள்ளூர் கமிட்டியின் தோழர் மணிகண்டன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் கலந்துகொண்டனர். தோழர் வேல்முருகன் வேலை அறிக்கை முன்வைத்தார். விவாதங்களுக்குப் பிறகு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 7 பேர் கொண்ட உள்ளூர் கமிட்டியை மாநாடு தேர்ந்தெடுத்தது. தோழர் வேல்முருகன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்ட செய்திகள்
தேர்தல் வாக்குறுதிப்படி விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 
3 சென்ட் வீட்டுமனைப் பட்டா வேண்டும்
23.11.2015 அன்று குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் மாநிலத் தொழில்துறை அமைச்சருமான தங்கமணி அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனு மீது ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையத்தில் ஜனவரி 28 அன்று ஆவுத்திப்பாளையத்தில் தோழர் ஆர்.சீனிவாசன் தலைமையிலும் ஜனவரி 29 அன்று ஆனங்கூர் பிரிவு ரோட்டில் தோழர் பாலகிருஷ்ணன் தலைமையிலும் ஜனவரி 31 அன்று ராஜன் தியேட்டர் பகுதியில் தோழர் கே.ஆர்.குமாரசாமி தலைமையிலும் பள்ளிப்பாளையத்தில் ஜனவரி 31 அன்று ஜீவா ஷெட்டில் நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமையிலும் அதே நாளில் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் தோழர் தண்டபாணி தலைமையிலும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் சுப்பிரமணியன், பொருளாளர் தோழர் வெங்கடேஷ் உரையாற்றினர்.
கலியனூர் ஊராட்சி உள்ளூர் கமிட்டி மாநாடு 
கலியனூர் ஊராட்சி உள்ளூர் கமிட்டி மாநாடு பிப்ரவரி 9 அன்று தோழர்கள் செல்வம், சரளா, கலாமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பார்வையாளராக தோழர் தண்டபாணி கலந்து கொண்டார். மாநாட்டில் ஓராண்டு வேலைத் திட்டத்தை தோழர் மாரியப்பன் முன்வைத்தார். விசைத்தறி, கட்டுமானத் தொழிலாளர்கள் மத்தியில் வேலைகளை விரிவுபடுத்துவது, 3 சென்ட் வீட்டுமனை கோரிக்கை மீதான போராட்டம், தீப்பொறி சந்தா 25 சேர்ப்பது ஆகிய திட்டங்கள் மீது மாநாடு விவாதித்தது. தோழர் ஆர்.சீனிவாசனை செயலாளராகக் கொண்டு தோழர்கள் செல்வம், வரதராஜ், பழனிச்சாமி, சேவியர் ஆகியோர் உள்ளடக்கிய 5 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. 
பள்ளிப்பாளையம் உள்ளூர் கமிட்டி மாநாடு
ஜனவரி 31 அன்று பள்ளிப்பாளையம் உள்ளூர் கமிட்டி மாநாடு தோழர்கள் கோபால், டி.செல்வம், சுலோச்சனா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் குழுவிலிருந்து தோழர் மேகநாதன் பார்வையாளராக கலந்து கொண்டார். தோழர் மாரியப்பன் வேலை அறிக்கையை முன் வைத்தார். மாநாடு தோழர் மாரியப்பனை செயலாளராக கொண்ட கமிட்டியை தேர்வு செய்தது. தோழர்கள் ராஜகோபால், எம்.சேட்டு, ராமகிருஷ்ணன், கோபால் ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
சேத்தூரில் இககமாலெ மாநில மாநாட்டு விளக்கக் கூட்டம் 
ஜனநாயகம் காப்போம், மக்களைக் காப்போம் இயக்கத்தின் பகுதியாகவும் மாநில மாநாட்டை விளக்கியும் விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் இகக (மாலெ) பொதுக் கூட்டம் பிப்ரவரி 2 அன்று நடைபெற்றது. தோழர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். இகக (மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் சிறப்புரையாற்றினர்.
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 
எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும்!
நாடு தழுவிய ஒருமைப்பாட்டு இயக்கம் தொடர்கிறது
உத்தர்கண்ட் தொழிலாளர்கள் ஒருமைப்பாட்டு நிதியளித்தனர்
உத்தர்கண்ட் ஏஅய்சிசிடியு தோழர்கள் தொழிலாளர்களிடம் முதல் தவணையாக திரட்டிய ரூ.2,500 ஒருமைப்பாட்டு நிதியை புவனேஸ்வரில் நடந்த ஏஅய்சிசிடியு தேசிய செயற்குழு கூட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியப் பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரியிடம் வழங்கினர்.
புவனேஸ்வர் கருத்தரங்கில் அமைப்புசாரா தொழிலாளர்கள் வழங்கிய ஒருமைப்பாட்டு நிதி
ஜனவரி 25 அன்று புவனேஸ்வரில் ஏஅய்சிசிடியு நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், அங்கேயே தங்களிடம் கையில் இருந்த காசை பிரிக்கால் தொழிலாளர் ஒருமைப்பாட்டு நிதியாக வழங்கினர். ரூ.2,500 திரட்டப்பட்டு, ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமியிடம் அளிக்கப்பட்டது.
பாட்னாவில் கருத்தரங்கம்
பிப்ரவரி 4 அன்று பாட்னாவில் ஏஅய்சிசிடியு நடத்திய கருத்தரங்கில் ஏஅய்சிசிடியு தேசியப் பொதுச் செயலாளர் தோழர் ராஜீவ் டிம்ரி கலந்துகொண்டார். 
பாகல்பூரில் கருத்தரங்கம்
ஜனவரி 31 அன்று பீகாரின் பாகல்பூரில் பிரிக்கால் தொழிலாளர் ஒருமைப்பாட்டு கருத்தரங்கில் ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளரும் கட்டுமானத் தொழிலாளர் சங்கக் கூட்டமைப் பின் பொதுச் செயலாளருமான தோழர் எஸ்.கே.சர்மா கலந்துகொண்டார். சிஅய்டியு தலைவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
குஜராத்தில் கருத்தரங்ம்
அகமதாபாதில் ஒரு நாள் ஆர்ப்பாட்டம்
பிப்ரவரி 8 அன்று குஜராத்தின் அகமதாபாதில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 9 அன்று தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு ஒரு நாள் தர்ணா நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு அகில இந்தியத் துணைத் தலைவர் தோழர் ரஞ்சன் கங்குலி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெருவாரியாக கலந்துகொண்டனர்.
பிரிக்கால் தொழிலாளர் கூட்டங்கள் 
பிரிக்கால் பெண் தொழிலாளர்களின் கூட்டம் பிப்ரவரி 6 அன்று பிரிக்கால் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தோழர்கள் கீதாராணி மற்றும் விஜயலெட்சுமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாடும் 8 தொழிலாளர்களை வெளியில் கொண்டுவர சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் பற்றியும், நாடு முழுவதும், சர்வதேச அளவிலும் நியாயம் கேட்டு நடைபெற்று வரும் இயக்கங்கள் பற்றியும் உரையாற்றினார். இந்த சதி வழக்குப் பின்னணி, நியாயம் கேட்டு நடைபெறும் போராட்ட இயக்கம் பற்றி குறும்படம் இயக்கும் பணியில் தோழர்கள் அபிஷேக், அகில் மற்றும் ஹேமந்திகா ஆகியோர் கோவையில் முகாமிட்டிருந்தனர்.
திருவொற்றியூரில் ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டம்
பிப்ரவரி 5 அன்று தோழர் பழனி தலைமையில், தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி, மாநில சிறப்புத் தலைவர் தோழர் ஜவகர், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், எம்ஆர்எஃப் தொழிற்சங்க துணைத் தலைவர் தோழர் அய்.சிவப்பிரகாசம், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் முனுசாமி, என்ஃபீல்டு தொழிற்சங்க பொதுச் செயலாளர் தோழர் ஆறுமுகம், எவரெடி தொழிற்சங்க பொதுச் செயலாளர் தோழர் கபாலீசுவரன், கார்பரண்டம் யுனிவர்சல் தொழிற்சங்க பொதுச் செயலாளர் தோழர் அண்ணாதுரை, இந்துஜா பவுண்ட்ரீஸ் தொழிற்சங்க துணைத் தலைவர் தோழர் உமாசந்தர், எம்ஆர்எஃப் தொழிற்சங்க பொதுச் செயலாளர் தோழர் சி.ஆர்.பிரபாகரன், அசோக் லேலண்ட் தொழிற்சங்க நிர்வாகி என திருவெற்றியூர் பகுதியின் கனரக தொழிற்சாலை தொழிலாளர் முன்னோடிகள், பிரிக்கால் 8 தோழர்களின் இரட்டை ஆயுள் தண்டனை, நாகரிக உலகின் உச்சகட்ட தொழிலாளர் ஒடுக்குமுறை என்றும் போராட்டத்தின் மீது கோபம், பகைமை, வெறுப்பே இந்தத் தண்டனை என்றும் கூறி கண்டனம் செய்தனர். இந்தியாவில் எங்கும் தொழிலாளி உரிமைக்காக போராடக் கூடாதா என்ற கேள்வியும் எழுப்பினர். இந்தப் போராட்டம் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தினர் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானது என குறிப்பிட்டனர்.
மதுரையில் பிரச்சாரம்
ஜனவரி 21 அன்று கச்சைகட்டியிலும் ஜனவரி 22 அன்று பொய்கைகரைப்பட்டியிலும் இகக (மாலெ), அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் சங்கம் பிரச்சாரக் கூட்டம் நடத்தின. தோழர்கள் மதிவாணன், சண்முகம், மல்லிகா உரையாற்றினர்.

Tuesday, February 2, 2016

மாலெ தீப்பொறி தொகுதி 14 இதழ் 13 2016 பிப்ரவரி 01 – 15

மாணவர் தற்கொலைகளுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்!
அன்று ஹேமலதா... காயத்ரி... கோகிலவாணி....
இன்று சரண்யா... பிரியங்கா.... மோனிஷா....
இரண்டு சம்பவங்களுமே நினைத்தாலே குலைநடுங்க வைக்கின்றன. ஒன்று படுகொலை. அடுத்தது தற்கொலையா கொலையா என்ற சர்ச்சையில் உள்ளது. தற்கொலைதான் என்று மெய்ப்பிக்கப்பட்டாலும் அது படுகொலைதான். இரண்டும், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று சொல்லப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து, அடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர் நோக்கிக் காத்திருக்கிற ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்தன. முன்னது ஜெயலலிதாவின் பெயரால் நடத்தப்பட்டது; பின்னது அவரது ஆசியுடன்தான் அல்லது ஆணைக்கிணங்கத்தான் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
எவ்வளவு கொடூரமான அரசாங்கம் இது? ஆட்சியின் துவக்க காலத்தில் பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது; ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது, கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்கின்றனர். எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் தற்கொலைச் செய்தி வந்த போது, கூடவே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவி பல்கலைக் கழக விடுதியில் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக, பட்டுக்கோட்டையில் ஒரு மாணவி ஆசிரியர் திட்டியதால், ஆசிரியர்கள் ஓய்வறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக.... எல்லாம் ஜனவரி 23 முதல் ஜனவரி 26க்குள் நான்கே நாட்களில். இந்தப் பட்டியல் இந்த அளவிலாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ரோஹித் வேமுலா தற்கொலை நாட்டு மக்கள் மத்தியில் பெருங்கொந்தளிப்பை, வேதனையை உருவாக்கி இருக்கிற நேரத்தில், எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியாக தமிழக மக்கள் மீது இறங்கியுள்ளது. நாங்கள் இனி யாரை நம்புவது? கனவுகளுடன் கல்லூரிக்குச் சென்ற நமது குழந்தைகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்? இயற்கை மருத்துவத்தில் பட்டம் பெற்று, நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மீட்டெடுத்து, சம்பாதிக்கவும் செய்து, எளிய முறையில் மருத்துவமும் பார்க்க வேண்டும் என்றெண்ணிச் சென்றவர்கள், வேறெந்த படிப்புக்கும் இடம் கிடைக்காததால் வேறு வழியின்றிச் சென்றவர்கள், சிறுமைபடுத்தப்பட்டு, அலைகழிக்கப்பட்டு, மிரட்டப்பட்டு பலர் நடை பிணங்களாக்கப்பட்டும், சிலர் நிஜப்பிணங்களாக்கப்பட்டும் திரும்பியிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 24, செப்டம்பர் 7 தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள், செப்டம்பர் 14 அன்று தீக்குளிப்பு போராட்டம், செப்டம்பர் 21 அன்று விஷம் குடித்துப் போராட்டம்..... அந்த மாணவர்கள் இன்னும் என்ன செய்து அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்? தற்கொலையா? உங்களுக்காகவே நான், உங்கள் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் என்று, மோடி யுடன் போட்டிபோட்டு வெற்று வசனங்கள் பேசி தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே, எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி தாளாளர் வாசுகியின் பேயாட்டத்தை ஏன் அனுமதித்தீர்கள்? அந்த மாணவர்கள் போராட்டக் குரல்கள் எப்படி உங்களை எட்டாமல் போயின? தமிழ்நாடு பற்றி எரிகிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களுக்காகவே நான், உங்கள் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் என்று நீங்கள் சொல்வதெல்லாம் வாசுகி போன்ற பிணந்தின்னி களுக்காகவா? மத்திய அரசு முதல் மாநில அரசு ஊடாக, மாவட்ட நிர்வாகத்தின் சிலபல படிகள், காவல்துறை வரை அனைத்து மட்டங்களிலும், தங்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிய அந்த குரல்கள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. கடைசியில் நமக்குக் கிடைத்தது கைகள் பின்னால் கட்டப்பட்ட மூன்று பிணங்கள்!
அந்த மாவட்ட ஆட்சியர், போராடும் மாணவர்களைப் பார்த்து சீரியல் நாடகம் போடுகிறீர்களா என்று கேட்டாராம். அது, சாமான்ய மக்களின் ரத்தம் குடிப்பது பற்றி அறவுணர்வு என்பதே அறவே இல்லாத முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மட்டும் கைவந்த கலை. சாமான்ய மக்களுக்கு அது தெரியாது ஆட்சியர் அவர்களே. அவர்கள் அநியாயத்துக்கு நியாயம் பார்த்து நடப்பவர்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் டிடி மருத்துவ கல்லூரி, அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களைச் சேர்த்து லட்சம் லட்சமாக கட்டணம் வாங்கி, கடைசியில் மாணவர்களை வீதிகளில் நிறுத்தியது. அந்த மாணவர்கள் போராட்டங்களில் வீதிகளில் நிரம்பியிருந்த காலத்தில்தான் எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சித்தாள் வேலை பார்த்து கல்லூரிக் கட்டிடத்தை கட்டி முடித்திருக்கிறார்கள். எம்ஜிஆர் பல்கலை கழகத்தின் பதிவேடுகளில் அந்த நாட்களிலும், எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக இருந்திருக்கிறது.
கல்லூரியா நடத்தியிருக்கிறார்கள்? கொத்த டிமைக் கூடம் அது. கட்டிடத் தொழிலாளர்களாக, இல்லப் பணியாளர்களாக, துப்புரவுத் தொழிலாளர்களாக, ஆய்வுகள் நடக்கும்போது, மருத்துவர்களாக, செவிலியர்களாக, நோயாளிகளாக அந்த மாணவர்களே ராஜபார்ட், ஸ்த்ரீ பார்ட், சைட்பார்ட் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். அவ்வளவு துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு எப்படியாவது படித்து மருத்துவப் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று, உயிரை வதைத்துக் கொண்ட, சுயமரியாதையை விட்டுக் கொடுத்த மாணவர்களுக்கு தமிழக அரசாங்கம், தமிழக மக்களுக்காகவே வாழ்வதாகச் சொல்லும் முதலமைச்சர், இன்னும் பொறுப்பான பதில் ஏதும் சொல்லவில்லை.
டிசம்பர் 30, 2015 அன்று கூட டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து டிசம்பர் 31 அன்றே கல்லூரியில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் ஆசிரியர்கள் பற்றிய ஆவணங்கள் முறையாக இல்லை என்றும் அறிக்கை தந்துள்ளது. ஜ÷லை 8, 2015 அன்று நடந்த வழக்கமான ஆய்வில் சில சிறிய குறைபாடுகள் இருந்ததாகவும் அவற்றை சரி செய்யச் சொல்லி வாய்மொழி உத்தரவு தந்ததாகவும் பதிவாளர் பி.ஆறுமுகம் சொல்கிறார்.
கல்லூரி நிர்வாகம் முறைகேடுகளை மட்டுமே செய்து பணம் சம்பாதித்திருக்கிறது. எங்காவது நிலத்தை வளைத்துப் போட்டு, பிறகு அரசு அதிகாரிகளை, பல்கலை கழக அதிகாரிகளை வளைத்துப் போட்டு, அனுமதி என ஒன்று வாங்கி, பிறகு வசூல் வேட்டை நடத்தி, மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு என எதுவும் வந்தால் மிரட்டுவதற்கு உள்மதிப்பீட்டு மதிப்பெண்களை பயன்படுத்தி, அதிலும் சரிப்படாத மாணவர்களை மிரட்ட ரவுடிகளை கூட வைத்துக்கொண்டு..... எவ்வளவு சொகுசாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்? மதிப்பு, மரியாதை, சமூகத்தில் பெரிய மனிதர்கள் என்ற அந்தஸ்து எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற அந்தத் தாளாளரை, காசும் கொடுத்து, ஆட்கூலியில்லாமல் கட்டிடமும் கட்டிக் கொடுத்த அந்த மாணவர்கள், இன்னும் கூட ‘மேம்’ என்று மரியாதையுடன்தான் குறிப்பிடுகிறார்கள். வறிய மக்கள் ஒரு கட்டத்தில் தங்கள் வறிய நிலைமைகளில் வாழப் பழகிக் கொள்கிறார்கள் என்று எங்கல்ஸ் சொல்வதுபோல், எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள், அச்சப்பட்டு வாழப் பழகிவிட்டது போல் தெரிகிறது.
2011 ஏப்ரலில் ஓமியோபதி படிப்புக்கு அங்கீகாரம் பெற மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு சமர்ப்பித்த தாள்களில் முறைகேடு. ஆய்வுக் குழுவும் அனைத்து விதமான முறைகேடுகளையும் உறுதி செய்தது. போதுமான ஆசிரியர்கள் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் இல்லை. உபகரணங்கள் இல்லை. ஆசிரியர்கள் பணிநியமன ஆணைகளுக்கும் வருகைப் பதிவேடுகளுக்கும் சம்பந்தம் இல்லை. 13 ஊழியர்கள் பணியில் சேர்ந்ததாக தந்துள்ள கடிதத்தில் அவர்கள் கையொப்பங்கள் இல்லை. வளைத்து வளைத்து நடத்தப்பட்ட வழக்குகள், மேல்முறையீடுகள் ஆகியவற்றில் இறுதியாக, ஆயுஷ் மீண்டும் ஆய்வு நடத்தவேண்டும் என்றும் கல்லூரி, மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் கல்லூரி, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
வாசுகிதான் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர, அவரது கணவர் சுப்பிரமணியன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாசுகியின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தப் பிரச்சனையிலும் அவரது கணவர் பெயர் மட்டும் அடிபடவேயில்லை. ஏன்? அவர் தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ மன்றத்தின் அரசு நியமன உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது. அரசின் பாதுகாப்பும் செல்வாக்கும் பெற்ற அந்தப் ‘பெரிய மனிதருக்கும்’ தற்கொலைகள் தமிழ்நாட்டை உலுக்கியிருக்கும் நிலைமைக்கும் தொடர்பே இல்லை என்றா சொல்ல முடியும்?
63 கட்டுமானத் தொழிலாளர்களை பலி கொண்ட மவுலிவாக்கம் விபத்தில், கட்டிடம் கட்டிய பொறியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மக்கள் போராட்டங்களின் நிர்ப்பந்தத்துக்குப் பின் நிறுவனத்தின் முதலாளிகள் கைது செய்யப்பட்டனர். இன்று வரை கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள் என்று அரசாங்கம் அமைத்த குழுவின் அறிக்கை சொன்னது. இந்த அறிக்கையும் நிர்ப்பந்தத்துக்குப் பிறகே சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இடிபாடுகளில் இறந்தவர்களுடன் சேர்த்து உண்மையும் நீதியும் புதைக்கப்பட்டுவிட்டன. தங்கள் கனவு இல்லங்களுக்கு தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொடுத்துவிட்டவர்கள், வீடுகள் இல்லாமல் வங்கிகளுக்கு மாதத் தவணை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும்படி அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாணவர்கள் தற்கொலை பிரச்சனையிலும் குற்றவாளிகள், கல்லூரி நிர்வாகிகள் மட்டுமல்ல. முறைகேடுகளும் சீர்கேடுகளும் நிறைந்த கல்லூரி நிர்வாகம் பற்றி புகார் மனு தந்தும் வருவாய் கோட்ட அதிகாரி கண்டுகொள்ளவில்லை. ஆட்சியர், கல்லூரி நிர்வாகம் பக்கம் நிற்பது அப்பட்டமாகத் தெரிகிறது. டாக்டர் எம்ஜிஆர் பல்கலை கழக நிர்வாகிகள், அதிகாரிகள் எந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிகழ்வுகள் தொடர்பாக, அப்படி எதுவும் நடக்காததுபோல் அரசு தோற்றம் தந்தது. இவை எல்லாமாகச் சேர்ந்துதான் இன்றைய உயிரிழப்புகளுக்குக் காரணம். இவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஜெயலலிதா அரசு இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஜேப்பியார் கல்லூரியில் கட்டிடம் இடிந்து விழுந்த பிரச்சனையில் ஜேப்பியார் பிணையில் வெளியில் வந்து விட்டார். மாணவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான ஒருவரும் பிணையில் விடுவிக்கப்படக் கூடாது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள். டிடி கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர் அனைவருக்கும் வேறு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. பலரின் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை. இந்த நிலை எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்படாமல், அவர்கள் அனைவருக்கும் வேறு கல்லூரிகளில் இடம் தரப்பட வேண்டும்.
முதலாளிகளுக்கு, கல்வி முதலைகளுக்கு, இயற்கை வளத்தை சுரண்டிக் கொழுப்பவர்களுக்கு அப்பட்டமான ஆதரவு தரும் இந்த அரசு, மக்கள் பிரச்சனைகள் பற்றி எந்த அக்கறையும் இல்லாத இந்த அரசு, மக்களை வெறும் வாக்குகளாகப் பார்க்கும் இந்த அரசு, அவர்கள் உயிர் களை, உரிமைகளை, உணர்வுகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்த அரசு இவற்றைச் செய்ய வேண்டுமானால், இனியொரு உயிர் மடியவிட மாட்டோம் என்ற உறுதியுடன், மாணவர் தற்கொலைகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை, தமிழக மக்கள் போராட்டங்களால் வீதிகள் நிரம்ப வேண்டும். மாணவர் தற்கொலைகளுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.
திருநாள் கொண்ட சேரி செல்லமுத்து 
அய்தராபாத் ரோஹித் வேமுலா 
சென்னை கண்ணகி நகர் சரவணன் குமார் வேல்முருகன்... 
இந்த அநீதிகள் இனியும் தொடரலாமா?
எஸ்.குமாரசாமி
திருநாளைப் போவாரான நந்தனால், தில்லை நடராஜரை, தாம் உயிரோடு இருந்த வரை சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்து காண முடியவில்லை. நந்தன் தீயில் எரிந்து ஜோதியில் கலக்கும் போது மட்டுமே ஆண்டவனைத் தரிசிக்க முடிந்தது.
நாகை மாவட்டம் திருநாள்கொண்டசேரியின் தலித் முதியவர் செல்லமுத்துவுக்கு, இறந்த பிறகும், பொதுப் பாதை மறுக்கப்பட்டது. செத்த பின்பும் எந்த தில்லை நடராஜனும் அவரை எந்த ஜோதியிலும் ஆரத் தழுவ வில்லை. நவம்பர் 26, 2015 அன்று, தம் பாட்டி இறந்தபோது அவர் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய சாதி இந்துக்கள் பொதுப் பாதை மறுத்ததால், கார்த்திக் என்ற இளைஞர் அரசிடம் முறையிட்டார். பயன் கிடைக்கவில்லை. ஜனவரி 3 அன்று இறந்த தமது தாத்தா செல்லமுத்துவின் சடலத்தைப் பொதுப் பாதை வழி யாக எடுத்துச் செல்ல அரசும் காவல்துறையும் ஒத்துழைப்பு தர வேண்டும் என, உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற்று வருகிறார். சாதி ஆதிக்கமா, உயர்நீதிமன்ற உத்தரவா என்ற கேள்வி எழுந்தவுடன், அரசும் காவல்துறையும் சாதி ஆதிக்கம் முன்பு மண்டியிட்டுப் பணிந்தன. பொதுப்பாதை வழியைச் சட்டப்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படி கோரிய தலித் மக்கள் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இறந்தவர் உடலை தலித் மக்களிடமிருந்து பறித்து எடுத்துக் கொண்டு, சாதி இந்துக்கள் அனுமதித்த பாதையில் சென்று காவல்துறையே இறுதிச் சடங்கை நடத்திக் காட்டியது.
தமிழ்நாட்டின் முக்கிய பெரிய முதலாளித்துவக் கட்சிகளுக்கு இது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. ‘ஜல்லிக்கட்டு’ அரசியலோடு, சாதி இந்து வாக்குகளை வாரி எடுத்துக் கொள்ள விரும்பும் அரசியலோடு, அவர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். இகக, இகக(மா), தோழர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நண்பர்களும் கூட அந்த நேரத்தில், வை.கோபால்சாமியுடன் ஜல்லிக்கட்டிற்காக மக்கள் நலக் கூட்டியக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் மும்முரமாக இருந்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவது உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின்படி சாத்தியமே இல்லை என்பது தெரிந்திருந்தும், பாஜக, இல்லாத காளையை அடக்கியதாக நடத்திய நாடகத்தில், மே மாதத் தேர்தல் கண்களில் நிறைந்திருந்ததால் மற்றவர்களும் வேறு வேறு பாத்திரம் வகித்தனர். சாதிய ஒடுக்குமுறை 2016ன் துவக்கத்திலேயே நான் பலமாக இருக் கிறேன் என, திருநாள் கொண்டசேரியிலும், தமிழகத்தின் வடக்கு தெற்கு மாவட்டங்களில், பொங்கலை ஒட்டி தலித்துகள் மீது நடத்திய தாக்குதல்களிலும், பகிரங்கமாய்ப் பிரகடனம் செய்தது.
ஜனவரி 17 அன்று அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வேமுலா தற்கொலை செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார். ரோஹித் வேமுலா, யாகூப் மேமன் தூக்கு தண்டனையை எதிர்த்தார். தண்டனை அநியாயமானது. அதனால் அவர் எதிர்ப்பு நியாயமானது. இசுலாமியராகப் பிறந்ததால்தான் இந்தியாவில் யாகூப் மேமன் தூக்கிலிடப் பட்டார் என்பதும், இசுலாமியர்களாக இருந்ததால்தான் அவர்கள் முசாபர்நகரில் வேட்டை யாடப்பட்டனர் என்பதும் ரோஹித் வேமுலாவுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. தாம் தலித்தாகப் பிறந்ததுதான், மரணத்திற்கு நிகரான விபத்து என்றும், தலித்துகள் வெறும் எண்ணிக்கைகள் என்றும், அவர்களின் சிந்திக்கும் மனது அங்கீகரிக்கப்படவில்லை என்றும், ரோஹித் உணர்ந்திருந்தார்.
பாஜக மாணவர் அமைப்பின் ஆணவத்தை ரோஹித்தும் அவரது அம்பேத்கர் மாணவர் அமைப்பு கூட்டாளிகளும் தட்டிக் கேட்டதால், மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானியும் தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும், அவரை தேசவிரோத, தீவிரவாத, சாதிய சக்திகள் பட்டியலில் சேர்த்து, துணை வேந்தர் அப்பா ராவ் மூலம் தண்டித்தனர்.
விடுதி, நிர்வாக அலுவலகங்கள், மற்றும் பொது வெளிகளில் நுழையாதே என ‘நவீன தீண்டாமை’ உத்தரவு போடப்பட்டது. 7 மாதங்களுக்கு, மாதம் ரூ.25,000 ஆய்வு உதவித் தொகை மறுக்கப்பட்டது.
ரோஹித்தின் மரணம், சாதி ஆதிக்கத்தால் நேர்ந்தது. ரோஹித் இறந்த பிறகு, அவருக் கென இருந்த அவரது அடிப்படை தலித் அடையாளத்தையும் பறிக்கப் பார்க்கிறார்கள். பல நாட்கள் மவுனமாக இருந்த மோடி, வாயைத் திறந்தபோது, அந்த மரணத்திலும், அரசியல் செய்தார். லக்னோவில் பேசிய மோடி, “இந்தியத் தாய் ஒரு மகனை இழந்து விட்டாள். அதற்கு வேறுவேறு காரணங்கள், அரசியல் இருக்கலாம். ஆனாலும் ஒரு தாய் தன் மகனை இழந்துவிட்ட உண்மை மிஞ்சுகிறது. அந்த வலியை என்னால் உணர முடிகிறது” என்று சொல்லி, ரோஹித்தின் மரணத்திற்கு சாதிய ஆதிக்கமோ, தமது அமைச்சர்களோ, சங்பரிவார் கூட்டமோ காரணம் அல்ல எனச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். தலித்துகள் மீது அம்பேத்கர் மீது தமக்கு மிகுந்த பற்றும் பாசமும் இருக்கிறது எனப் பசப்பிய பாஜக, ரோஹித் வேமுலா மரணத்தால், தனது தலித் விரோத இந்துத்துவா முகத்துடன் அம்பலப்பட்டு நிற்கிறது.
ரோஹித் வேமுலாவின் மரணம் நிகழ்ந்த இரு தினங்களுக்குப் பிறகு, சென்னை ராஜீவ் காந்தி சாலையின் ஒக்கியம்துரைப்பாக்கம் பகுதியில் உள்ள திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி உணவக செப்டிக் டேங்கை சுத்தப்படுத்த கண்ணகி நகர் 29ஆவது குறுக்குத் தெருவின் சரவணன் (வயது 26), வேல்முருகன் (வயது 28), குமார் (வயது 48) ஆகிய மூவரும் அழைக் கப்பட்டனர். சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற கழகங்கள் மாறிமாறி எடுக்கும் முயற்சிகளில், சென்னையின் குடிசைப் பகுதி மக்கள் (அவர்களில் 80% தலித்துகள்) செம்மஞ்சேரி, கண்ணகி நகர் என விரட்டப்பட்டனர். அங்கே வாழ்ந்த ஒரே தலித் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மூவரும், கழிவு நீரை அகற்றிய பிறகு இருந்த அடைப்பை அகற்ற செப்டிக் டேங்கிற்குள் இறங்கியபோதுதான் விஷ வாயு தாக்கி இறந்தனர். (இவர்களைக் காப்பாற்றச் சென்ற உணவகத் தொழிலாளி ராஜேசும் இறந்து போனார்.) மனித மலம் அள்ளும் பணியில் மனிதரை ஈடுபடுத்துவதைத் தடுக்கும் சட்டம் வந்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தும், சமீப காலங்களில் இந்தப் பணியில் ஈடுபட்டு இறந்த 16 பேருக்கு, தலா ரூ.10 லட்சம் நிவாரணம் இது வரை வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வம் முன்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்கள் முன்பு மதுரையில் கழிவு அகற்றும்போது இறந்த முனியாண்டி, விஸ்வநாதன், இப்போது பிரியாணி உணவகத்தில் இறந்த சரவணன், வேல்முருகன், குமார் ஆகியவர்களில் எவரும் அரசால், சட்டப்படி மறுவாழ்வு தரப்பட வேண்டிய, கையால் கழிவு அகற்றுபவராக (மேனுவல் ஸ்கேவெஞ்சர்) அடையாளம் காணப்படவில்லை. தமிழ்நாட்டின் 12 மாநகராட்சிகளில் 829 வார்டுகளில் 373 பேரும், 124 நகராட்சிகளில் 3,613 வார்டுகளில் 87 பேரும் கையால் கழிவு அகற்றுபவோராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவருக்கும் மறுவாழ்வு அமைத்துத் தரப்படவில்லை எனவும், அரசு, உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தலித் உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல! இருபத்தியோராம் நூற்றாண்டின் சந்தைப் பொருளாதார நாகரிகம் மிதமிஞ்சிப் போனதால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் அநாகரிகங்கள் தலைவிரித்தாடுகின்றன.
அய்க்கிய அமெரிக்காவில் எட்டு ஆண்டுகளாக, கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அதிப ராக உள்ளார். ஆயினும் வெள்ளை நிறவெறி இன வெறி போலீசார், கருப்பின இளைஞர்களை அநியாயமாகக் கொல்வது நீடிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும்போது கருப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ஒபாமாவும் வழிமொழிகிறார்.
வான் இயற்பியல் விஞ்ஞானியும் கருப்பினப் பெண்ணுமான ஜெடிடா. சி.இஸ்லர், த நியு யார்க் டைம்சில் அய்க்கிய அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் வேரூன்றியுள்ள இன நிறவெறியைத் தோலுரித்துக் காட்டி உள்ளார். டெக்சாஸ் மாநிலத்தில், நிற அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான கருத்தரங்கத்தில், அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ‘சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் எத்தகைய புதுமையான கருத்தை இயற்பியல் வகுப்பில் கேட்டுவிடப் போகிறார்’ என ஏளனம் செய்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி அன்டனின் ஸ்காலியா, ‘இந்த பரபரப்பான நிறுவனத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, படித்து முடித்து வெற்றி பெறும் தகுதி கருப்பின மாணவர்களுக்கு இருக்கிறதா?’ எனக் கேலியும் கிண்டலுமாகக் கேட்டுள்ளார். இது போன்ற ஒரு பின்னணியில்தான் Black Lives Matter இயக்கம் அய்க்கிய அமெரிக்காவில் தோன்றியது. கருப்பின மக்களின் உயிர்களுக்கு பொருள் உண்டு என்ற முழக்கம், இன்றைக்கும் அங்கு அவசர அவசியமாகி உள்ளது.
குடியரசுக் கட்சியின் அய்க்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், இசுலாமியரை தனித்துப் பிரித்து நிறுத்தி அடையாளம் காண்பேன் என்கிறார். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்து சார்லி ஹெப்டோ, இசுலாமியர்களுக்கு, இடம் பெயர்பவர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கியுள்ளது. சில மாதங்கள் முன்பு, அய்ரோப்பியாவில் நுழைய முயன்று கடலில் உயிரிழந்து கரை ஒதுங்கிய சிரியக் குழந்தை அயலான் குர்தி, சாகாமல் பெரியவனாகி இருந்தால் அய்ரோப்பியப் பெண்களைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருப்பான் என ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டு, அதனுடைய வெறுப்பு அரசியல் ‘கருத்து சுதந்திரத்தை’ உலகத்திற்கே படம் போட்டுக் காட்டியது.
மதுரையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைச் சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமாரும் டி.அரிபரந்தாமனும் தமது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நீதிமன்றம் வழக்கறிஞர்களை தலையாட்டும் பொம்மைகளாக மாற்ற முயல்கிறதோ என்ற எண்ணம் வலுவடைந்துள்ள நேரத்தில், இந்த இரு நீதிபதிகள் தமது பேச்சில் வெளிப்படுத்திய சமூக அக்கறை, ஆறுதலும் நம்பிக்கையும் தருவதாக அமைந்துள்ளது.
நீதிபதி பி.ஆர்.சிவகுமார், நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 1,200 நீதிபதிகள் இருந்தால், அதில் 18 பேர்தான் தலித்துகள் என்றும் இது மேட்டுக்குடி தீண்டாமை (Elite Untouchability) என்றும் குறிப்பிட்டார். ஒரு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி, சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளில் இந்தியாவைப் பீடித்துள்ள இரு தீராத வியாதிகள் ஊழல் மற்றும் இட ஒதுக்கீடு எனவும், இடஒதுக்கீடு என்பது ஊழலுக்குச் சமமானது எனவும் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது, நீதிமன்றங்களின் மன நிலையைக் காட்டுகிறது என்றார். நீதிபதி டி.அரி பரந்தாமன், ‘இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் (ஸ்கவுன்ட்ரல்ஸ்). எவ்வளவு காலம் இடஒதுக்கீடு தொடரலாம் என என்னிடம் கேட்பவர்களுக்கு, இந்துயிசத்தின் கோட்பாடுகள் மாறாத வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் எனப் பதில் சொல்வேன். நீதிமன்ற உத்தரவு இருந்தும், மயிலாடுதுறை வழுவூர் அருகில் இறந்த தலித் ஒருவர் உடலை பொதுப்பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?’ எனக் கேட்டுள்ளார்.
நாடு குடியரசாகி 66 ஆண்டுகள் ஆன பிறகும், இது வரை உச்சநீதிமன்றத்தில் 10 தலித் நீதிபதிகள் கூட பதவி வகிக்கவில்லை, இன்றும் ஊடகங்களிலும் கார்ப்பரேட் போர்டுகளிலும் தலித்துகள் இடம் பெறவில்லை என்பவை எவ்வளவு ஆபத்தான செய்திகள்.
அம்பேத்கர், இந்தியாவிலுள்ள அரசியல் சுதந்திரம் என்பதற்கும், நிலவுகிற சமூக பொருளாதார கட்டமைப்புகளுக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை என்று அன்று சொன்னது, இன்று வரை நீடிக்கிறது. தலித் உயிர்கள், தலித் கவுரவம், தலித் சமத்துவம் பொருளுள்ளவை என்ற முழக்கங்கள் கொண்ட ஜனநாயக இயக்கத்தில், தேர்தல் நலன்களில் இருந்து எந்த சமரசமும் வந்துவிடக் கூடாது. தலித் அல்லாதோரை, தலித் உயிர்கள், தலித் கவுரவம் மற்றும் தலித் சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்க வைப்பதுதான், இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் வெற்றியாகும்.
‘நான் எப்போதுமே வாழ்க்கையை தொடங்குவதற்காக அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன்...’
(அய்தராபாத் முனைவர் பட்ட தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வேமுலா எழுதிய கடிதம்)
காலை வணக்கம். இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் தருணத்தில் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். என் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள். என்னை நேசித்தீர்கள். என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் அறிவேன். எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதும் என்னால் மட்டும்தான் எனக்குப் பிரச்சனை. எனது ஆன்மா வுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக, நான் ஒரு இராட்சசனாக மாறிவிட்டதாகவும் உணர்கிறேன். நான் ஓர் எழுத்தாளராக இருக்கவே எப்போதும் விரும்பினேன். கார்ல் சாகனைப் போல ஓர் அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன்.
இறுதியில், இதோ இந்த ஒரு கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்துள்ளது. அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் எனது விருப்பத்துக்குரியவை. என் விருப்பப் பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் இரண்டாம்பட்சமானவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்டது. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நமது சுயத்தன்மை செயற்கையான கலவையின் மூலமே மதிக்கப்படுகிறது. எள்ளளவும் காயப்படாமல் அன்பைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது.
ஒரு மனிதனின் மதிப்பு வெறும் உடனடியான ஓர் அடையாளத்திற்குள் சுருக்கப்பட்டுவிட்டது. ஓர் ஓட்டாக, ஓர் எண்ணிக்கையாக, ஒரு பொருளாக மனிதன் அடையாளம் காணப்படுகிறான். கல்வி பயிலும் இடத்தில், தெருக்களில் அரசியலில் எங்கும், யாரும் மனிதனை அவனது மனதுக்காக மதிப்பதில்லை. வாழ்விலும் சாவிலும் கூட. ஒரு போதும் நட்சத்திர துகள்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒளிபடைத்த மனிதனாக அவனை நடத்துவதில்லை.
இது போன்ற கடிதத்தை இப்போதுதான் நான் முதன் முறையாக எழுதுகிறேன். இதுவே எனது கடைசி கடிதமாகவும் அமைந்துவிட்டது. எனது கருத்துக்கள் அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். எனது பிறப்பு என்பது உயிர் பறிக்கும் ஒரு விபத்து. எனது குழந்தைப் பருவ தனிமையிலிருந்து என்னால் ஒருபோதும் மீளமுடியவில்லை. கடந்த காலங்களில் நான் யாராலும் பாராட்டப்படாத குழந்தையாகவே இருந்திருக்கிறேன். ஒரு வேளை இந்த உலகத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல் கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஆனால் நான் எப்போதுமே வாழ்க்கையை தொடங்குவதற்காக அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன்.
இந்தத் தருணத்தில் நான் காயமடைந்தவனில்லை. நான் சோகமாக இல்லை. வெறுமையாக இருக்கிறேன். என்னைப் பற்றிய அக்கறை சிறிதும் அற்றவனாக இருக்கும் இந்த நிலை பரிதாபகரமானது. அதனால்தான் இதைச் செய்கிறேன். மக்கள் என்னை கோழை என்று அழைக்கலாம். சுயநலவாதி, முட்டாள் என்றும் நான் சாடப்படலாம். நான் போன பிறகு, நீங்கள் என்னைப் பற்றி சொல்வது குறித்து எனக்கு என்ன அக்கறை? இறப்பிற்குப் பிறகான கதைகள், பேய்கள் ஆவிகள் குறித்தெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அவற்றின் மூலம் நட்சத்திரங்களுக்கு பயணித்து வேறு உலகங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் என்பது மட்டுமே.
இந்தக் கடிதத்தைப் படிக்கும் உங்களில் யாராவது, எனக்கு ஏதாவது செய்ய முடியுமானால், ஒரு சிறிய வேண்டுகோள். எனக்கு பல்கலைக் கழகங்களிலிருந்து வர வேண்டிய கல்வி உதவித் தொகை, ரூ.1,75,000 நிலுவையில் உள்ளது. அந்தத் தொகை எனது குடும்பத்தினருக்குக் கிடைக்க வழி செய்யுங்கள். என் நண்பன் ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தைத் திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும் அவனுக்கு உதவித் தொகை பணத்திலிருந்து திருப்பிக் கொடுத்துவிடுங்கள். நான் தென்றலைப் போல வந்து தென்றலைப் போல போய்விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டமின்றியும் இருக்கட்டும். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். உயிரோடு இருப்பûதை விட சாவதே எனக்கு மகிழ்ச்சி தருவது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி செல்கிறேன்.”
உமா அண்ணா, உங்களுடைய அறையை இதற்காகப் பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். அம்பேத்கார் மாணவர் பேரவை குடும்பத்தினருக்கு, உங்களையெல்லாம் ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தீர்கள். உங்கள் வளமான எதிர்காலத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசியாக ஒரு முறை ‘ஜெய்பீம்’ என்று முழங்கிக் கொள்கிறேன்.
வழக்கமாக எழுதும் ஒன்றை நான் மறந்துவிட்டேன். எனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல. தங்களுடைய செயலாலோ அல்லது வார்த்தைகளாலோ என்னை யாரும் தற்கொலைக்குத் தூண்டவில்லை. இது என்னுடைய முடிவு. இதற்கு நான் மட்டுமே பொறுப்பு. நான் போன பிறகு எனது நண்பர்களை, எதிரிகளையும் கூட இதனால் தொந்தரவு செய்யாதீர்கள்.
ரோஹித் வேமுலாவுக்கு நியாயம் கேட்டு
இகக (மாலெ), புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், 
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் கண்டன இயக்கம்
ரோஹித் வேமுலாவை தற்கொலைக்குத் தள்ளிய மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி, அய்தராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோரை பதவி நீக்கம் செய்!
ஜனவரி 20 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, இறுக்கமான சூழ்நிலையிலும் தோழர் ரோஹித் வேமுலா விசயத்தில் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு வழக்குரைஞர் அமைப்புகளும் ஒன்றாக அணி திரண்டனர். ரோஹித் இறப்புக்குக் காரணமான மத்திய அமைச்சர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டுமென கோரினர். ரோஹித்தின் உருவப் படங்களைத் தாங்கி, பல்கலைக்கழக வளாக கொலைக்கு எதிராக அணிதிரண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர் தோழர் பாரதி, இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் குமாரசாமி, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், போராடும் அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த், சுதா, சீனிவாசராவ், தமிழினியன், விஜயகுமார், ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஜனவரி 24 அன்று புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், ஏஅய்சிசிடியு, இகக (மாலெ) இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கட்டமைத்தனர்.
நிகழ்ச்சிக்கு புரட்சிகர இளைஞர் கழக மாவட்டத் தலைவர் தோழர் கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர்கள் அதியமான் மற்றும் சங்கர், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா, இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் எ.எஸ்.குமார் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இடம் பெயர்ந்த ஹிந்தி பேசுகிற தொழிலாளர்கள், காஞ்சி காமகோடி மருத்துவமனை தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், ஜிம்கானா கிளப் தொழிலாளர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக நகரின் தலித் மக்கள் பெருவாரியாக வாழும் ஒரகடம், எஸ்விநகர், ஏகேநகர், காமராஜபுரம், அத்திப்பேடு, மங்களபுரம், உயர்நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சாதியாதிக்க, மதவெறி சக்திகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மோகன், முன்னணி தோழர்கள் சூர்யா, சுகுமார் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்தப் பிரச்சாரத்தில் பங்கெடுத்தனர்.
ரோஹித் வேமுலா தற்கொலை, திருநாள்கொண்டசேரியில் தலித் முதியவரின் இறுதி ஊர்வலத்துக்கு பாதை மறுப்பு ஆகியவற்றுக்குக்கு நியாயம் கேட்டு ஜனவரி 21 அன்று திருவள்ளூர், காரனோடையில் இகக (மாலெ) கண்டனக் கூட்டம் நடத்தியது.
கூட்டத்திற்கு தோழர் அன்புராஜ் தலைமை வகித்தார். ரோஹித் வேமுலாவை தற்கொலைக்குத் தள்ளிய மத்திய தொழிலாளர் இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அய்தராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், நாகை மாவட்டம், திருநாள்கொண்டசேரியில் இறந்த முதியவர் சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் அதை அமல்படுத்தாத நாகை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டம் வலியுறுத்தியது. கூட்டத்தில் இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மணி ஆகியோர் உரையாற்றினர். இந்த கோரிக்கைகளுடன் சுவரொட்டி வெளியிடப்பட்டது.
ஜனவரி 19 அன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மாணவர் கழகத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் பாண்டியராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய மாணவர் கழகத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கசி.பழனிக்குமார், இகக(மாலெ) மாவட்டப் பொறுப்பாளர் தோழர் மதிவாணன் கண்டன உரையாற்றினர்.
ஜனவரி 20 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தோழர் ஜோதிவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வளத்தான், மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி ஆகியோர் உரையாற்றினர்.
ஜனவரி 21 அன்று கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு புரட்சிகர இளைஞர் கழக தோழர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக (மாலெ) மாநகரக் குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜெயபிரகாஷ்நாராயணன் ஆகியோருடன் வழக்குரைஞர்கள் வெண்மணி, ஜோதிமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜனவரி 21 அன்று விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், கலியமூர்த்தி, செண்பகவள்ளி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஜனவரி 26 அன்று சேலத்தில் அம்பேத்கர் படிப்பு வட்டம் ரோஹித் வேமுலா நினைவு கூட்டம் ஏற்பாடு செய்தது. அகில இந்திய மக்கள் மேடையின் தோழர் அறிவழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் உரையாற்றினார்.
திருச்சியில் ஜனவரி 24 அன்று உழைப்போர் உரிமை இயக்கம் துவக்கிய நிகழ்ச்சியில் ரோஹித் வேமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மத்திய அமைச்சர்களை கைது செய்ய வலியுறுத்தியும், 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிலாளர் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பெருந்திரள் போராட்டங்கள் மூலம் 
நாட்டின் வலதுசாரி திருப்பத்தை தடுத்து நிறுத்தி பின்னுக்குத் தள்ளுவோம்!
(ஜனவரி 23 - 24, 2016 தேதிகளில் புவனேஸ்வரில் நடைபெற்ற ஏஅய்சிசிடியுவின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி முன்வைத்த அறிக்கை. தமிழில்: தேசிகன்)
தோழர்களே,
இந்த செயற்குழு கூட்டம் முடிந்து நாம் திரும்புகிற சில நாட்களுக்குள் மத்திய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எப்போதும் போலவே, வள ஆதாரங்களை திரட்டிக் கொள்வது பற்றியும் நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது பற்றியும் அது பேசும்.
எல்லாப் பிரச்சனைகளுக்கும் இன்னும் கூடுதல் அந்நிய நேரடி முதலீடு தீர்வாக சொல்லப்படும். நாட்டின் இயற்கை வளமும், மனிதவளமும் கொள்ளையடிக்கப்படவும் சூறையாடப்படவும் அனுமதிக்கப்படும். 2000 முதல் 2015 வரையான காலத்தில், 12 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட சிறிய மொரீசியஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு 34% அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது. இந்திய நாட்டிலிருந்து கருப்புப் பணம் வெளியே சென்று மீண்டும் மொரீசியஸ் வழியாக திரும்ப வருகிறது. மொரீசியஸ் நாட்டில் முதலீட்டு ஆதாய வரி கிடையாது. இந்தியா மொரீசியஸ் நாட்டுடன் இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம் (DTAA) போட்டிருக்கிறது. அடுத்து அந்நிய நேரடி முதலீடு என்பது இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் (Mergers and Aquisitions) ஆகிய வழிகளின் மூலம் வருகிறது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களும் நாட்டுக்குள் வந்த அந்நிய நேரடி முதலீடும் நாட்டின் உற்பத்தி அளவை உயர்த்த பங்களிப்பு செலுத்தவில்லை.
நிதி ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ள அரசு சொல்கிற இன்னொரு வழி பொதுத்துறை பங்குகளை விற்பதாகும். இந்த வழியில், வரும் ஆண்டில் ரூ.60,000 கோடி இலக்கு நிர்ணயிக்க முடிவு செய்திருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை உருவாக்குகின்றன என்ற நவதாராளவாத கருத்து மறுஉற்பத்தி செய்யப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் ரூ.1.71 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனப் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்துள்ளது.
மொத்தமுள்ள 290 பொதுத்துறை நிறுவனங்களில் 213 முதல் 234 நிறுவனங்களுக்கான விவரங்கள் இருக்கின்றன. 2004 - 2005ல் லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் 143. இவற்றின் ஒட்டுமொத்த லாபம் ரூ.74,432 கோடி. 2013 - 2014ல் லாபமீட்டும் பொதுத் துறை நிறுவனங்கள் எண்ணிக்கை 165. இவற்றின் ஒட்டுமொத்த லாபம் ரூ.1,49,164 கோடி. 2013 - 2014ல் ஏற்பட்ட ஒட்டுமொத்த நட்டம் ரூ.20,055 கோடியாகும். எனவே முதலீடு அகற்றுதல், தனியார் மூலதன நலனில் இருந்து நாட்டை சூறையாடுவதும், கொள்ளை அடிப்பதுமேயன்றி வேறல்ல.
நிதி ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ள அரசாங்கத்தால் சொல்லப்படும் இன்னொரு வழி அரசு - தனியார் கூட்டு (Public Private Partnership) என்பதாகும். கனடாவின் நவதாராளவாத எதிர்ப்பாளர்கள் PPP என்பதை மிகச் சரியாக, ப்ராப்ளம் ப்ராப்ளம் ப்ராப்ளம் (Problem Problem Problem) என்று அழைக்கிறார்கள். Viability Gap Funding (VGF) (திட்டச் செலவு திட்டமிட்டதைவிட அதிகமாகும்போது அதை சரிகட்ட ஒதுக்கப்படும் தொகை) பின்னுள்ள ரகசியத்தை PPPயில் ஒளித்து வைக்க முடியாது. VGF என்ற பெயரில் மக்கள் சொத்து தங்கத் தட்டில் வைத்து தனியார்துறைக்கு வழங்கப் பட்டதை டெல்லி, பெங்களூரு விமான நிலையங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மூலதனத்தின் சந்நிதானத்தில் லாபங்களைக் குவிப்பது, நட்டங்களை தேசியமயமாக்குவது என்ற, உலகம் முழுவதும் காணப்படுகிற பொதுவான கதையிலிருந்து 21ஆம் நூற்றாண்டு முதலாளித்துவம் எவ்வகையிலும் மாறுபடவில்லை.
நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது நவதாராளவாதத்தின் அடுத்த நிகழ்ச்சிநிரல். இது சிக்கன நடவடிக்கையை நாசூக்காக கூறும் வழி. இது சமூகத் துறைக்கான செலவினங்களை ஆழமாகவும், கடுமையாகவும் வெட்டிச் சுருக்குவதேயன்றி வேறல்ல.
‘21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம்’ என்ற புத்தகத்தின் பிரான்ஸ் எழுத்தாளர் தாமஸ் பிக்கெட்டி, சமீபத்தில் ‘முதலாளித்துவமும் சமத்துவமின்மையும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த டெல்லி வந்திருந்தார். அவரது கூற்றுப்படி, சமூக முதலீடு மற்றும் பொதுச் சேவைக்கான நிதி ஆதாரங்களை திரட்டிக் கொள்வதில் சீனா, இந்தியாவைக் காட்டிலும் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் சொத்து வரி கிடையாது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி 11% ஆகும். இதுவே அய்க்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு அய்ரோப் பிய நாடுகளில் 30% முதல் 50% என உள்ளது. சீனா, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுச் சுகாதாரத்திற்கு 3% ஒதுக்குகிறது. இந்தியாவில் அது 0.5% மட்டுமே. பங்கு வர்த்தகத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் போடப்பட்ட முதலீடும் பரம்பரை சொத்தும் வருமானத்தை விட வேகமாக வளரும். எனவேதான் இந்தியாவில் சர்வதேச மற்றும் வரலாற்றுரீதியான அளவீடுகளை விட வருமானமும் சொத்தும் இன்னும் கூடுதல் செறிவுள்ளதாகக் குவிந்துள்ளன.
பங்குச் சந்தை, சாதாரணமாக கண்ணயர்ந்தால் இந்திய அரசு மயங்கி விழுந்து விடுகிறது என்று தி இந்து பத்திரிகையில் ஜி.சம்பத் எழுதினார். இந்திய அரசு பொது வரி ஏய்ப்பு தடுப்பு விதிகளை (General Anti Avoidance Rules) 2017 வரை அமல்படுத்தப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 121 டாலரில் இருந்து 27 டாலராக குறைந்துவிட்ட நிலையிலும், அதன் பயன்கள் இந்திய மக்களுக்கு சென்று சேரவில்லை. பொருளாதார சாதுரியம் என்ற பெயரில் மண்ணெண்ணெய்க்கான மானியத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், உற்பத்திக்காக எதையும் செய்யாமலேயே கிருஷ்ணா - கோதாவரி படுகை பங்குகளில் கொள்ளை லாபம் அடித்து வருகிறது.
இங்கு பிஎம்எஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீர்ஜேஷ் உபாத்யாயாவின் அறிக்கை பற்றி பார்ப்பது சுவையானதாக இருக்கும். ‘சாமான்ய மனிதன் மறைமுக வரி என்ற பெயரில் பல்வேறு வரிகளைக் கட்டிக் கொண்டிருக் கும்போது, வரி கட்டும் நிலையில் இருப்பவர்கள், உதாரணத்திற்கு பெருந்தொழில் குழுமங்கள், வரிவிலக்கும், சலுகைகளும் பெற்று வருகிறார்கள். கார்ப்பரேட் வரி வருவாய் சலுகை என்பது கார்ப்பரேட் வருமான வரி வருவாய், சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்வதையும் உள்ளடக்கியதாகும். அரசாங்கத்தின் கார்ப்பரேட் துறை மீதான மாளாக்காதல் சமூகத் துறைகளில் நட்டத்தை ஏற்படுத்துகிறது. பெரிய வியாபார நிறுவனங்களும், பெருந்தொழில் குழுமங்களும் வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்வது, வரி நிலுவைகளுக்கு இட்டுச் செல்கிறது. இந்த அமைப்பு முறை மாற்றப்பட வேண்டும். ஊதியத்தின் மூலமான வளர்ச்சி என்பது இருக்க வேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியம் என்பது மேலோங்கிய வாங்கும் சக்திக்கு இட்டுச் செல்லும். அது சந்தையையும், பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.’ திரு மோடி அவர்களே, திரு.அருண்ஜேட்லி அவர்களே, பிஎம்எஸ்சின் திரு.உபாத்யாயா சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா?
இப்போது, அய்க்கிய அமெரிக்காவிலும் ஊதியம் மற்றும் ஏற்றத்தாழ்வு என்ற பிரச்சனை எழுந்து வந்திருக்கிறது. அய்க்கிய அமெரிக்காவில் 300 மில்லியன் மக்களுக்கு 300 மில்லியன் ஆயுதங்கள் என்றிருக்கும்போது, ஒருவர் 0.01 = 80% என்று சொல்வாரானால், அது மோசமான எண் கணிதமாக இருக்கும். ஆனால், அதுவே 16,000 பணக்கார அய்க்கிய அமெரிக்க குடிமக்களின் சொத்து 256,000,000 மக்களின் சொத்துக்குச் சமமானதாக இருக்கும்போது சரியான அரசியல் பொருளாதாரமாகிவிடுகிறது. எனவேதான் பெர்னி சாண்டர்ஸ் வால் ஸ்ட்ரீட்டின் கொழுத்த பூனைகள் பற்றி பேசும்போது அய்க்கிய அமெரிக்க மக்களோடு ஒருவித உறவைப் பேண முடிகிறது. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் பெர்னி சாண்டர்ஸ், ஹிலாரி கிளிண்டனுக்கு சவால் விடுகிறார். ஒபாமா ஒரு மணி நேரத்திற்கு 10.5 டாலர் குறைந்தபட்ச ஊதியம் என்று சொல்லும்போது, பெர்னி சாண்டர்ஸ் 15 டாலர் குறைந்தபட்ச ஊதியத்தை நோக்கிச் செல்கிறார். இது, ஒரு வேளை, தேர்தல் வாய்ச் சவடாலாகவே இருந்தாலும், நல்லதுதான்.
ஊதியம் தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் கருவான விசயங்களை சற்றுப் பார்ப்போம். உலகின் 12ஆவது பெரிய பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். 2013ல் அதன் லாபம் 37 பில்லியன் டாலர்; 2014ல் 39.5 பில்லியன் டாலர்; 2015ல் 44.5 பில்லியன் டாலர். அதன் நிகர விற்பனை யில் 56% அய்போன்களாகும். ஒரு ஆப்பிள் அய்போன் விலையில் சீனத் தொழிலாளியின் பங்கு 1.8%. அய்போன் விற்பனையில் ஆப்பிள் லாபம் 58.5%. பாக்ஸ்கானின் லாபம் 14.3%. அய்போன் 6 ஒன்றின் விலை 299 டாலர். ஆப்பிளின் லாபம் 177 டாலர். உண்மையிலேயே இதை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கானுக்கு கிடைப்பது 43 டாலர். பாக்ஸ்கானில் வேலை செய்யும் சீனத் தொழிலாளி பெறுவது 5 டாலர். 2011ல் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ்ஸிடம் ஆப்பிள் நிறுவன உற்பத்தியை உள்நாட்டுக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று ஒபாமா கேட்டதாகவும் அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் அது திரும்ப வராது என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
2011 கணக்கெடுப்புப்படி, வேலையில்லா தோர், மோசமான பணி நிலைமைகள் உள்ளோர், பொருளாதாரரீதியான செயல்பாடு அற்றவர்கள் ஆகியோர் அடங்கிய உலக அளவிலான சேமப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 240 கோடி. அதே நேரம் வேலைகள் கிடைத்து செய்து கொண்டிருக்கிற உழைப்பாளர் எண்ணிக்கை உலக அளவில் 140 கோடி. இந்த சேமப்பட்டாளத்தைத்தான் மார்க்ஸ் முதலாளித்துவ செல்வக்குவிப்பின் நெம்புகோல், முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவுவதற்கான நிபந்தனை என்றார்.
இந்தியாவில் நாம் வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி மாதிரியைக் கொண்டிருக்கிறோம். மோடி அரசாங்கம் பற்றிய மத்தியதர வர்க்கத்தின் அதீத நம்பிக்கை காற்றில் கரைந்து போய்விட்டது. நில அபகரிப்பு மசோதாவில் மோடி அரசாங்கம் நல்ல அடிவாங்கியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறார்கள். அறிவுஜீவிகள் தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுத்து ‘அவார்ட் வாப்ஸி’ எதிர்ப்பியக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். செப்டம்பர் 2 அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மோடி அரசாங்கத்துக்கு இந்திய தொழிலாளர் வர்க்கம் விடுத்த எச்சரிக்கைச் செய்தி. டெல்லியிலும், பீகாரிலும் மோடி - ஷா இரட்டையர்கள் தேர்தல் பின்னடைவை சந்தித்துள்ளார்கள். இவை எல்லாமுமாகச் சேர்ந்து, தொழிலாளர் சீர்திருத்தங்களின் வேகத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தக் கூடும். ஆனால் அபாயம் நீங்கவில்லை என்பதால் நாம் சுயதிருப்தி அடைய ஏதுமில்லை. ஏற்கனவே தொழிலாளர் வர்க்கம் தன் விருப்பப்படி சங்கம் துவங்கவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ கூடாது என்பதற்கான எச்சரிக்கைச் செய்தியை முதலாளித்துவ அமைப்பு சொல்லியிருக்கிறது. அதுதான், 03.12.2015 அன்று 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை ஆகும்.
அக்லாக்கை கூட்டமாக சென்று கொலை செய்தது, ரோஹித் வேமுலா தற்கொலைக்குத் தள்ளப்பட்டது, விவசாயிகளின் தற்கொலைகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவுகள், வெறுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது, இந்திய தண்டனைச் சட்டப்படி வயது வந்தோருக்கு நிகராக சிறார்களையும் பாவிக்கின்ற வகையில் சிறார்கள் வயதைக் குறைப்பது, 90% ஊனத்துடன் இருக்கும் பேராசிரியர் சாய்பாபாவின் பிணையை ரத்து செய்வது, அருந்ததி ராய்க்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பு கொடுப்பது ஆகியவை, இந்திய அரசியல், பெருந்தொழில் குழும, மதவெறி, சாதிய சக்திகளின் தலைமையில் வலதுசாரி பிற்போக்குப் பாதையில் செல்கிற அபாயத்திற்கான சாட்சியங்களாக உள்ளன.
ஒப்பந்தத் தொழிலாளர்கள், நகராட்சித் தொழிலாளர்கள், அரசு மற்றும் பொதுத் துறையிலுள்ள நிரந்தரமற்ற தொழிலாளர்கள் மத்தியில் ஏஅய்சிசிடியு நிச்சயமான, சீரான முயற்சிகளை எடுத்து வருகிறது. குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு, இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நீதி, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு ஆகிய விசயங்களில் ஏஅய்சிசிடியு கவனம் செலுத்தியாக வேண்டும். காத்திரமான தொடர்ச்சியான முயற்சிகள் எடுத்தாக வேண்டும். பஞ்சப்படியுடன் கூடிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூ.20,000 என்ற கோரிக்கையை நாம் பிரபலப்படுத்த வேண்டும்.
நாட்டின் வலதுசாரி திருப்பம், தொழிலாளர் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பெருந்திரள் போராட்டங்கள் மூலமாகத்தான் தடுத்து நிறுத்தப்படுவதோடு பின்னுக்குத் தள்ளப்படவும் முடியும். அந்தப் பாதையில் ஏஅய்சிசிடியு ஆனதெல்லாம் செய்ய வேண்டும்.
வறிய மக்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ள காலத்தில் 
தீவிரப்படுத்தப்படும் மானிய வெட்டு
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் ரூ.7,290 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பணமாகவும் பணத்துக்குச் சமமானவையாகவும் ரூ.91,736 கோடி அந்த நிறுவனத்திடம் உள்ளது. ஆனால், ரூ.1,78,077 கோடி கடனில் உள்ளது. இவ்வளவு கடன் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்திடம் பணமாக இருப்பதை பிடுங்காமல், வந்துள்ள லாபத்திலும் கை வைக்காமல் இருப்பவர்கள், சாமான்ய மக்களிடம் வாய்க்கும் வயிற்றுக்கும் இருப்பதை பறித்துவிடப் பார்க்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் ரிலையன்ஸ்தானா, நாட்டில் வேறு நிறுவனமே இல்லையா என்று கேட்பவர்கள் சற்று பொறுமையாக அடுத்து கட்டுரையைப் படியுங்கள். படிக்க சற்று வசதியாக, ஒவ்வோர் அம்சமாகப் பார்க்கலாம்.
 ஜன்தன், ஆதார், மொபைல் என்கிற ‘ஜம்’, மோடி ஆட்சியின் சிறப்பு என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இவற்றின் மூலம் மானிய விரயத்தை கட்டுப்படுத்தி, மானியம் தருவதால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை சரிசெய்து நாட்டின் பொருளாதாரத்தை முன் செலுத்தலாம் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து முன்வைக்கும் இந்த வாதத்தை அய்முகூ அரசாங்கத்தை விட சிறப்பாகவும் விரைவாகவும் தேஜமு நடைமுறைப்படுத்தி வருகிறது. வறிய மக்களுக்குத் தரப்படும் எல்லா விதமான மான்யங்களையும் ஒழித்துக்கட்டி விடுவது என்பதையும் வறியவர்களுக்கு கணக்கின்றி மானியம் தருவதால்தான் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி வளர்ச்சி தடைபடுகிறது என்ற அவர்கள் கருத்தையும் அவர்கள் மறைப்பதில்லை. ஆனால் நாட்டின் 80 கோடி வறியவர்களுக்கு தரப்படும் மானியம், நாட்டின் மிகச்சிறுபான்மை பெரும்பணக்காரர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்படும் சலுகைகளுடன், அவர்கள் கொள்ளையடித்துச் செல்லும் செல்வத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு பொருட்டே இல்லை என்பதை யதார்த்த நிலைமைகள் சொல்கின்றன.
 ஒவ்வோர் ஆண்டும் அரிசி, கோதுமை, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், உரம், சர்க்கரை, பருப்பு, மின்சாரம், டீசல், இரும்புத் தாது ஆகியவற்றுக்கு தரப்படும் மானியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.24% என்று 2014 - 2015 பொருளாதார ஆய்வறிக்கை சொன்னது. இது ரூ.3,78,000 கோடி மட்டுமே. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்கப்படும் வரிச் சலுகைகளுடன் ஒப்பிட்டால் 80 கோடி பேருக்கும் மேல் தரப்படும் மானியம் பெரிய தொகையே அல்ல என்று நமக்குத் தெரிகிறது. 80 கோடி பேருக்கு இதைக் கூட தராமல் வேறு எதற்கு அந்த வரிப்பணம்? வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை விட ஓர் அரசாங்கத்துக்கு வேறு என்ன தலை போகிற செலவு? அதை மிச்சப்படுத்தி நாட்டு மக்களை வயிற்றில் அடித்து யார் பொருளாதாரத்தை முன்னேற்றப் போகிறார்கள்? 2014 - 2015ல், பொது விநியோகத் திட்ட முறைகேடுகளால் மண்ணெண்ணெய்யில் ரூ.10,044 கோடி, அரிசியில் ரூ.5,800 கோடி, கோதுமையில் ரூ.12,600 கோடி இழப்பு என்று 2015 - 2016 பொருளாதார ஆய்வறிக்கை சொன்னது. 2014 - 2015 பொருளாதார ஆய்வறிக்கை சொன்ன ரூ.3,78,000 கோடியைக் கூட மோடி அரசாங்கம் மக்களுக்கு முழுமையாக எடுத்துச் சென்று சேர்க்கவில்லை. இடையில் ரூ.29,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது.
சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் ஒரு பேரல் எண்ணெய் விலை 29 டாலர் என சரிந்துவிட்டது. 2012ல் இருந்ததில் இருந்து இந்தச் சரிவு 76%. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 18.9%தான் குறைந்துள்ளது. மோடி அரசு, எண்ணெய் விலைச் சரிவின் இந்தப் பயன்கள், மக்களுக்குச் சேர்ந்துவிடாமல் கலால் வரியை உயர்த்திவிடுகிறது.
எண்ணெய் இறக்குமதி செலவு 2015 ஏப்ரல் முதல் நவம்பர் வரை, 2014ல் இதே கால கட்டத்தில் 106.59 பில்லியன் டாலர் என இருந்ததை விட, 61.41 பில்லியன் டாலராக 42.39% குறைந்துள்ளது. சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் எண்ணெய் விலை 1 டாலர் குறைந்தால் இறக்குமதி செலவு ரூ.6,500 கோடியும், அது தொடர்பான பொருட்களுக்கு தர வேண்டிய மானியம் ரூ.600 கோடியும் குறையும். இந்த வகைகளில் குறையும் செலவுகளும் மக்களுக்கு மாற்றிவிடப்பட்டதாகத் தெரியவில்லை.
மோடி அரசு நாட்டு மக்கள் மீது போர் தொடுத்துள்ள காலம் இது. இந்தப் போரில் ஜனவரி 1, 2015 முதல் சமையல் எரிவாயு மானியம் வங்கிக் கணக்கில் தரப்படும் எனச் சொல்லப்பட்டு சாமான்ய மக்கள் அலைகழிக்கப் பட்டனர். ரூ.450 இருந்தால் எரிவாயு வாங்கி விடலாம் என்ற நிலை போய் ரூ.650 கையில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகு வங்கியில் வருமா என காத்திருக்க நேர்கிறது. வரவில்லை என்றால் அதற்கு அலைய நேர்கிறது. தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் சிலருக்கு அது கிடைப்பதும் இல்லை.
எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தியதில் அரசுக்கு மிச்சமான தொகை ரூ.14,672 கோடி என்று மத்திய எண்ணெய் அமைச்சகம் சொல்கிறது. நேரடி மானியம் தருவதற்கு முன்பு 18.19 கோடி வாடிக்கையாளர் இருந்ததாகவும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது 14.78 கோடி என குறைந்த தால் இந்த நிதி மிச்சம் என்றும் கணக்கு சொல்லப்படுகிறது. இந்தக் கணக்கை எப்படி ஏற்றுக் கொள்வது? அத்தனை பேரும் எரிவாயு வாங்கினார்களா, எத்தனை வாங்கினார்கள் என்ற கணக்குகளை எப்படி சரிபார்ப்பது? ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் என்று இந்தக் கணக்கு எட்டப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள நீடித்த வளர்ச்சிக்கான சர்வதேச அமைப்பு இந்தக் கணக்கு ஊதிப்பெருக்கப்பட்டது என்று சொல்கிறது. தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் ரூ.12,700 கோடி மிச்சம் என்று சொன்னார். அது வெறும் ரூ.143 கோடிதான் என்றும் அந்த அமைப்பு சொல்கிறது. 2014 ஏப்ரல் 1 முதல் 2014 நவம்பர் 15 வரை இந்தத் திட்டத்தால் மானியம் வழங்குவதில் எந்த நேரடி மாற்றமும் ஏற்படவில்லை என்றும் திட்டத்தில் சேராதவர்களுக்கு மானியம் தரப்படுவதை மட்டுமே இந்த நடவடிக்கை நிறுத்தியுள்ளது என்றும் அந்த அமைப்பு சொல்கிறது.
நாடெங்கும் விளம்பரத் தட்டிகளில், விட்டுக் கொடுங்கள் என்று மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். 57.50 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு ரூ.940 கோடி மீதமாகிறது என்று சொல்லப்படுகிறது. இப்போது மோடி அரசு ஒரே போடு போடுகிறது. வரி செலுத்தும் வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருந்தால் எரிவாயு மானியம் வெட்டு. ஜனவரி 1 முதல் அமல். நுகர்வோரின் துணைவருக்கு இந்தச் சம்பளம் இருந்தாலும் மானியம் இல்லை. எரிவாயு உருளைக்கு பதிவு செய்யும் போது என்ன வருமானம் என்று நுகர்வோர் சொல்ல வேண்டும். இந்த வகையில் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. 2011 - 2012ல் 20 லட்சம் பேர் இந்த வருமானப் பிரிவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மானியத்தில்தான் எரிவாயு இணைப்பு வைத்திருக்கிறார்களா, ஏற்கனவே விட்டுக்கொடுத்த 57 லட்சம் பேரில் இந்த 20 லட்சம் பேரில், பெரும்பாலானவர்கள் இருக்க வாய்ப்பில்லையா என்ற கேள்விகளை கூட எழுப்பாமல், எவ்வளவு பேர் இன்னும் இந்த வருவாய் பிரிவில் இருக்கிறார்கள் என்ற விவரங்களே தெரியாமல், அந்த விவரம் எப்படி பெறப்படும் என்பது பற்றிய தெளிவான திட்டம் கூட இல்லாமல் ரூ.500 கோடி மிச்சம் என்று சொல்வது கோயபல்ஸ் உத்தியே.
பெரும்பாலான வறிய மக்கள் நலத்திட்டங்களில் இருந்து வெளியேற்றப்படும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிற மோடி அரசு, நாட்டின் இயற்கை வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கிறது.
 கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட இயற்கை எரிவாயு பிளாக்குகளில் இருந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.30,000 கோடி மதிப்புள்ள இயற்கை எரிவாயு திருடியுள்ளதாக மத்திய பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் புகார் எழுப்பி, அது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இரண்டு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டு அமர்த்திய டிகோல்யர் அன்ட் மெக்நாட்டன் என்ற அய்க்கிய அமெரிக்க நிறுவனம், 2015 அக்டோபர் 9 அன்று, சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இயற்கை எரிவாயுவை ஓஎன்ஜிசியின் கட்டுப்பாட்டில் உள்ள பிளாக்குகளில் இருந்து எடுத்துள்ளதாகச் சொல்கிறது. டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையும் இடைக்கால அறிக்கையில் சொல்லப்பட்டவற்றை உறுதி செய்துள்ளதாகச் செய்திகள் உள்ளன.
 57 லட்சம் பேருக்கு மானியத்தை நிறுத்தி சேமிக்கப்படும் ரூ.940 கோடி, 20 லட்சம் பேருக்கு வெட்டினால் சேமிக்கப்படக் கூடிய ரூ.500 கோடி பற்றி பெரிதாக பேசும் மத்திய அமைச்சர்கள் முகேஷ் அம்பானி என்கிற ஒரே ஒரு மனிதர் எடுத்துச் சென்றுள்ளதாகச் சொல்லப்படும் ரூ.30,000 கோடி அல்லது ரூ.11,000 கோடி பற்றி இது வரை எதுவும் பேசவில்லை.
2015 மார்ச் 31 வரை 11.122 பில்லியன் குயுபிக் மீட்டர் எரிவாயு ஓஎன்ஜிசியில் இருந்து ரிலையன்சுக்குச் சென்றுவிட்டது என்றும் இந்த நிலைமைகள் தொடர்ந்தால் மே 1, 2019க்குள் 12.71 பில்லியன் குயுபிக் மீட்டர் எரிவாயு ஓஎன் ஜிசியில் இருந்து ரிலையன்சுக்குச் சென்றுவிடும் என்றும் அதன் பிறகு ஓஎன்ஜிசி இந்தப் பணி களை தொடர்வதே சிரமமாகி விடும் என்றும் அறிக்கை சொல்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஓஎன்ஜிசிக்கு ஒதுக்கப்பட்ட பிளாக்குகளுக்கு மிக அருகில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டதே தவறு என்றும் ஓஎன்ஜிசி சொல்கிறது. அனுமதி தந்தது அய்முகூ அரசாங்கம். இந்த நிலைமைகளை தொடரவிட்டுள்ளது மோடி அரசாங்கம். இது வரையிலும் இனிமேலும் அரசுக்கு நட்டம், தனி ஒருவருக்கு பல பத்தாயிரம் கோடி லாபம் என மக்கள் பணம் கொள்ளை போவது, மானியம் தருவது வீண் எனக் கருதும் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களுக்கு, முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு விரயமாகப்படவில்லை.
எரிவாயு திருட்டு பற்றிய குற்றச்சாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 70% பங்குகள் உள்ளன. அதாவது நாட்டு மக்களுக்கு 70% பங்குகள் உள்ளன. இந்தச் செல்வத்தை முகேஷ் அம்பானியின் நிறுவனம் கொள்ளையடித்துச் செல்ல முறைகேடாக அனுமதி வழங்கியது மட்டுமின்றி பிரச்சனை அம்பலத்துக்கு வந்த பிறகும் நாட்டு மக்களுக்குச் சொந்தமான செல்வத்தைப் பாதுகாப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது. இந்தப் பிரச்சனையில் ஓஎன்ஜிசி நிறுவனம் நீதிமன்றம் சென்றபோது, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அப்படிச் செய்ததை விசாரிக்கும்படி முன்னாள் அமைசர் வீரப்ப மொய்லி ஒரு குறிப்பு அனுப்பினார். குறிப்பு அனுப்பப்பட்ட தேதி 22 மே 2014. அதாவது, 16 மே 2014 அன்று மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியிழந்ததற்கும், மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற 26 மே 2014க்கும் இடைப்பட்ட நாள்! நடந்த முறைகேட்டை விசாரிப்பதற்கு பதிலாக, அதற்கெதிராக நீதிமன்றம் சென்றதை விசாரிக்கச் சொன்னதே தவறு. அதையும் அதிகாரம் இல்லாத காலத்தில் ஓர் அமைச்சர் செய்கிறார். ஆட்சியை இழந்த பிறகு இப்படி ஒரு குறிப்பு எப்படி அனுப்பலாம் என இன்று வரை மோடி அரசாங்கம் பிரச்சனை எழுப்பவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை கொண்டு போகும் செல்வத்தை மீட்க, மேலும் கொள்ளை போய்க்கொண்டிருப்பதைத் தடுக்க வழக்குகள் போட்டு, பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற மோடி அரசு ஏன் முயற்சி செய்யக் கூடாது?
உற்பத்திச் செலவை கூடுதலாகக் காட்டி கணக்கிடவே முடியாத அளவுக்கு அரசுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் இழப்பு ஏற்படுத்தியது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை விட அது கூடுதல் என்று மத்திய தணிக்கையாளர் சொல்லி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் பறந்து பறந்து வேலை பார்க்கிற மோடி அரசு அது பற்றி மூச்சு காட்டாமல் இருக்கிறது.
அம்பானிகளும் அதானிகளும் கோடிகோடியாய் கொள்ளையடிப்பதை மறைத்து மக்களை திசை திருப்பவும் இந்த மான்ய வெட்டு நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் தீவிரப்படுத்து கிறது என்று சொல்ல முடியும். சமையல் எரிவாயு மான்யத்தை முறைப்படுத்திவிட்டதாகச் சொல்லி, உணவு, இன்ன பிற மான்யத்தையும் முறைப்படுத்தப் போவதாகச் சொல்லி, நாட்டின் பொதுவிநியோக முறைக்கு முடிவுகட்டும் அடுத்தடுத்த தாக்குதல்களுக்கும் மோடி அரசு தயாராகிவிட்டது.
மண்ணெண்ணெயின் சந்தை விலை ரூ.43. மானியம் ரூ.31. ஏப்ரல் 1 முதல் இந்த மானியம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்யை நம்பி இருக்கும் வறிய மக்கள் மூன்று மடங்கு பணம் கையில் வைத்திருக்க வேண்டும். இதனால் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. பெரும்எண்ணிக்கையிலான வறிய மக்கள் பொது விநியோகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டால்தான் இந்தத் தொகை மிச்சமாகும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்களில் 26 மாவட்டங்களில் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உணவுப் பொருட்களுக்கான மானியத்தையும் நேரடியாக வங்கியில் செலுத்துவது பற்றி அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களுக்கு ஏன் வீடு, அலுவலகம், வாகனம், வேறுவேறு சலுகைகள் அனுபவிக்கிறார்கள். நடப்பு மக்களவையில் 442 பேர் கோடீஸ்வரர்கள். அவர்கள் தங்கள் சலுகைகளை விட்டுத் தருவார்களா? ஓய்வூதியம் வேண்டாம் என்று சொல்வார்களா? தங்கள் ஊதியத்தை இன்னும் உயர்த்திக் கொள்வது பற்றித்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
வருகிற அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், எங்கள் வாக்குகளை வாக்குப்பதிவு எந்திரத்தில் அல்லாமல் வங்கிக் கணக்கில் போட்டுவிடுகிறோம் என்று மக்கள் சொன்னால் மோடியும் அவரது கூட்டாளிகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட மாட்டார்களா?
கட்டைப் பைகளின் தையல்களில் 
குத்துப்படும் பெண் தொழிலாளர்கள்
ஏ.கோவிந்தராஜ்
தமிழ்நாட்டில் உள்ள ஆர்எம்கேவீ, சரவணா டெக்ஸ்டைல்ஸ், போத்தீஸ் போன்ற பெரிய ஜவுளி கடைகளில், சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ.1,000க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு கட்டைப் பை ஒன்று அன்பளிப்பாகத் தரப்படும். இப்போது ரூ.2,000க்கும் மேல் வாங்கினால் தரப்படுகிறது. இதை வாங்க ஜவுளி வாங்கிய ரசீதை பத்திரமாக வைத்திருந்து காட்ட வேண்டும். இந்த கட்டைப் பை மிகவும் வசதியானது. காய்கறி வாங்குவது முதல் பல்வேறு உபயோகங்களுக்கு பின்னர் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பைகளை வைத்திருப்பவர்கள் ரூ.2,000க்கும் மேல் ஜவுளி வாங்கிய பெருமையையும் இந்தப் பைகள் உலகுக்குச் சொல்லிவிடுகின்றன.
வாடிக்கையாளர்களை பெருமைபடுத்தும் இந்தப் பைகளை உற்பத்தி செய்யும் பெண் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளிலும் வாழ்க்கை நிலைமைகளிலும் பெருமைப்பட்டுக் கொள்ள பெரிதாக ஏதும் இல்லை. உண்மையில் அவர்கள் வாழ்க்கை கட்டைப் பைகளின் தையல்களில் குத்துப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் கட்டைப் பைகள் தைக்கும் தொழிலில் சுமார் 5,000 பெண் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கட்டைப் பையில் அதிகமான பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல முடியும் என்பதாலும் ஜவுளி கடைகளில் விளம்பரத்துக்காகவும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவும் இந்தப் பைகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதி களில் கிடைக்கும் கட்டைப் பைகளை விட பவானியில் தைக்கப்படும் பைகள் தரமானவை.
இந்தத் தொழிலில் பைகள் தைக்கும் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் முகவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமே தொழிலாளர்கள் வேலை பெறுகிறார்கள். ஒரு பைக்கு சைடு பட்டி தைக்க 175 பைசா, சுத்து பட்டி தைக்க ரூ.2, முதலாளிகள் முகவர்களிடம் கொடுக்கிறார்கள்.
முகவர்கள் ஒரு பைக்கு சைடு பட்டிக்கு 140 பைசாவும், சுத்து பட்டிக்கு 175 பைசாவும் தையல் கூலியாக கொடுக்கிறார்கள்.
தொழிலாளர்கள் முதலாளிகளிடம் நேரடியாக வேலை பெற்றால் முகவர்கள் பெறும் கூலியை இவர்கள் பெறலாம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. முதலாளிகள் தங்கள் கடைகளை வைத்துள்ள இடங்களில் இருந்து 3 கி.மீ, 5 கி.மீ, 7 கி.மீ, 10 கி.மீ தூரம் வரை கூட இந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். முதலாளிகள் தங்கள் கடைகளுக்கு வந்து வேலை எடுத்துச் செல்லச் சொல்கிறார்கள். முதலாளிகளின் கடை இருக்கும் தெருக்களிலேயே வசிக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். பல மைல் தொலைவில் உள்ளவர்கள் கடைகளுக்குச் சென்று வேலை எடுத்து வர வேண்டுமென்றால், பேருந்து கட்டணம், சரக்குக் கட்டணம் செலவு ஆகியவற்றுடன் பெருமளவு நேரமும் போய்விடும். எனவே அவர்கள் வேலைகளை தங்கள் வீடுகளிலேயே கொண்டு வந்து தரும் முகவர்களையே நம்பியிருக்கிறார்கள்.
இந்தத் தொழிலாளர்கள் தையல் எந்திரம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் பெறும் கூலியில் நரம்பு அவர்களே வாங்கிக் கொள்ள வேண்டும். மின்கட்டணம் அவர்களே செலுத்திக் கொள்ள வேண்டும். தையல் எந்திரம் பழுதடைந்தால் அவர்களே சரிசெய்து கொள்ள வேண்டும். 140, 175 பைசா கூலியில் இந்தச் செலவுகள் போக மிஞ்சியதுதான் அவர்கள் வாழ்க்கைக்கு.
ஒரு மணி நேரத்தில் 20 முதல் 25 பைகள் தைக்க முடியும். 8 மணி நேரத்தில் 160 முதல் 200 பைகள் வரை தைக்கிறார்கள். 160 பை தைப்பவர்களுக்கு ரூ.250, 200 பை தைப்பவர்கள் ரூ.375 கிடைக்கும். 12 மணி நேரம் தைத்தால் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும். பண்டிகை காலங்களில் இரவு நேரங்களிலும் தைக்கிறார்கள். இதனால் இன்னும் சில பத்து ரூபாய்கள் கூலி கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு மேல் எந்த தொழிலாளர் உரிமையும் அவர்களுக்குக் கிடையாது.
முகவர்கள் விரும்பினால் ஆண்டொன்றில் ஒரு புடவை அல்லது ரூ.500 அல்லது ஒரு சிறிய குண்டா தருவார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏஅய்டியுசி இந்தத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தில் முகவர்களை முதலாளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் முகவர்கள் ஏஅய்சிசிடியுவை நாடி, தொழிலாளர்களைத் திரட்ட அவர்கள் உதவுவதாகவும் சங்கம் கூலி உயர்வுக்கான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
பைகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கும் கூலியை விட 75 பைசா கூடுதலாக தர வேண்டும் எனக் கோரி 14.09.2015 அன்று ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200 பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் பவானியில் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாளிகள், முகவர்கள், சங்கப் பிரதிநிதிகள் கூட்டம் கூட்டி கூலி உயர்வு பற்றி பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. வட்டாட்சியர் 29.09.2015 அன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட 10 முதலாளிகளும், தீபாவளி ஆர்டர் எடுத்துவிட்டதால் இனி கூலி உயர்வு பற்றி பேச முடியாது என்றனர்; தை மாதம் வரும் ஆர்டரின்போதுதான் கூலி உயர்வு பற்றி பேச முடியும் என்றும், அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தி கூலி உயர்வு பற்றி முடிவு செய்யலாம் என்றும், முத்தரப்பு பேச்சுவார்த்தைதான் நடத்த முடியும் என்றும் முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் கூறியதால், ஜனவரி 2016 முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம், வர்னாபுரம், பழனிபுரம், திருவள்ளுவர் வீதி, ஊராட்சிகோட்டை, குருப்பநாயக்கன்பாளை யம் ஆகிய பகுதிகளில், ஜனவரி 2 முதல் 5 வரை மாலை நேரங்களில் தோழர்கள் தையல் தொழிலாளர்களை சந்தித்தனர். பேச்சுவார்த்தையில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
கரூர் தையல் தொழிலாளர்கள் நிலைமைகள் தொடர்பாக ஏஅய்சிசிடியு நடத்திய ஆய்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சிறு பிரசுரம் பவானி கட்டைப் பை தையல் தொழிலாளர் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. ஒருமைப்பாடு இதழும் விநியோகிக்கப்பட்டது.
06.01.2016 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 100 பெண்கள் கலந்து கொண்டனர். அன்று முதலாளிகள் முழுமையாக கலந்துகொள்ளாததால் 07.01.2016 அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர் பிரதிநிதிகளும் முதலாளிகளும் கலந்துகொண்டனர்.
சந்தையில் பைகள் விலை ரூ.20ல் இருந்து ரூ.17 எனக் குறைந்துவிட்டதால், கூலி உயர்வு தர முடியாது என்றனர். 29.09.2015 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் முதலாளிகள் கூலி உயர்வுக்கு ஒப்புக்கொண்டதையும், எவ்வளவு உயர்வு என்பதை ஜனவரியில் முடிவு செய்து கொள்ளலாம் என்று வட்டாட்சியர் முன்பு எழுதி கொடுத்த ஆவணமும் தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டன.
இதன் பிறகு பை ஒன்றுக்கு 10 பைசா உயர்வு தருவதாக முதலாளிகள் கூறினார்கள். நான்கு ஆண்டுகள் முன்னர் போடப்பட்ட ஒப்பந்தத்திலேயே 25 பைசா உயர்வு கொடுத்துள்ள நிலையில், இப்போது 10 பைசா உயர்வை ஏற்க முடியாது என்று சங்கத்தின் தரப்பில் சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து 25 பைசா உயர்வு தருவதாகவும் ஒப்பந்தத்தில் உள்ளபடி பையை தைத்துத் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். அந்த ஒப்பந்தத்தில் 1 இன்ச்க்கு 12 தையல் குத்தும், சைடு பட்டியும் பையில் பட்டியும் அடிக்க வேண்டும் என்று உள்ளது. தற்போது ஒரு இன்ச்க்கு 6 தையல் குத்தும், சைடு பட்டியும்தான் பெண்கள் தைக்கிறார்கள்.
பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த 50 பெண் தொழிலாளர்களிடம் 1 இன்ச்க்கு 12 தையல் குத்து பற்றி கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் முதலாளிகள் கேட்கும்படி ஒப்பந்தம் போட்டால் தொழிலாளர்களுக்கு இழப்பு என்றனர். தற்போது தைப்பதுபோல் ஒரு இன்ச்க்கு 6 குத்தும் சைடு பட்டியும்தான் தைக்க முடியும் என்றனர். அதாவது, முதலாளிகள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தில் கொடுத்த அதே கூலி உயர்வுக்கு இரண்டு மடங்கு உற்பத்தியில் உயர்வு கேட்டார்கள். இது உற்பத்தி உயர்வு மட்டுமின்றி பைகள் தைக்க தொழிலாளர்கள் வாங்க வேண்டிய நரம்பின் அளவும் அதிகரிக்கும். ஆக, கூலி உயர்வு என சொல்லும்படி எதுவும் இருக்காது.
கூலி உயர்வுடன் வரும் உற்பத்தி உயர்வுக்கு தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளாததால், 25 பைசா கூலி உயர்வு தர முன்வந்த முதலாளிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளபடிதான் புதிதாகவும் ஒப்பந்தம் போடுவோம் என்று உறுதியாகச் சொல்கின்றனர்.
இந்த நிலைமைகளில் 05.02.2016க்கு பேச்சு வார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், தமிழ்நாட்டிலும் நடக்கும் ஊழல்களின் அளவுகள் சில ஆயிரம் கோடிகள், சில பத்தாயிரம் கோடிகள், ஒரு லட்சம் கோடிக்கும் மேல் என்ற பிரம்மாண்டமான அளவுகளை எட்டிவிட்டன. ஆனால் கட்டைப் பைகள் தைக்கும் பெண் தொழிலாளர்களின் கூலி உயர்வை, நாட்டில் புழக்கத்தில் இருந்தே ஒழிந்துவிட்ட 10 பைசா, 25 பைசா என்று அரசு நிர்வாகம் பேசிக் கொண்டிருக்கிறது. அதையும் முதலாளிகள் தரத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் ரூ.2.42 லட்சம் கோடிக்கு முதலீடு வரப்போகிறது என்று பெருமையாகச் சொல்கிற ஜெயலலிதாவும் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஏஅய்சிசிடியு சந்தித்த 300 பெண் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து பெற்ற விவரங்கள்படி, இவர்களது வீடுகள் 10க்கு 15 அடி என்ற அளவில் உள்ளன. இதற்குள்ளேயேதான் அவர்களது தையல் எந்திரங்களும் உள்ளன.
இந்தப் பெண் தொழிலாளர்களில் 8ஆவது வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படித்தவர்கள் உள்ளனர். 20 முதல் 45 வயது வரையிலான பெண்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். இந்தத் தொழிலாளர்களின் குழந்தைகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவர்களது கணவன்மார்கள் சாயப் பட்டறை, கட்டுமானம், ஜவுளிக் கடைகள் போன்ற அரங்கங்களில் வேலை செய்கின்றனர்.
தொழிலாளர்களும் முகவர்களும் பெரும்பாலும் வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர்கள். பல்வேறு விசயங்களில் புள்ளிவிவரங்கள் தரும் மருத்துவர் ராமதாசு இந்தத் தொழிலாளர்கள் வாழ்நிலைமைகள் பற்றி புள்ளிவிவரங்கள் ஏதும் வைத்துள்ளாரா?
கரூரின் பல பத்தாயிரக்கணக்கான தையல் தொழிலாளர்கள்போல், பவானியிலும் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்ற அந்தஸ்தும் அதிகாரபூர்வமாக எந்தவித அடையாளமும் இல்லாமல், சிறிய அளவிலான மூலதனம் என்றாலும் அதைப் பெருக்கிக் கொழுக்கச் செய்யும் போக்கில் குத்துப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அஇஅதிமுகவின் நாராயணன். தமது அரசின் சாதனைகளை விளக்கிச் சொல்ல 36 நாட்களாவது தேவைப்படும் என ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொல்கிறார். இந்த நான்கரை ஆண்டு காலத்தில் 110ல் கூட இந்தத் தொழிலாளர்கள் பற்றி அவர் பேசவில்லை. நாட்கணக்கில் வேண்டாம். பத்து நிமிடங்கள் ஒதுக்கி, இந்தத் தொழிலாளர்களுக்காக இந்த அரசு புரிந்த சாதனைகளை ஜெயலலிதா சொல்ல முடியுமா?
(ஒன்றியம் முழுவதும் இந்தத் தொழிலில் உள்ள ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் மத்தியில் விரிவான ஆய்வு மேற்கொள்ள நாமக்கல் - ஈரோடு மாவட்ட ஏஅய்சிசிடியு தோழர்கள் திட்டமிட்டுள்ளனர்).
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 
எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும்!
நாடு தழுவிய ஒருமைப்பாட்டு இயக்கம்
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி இகக மாலெ - ஏஅய்சிசிடியு நடத்தும் நாடு தழுவிய ஒருமைப்பாட்டு இயக்கத்தில் நாடு முழுவதும் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குர்முகி (பஞ்சாபி), இந்தி, கன்னடம், ஒடியா மொழிகளில் ஏஅய்சிசிடியு துண்டு பிரசுரங்கள் வெளியிட்டுள்ளது. தெலுங்கு, வங்காளம் மற்றும் அசாமிய மொழிகளில் பிரசுரங்கள் வெளியிடப்படும். ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கன்னடத்தில் வெளியீடு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
தெஹல்கா, ஸ்க்ரோல் டாட் இன் மற்றும் தி வயர் என்ற இ-பத்திரிகைகள் இணக்கமான கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. இகக மாலெயின் எம்எல் அப்டேட், லிபரேசன், லோக்யுத், தேஷ்பிரதி, ஏஅய்சிசிடியுவின் ஷ்ரமிக் சாலிடாரிடி பத்திரிகைகள் செய்தி கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் ஆவணப்படம் எடுப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. சண்டிகர் தோழர்கள் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். ரயில்வே ஊழியர் சங்க இதழில் பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் பற்றியும் எட்டு பிரிக்கால் தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு விதமான தொழிலாளர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டு நிதி திரட்டப்படுகிறது.
சர்வதேச மற்றும் மய்ய தொழிற்சங்கங்களின் ஒருமைப்பாட்டு செய்திகள்
தொழிற்சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு (டபிள்யுஎஃப்டியு), ஜப்பான் ரயில்வே ஊழியர் சங்கக் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் பிரிக்கால் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து கடிதங் கள் அனுப்பியுள்ளன.
சிஅய்டியு மய்யத் தலைமையும் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டுச் செய்தி அனுப்பியுள்ளது.
அனைத்து மய்யத் தொழிற்சங்கங்களின் தீர்மானம்
ஜனவரி 27 அன்று டில்லியில் நடந்த அனைத்து மய்யத் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு டிசம்பர் 3 அன்று இரட்டை ஆயுள் என்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவும், தங்கள் தண்டனைக்கெதிராக நீதி கோரும் எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு மய்யத் தொழிற்சங்கங்கள் ஒருமைப்பாடு தெரிவிப்பதாகவும், பிணை கோரும், வழக்கில் இருந்து விடுதலை கோரும் அந்தத் தொழிலாளர்களின் முயற்சிகளுக்கு தொழிலாளர்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் சாத்தியப்பட்ட அனைத்து வழிகளிலும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில் ஏஅய்சிசிடியு, ஏஅய்டியுசி, சிஅய்டியு, எச்எம்எஸ், யுடியுசி, சேவா, டியுசிசி, அய்என்டியுசி மற்றும் பிஎம்எஸ் சங்கங்கள் கையொப்பமிட்டன.
புவனேஸ்வரில் கருத்தரங்கம்
ஜனவரி 25 அன்று புவனேஸ்வரில் ஏஅய்சிசிடியு நடத்திய கருத்தரங்கில் ஏஅய்டியுசி, சிஅய்டியு, அய்என்டியுசி, ஏஅய்யுடியுசி ஆகிய சங்கங்களின் தலைவர்களுடன் ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, தேசியத் துணைத் தலைவர் தோழர் ஸ்வப்பன் முகர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
உத்தரகண்ட், சிட்குல்லில் ஆர்ப்பாட்டம்
ஏஅய்சிசிடியு சங்கம் அமைத்ததற்காக, பிரிக்கால் முன்னணி தோழர்கள் ஆறு பேர் 2007ல் உத்தரகண்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுதான் போராட்டம் நடக்க மிக முக்கியமான காரணமாக இருந்தது. பிரிக்கால் ஆலை இருக்கிற உத்தரகண்ட் மாநில சிட்குல் பகுதியில் ஏஅய்சிசிடியு தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் பெரும்எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் கலந்துகொண்டு எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
பீகாரில் ஒருமைப்பாட்டு இயக்கம்
பாட்னாவில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில், எட்டு பிரிக்கால் தொழிலாளர் களுக்கு விடுதலை வேண்டும் என்ற இந்தி சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. ஆஷா ஊழியர்கள் சங்கம், ஆஷா ஊழியர்கள் மத்தியிலும் செவிலியர்கள் மத்தியிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரம் மேற்கொண்டது.
பீகாரில் கட்டுமானத் தொழிலாளர் மத்தியில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளியிடமும் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு நிதியாக ரூ.5 திரட்டப்படும்.
ஜார்க்கண்டில் பேரணி
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் ஜனவரி 18 அன்று நடந்த பேரணியில், ஒரு பக்கம் தொழிலாளர்கள் மீதான கார்ப்பரேட் தாக்குதல் மற்றும் சல்மான் கான் போன்றவர்கள் விடுதலையாவது ஆகியவற்றையும் மறுபக்கம் எட்டு பிரிக்கால் தோழர்களையும் குறிக்கும் விதம் தோழர்கள் வேடமணிந்து சென்றனர்.
புதுச்சேரியில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் ஜனவரி 12 அன்று அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பொது வேலை நிறுத்தம் நடத்துவது பற்றியும் பேசியுள்ளனர்.
கர்நாடகாவில் ஆர்ப்பாட்டங்கள்
கர்நாடகாவில் ஜனவரி 8 அன்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு வேலைகள் நடக்கிற பிற மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சண்டிகரில் ஒருமைப்பாட்டு கூட்டங்கள்
சண்டிகரில் ஒப்பந்த மற்றும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் சிறுசிறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம்
ஏழாவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பல்வேறு வாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில் பிரிக்கால் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கப்படுகிறது.
குஜராத், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ஏஅய்சிசிடியு ஒருமைப்பாட்டு இயக்கங்கள் நடத்தி வருகிறது.
பீகாரிலும் ஜார்க்கண்டிலும் தலா அய்ந்து மய்யங்களில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ளும் கருத்தரங்கங்கள் நடத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
திருநாள்கொண்டசேரி பிரச்சனையில் காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தில் தலித் முதியவரின் உடலை அடக்கம் செய்ய பொதுப் பாதை மறுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் தலைமையிலான குழு ஜனவரி 21 அன்று அந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டது. தலித் முதியவர் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவைப் பொருட்படுத்தாமல் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளான தஞ்சை சரக டிஅய்ஜி, நாகை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாதி ஆதிக்கத்தோடு செயல்படுவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இகக மாலெ வலியுறுத்துகிறது. திருநாள் கொண்டசேரி தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியைக் கண்டிக்கிறது.
கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் மரணத்துக்குக் காரணமான 
கல்வித்துறை அதிகாரிகளை, அமைச்சரை பதவி நீக்கம் செய்! 
கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். ஏற்கனவே இந்தக் கல்லூரி மீது புகார்கள் உள்ள நிலையில் அரசும், அதிகாரிகளும் காட்டிய அலட்சியமே 3 மாணவிகளின் மரணத்துக்குக் காரணம். எனவே மாவட்ட, மாநில கல்வித்துறை அதிகாரிகள், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும், கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் இறந்த மாணவிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் தமிழகத்தின் தனியார் கல்லூரிகள் பற்றி நடுநிலையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வெள்ளையறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாணவர் ரோஹித் விவகாரத்தில் சுப்பிரமணியசுவாமி பார்ப்பனீய ஆதிக்கத்துடன், கம்யூனிஸ்ட்டுகளும் நாய்களும்தான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ட்விட்டரில் கருத்து வெளியிட்டதற்கும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 24.01.2016 அன்று சென்னையில் சுப்பிரமணியசுவாமிக்கு எதிராக புரட்சிகர இளைஞர் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் துவக்கிய போராட்டம் தமிழகமெங்கும் பரவத் தொடங்கியிருக்கிறது.
புரட்சிகர இளைஞர் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் ஜனவரி 26 அன்று கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தின. புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் தனவேல், விழுப்புரம் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழக தோழர் கஜேந்திரன், அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் வெற்றிவேல் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது.
கடலூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகம் சுவரொட்டி இயக்கம் நடத்தியது.
அழிஞ்சிவாக்கம் உள்ளூர் கமிட்டி மாநாடு
ஜனவரி 24 அன்று திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் இகக (மாலெ) உள்ளூர் கமிட்டி மாநாடு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் கலந்து கொண்டார். 15 பேர் கொண்ட உள்ளூர் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. தோழர் வெங்கடேசன் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கன்னியாகுமரியில் அகில இந்திய மாணவர் கழக பயிற்சி முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இகக(மாலெ)யும் வெகுசன அமைப்புகளும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தொடர்புக்கு வந்த மாணவர்களின் முன்முயற்சியில் நாகர்கோவிலில் ஜனவரி 23 அன்று மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பெரும்பாலும் கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அகில இந்திய மாணவர் கழகத்தை அறிமுகப்படுத்தி அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் பாண்டியராஜன் உரையாற்றினார். இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து இன்றைய அரசியல் சூழல் பற்றி உரையாற்றினார். கூட்டத்தில் வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பல்வேறு பிரச்சனைகள் மீது போராட்ட இயக்கங்கள் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கென ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டது. கமிட்டியின் தலைவராக தோழர் ஜோசுவாவும் செயலாளராக தோழர் ஆனந்த் கார்ல் மார்க்சும் தேர்வு செய்யப்பட்டனர்.
சேலம் கட்சி ஊழியர் பயிற்சி முகாம்
ஜனவரி 19 அன்று சேலத்தில் கட்சி ஊழியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 22 ஊழியர்கள் பங்கேற்றனர். தோழர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கம்யூனிசம்: அடிப்படையான சில தத்துவ, கருத்தியல், அமைப்புப் பிரச்சனைகள் என்ற தலைப்பில் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், இன்றைய அரசியல் சூழலும் நமது கடமைகளும் என்ற தலைப்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் உரை நிகழ்த்தினர்.
ஆந்திர சிறைகளில் வாடும் பழங்குடி மக்களை விடுதலை செய் கருப்புக் கொடியேற்றி பொங்கல் புறக்கணிப்புப் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலை, சேலம் மாவட்டம் கல்வராயன்மலை மற்றும் தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதிகளிலுள்ள பழங்குடியினர் ஆந்திர சிறையில் வாடும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி 15.01.2016 முதல் 3 நாட்கள் பொங்கல் பண்டிகையை புறக்கணித்தனர். அகில இந்திய மக்கள் மேடை இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Search