COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Sunday, February 1, 2015

திருவள்ளூர் மாவட்ட உள்ளூர் கமிட்டி மாநாடுகள்

கட்சி வலுப்படுத்தும் இயக்கத்தை ஒட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் ஜனவரி 20 வரை 24 கிளைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 21, லெனின் நினைவு நாளன்று, நெல் அரவை ஆலை கிளையும் 15ஆவது வார்டு கிளையும் கூட்டப்பட்டன. இந்தக் கிளைகள் அடங்கிய உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடத்தவும், புழல் பகுதி கமிட்டியாக வளர்வதை நோக்கி நகர்வதெனவும் வெகுமக்கள் அமைப்புகள் மத்தியில் இயங்கும் கிளைகளில் ஒன்றான நெல் அரவை ஆலை கிளையை குடியிருப்புப் பகுதி வேலைகள் நோக்கி, வாக்குச் சாவடியை மய்யமாகக் கொண்டு இயங்கும் கிளையாக மாற்றியமைக்கவும் கூட்டங்கள் முடிவு செய்தன.

நெற்குன்றம் உள்ளூர் கமிட்டியின் ஏழாவது மாநாடு ஜனவரி 25 அன்று நடத்தப்பட்டது. தோழர் சீனிவாசன் மாநாட்டு அறிக்கை முன்வைத்தார். இந்த உள்ளூர் கமிட்டிக்குள் கட்சித் தோழர் ஊராட்சித் தலைவராக இருக்கிற ஊராட்சியில் நமது பணிகள் பற்றி பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. பகுதியில் உள்ள புரட்சிகர இளைஞர் கழக கிளைகளை விரிவாக்கவும், ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறுவதை நோக்கி வேலைகளை செலுத்துவது எனவும், தீப்பொறி வாசகர் கூட்டங்கள் நடத்துவதெனவும் அடுத்த கட்ட வேலைகளை எடுத்துச் செல்ல உதவும்விதம் உள்ளூர் கமிட்டியின் கீழ் வருகிற உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் தோழர் சீனிவாசன் உள்ளூர் கமிட்டிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெற்குன்றம் உள்ளூர் கமிட்டி மாநாடு ஜனவரி 25 அன்று மாலை நடத்தப்பட்டது. வலுப்படுத்தும் இயக்க இலக்குகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்க வலியுறுத்தப் பட்டது. தோழர் டி.சாந்தி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (இந்த உள்ளூர் கமிட்டியில் உள்ள இரண்டு கிளைகள் முழுக்க முழுக்க பெண் உறுப்பினர்கள் கொண்ட கிளைகள்). இந்த உள்ளூர் கமிட்டி மாநாடுகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் வாழ்த்துரையாற்றினர்.

குடியரசு தின நிகழ்ச்சியில் குற்றவாளியைக் கொண்டாடிய அரசு குற்றவாளியை தண்டிக்குமா?

ஒபாமா மீது இந்திய தூசி கூட பட்டுவிடாத அளவுக்கு டில்லியில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போல் அவர் டில்லிக்கு வருவதை ஒட்டி, அவர் வருவதற்கு ஒரு நாள் முன்பிருந்தே தமிழ்நாட்டிலும் மாநிலம் முழுவதும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக காவல் துறையினர், மோடியை விட மோடிக்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். அய்க்கிய அமெரிக்க தூதரகத்தின் புனிதத்தை பாதுகாத்தனர்.
பல்வேறு உலக நாடுகளின் இறையாளுமை மீது தாக்குதல் தொடுக்கும் அய்க்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து ஜனவரி 24 அன்று இடதுசாரிக் கட்சியினர் நாடு முழுவதும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

தமிழ்நாட்டி லும்நடத்தினர். சிறை நிரப்பும் போராட்டம் என்று அவர்கள் திட்டமிடவில்லை. அறிவிக்கவும் இல்லை. தமிழ்நாட்டின் பல மய்யங்களில் அனுமதியும் கேட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட ஜனவரி 24 அன்று ஒபாமா இந்தியாவில் இல்லை. மறுநாள்தான் வந்தார். வந்தாலும் அவர் பயணத் திட்டத்தில் தமிழ்நாடு இல்லை.எனவே, தமிழ்நாட்டில் நடக்கும் எந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் அவருக்கு எந்த அச்சுறுத்தலையும் உருவாக்கப் போவதில்லை. ஆயினும் மாநிலத்தின் பல மய்யங்களில் அனுமதி மறுக்கப்பட்டு ஒபாமாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் கைது செய்து இரவு ஒன்பது மணிக்குப் பிறகு விடுதலை செய்தனர்.

ஒபாமா வருகைக்கு அடையாள எதிர்ப்பு கூட இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசாங்கம் கவனமாகப் பார்த்துக் கொண்டது. தடையை மீறி எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்து ஒபாமா வருகையின் மேல் மிகப்பெரிய அரசியல் கோட்டை கட்டிக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்துக்கு, தமிழ்நாட்டின் அஇஅதிமுக தலைமையிலான ஆட்சி அவர் பக்கம்தான், ஏகாதிபத்திய நலன், கார்ப்பரேட் நலன் பக்கம்தான் என உறுதிப்படுத்தியது.

மத்திய பாஜக அரசு, உலக நாடுகள் மீது போர் தொடுக்கும் ஒபாமாவை அழைத்து குடியரசு தினத்தை கேலிக்கூத்தாக்கியது என்றால், தமிழக அஇஅதிமுக அரசு, ஊழல் குற்றம் செய்து தண்டனைக்குள்ளாகி சிறை சென்று பிணையில் திரும்பியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடனான அலங்கார ஊர்திகளை குடியரசு தின அணிவகுப்பின் முக்கிய பகுதியாக்கி குடியரசு தின நிகழ்ச்சியை கேலிக்கூத்தாக்கி தமிழ்நாட்டை தலைகுனிய வைத்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாநில அரசு தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதை அஇஅதிமுகவினரின், அரசாங்கத்தின் இதுபோன்ற கண்ணியமற்ற நடவடிக்கைகளே காட்டிவிடுகின்றன.

இப்படிச் செய்வதன் மூலம் ஆளும் கட்சியினர் எதை நிறுவ முயற்சி செய்கிறார்கள்? ஜெயலலிதா குற்றமற்றவர் என்றா? அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கே பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்றா? ஜெயலலிதா குற்றவாளியாக இருந்தாலும் தமிழக மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று காட்டவா? ஜெயலலிதாவிடம் தங்களுக்கு இருக்கும் விசுவாசத்தைக் காட்டவா? அல்லது, தமிழக அரசின் குற்றமய அலட்சியத்தால் வாழ்வுரிமை இழந்து கொண்டிருக்கும் தமிழக மக்களின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீற்றத்தில் இருந்து தப்பிக்க, இருட்டில் தனியாக நடப்பவர் பயமில்லாமல் இருக்க பாட்டுப் பாடிக் கொள்வதுபோல், தமக்குத் தாமே தைரியம் சொல்லிக் கொள்ளவா? இது எதுவுமே அவர்களுக்கு கைகூட வாய்ப்பு குறைவு. எதில் தப்பினாலும் மக்கள் சீற்றத்தில் இருந்து தப்பிவிட முடியாது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீடு மீது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இல்லாத நேரம் அவர் வீட்டில் எப்படி சோதனையிடலாம், சொத்துப் பட்டியல் தந்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் இருக்கிறார்களா என நீதிபதி கேட்கும் கேள்விகள், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை திக்குமுக்காடச் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பவானி சிங் அரசு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது என்று வழக்குகள் ஒருபுறம் நடக்க பவானி சிங் தமிழக அரசை திக்குமுக்காட வைக்கிறார். ஜனவரி 23 அன்று அவர் அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக செய்தி வெளியானது. ஜனவரி 25 அன்று அந்த செய்திக்கு அவரது மறுப்பு வெளியானது.

அரசு வழக்கறிஞர் என்றால், அவர் குற்றவாளி குற்றம் செய்ததை நிரூபிக்க வேண்டும். அப்படி ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவரது பதவி விலகலுக்கு குற்றவாளியின் வழக்கறிஞரும் லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியும் பதறிப் போனார்கள் என்றும் அவரை சமாதானம் செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது, யார் யாருக்காக வாதாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது.

பவானி சிங் தனக்கு தரப்படும் சம்பளம் குறைவு என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாளொன்றுக்கு அவருக்கு தரப்படும் ரூ.65,000 குறைவு என்றும், சில வழக்கறிஞர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.25 லட்சம் வரை தந்ததாக தான் அறிந்ததாகவும், தனக்கும் தனது உதவியாளருக்குமாகச் சேர்த்து நாளொன்றுக்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறார். பிறகு ரூ.1.8 லட்சத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பவானி சிங்குக்கு இந்தச் சம்பளத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தர வேண்டும். அதாவது தமிழக அரசு தர வேண்டும். தமிழக அரசு, அரசாங்க நிகழ்வுகளிலும் எந்தக் குற்றவாளியைக் கொண்டாடுகிறதோ, அதே குற்றவாளியைத் தண்டிக்க, தமிழக அரசு நாளொன்றுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளம் தர ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசிடம் சம்பளம் பெறும் அரசு வழக்கறிஞர் தமிழக அரசின் வழக்கை, அதாவது குற்றவாளியை குற்றவாளி என்று நிரூபிக்கும் வழக்கை நடத்த வேண்டும்.

அப்படியானால், குற்றவாளியைக் கொண்டாடும் தமிழக அரசு வழக்கு நடத்த பவானி சிங்குக்கு சம்பளம் தருகிறதா? அல்லது வழக்கு நடத்தாமல் இருக்க சம்பளம் தருகிறதா? இந்த விடுகதைக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் சொல்வாரா? பவானி சிங்தான் பதில் சொல்வாரா? நீதிபதிக்காவது இதை விளக்க முடியுமா? நாளொன்றுக்கு தரப்படும் இந்த ரூ.1.8 லட்சமும் மக்கள் பணம். ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை பாதுகாக்க தமிழக அரசு இந்தப் பணத்தை செலவு செய்கிறது. எவ்வளவு பெரிய அநியாயம்? அநீதி?

சுப்பிரமணியன் சுவாமி தன்னையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கேட்டு மனு போட்டிருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கைத் தொடுத்த பெருமை தனக்கே என்று சொந்தம்  கொண்டாடுகிற சுவாமி, அத்துடன், ஜெயலலிதாவுக்கு பிணை கிடைத்த விவகாரத்தில் இருந்து மோடியை விலக்கி வைத்த பெருமையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதாவின் பிணை மனு மீது விசாரணை நடந்தபோது மிகவும் துவக்கத்திலேயே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றார். யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பாத போதே, மோடி இந்த விசயத்தில் தலையிடப் போவதில்லை என்று தன்னிடம் சொல்லியுள்ளார் என்றார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றே நாமும் நம்புவோம்.ஆனால், சுப்பிரமணியம் சுவாமி இந்த வழக்கில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்ய எந்த விதத்தில் அவர் உதவப் போகிறார் என்று நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குற்றம் செய்து தண்டனைக்கு உள்ளாகி சிறைக்குச் சென்றவர் படம் குடியரசு தின ஊர் வலத்தில் வருவது, தமிழக அரசு எந்திரத்தின் வெவ்வேறு மட்டங்களில் ஊழலுக்கு, ஊழல் செய்பவர்களுக்கு நிச்சயம் துணிச்சலே தரும். திண்டிவனம் போக்குவரத்து காவல்நிலையத்தில் வேலை செய்த, இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்நிலையத்தில் பணிபுரிந்த 15 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

 லஞ்சம் வாங்கும் வீடியோக்கள் அடிப்படையில் அவர்கள் மீது புகார் எழுப்பப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த இரண்டு உதவி ஆய்வாளர்களில் ஒருவர் லஞ்சப் புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் அதே இடத்துக்கு வேலைக்கு வந்து அதே போல் லஞ்ச நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சில நாட்களுக்கு முன் அவர் சென்னை பைபாஸ் சாலையில் வாகன ஓட்டி ஒருவரிடம் லஞ்சம் வாங்குவதை அலைபேசியில் படம் பிடித்த ஒருவர் அதை வாட்ஸ்அப் மூலம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய பிறகே, காவல்துறை கண்காணிப்பாளர் அந்த உதவி ஆய்வாளரையும் அங்கு பணியில் இருந்த 14 காவல் ஊழியர்களையும் பணியிட மாற்றம் செய்தார். அந்த காவல் நிலையம் இப்போது பூட்டப்பட்டுள்ளது. இது பத்திரிகையில் வெளியான செய்தி.

காவல்துறையின் வெவ்வேறு பிரிவுகளில், அரசு எந்திரத்தின் வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு அடுக்குகளில் வெளியே வராமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை, குற்றவாளியைக் கொண்டாடும் ஓர் அரசாங்கம்களையும் என்று தமிழக மக்கள் எதிர்ப்பார்க்க முடியாது. குடியரசு தின நிகழ்ச்சியில் குற்றவாளியைக் கொண்டாடிய அரசு, குற்றவாளிகளை தண்டிக்காது.

குடியரசு தினமும்‘நமோபாமாவும்’

சர்வதேச உறவுகளை எவ்வளவு மோசமாக சுருக்கி குறுக்கி நிறுத்திவிட்டார்கள்! இரு நாடுகள், உலகம், இரு நாடுகளின் நட்பு நாடுகள் பகை நாடுகள், இரு நாடுகளின் பொருளாதாரம் அயலுறவுக் கொள்கை ஆகியவை தாண்டி, இரு தலைவர்களின் வேதியியல் என ஊடகங்கள் பேசினார்கள். திரைப்படம் வெற்றி பெற கதாநாயகன் கதாநாயகி கெமிஸ்ட்ரி எடுபட வேண்டும் எனத் திரை உலகத்தினர் பேசுவார்கள்.

இந்தியப் பிரதமர் அய்க்கிய அமெரிக்க அதிபர் என்ற, நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மற்றும் பாரக் ஒபாமா ஆளுமைகள் இணைந்து வேதியியல் மாற்றம் பெற்ற ‘நமோபாமா’ என்ற மாற்றம் வந்துவிட்டதாம்! சமையல்காரர் பேரனின் தேநீர்க் கடைக்காரரின் வெற்றிக் கதைகள் என அய்க்கிய அமெரிக்கப் பொய்மைகளுக்கு இந்தியப் பொய்மைகளைச் சேர்த்து, உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் கதைகள் பேசினார் ஒபாமா. ‘நமோபாமா’ அய்க்கிய அமெரிக்காவின் 99 சதம் மக்களை, இந்தியாவின் சாமான்ய நடுத்தர மக்களை உழைக்காத உன்மத்தர்கள் என அழைப்பார்களா?

மோடி லண்டனில் தைக்கப்பட்ட மில்லியன் ரூபாய் சூட் அணிந்தார். ஆடையெங்கும் அவர் பெயர். குடியரசு தினத்திலும், மலிவான உழைப்பு இருக்கிறது, அந்நிய மூலதனமே இந்தியா வந்து உற்பத்தி செய் என அழைப்பு விடுக்கப்பட்டது, அணு ஆற்றல் விபத்து நஷ்ட ஈடு விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் என்ன உடன்பாடு ஏற்பட்டது, ஷரத்துக்கள் என்ன என்ற விவரங்கள் ஏதும் தரப்படவில்லை. ஒன்று மட்டும் தெளிவு.ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, மோடி, அய்க்கிய அமெரிக்காவிற்கு நற்செய்தி மேல் நற்செய்தியாய்த் தந்து கொண்டிருக்கிறார். அது குடியரசு தினம் வரை தொடர்ந்தது.

மருந்துகள் விலை கட்டுப்பாடுகள் அகற்றுதல், காப்புரிமைகளில் அய்க்கிய அமெரிக்க நலன்கள் காத்தல், காப்பீட்டில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, நிலப்பறிக் கொள்கை போன்றவற்றோடு, அய்க்கிய அமெரிக்க அணு ஆற்றல் மற்றும் ராணுவ நிறுவனங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அணு விபத்து நஷ்ட ஈடு இந்திய வரி செலுத்துவோர் பணத்திலிருந்தென்றால், அய்க்கிய அமெரிக்க நிறுவனங்கள், அணு உலைகள் பாதுகாப்பிற்கு கூடுதலாகச் செலவழிக்க வேண்டியதில்லை தானே?

குடியரசு தின இராணுவ அணி வகுப்பில், ரஷ்ய ஆயுதங்கள் இராணுவ தளவாடங்கள்தான் அதிகம் இருந்தன. ஆர்எஸ்எஸ் காரரும் பாஜக பொதுச் செயலாளருமான ராம் மாதவ், ரஷிய ஆயுதங்கள் தளவாடங்களைப் பார்த்த பிறகு, ஒபாமா, அவசரமாக அய்க்கிய அமெரிக்காவின் இந்தியாவிற்கான இராணுவ ஏற்றுமதியை அதிகரிப்பார் என்கிறார். அய்க்கிய அமெரிக்காவின் சான்றிதழ்கள்படி ‘தேச கவுரவத்தை’, அய்க்கிய அமெரிக்காவோடு ‘இயற்கையான’ கூட்டாளி என்ற நிறப்பிரிகை ஊடாக மட்டுமே ‘தேச நலன்களை’ மறு விவரிப்பு செய்யும், ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ முழக்கத்தின் பின்னால் உள்ள, தரகர் மனோபாவம் அம்பலம் ஆகிறது.

அதானி ஆஸ்திரேலியா போய் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதும், டாடா சீனாவில் போய் கார் தயாரிப்பதும், இந்தியா தன் சொந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அழுத்தம் தராமல் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட தொழில்களில் கண்மண் தெரியாமல் மூலதனத்தை வரவேற்பதும், மேக் இன் இந்தியா முழக்கத்தை கேலிக்குரியனவாக ஆக்குகின்றன.

அரசியலமைப்புச் சட்ட முன்னுரை தொடர்பான விளம்பரத்தில், குடியரசு என்பதற்கு முன்பாக, ‘மதச்சார்பற்ற சோசலிச’ என்ற சொற்கள் இடம்பெறவில்லை என்ற விமர்சனம் எழுந்தது; இது 50தில் வந்த முன்னுரை, 76 திருத்தத்தின்படிதான் ‘மதச்சார் பற்ற சோசலிச’ குடியரசு என்றானது என ஒரு விளக்கம் தரப்பட்டது; ஆனபோதும் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் இச்சொற்களை எடுத்துவிடலாம் என்கிறார்; தண்டிக்கப்பட்ட, மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும் சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், மதச் சார்பற்ற சோஷலிச குடியரசு என இந்தியாவை இனியும் அழைக்க வேண்டுமா என நாடு விவாதிக்கட்டும் என்கிறார்.

உழைக்கும் மக்கள் உரிமைகள் மீது அதிகரிக்கப்பட்ட தாக்குதல்கள், மாற்றுக் கருத்தை முறைசார்ந்த விதத்தில் நசுக்குவது, இந்தியாவின் பன்மைக் கலாச்சார வழிமரபை அழித்தொழித்து ஒற்றை அடையாளம் நிறுவுவது என, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரகடனம் செய்த மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசுக்கு, கடுமையான அச்சுறுத்தல்கள் உள்ளன. ‘நமோபாமா’ வேதியியல் கூப்பாடு கட்டுக்கதைகள் தாண்டி, மதப்பிளவு, கார்ப்பரேட் சூறையாடல், தரகு சரணாகதி சக்திகளைத் தோற்கடித்து, இந்தியக் குடியரசின் சாரத்தை, இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு வென்றெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நியூட்ரினோ ஆய்வகம் அபாயகரமானதே!

பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் கண்டறியும் ஆராய்ச்சி எனப் பிரபலப்படுத்தப்பட்டு, தேனி மாவட்டம் போடி மேற்கு மலைப் பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில், தேவாரம் -பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகில் அம்பரசர் காடு எனப்படுகிற 1300 மீட்டர் உயரமுள்ள குன்றில் 1 கி.மீ. அடியில் மலையைக் குடைந்து ஒரு பாதாள ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது.

மோடி தலைமையிலான அரசாங்கமானது, இத்திட்டத்திற்கு அனுமதி அளித்திருப்பதாக திட்ட இயக்குனர் நாபா கே.மோண்டல், தேனியில், கடந்த 2015 ஜனவரி 5 ஆம் தேதி அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் துவங்கியுள்ளன. எனினும், இந்திய அணுசக்தித் துறை அமெரிக்க உதவியுடன் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைப்பதற்கான சாலைகள், வேலிகள், கட்டிடங்களை அமைக்கும் பணியை துவங்கி ஓராண்டு ஆகிவிட்டது. கேரளாவில் எதிர்ப்புகளை உருவாக்கிய, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திலிருந்தும் துரத்தப்பட்ட இத்திட்டம் தற்போது தேனி மாவட்ட மக்களை, தமிழகத்தையும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது.

நியூட்ரினோ ஆய்வு எதற்காக?

இந்திய அரசாங்கம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்வருமாறு கூறுகின்றன. ‘நியூட்ரினோக்கள் என்பது எலக்ட்ரான்களைப் போல அடிப்படைத் துகள்களாகும். ஆனால் இவை அணுவின் பகுதி இல்லை இவை பிரபஞ்சத்தில் பெருமளவு உள்ளன. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பெரு வெடிப்பின் பொழுது மிகப் பெரிய அளவில் இத்துகள்கள் வெளிப்பட்டன. மேலும், காற்று மண்டலத்துடன் காஸ்மிக் கதிர்கள் உறவாடும் பொழுது தொடர்ந்து நியூட்ரினோக்கள் உருவாக்கப்படுகின்றன; மிகமிக எடைக் குறைந்த கதிர்களாக இவை பல்லாயிரக்கணக்கில் அன்றாடம் நமது உடலைக் கடந்து செல்கின்றன. இதைப் பற்றிய ஆய்வு என்பது இயற்கையின் இயங்காற்றல் பற்றி பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ள உதவும். இது முழுக்க முழுக்க வெறும் விஞ்ஞான நோக்கம் மிக்க ஆய்வே ஆகும். மானிடத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது’. இவையே அரசாங்கத்தின் கருத்தாகும்.

கடந்த 2005ல் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷினால் கையெழுத்திடப்பட்ட இந்திய - அயக்கிய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தின் ஓர் அங்கமே இந்த நியூட்ரினோ ஆய்வுக் கூடத் திட்டம். அணு சக்திக்கு அடிப்படையான நவீன ‘துகள்’ அறிவியலில் அமெரிக்கா வல்லமை பெற முயற்சிக்கிறது. சிகாகோவில் ஃபெர்மி லேப் என்ற இயற்பியல் கூடத்தை அமைத்து வருகிறது. ஆய்வுக் கூடம் அமெரிக்க அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளைப் பெற்றுக்கொள்ள, புவி உருண்டையின் நேர் எதிர் பக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது.

 ஃபெர்மி லேப்பிற்கு பங்களிப்பு செய்வதே இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடமாகும். இதன் திட்ட இயக்குனர் நாபா கே.மோண்டல், சர்வதேச நியூட்ரினோ கமிட்டி உறுப்பினராவார். ஃபெர்மி லேப்பின் வழிநடத்தும் குழு உறுப்பினரும் ஆவார். யாருக்காக இவர் பணியாற்றுவார்? இந்தியாவிற்கா?அமெரிக்காவிற்கா?

தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடம்தான் உலகிலேயே 7,000 கி.மீ.க் கும் கூடுதலான தொலைவில் உள்ள ஆலைகளில் தயாரித்து அனுப்பப்படும் நியூட்ரினோக்களை பரிசோதிக்கும் ஆற்றல் மிக்க உலகத்தரம் வாய்ந்த ஆய்வுக் கூடம் ஆகும். (இது ஜெனிவாவில் உள்ள CERN போல சர்வதேச மய்யமாக முன்னிறுத்தப்பட உள்ளது). பூமியின் நடுப்பகுதியை, அச்சைக் கடந்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கற்றையாக நியூட்ரினோக்கள் வந்து சேர முடியுமென்றால்..., நவீனத் ‘துகள்’ இயற்பியல் மற்றும் அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிக்கலான நவீன ஆயுதங்கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை அறிவியல்ரீதியாக மறுப்பதற்கில்லை என்கின்றனர், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள்.

இந்தியாவிலும், அமெரிக்காவிலும், நியூட்ரினோ ஆராய்ச்சிகளை இரு நாட்டு அரசாங்கங்களுடைய அணு சக்தி தயாரிக்கும் துறைகள்தான் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் இந்திய அணு சக்தி ஒப்பந்தங்கள் என்ற கவலையிலிருந்தும், இந்திய - அய்க்கிய அமெரிக்க ராணுவ கட்டமைப்பு ஒப்பந்தத்தை மீண்டும் பத்தாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்ற அடிப்படையிலிருந்தும், இந்தத் திட்டத்தை மதிப்பிட வேண்டியுள்ளது.

நியூட்ரினோ திட்டத்தின் அபாயகரமான பாதை

நியூட்ரினோ ஆய்வுக் கூடமானது தமிழ் நாட்டில் முதன்முதலில் 2008ல் நீலகிரி மலையில் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள சிங்காரா என்ற இடத்தில் அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. இது யானைகளின் முக்கியமான வழித்தடமும் ஆகும். பெரியளவிலான கட்டுமானப் பணிகள், அன்றாடம் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்களின் செயல்பாடு, வன விலங்குகளின் இயற்கை வாழிடத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் என்ற சுற்றுச் சூழல் அமைப்புகளின் எதிர்ப்பினால், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மத்திய அமைச்சரகம் இதற்கு அனுமதி மறுத்தது.

எனவே, இத்திட்டத்தை டாடா நிறுவனம் உள்ளிட்ட ஏழு விஞ்ஞான நிறுவனங்களின் சங்கமான ‘நியூட்ரினோ கூட்டுக்குழு’ தேனி மாவட்டம் சுருளிக்கு மாற்ற முடிவெடுத்தது. இப்பகுதியில் சுருளியாறு அணை, முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, ஆனை இறங்கல் அணை போன்ற பல அணைகளும் மேகமலை வனச் சரணாலயமும் இருந்ததாலும், யானைகள் நடமாடும் பகுதியாக இருந்ததாலும் கைவிடப்பட்டது. மாற்றாக, போடி மேற்கு மலைப் பகுதி - தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் சந்திக்கும் மலைப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

ரூ.1500 கோடி செலவாகும் என மதிப் பிடப்படுகிற இத்திட்டத்திற்கானத் தொகையை இந்திய அரசின் அணுசக்தி துறையும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையும் தருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மலைக்
குன்றிற்குள் காஸ்மிக் கதிர்கள் நுழையாதவாறு பாதாள ஆய்வுக் கூடமானது சுற்றிலும் சுமார் 1 கி.மீ. அளவிற்கு மலைப்பகுதி இருக்குமாறு அமைக் கப்படுகிறது. சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ. பரப்பளவுள்ள, 3,18,181 க.மீ கொள்ளளவு கொண்ட நான்கு குகைகள் உருவாக்கப்படுகின்றன. 8 லட்சத்திற்கும் அதிகமான டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்பட உள்ளன. குகை ஆய்வ கத்திற்குள் 50,000 டன் எடையுள்ள காந்த சக்தி யூட்டப்பட்ட இரும்புக் கலோரி மீட்டர் கண்டு பிடிக்கும் அளவுமானி அமைக்கப்பட உள்ளது. இது 10,000 கி.மீ. தொலைவில் இருந்து வரும் நியூட்ரினோ துகள்களையும் கண்டறியக்கூடியது.

ஆய்வுக் கூடம் அமைக்க 1 லட்சம் டன் இரும்பு, 35,000 டன் சிமெண்ட், மணல், உலோ கங்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள் தேவைப்படுகின்றன. வெடி வைத்து குகையைக் குடைவதால் உருவாகும் பாறை இடிபாடுகளை அகற்ற, கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல 95,000 லாரிகள் நான்காண்டுகளில் இயக்கப்படவிருக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 130 லாரிகள் சாலையில் ஓடப் போகின்றன. பாறைகளை அகற்றி எடுத்துச் செல்லும் பணி தமிழக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையானது இதற்கான சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளது.

இயற்கை பொக்கிஷத்திற்கு நேரிடும் பேராபத்துகள்

2010 நவம்பரில், கோவை - சலீம் அலி பறவைகள் மய்யம், அவசர கதியில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரித்தது. ஆய்வுக் கூடத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தை மட்டுமே ஆரமாகக் கொண்ட வட்டப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டது. உத்தமபாளையம் தாலுகாவின் பொட்டிபுரம், சங்கராபுரம், தேவாரம், ராசிங்கபுரம் மற்றும் கேரளாவின் தேவிகுளம், உடும்பன் சோழா தாலுக்காக்களின் சில பகுதிகளில் நிலவுகிற உயிரியல் பன்மையை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. ஆய்வகம் 120 ஆண்டு காலம் வரை செயல்படும் தன்மை வாய்ந்தது. நில அதிர்வுகளை தாக்குபிடிக்க வேண்டியது முக்கியமானதொரு காரணியாகும்.

அடிக்கடி நில அதிர்வுகளை எதிர்கொள்ளும் இடுக்கி மாவட்ட எல்லையில் ஆய்வகம் அமைகிறது என்பது பற்றி, குகைகளைக் குடையப் பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின் வெடிகளால், ஆய்வகப் பகுதியில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை, 49 கி.மீ. தொலைவில் உள்ள முல்லைப்பெரியாறு அணை பாதிக்கப்படுமா என்பது பற்றி, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பரிசீலிக்கவில்லை. மாறாக, மழைக்காடுகளைக் கொண்ட அப்பகுதியை ஆண்டிற்கு 1000 மி.மீ. குறைவான மழைப்பொழிவை மட்டுமே கொண்டதாக, குட்டையான புதர்காடுகளை மட்டுமே கொண்டதாக சித்தரித்துள்ளது.

இந்தத் திட்டம், புவியியல்ரீதியாக, உயிரியல் ரீதியாக, கதிரியக்க ரீதியாக மானுடத்திற்கும், இயற்கைக்கும் கேடானது. இத் திட்டத்திற்காக 4 ஆண்டுகளில் அகற்றப்படும் 8 லட்சம் டன் பாறைகள், வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின்கள், சுற்றுச் சூழலியல் ரீதியாக எளிதில் சேதமுறுகிற மண்டலமான மேற்கு மலைத் தொடரில் நில நடுக்கங்களை  தூண்டும்; மாசுபடுத்தும். 400 கோடி கன மீட்டர் தண்ணீரை தேக்கி வைத்துள்ள கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 12 அணைகளைப் பாதிக்கும்; 2018ல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், அமெரிக்காவின் சிகாகோ ஆய்வுக் கூடத்திலிருந்து (ஃபெர்மி லேப்) தயாரிக்கப்பட்டு போடி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் உயர் சக்திமிக்க நியூட்ரினோ கற்றை இந்திய ஆய்வகத்தின் சுற்றுப்புறத்தில் கதிர்வீச்சையும், கழிவுகளையும் ஏற்படுத்தும்; சுமார் 50 லட்சம் தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும். பல்லுயிர் பெருக்கத்திற்கு, தாவரங்களுக்கு, காட்டு உயிர்களுக்கு, கேடுகளை உருவாக்கும். மேற்குத் தொடர் மலைகளை பேராபத்திற்குள் தள்ளும்.

எதிர்ப்புகள்

ஆய்வுக் கூடத்திற்கு நெருக்கமான நான்கு ஊராட்சிகளை (பொட்டியாபுரம், தேவாரம், சங்கராபுரம், ராசிங்கபுரம்) சேர்ந்த மக்களின் பெரும்பான்மையினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். ஆய்வுக்கூட கட்டுமானப் பணிகளால் சுற்றுச் சூழல் மாசுபடும், நீராதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும், அணைகளும் சேதமுறும் என விவசாயிகள் கருதுகின்றனர். அணுக் கழிவுகளைப் புதைப்பதற்கான சுரங்கம் தோண்டப்படுகிறது என்ற அய்யமும் மக்களிடம் எழுந்துள்ளது. 2011ல் திட்டத்திற்காக நிலத்தை சர்வே செய்தபோது மக்கள் அணி திரண்டு முழுக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்த நான்கு ஊராட்சித் தலைவர்களும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டனர். 2012ல் ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீதும் பணிகளை தடுத்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது. கிராம மக்கள் ஆடுமாடு களை மேய்ப்பதற்கும், புற்களை அறுப்பதற்கும், காய்ந்த விறகுகளை சேகரிப்பதற்கும் இந்த மலைப் பகுதிகளை சார்ந்து இருந்தனர். தற்போது ஆடுமாடுகளை, மனிதர்களை மலைப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை.

இந்தப் பிரச்சனை சுற்றுச் சூழல் மட்டும் சார்ந்த பிரச்சனையாகவோ, விவசாயிகள் பிரச்சனையாகவோ மட்டும் புரிந்துகொள்ளப்பட்டு விடக்கூடாது. பல்வேறு அணுசக்தி, ஆயுத பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலமாக மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக மாறுவதற்கு விரும்புகிறது. ஆயுதங்கள், அணு போன்ற கேந்திரமானத் துறைகளில் அமெரிக்கா நுழைவதற்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது; அமெரிக்காவின் அணு ஆயுத வகைப்பட்ட ஒரு ரகசிய திட்டத்திற்கு, இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் வாயிலாக ஆபத்தான பாதையை அமைத்துத் தருகிறது; மக்களின் வாழ்வோடும் தேசத்தின் இறையாளுமையோடும் விளையாடுகிறது. விவசாய சமூகத் தோடு, ஜனநாயக, நாட்டுப்பற்றுள்ள அனைவரும் ஒன்றுபட்டு, மோடி அரசு முன்னகர்த்துகிற நியூட்ரினோ ஆய்வுக் கூட நாசகர திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

மதமாற்றம் தொடர்பான விவாதங்கள் - பகுதி 1

சங் பரிவார், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, கர் வாப்சி என இந்து மதத்திற்கு இசுலாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் திரும்பக் கொண்டுவரும் ஓர் இயக்கத்தை மூர்க்கத்துடன் துவக்கியது. ஒரு பக்கம் மோடி மூலதனத்திற்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக நடவடிக்கைகளை விடாப்பிடியாக தொடர்ந்து கொண்டிருந்தபோது, சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், மதவாத நெருப்பை அவ்வப்போது கொளுத்திப் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

வேறு வேறு அம்சங்களை துவக்கி வைத்து விட்டு, அடுத்தடுத்த விஷயங்களுக்கு சென்று விடுவார்கள். நாடாளுமன்ற அவைகளில் விவாதங்கள் சூடு பிடித்தன. இந்து ராஷ்ட்ரா, இந்து பெண்கள் ஆளுக்கு நான்கு பிள்ளைகள் பெற வேண்டும், இந்தியா இந்து நாடு என்ற சங் பரிவார் கருத்துக்கள், விவாதத்தைக் கொண்டு வந்தன.

சிலர், இதுபோன்ற ஆபத்தான விளிம்பு நிலை இந்துத்துவா சக்திகளை மோடி அடக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினர். விவாதங்கள் இல்லாமல் அவசரச் சட்டங்கள் போட வேண்டிய நிலைமையே, சங் பரிவார் தீவிரப் பிரிவினரால் ஏற்பட்டது என்றும், இது அரசின் பெருந்தொழில் குழும (கார்ப்பரேட்) ஆதரவு வளர்ச்சிப் பாதையை தடம் புரள வைக்கும் என்றும் கூட தொழில் சில வர்த்தக ஏடுகளும் தொலைக்காட்சி நிபுணர்கள் சிலரும் கருத்து சொன்னார்கள். இந்தப் பின்னணியில் இப்போது, குடியரசு தினத்தை ஒட்டி இந்தியா வந்திருந்த ஒபாமா சொன்ன கருத்துக்கள், மீண்டும் மதமாற்றம் தொடர்பான விவாதத்தை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளன.

ஒபாமா தமது இந்திய வருகையின் மூன்றாவது நாளில், சிறி போர்ட் அரங்கத்தில் ஏறத்தாழ 2,000 பேர் மத்தியில் உரையாற்றினார். அவரது 33 நிமிடங்கள் உரையில் 41 முறை இடையிடையே கைத்தட்டல்கள்  இருந்தனவாம், சிரித்தார்களாம். இந்தியில் வணக்கம் எனத் துவங்கி நன்றி ஜெய்ஹிந்த் என முடித்த உரையில், ஷாருக்கான் திரைப்பட பாடல் ஒன்றையும் நினைவுபடுத்தினார். 5 நிமிடங்கள் அவர் மதச் சுதந்திரம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிப் பேசினார்.

‘எந்த துன்புறுத்தலோ அச்சமோ பாகுபாடோ இல்லாமல் தமது மதத்தை பின்பற்றும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. இந்தியா மதவாத வழிகளில் பிளவுறாத வரை, அது வெற்றி பெற முடியும்’. ‘உங்கள் (அரசியலமைப்புச் சட்ட) ஷரத்து 25, மனச்சாட்சி சுதந்திரத்தையும், சுதந்திரமாக மதத்தை வழி பட பின்பற்ற பிரச்சாரம் செய்ய  அனைவருக்கும் சமமான உரிமையையும் வழங்குகிறது. நம் இரு நாடுகளிலும் எல்லா நாடுகளிலும் வழிபாட்டுச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிப்பது, அரசாங்கத்தினுடைய கடமை என்பதோடு ஒவ்வொருவருடைய கடமையுமாகும்’.

ஒபாமா, அய்க்கிய அமெரிக்காவின் விஸ்கான்சினில் 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு நபர் ஒரு சீக்கிய குருத்துவாராவுக்குள் நுழைந்து 6 அப்பாவிகளைக் கொன்ற, படுமோசமான வன்முறைச் செயலை நினைவு கூர்ந்தார். ‘துயரத்தை பகிர்ந்து கொண்ட அந்த கணத்தில் இரு நாடுகளும் மறு உறுதி செய்த அடிப்படை உண்மையை இப்போதும் மறு உறுதி செய்திட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர் தேர்ந்தெடுத்த மதத்தை பின்பற்றவும் மத நம்பிக்கையே இல்லாமல் இருப்பதற்கும், இவற்றை துன்புறுத்தலின்றி அச்சமின்றி பாகுபாடின்றி செய்யவும் உரிமை உண்டு. எல்லா இடங்களை விட இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த அடிப்படை மாண்பினை/விழுமியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டியது இந்தியாவில் மிகவும் அவசியமானது.’

ஒபாமா, எல்லா சமூகங்களிலுமே மனிதர்களுடைய இருண்ட ஆழ்மன உந்துதல்களை தூண்டிவிட வாய்ப்புண்டு என்றும், பல நேரங்களில் இதற்காக மதம் பயன்படுத்தப்படுகிறது என்றும் எச்சரித்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை சுட்டிக்காட்ட ஷாருக்கான், மில்கா சிங், மேரிகாம் போன்ற பெயர்களை பட்டியலிட்டார். (வேறுவேறு நேரங்களில் இசுலாமிய சீக்கிய கிறிஸ்துவ மக்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை ஒபாமா குறிப்பிடவில்லை).

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், ஒபாமா பேசியது, கட்டாய மதமாற்றம் மூலம் சமூகத்தில் பதட்டம் உருவாக்கப் பார்க்கும் கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் இசுலாமிய தலைவர்கள் தொடர்பானது என அறிவித்தார்! திருப்பதியில் தேவாலயங்கள் வைஷ்ணோ தேவி கோவில் இருக்கிற இடத்தில் (இசுலாமிய மக்கள் இல்லாத) இடத்தில் மசூதி கட்டுவது போன்றவை பற்றிய கரிசனத்தையே ஒபாமா வெளிப்படுத்தினார் என்கிறார் ஜெயின்!

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது குடியரசு தின செய்தியில், நாக்கின் வன்முறை மக்களின் இதயங்களை வெட்டிக் காயப்படுத்தும் என்றார். அவர், ‘இந்தியாவின் அறிவு, நமக்கு ஒற்றுமையே வலிமை ஆதிக்கம் பலவீனம் என உணர்த்தும், நாம் எப்போதும் வழிபாட்டுச் சமத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம், சட்டத்தின் முன்பு எல்லா மதங்களும் சமம்’ எனக் குறிப்பிட்டார்.

கிறிஸ்துவ சிறுபான்மையினர் மத்தியில் இயங்கும் செயல்பாட்டாளரான ஜான் தயாள், இரு குடியரசு தலைவர்களின் ஆலோசனைகள் படி மோடி அரசு நடக்க வேண்டும் என தெரிவித்த போது, இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்ற செய்தியை மோடி அரசாங்கத்திற்கு ஒபாமா கவனப்படுத்தியதாக சொல்கிறார்.

வாசன் காங்கிரஸ் கட்சியில் தற்சமயம் இருக்கும் பீட்டர் அல்போன்ஸ், ஒரு தொலைக்காட்சி உரையாடலில், சங் பரிவார் அத்துமீறல்களை நேரடியாக அடக்குவதில் சிரமம் இருப்பதாலும், இது அரசாங்கம் நடத்துவதற்கு சிக்கல்கள் உண்டாக்குவதாலும், மோடி ஒபாமாவை, இப்படி பேசச் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது என அதிகாரத் தாழ்வாரங்களோடு தொடர்புடைய தமக்கு படுகிறது என்ற சுவையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யார் கருத்து சொல்லியுள்ளார்கள் என்பதைக் காட்டிலும் எந்த நேரத்தில் எத்தகைய கருத்துக்கள் முன்வந்துள்ளன என்பது மிகமிக முக்கியமானது. இந்த 2015 குடியரசு தினத்தை ஒட்டி, அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை யில், ‘மதச் சார்பற்ற’,‘சோசலிச’ என்ற வார்த்தைகளை விட்டுவிட்டு மத்திய அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டது. விமர்சனம் எழுந்த போது, 1976க்குப் பிறகுதான் மதச்சார்பற்ற சோசலிச குடியரசு என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன என்றும் அரசு வெளியிட்டது. 1950 அரசியலமைப்பு சட்ட முன்னுரையே என்றும் அரசு தரப்பில் பதில் சொல்லி சமாளிக்கப்பட்டது. ஆனால் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர், மதச்சார்பற்ற என்ற வார்த்தையையே எடுத்துவிட வேண்டும் என்கிறார். சட்ட அமைச்சர் இவற்றை நீக்குவது பற்றி நாடு முழுவதும் விவாதம் நடக்கட்டும் என்கிறார்.

இது, சங் பரிவாரின் வகைமாதிரி அணுகு முறையை வெளிப்படுத்துகிறது. ராமனுக்குப் பிறந்தவர்கள், முறை தவறி பிறந்தவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்திப் பேசிய அமைச்சர் சாதாரண கிராமத்து பெண்மணி என்பதால் அவரை மன்னித்து அடுத்துப் போகலாம் எனச் சொல்லப்பட்டது. சாக்ஷி மகராஜ் இந்து பெண்கள் ஆளுக்கு நான்கு பிள்ளைகள் பெற வேண்டும் என்று சொன்னதற்கு, காரணம் கோரும் குறிப்பாணை தந்தார்களாம். ஆனால் இந்த கண் துடைப்புகளைத் தாண்டி, சங் பரிவார் வகையறாக்கள், கிடைக்கிற எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு மதவெறி நஞ்சை பரப்புகிறார்கள்.

பிரணாப் முகர்ஜி மதச்சார்பின்மை பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவர். டெல்லியில் இந்திரா படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ராஜீவ் காந்தி பெரிய மரம் ஒன்று விழுந்தால் பூமி அதிரத்தானே செய்யும் என அதனை நியாயப்படுத்திய போது, பிரணாப் முகர்ஜி வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருந்தவர்தான். பாப்ரி மசூதி இடிக்கப்பட்டபோது மவுனமாக வேடிக்கை பார்த்த காங்கிரஸ் தலைவர்தான் பிரணாப் முகர்ஜி.

ஒபாமா, சகிப்புத் தன்மை பற்றிப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும். அவர் கருப்பினத்தவர்களுக்கோ மற்ற மதத்தினருக்கோ அவரது பதவிக் காலத்தில் நியாயம் வழங்கவில்லை. அவர் விரும்பினாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது வேறு விஷயம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, ஜார்ஜ் புஷ் இஸ்லாத்துக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புப் போரை உலகளாவிய அளவில் துவங்கினார். இஸ்லாத்தை சாத்தானாக சித்தரித்தார். புஷ் துவங்கியதை ஒபாமா சளைக்காமல் தொடர்ந்தார். ஒபாமா ஆட்சிக் காலத்தில் தான் படுமோசமான டிரோன் தாக்குதல்கள் நடக்கின்றன. ஒபாமா ஆட்சிக் காலத்தில்தான் பாகிஸ்தானின் இறையாளுமை அத்துமீறப்படுகிறது. அய்க்கிய அமெரிக்காவில் திரும்பத் திரும்ப கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவ கருத்தியலாளரான ஹண் டிங்டன் ‘நாகரிகங்களின் மோதல்’ என்ற ஒரு நூலை எழுதினார். அந்த நூலின் மய்யக் கரு, நாம் எதிர் அவர்கள் என்பதே ஆகும். கிறிஸ்துவம் நாகரிகத்தின் அடையாளம் எனவும், இசுலாம் காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளம் எனவும் சித்தரித்த ஹண்டிங்டன், கிறிஸ்துவத்திற்கு இயல்பான கூட்டாளி இந்து மதம் என்று எழுதினார். இதில் உலகளாவிய புவிசார் அரசியல் (ஜீயோ பாலிடிக்ஸ்) அடங்கியுள்ளது.

இன்றைய அய்க்கிய அமெரிக்கா இசுலாத்துக்கு எதிரான போரின் ஊடே எரிசக்தி மற்றும் எண்ணெய் வளங்களை குறி வைக்கிறது. அதே நேரம் ரஷ்யாவை ஒரு தட்டு தட்டி வைக்கப் பார்க்கிறது. (இந்தியா வந்த ஒபாமா ரஷ்யாவை சண்டியர் ரவுடி என்று சொன்னார்). சீனாவுக்கு எதிராக, சீனாவை சுற்றி வளைப்பதில் இந்தியாவை பயன்படுத்துகிறது. நமோபாமா சங்கதிக்குள், ஒரு போர்த்தந்திரக் கூட்டு நிச்சயமாய் இருக்கிறது. ஒபாமா மோடி நெருக்கம் என்பது, அய்க்கிய அமெரிக்காவின் பிடிக்குள் இந்தியா வலிய சென்று சிக்கிக் கொள்வதோடு சேர்த்துக் காணப்பட வேண்டிய ஒரு விசயமாகும். பெரிய அண்ணன்கள் எப்போதும் வசதியாக உபதேசம் செய்வார்கள். அப்படிப்பட்டதே ஒபாமாவின் கடைசி நாள் உபதேசம். அப்படி செய்ய வேண்டிய சில அவசியங்கள் அவருக்கு இருக்கின்றன. எது எப்படியானாலும், மோடி அரசுக்கு இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மதவாத நிகழ்ச்சி நிரலை தொடர்வதில் நிச்சயம் சங்கடங்கள் இருக்கும் என்பதை, ஒபாமாவின் மதச் சுதந்திரம் தொடர்பான கருத்துக்கள் புலப்படுத்துகின்றன.

இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த அய்க்கிய அமெரிக்க அதிபர், மதச் சுதந்திரம் பற்றி பேசிய விஷயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியாவுக்குள் மதமாற்றம் தொடர்பாக என்ன விவாதங்கள் நடக்கின்றன? நிகழ்ச்சி நிரலை யார் தீர்மானிக்கிறார்கள்? சங் பரிவார் சொல்வதற்கு செய்வதற்கு மற்றவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற நிலைமை இருக்கிறதா இல்லையா? சங் பரிவார் தற்காப்பு நிலைக்குச் செல்கிறதா அல்லது சவால் விடுகிறதா? இப்போதும் சங் பரிவார் நாடாளுமன்றத்தில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் போடலாமே, போலி மதச்சார்பற்ற சக்திகளே ஏன் பின்வாங்குகிறீர்கள் என்று தானே சீண்டுகிறது.

இப்போதும் சங் பரிவார் கூட்டம் இந்தியாவில் இசுலாமியர் எண்ணிக்கை பிரும்மாண்டமாக பெருகி வருவதாகவும், வெகு சீக்கிரம் இந்துக்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்றும் பரப்புரை செய்து வருகிறது. நம்மிடம் இருந்து திருடி விட்டார்கள்; திருடியதை திரும்ப எடுத்துக் கொள்வோம் என்று உணர்ச்சிகளை விசிறிவிடுகிறது. அதாவது இந்தியா இந்து நாடு, இந்துக்கள் கட்டாயமாக இசுலாத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். நாம் அவர்களை திரும்ப நம் பக்கம் கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள். இந்துக்களை கிறித்துவர்களாகவோ, இசுலாமியர்களாகவோ மாற்றக் கூடாது என்றும் இசுலாமியர்களும் கிறிஸ்தவர்களும் திரும்பவும் இந்துக்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் வாதாடுகிறார்கள்.

மதமாற்றம் தொடர்பான சமகால விவாதங்களை அடுத்தடுத்து காண்பதற்கு முன்பாக, முன்னோட்டமாக மதம் மற்றும் மதச்சார்பின்மை தொடர்பான மார்க்சிய நிலைப்பாடுகளையும் பார்ப்போம்.

வலது திசையில் பிரான்சின் இடது திசையில் கிரேக்கத்தின் பயணம்

பிரான்சு நாட்டில், குறிப்பாக பாரீஸ் நகரத்து சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அதனை அடுத்து நடக்கின்ற விஷயங்கள், உலகம் முழுவ தும் உள்ள இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு பெரும் கவலை அளிக்கின்றன. அய்எஸ்அய்எஸ் உருவானதும் அது நிகழ்த்தி வரும் கொடூரமான படுகொலைகளும், பெஷாவர் படுகொலை, சிட்னி ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அடுத்து பாரீசில் நடந்த தாக்குதல்கள், உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான சீற்றத்தைப் புதுப்பித்துள்ளன.

அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகம், இஸ்ரேல், சங்பரிவார் ஆகியோர் இந்தச் சீற்றத்தை, இசுலாத்தை சாத்தான்மயமாக்கும் தம் செயல்களை நியாயப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர். பரந்த செல்வாக்கை, வீச்செல்லையை, கொண்டுள்ள ஊடகங்கள், பெஷாவர், சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் நைஜீரியாவில் இதுவரை அய்எஸ்அய்எஸ் தலிபான், போக்கோ ஹரம் போன்ற அமைப்புக்களின் வன்முறையாலும், அய்க்கிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏவியவன் முறையாலும் பலியானவர்களில் ஏகப் பெரும்பான்மையினர் இசுலாமியர்களே என்ற உண்மையைத் திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர்.

சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல்

கம்யூனிஸ்ட்களை மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை நோக்கி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. ‘கருத்துச் சுதந்திரம்’‘கருத்துச் சுதந்திரம்’ எனக் கூப்பாடு போடும் நீங்கள், இசுலாமிய அடிப்படைவாத/பயங்கரவாத கருத்துக்களின் செல்வாக்கின் கீழ் இசுலாமியர் சிலர் சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது நடத்திய தாக்குதல் பற்றி என்ன பதில் சொல்கிறீர்கள்? விளக்கம் தராமல் சுற்றி வளைக்காமல், தாக்குதலைக் கண்டனம் செய்கிறீர்களா இல்லையா எனப் பதில் சொல்லுமாறு கேட்கிறார்கள். நாம் சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்கள், விடாப்பிடியான இசுலாமிய எதிர்ப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் பிறகு, சார்லி ஹெப்டோ பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, படுகொலை என்ற வழிமுறையைத் தேர்வு செய்ததை, நாம், வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.

(அய் அம் சார்லி) நான்தான் சார்லி என நாமும் சொல்ல முடியுமா?

சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்குப் பிறகு, பிரான்சில் பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவு அஞ்சலிப் பேரணியில், பல லட்சம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், (அய் அம் சார்லி) நான்தான் சார்லி என்ற பதாகைகள் பிடிக்கப்பட்டன. நான்தான் சார்லி என நாம் ஏன் சொல்ல முடியாது? படுகொலைக்கெதிரான நமது கண்டனம், சார்லி ஹெப்டோவின் (அரபு எதிர்ப்பு) இனவெறி, ஆணாதிக்க, இசுலாமியர் விரோத வெறுப்பைத் தூண்டும் கேலிச் சித்திரங்களுக்கு ஆதரவு தருவதாக, அவற்றை மன்னிப்பதாக மாறிவிடக் கூடாது. 1960களில் மாணவர் எழுச்சியில் இடதுசாரி எழுச்சியில் சார்லி ஹெப்டோ வேர் கொண்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், அது பெரும்பான்மை மதத்தையும் சிறுபான்மை மதத்தையும் ஒரே நேரத்தில் கேலி செய்கிறேன் என வாதாடுவதில் நியாயமில்லை. சமமற்றவர்களை சமமாக நடத்துவது சமத்துவமின்மைக்கு உரமூட்டுவதாகும்.

பிரான்சின் ‘மதச்சார்பின்மை’ யோக்கியமானதல்ல. பிரான்சின் முன்னாள் காலனி நாடுகளில் இருந்து வந்த அரபுகள் இசுலாமியர்கள், தமக்கே உரிய சமூக கலாச்சார மதரீதியான வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை, அந்த வேறுபட்ட வெளிப்பாடுகளை அங்கீகரிக்க வேண்டும். ஆனால் ‘வெள்ளை - கிறிஸ்தவ - நாம்’ எதிர் ‘அரபு - இசுலாமிய - முன்னாள் காலனிகளிலிருந்து வந்த உழைக்கும் வர்க்க வறியவர்களாகிய அவர்கள்’ என்ற சமன்பாடு கட்டமைக்கப்படுவதும், அது அரசாலேயே நியாயப்படுத்தப்படுவதும் பிரான்சில் நடக்கிறது. இசுலாமியப் பெண்கள் முகத்திரை அணிவதை பிரான்சு தடை செய்கிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் பிரான்சில் தடை செய்யப்பட்டுள்ளன.

யூதர் மீது இனவாத வெறுப்பு உமிழக் கூடாது (ஆண்ட்டி செமிடிக்) என்ற பெயரில், இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குவதையும், பாலஸ்தீனப் போராட்டத்திற்கு எதிர் நிலை எடுப்பதையும் பிரான்சு நியாயப்படுத்துகிறது. பிரான்சு நாட்டு அரசியலின் ஓரஞ்சாரத்தில் இருந்த லீ பென்னின் நாஜி கட்சி, இப்போது கருத்துக் கணிப்புகளில் முதலிடம் பிடிக்கிறது. பிரான்சு நாட்டின் சிறைகளில் இருப்பவர்களில் 70% பேர் இசுலாமியர்கள்.

ஜீடேன், ஹென்றி போன்ற அரபு கருப்பு இன கால்பந்தாட்டக்காரர்கள் விதிவிலக்குகளாகவும், பெரும்பாலான அரபு கருப்பின வம்சாவழியினர் வறுமையில் மூழ்கியவர்களாகவும் இருக்கிற பிரான்சு நாட்டில், நபிகள் நாயகத்தை, அரபு களை, இசுலாமியர்களை ஆதிக்க - வெறுப்பு நிலையிலிருந்து விடாப்பிடியாய் தொடர்ச்சியாகக் கேலி செய்வது, கருத்துச் சுதந்திரம் ஆகாது.

நானும் சார்லிதான் எனச் சொல்லும் சர்வதேசத் தலைவர்கள் கபட வேடதாரிகளே

இசுலாத்தை சாத்தான்மயமாக்கி, ‘இசுலாமிய’ பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற ஆக்கிரமிப்பு - சூறையாடல் ஏகாதிபத்திய மறு பங்கீட்டில் ஈடுபடும் அய்க்கிய அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள், உலகின் முதல் நிலை பயங்கரவாதிகள், ‘நானும் சார்லிதான்’ என பயங்கரவாத எதிர்ப்பு வேசம் போட்டால், உலகம், நீங்கள் கபட வேடதாரிகள் என அவர்களைத் தூற்ற வேண்டும். பாரீசில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு போன்றவர்கள், ‘நானும் சார்லிதான்’ என்ற பதாகையைப் பிடித்ததற்கு எதிராக, அவர்களை விமர்சிக்கும் விதம், “நாங்கள் கபட வேடதாரிகள்” என்ற பதாகை வைக்கப்பட்டது. பாலஸ்தீனத்தின் காசா திட்டில் கடந்த கோடை காலத்தில், 17 பத்திரிகையாளர்களைக் கொன்ற, 2,143 பாலஸ்தீனர்களைக் கொன்ற இஸ்ரேலின் பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பு பற்றிப் பேச எந்த யோக்யதையும் இல்லாதவர்தானே!

பிரான்சின், அய்ரோப்பாவின், மேற்கு ஆசியாவின் வடக்கு ஆப்பிரிக்காவின் வறியவர்கள், அரபுகளாக கருப்பினத்தவர்களாக இசுலாமியர்களாக உள்ளனர். குவான்டநாமோ சித்திரவதைகள், முடிவே இல்லாத மத்திய கிழக்கு போர்கள், மிருகத்தனமான டிரோன் தாக்குதல்கள், அவர்கள் மத்தியிலிருந்து அய்எஸ்அய் எஸ்சிற்கு அல்கொய்தாவிற்கு ஆள் பிடிக்க வளமான விளைநிலத்தை தருகின்றன.

ஏகாதிபத்திய போர்கள் ஏகாதிபத்திய சூறையாடல் ஆக்கிரமிப்புக் கொள்கைகளால், பாதிப்புக்கு, பறிகொடுத்தலுக்கு, தங்கள் அடையாளத்திற்கே ஆபத்து என்ற நிலைக்கு ஆளாகிவிடுபவர்களில் வெகுசிலர், பயங்கரவாதம் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களது செயல்கள், அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான அச்சில் இடம் பெற்றுள்ள அனைத்து சக்திகளின் பயங்கரவாத, ஜனநாயக விரோத, கருத்துச் சுதந்திர மறுப்பு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த உதவுகின்றன. உடனடியாக, இசுலாமியர் மீதான வெறுப்பிற்கெதிராகப் போராட வேண்டிய அதே நேரம், நீண்ட கால அடிப்படையில், உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகள், ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் சார்பு புதிய அரபு வசந்தத்திற்குப் பங்காற்ற வேண்டி உள்ளது.

ஒளிக்கீற்றாய் கிரேக்கம்

கிரேக்க நாட்டில் ஓர் இடதுசாரிக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களில் 149 இடங்களை வென்றுள்ளது. சோவியத் யூனியன் மற்றும் சோசலிச முகாம் சரிவிற்குப் பிறகு, முதலாளித்துவம், மாற்று ஏதும் இல்லை, THERE IS NO ALTERNATIVE (TINA) எனக் கொக்கரித்து வந்துள்ளது. மாற்று உண்டு என வீசிய இளம் சிவப்பு அலையில், பல லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு - மக்கள் சார்பு பாதையைத் தேர்வு செய்தன. வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார் நாடுகளில் அடுத்தடுத்த தேர்தல்களில், முற்போக்கு சக்திகளே வெல்கின்றனர். இப்போது அய்ரோப்பாவில் உலக வங்கி -சர்வதேச நிதியம் - அய்ரோப்பிய மத்திய வங்கி முக்கூட்டின் திணிப்பான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிரேக்க நாடு இடதுசாரி திசையில் திரும்பி உள்ளது. கிரேக்க நாடு பெரும் துன்பங்களை அனுபவித்து வந்தது. அய்ரோப்பா திணித்த மீட்புத் திட்டத்தால், கட்டற்ற தனியார் மயம், சம்பளம் ஓய்வூதியம் நல நடவடிக்கைகள் வெட்டு, பொதுச் செலவு வெட்டு என வறியவர் தலையில் இடி மேல் இடி விழுந்தது.

நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டனர். நான்கில் ஒரு பகுதியினர்க்கு வேலை இல்லை. இந்தப் பின்னணியில் 2015 தேர்தல் வந்தது. சைரிசா கட்சியும் அதன் பிரதமர் வேட்பாளரான அலெக்சிஸ் சிப்ராசும், கிரேக்க மக்களிடம், 1. அடித்தட்டு மக்கள் வாழ்க்கையைப் பறிக்கும் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து சமூக விடுதலை பெறும் திட்டம், 2. அய்ரோப்பிய ஒன்றியத்திடமும் சர்வதேச நிதியத்திடமும் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தி, கிரேக்கத்திற்கு சாதகமாக மாற்றி அமைத்தல் என்ற இரு அடிப்படையான விஷயங்களைச் சொன்னார்கள். 

கிரேக்க நாட்டின் உழைக்கும் மக்கள் அய்ரோப்பாவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. கடனில் கை வைப்பது, சிக்கன நடவடிக்கையைக் கைவிடுவது என எவர் பேசினாலும், கிரேக்கம் இருளில் மூழ்கும் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்செலா மெர்கல் மிரட்டினார். கிரேக்க மக்கள் கலங்கவில்லை. வறியவர்கள், வேலை பறிபோனவர்கள், தொழிலாளர்கள், இடது திசையில் திரும்பினர். தேர்தலில் மட்டும் அல்ல; போராட்டக் களங்களிலும் கூட.

சைரிசா, ஜனநாயகவாதிகள், சோசலிஸ்ட்கள், மாவோயிஸ்ட்கள், டிராட்ஸ்கியவாதிகள், பசுமை இடதுசாரிகளின் ஒரு கூட்டணியாக இருந்தது. ஒரு கட்டத்தில் 4% வாக்குகள் பெற்ற சைரிசா 2011ல் 27% வாக்குகள் பெற்றது. 2013ல் வெவ்வேறு குழுக்களின் கூட்டணி என்ற நிலையிலிருந்து, வடிவ அளவில், ஒரே கட்சியாக மாறியது. இந்த முறை 36% வாக்குகளுடன் 149 இடங்கள் பெற்றுள்ளனர். சிக்கன கொள்கைகளை எதிர்க்கிற அதே நேரம் அகதிகள் எதிர்ப்பு போன்ற நிலைப்பாடுகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. புதிய கிரேக்கப் பிரதமர், எந்தக் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், பிரதமராகப் பதவி ஏற்கவில்லை. எவ்வளவு ஆறுதலாக உள்ளது! அவரது முதல் பொது நடவடிக்கை, ஜெர்மானிய நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்ட கிரேக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவே இருந்தது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிரேக்கம் நிற்கும் என்ற அந்த சமிக்ஞையோடு, கிரேக்க பிரதமர் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயத்தை தடுத்து நிறுத்தவும், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தரவும் முடிவெடுத்துள்ளதாக வந்துள்ள செய்திகள், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நவதாராளவாதத்திற்கு எதிராக போராடுகிற உலகெங்கும் உள்ள அரசியல் இயக்கங்களுக்கும் குறிப்பாக இந்திய இடதுசாரி இயக்கத்துக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

மோடி ஆட்சியில் நடக்கும் ரயில் கொள்ளை

1903ல் தி கிரேட் டிரெய்ன் ராப்பரி என்ற திரைப்படம் வெளியானது. ரயில் கொள்ளை பற்றிய அந்தப் படம், தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்திராத காலத்தில் எடுக்கப்பட்டது. அன்றைய கட்டத்துக்கு அது பெரிதும் பேசப்பட்ட படமாக இருந்தது. 1963ல், 2013ல் இதே பெயரில் திரைப்படங்கள் வெளியாயின. ரயிலில் செல்பவர்களிடம் ரயில் கொள்ளையர்கள் நடத்தும் கொள்ளைகள் பற்றிய இந்தப் படங்கள் பரபரப்பாக பேசப்பட்டவை.

இன்று இந்தியாவிலும் ரயில் கொள்ளை நடக்கிறது. இந்தக் கொள்ளையை ரயில் கொள்ளையர்கள் நடத்தவில்லை. மோடி தலைமையிலான அரசாங்கம் நடத்துகிறது. இந்தக் கொள்ளையில் சாமான்ய மக்களிடம் இருப்பது பறிக்கப்படுகிறது.

நாட்டின் கோடிக்கணக்கான வறிய மக்கள் தங்கள் நீண்டதூர பயணத்துக்கு ரயில்களையே நம்பியுள்ளனர். முன்னெப்போதும் இருந்ததை விட கடந்த பத்தாண்டில் வேலை தேடி, கல்வி தேடி லட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிப்பது அதிகரிக்கிறது. அவர்களும் ரயில்களையே பெரிதும் நம்புகிறார்கள். இரண்டாம் வகுப்புப் பயணத்துக்குக் கூட முன்பதிவு செய்து கொள்ளும் பொருளாதார நிலை இடம்பெயரும் தொழிலாளர்க்கு இருப்பதில்லை. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப ரயில்வே உள்கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, தந்திரமான வழியைக் கையாள்கிறது தேஜமு அரசாங்கம். ரயிலில் பயணம் செய்யும் அளவுக்கு வசதியான நிலை இருந்தால் தானே கூடுதல் ரயில்கள், அவற்றில் மேலான சேவைகள் என்று பயணிகள் கேட்பார்கள்? ரயில் பயணத்தையே மிகவும் கடினமானதாக்கிவிட்டால் இந்தக் கேள்வியே எழாது. அதைத்தான் செய்கிறது மோடி அரசாங்கம். ரயில் கட்டணத்தை தாறுமாறாக, தத்கல், ப்ரிமியம் தத்கல் என விதவிதமாக ஏற்றி, இந்த அளவிலாவது இருக்கிறதே என்று திருப்திப்பட வைத்து, பயணம் செய்தே ஆக வேண்டியிருக்கும் சாமான்ய மக்களின் பயணத்தை துன்பப் பயணமாக மாற்றிவிடுகிறது.

“ரயில்வே தனியார்மயமாக்கப்படாது. புரளியை நம்பாதீர்கள். ரயில்வேக்கும் எனக்கும் சிறுவயது பந்தம் உள்ளது. ரயில்வேயை முன்னேற்றவும் நவீனமயமாக்கவும் ரயில்வேயில் தனியார் முதலீடுகளைத்தான் கொண்டு வரப் போகிறோம். பொதுமக்களின் பணம் ஏழைகளின் பணம், அதை கல்விக்கும், சுகாரத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.”

“ரயில்வே என் அன்புக்குரியது. ரயில்வேத் தொழிலாளர்கள் எல்லாம் என் குடும்பத்தினர். ரயில்வேயை நவீனப்படுத்துவதற்காக, மற்ற நாடுகளின் உதவியுடன் நான்கு ரயில்வே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.” இது டிசம்பர் 25, 2014ல் வாரணாசியில் “நல்லாட்சி தின!” கொண்டாட்டத்தின்போது மோடி பேசியது.

இதற்கு 25 நாட்களுக்கு முன்பு,“ரயில்வே வசதிகள் 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறது. ரயில் நிலையங்களைத் தனியார்மயமாக்கி நவீனப்படுத்தவேண்டும். அதை 10-12 இடங்களில் முதலில் செய்வேன். ரயில் நிலையங்களை விமான நிலையங்களைவிடச் சிறப்பாக மாற்றவேண்டும். ஏனென்றால், பெரும்பான்மையான ரயில் பயணிகள் ஏழைகள். ரயில்வேக்குச் சொந்தமான இடங்களை, ஆடம்பர ஓட்டல்கள், உணவகங்களை தனியார் கட்டுவதற்குக் கொடுக்க வேண்டும்”.

“ஒரு ரயில் பெட்டியை இணைப்பதிலேயோ அல்லது ஒரு ரயில் நிலையத்தை மேம்படுத்துவதிலேயோ எனக்கு சந்தோஷம் வந்துவிடாது. இந்தியப் பொருளாதாரத்தின் என்ஜினாக ரயில்வேயை மாற்ற வேண்டும்”. என்று அஸ்ஸாம், கவுகாத்தியில் புதிய ரயிலுக்கு கொடியசைத்து மோடி சொன்னது.
வெவ்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பேசி யதை சேர்த்துப் பார்த்தால் அவருடைய நோக்கம் தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. ஏழைகளின் பெயரைச் சொல்லியே ஏழைகள் வயிற்றிலடிக்கும் வேலைகளைத்தான் ஆண்டாண்டு காலமாக ஆட்சியாளர்கள் செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதையே மிகவும் பகிரங்கமாக, துளிகூட பதற்றமில்லாமல் செய்வதுதான் மோடி ஸ்டைல்.

மத்திய மோடி அரசு மக்களுக்கு கொடுத்த முதல் பரிசே ரயில் கட்டண உயர்வுதான். ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்பே பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2%, சரக்குக் கட்டணத்தை 6.5% உயர்த்தி அறி வித்தார் மோடியின் முதல் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா. “இது நாங்கள் செய்ய வில்லை. ஏற்கனவே இருந்த அய்முகூ அரசு உயர்த்தி வைத்திருந்தது. அதை இப்போது அமல்படுத்துகிறோம். அவ்வளவுதான்.” என்று சதானந்தா சாக்கு சொன்னார். அடுத்து மருந்து முதலில் கசக்கத்தான் செய்யும். கடைசியில் அமிர்தமாக இனிக்கும் என்று சொல்லிக் கொண்டே  ரயில்வே  பட்ஜெட் படித்தார்.

ரயில்வேயில் வரும் வருமானத்தில் எரி பொருளுக்கு, சம்பளத்திற்கு, பென்சனுக்கு,  தண்டவாளம், ரயில் பெட்டிப் பராமரிப்புக்கு, பயணிகள் பாதுகாப்புக்கு என ஒரு ரூபாயில், 94 பைசா செலவாகிவிடுகிறது. 6 பைசாதான் மிச்சமாகிறது. அந்த உபரியும், கட்டண உயர்வு இல்லாததால் குறைந்து கொண்டே போகிறது. கட்டாய லாபப்பங்கீடு மற்றும் குத்தகைகளுக்குக் கொடுத்ததுபோக தற்போதைய நிதி ஆண்டில் ரூ. 602 கோடிதான் மிச்சம். இது 2007-08ல் ரூ.11,754 கோடியாக இருந்தது. அதனால் இனி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டண நிர்ணயம் செய்யும் முறை கொண்டுவரப்படும். புதிய திட்டங்களுக்கு ஆண்டிற்கு 50 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. அதனால், 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். ரயில்வேயில் அனைத்து வேலைகளும் திட்டங்களும் தனியார் கூட்டுடன் செயல்படுத்தப்படும். தனியாரிடம் கொடுப்பதன் மூலம் ரயில்வேயில் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்று அடுக்கிக் கொண்டே போனார். தனியார் முதலாளிகளுக்கும் ஊழலுக்கும் தொடர்பே இல்லாததுபோல் பேசினார்.

2007-08ல் இருந்த உபரியைப் பற்றிச் சொன்னவர், 2013-14ல் ரூ.93,468.84 கோடி வருவாய் வந்துள்ளது. இது 2012-13ல் ரயில் கட்டணத்தின் மூலம் வந்த வருவாயைவிட 10.23% கூடுதல். இதைப் பற்றி வசதியாக மறைத்துவிட்டார் சதானந்த கவுடா.

12617 ரயில்கள் 7172 ரயில் நிலையங்களுக்கிடையே தினமும் 23 மில்லியன் (2.3 கோடி) பேர் பயணிக்கிறார்கள். மொத்தம் 63,870 ரயில் பெட்டிகள். சராசரியாக ஒரு பெட்டிக்கு 360 பேர் வீதம் பயணிக்கிறார்கள். 7421 சரக்கு ரயில்கள். 2.4 சரக்கு ரயில் பெட்டிகள் தினமும் 3 மில்லியன் டன் சரக்கு களைச் சுமந்து செல்கிறது. மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 13.1 லட்சம். பயணிகள் தேவைக்கு ஏற்ப ரயில்கள் விட வழியில்லை. ஆனால், வருமானம் வரவில்லை என்று சொல்கிற ரயில்வே அமைச்சர் வைர நாற்கர இருப்புப் பாதைகள் போடப் போகிறாராம். பாதுகாப்புத் துறையின் இயக்கத்திற்கு முக்கியப் பங்காற்றுவது  ரயில்வேதான் என்று சொல்லும் கவுடா ரயில்வே சேவைத் துறை என்பதை மறைத்துவிட்டு வரவு செலவு பார்க்கச் சொல்கிறார்.

ஆனால், பட்ஜெட்டிற்கு முன்பே கூட்டப்பட்ட கட்டண உயர்வால், எல்லா வகுப்புப் பயணிகளும் பாதிக்கப்பட்டனர். ஏசிக் கட்டணங்கள் விமானக் கட்டணத்தைத் தொட்டன. டில்லி கொல்கத்தா இடையே முதல் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.3813 ஆக இருந்தது ரூ.4354 ஆனது. விமானத்தில் ரூ.5555. அதேபோல் ரூ.85 ஆக இருந்த இரண்டாம் வகுப்பு சீசன் டிக்கட் ரூ.150 ஆனது.

 ரூ.190ஆக இருந்த மாதாந்திர பாஸ் ரூ.480 ஆக உயர்த்திவிட்டார்கள். முதல் வகுப்பு சீசன் பாஸ் ரூ.795 என்று இருந்ததை ரூ.1930 ஆக உயர்த்தியது மோடி அரசு. அடுத்து பிரிமியம் ரயில்கள், பிரிமியம் கட்டணம், பிரிமியம் தட்கல் என்று பந்தாவாக அறிவித்தார்கள். பிரிமியம் பயணச் சீட்டு எடுத்தவர்கள் பையில் இருந்த பணமெல்லாம் பறிபோனது. பிரிமியம் ரயில்களில் டைனமிக் பிரைஸிங் முறையாம். அதாவது பயணிகளின் தேவைக்கு ஏற்ப, முன் பதிவு நிலவரத்தைப் பொறுத்து ரயில் பயணச் சீட்டுக் கட்டணமும் உயர்ந்து கொண்டே இருக்கும். முதலில் 10% இருக்கைகள் சாதாரணக் கட்டணத்தை விட 10% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்த 10% இருக்கைகளுக்கு 20% கூடுதல் கட்டணம். அதையடுத்த 10% இருக்கைகளுக்கு 40% கூடுதல் கட்டணம். இப்படி 80%, 160%, 200% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ரயில் நேரம் நெருங்க, நெருங்க, கந்து வட்டி, மீட்டர் வட்டி போல, ரயில் டிக்கட் கட்டணமும் ஏறிக் கொண்டே போகும். சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரணமாக படுக்கை வசதி பயணச் சீட்டுக் கட்டணம் ரூ.225 என்றால், பிரிமியம் ரயிலில் ரூ.800. சாதாரண தட்கலில் கட்டணம் ரூ.250 என்றால் பிரிமியம் தட்கலில் ரூ.500. சென்னையிருந்து திருநெல்வேலிக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக் கட்டணம் ரூ.385. தட்கலில் ரூ.485. பிரிமியக் கட்டணம் ரூ.1130.

பிரிமியம் ரயிலில் காத்திருப்பு பயணச் சீட்டு (ரஹண்ற்ண்ய்ஞ் கண்ள்ற் பண்ஸ்ரீந்ங்ற்) கிடையாது. முன் பதிவு செய்துவிட்டால் அதை ரத்து செய்ய முடியாது. பிரிமியம் முறையில் ஆன்லைனில் மட்டுமே பயணச் சீட்டு எடுக்க முடியும். சென்னையிலிருந்து கோவைக்கு மூன்றடுக்கு ஏசியில் சாதாரணக் கட்டணம் ரூ.805. அதே தட்கல் என்றால் ரூ.1065. அதுவே பிரிமியம் என்றால் ரூ.3010. இரண்டடுக்கு ஏசி சாதாரணக் கட்டணம் ரூ.1135. தட்கல் ரூ.1445.
பிரிமியத்தில் ரூ.3155. பயணிகளுக்கு எந்த வசதியும் செய்து தராமல் கட்டணத்தை மட்டும் பல மடங்கு வசூல் செய்கிறது. ஒரு ரயிலில் சராசரியாக 15 முன்பதிவு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என்றால், சுமார் 1000 பேர் பயணிப்பார்கள். இதில் முக்கால்வாசி தட்கல் டிக்கட்டிற்கும், அதில் பாதிக்கு மேல் தட்கல் பிரிமியத்திற்கும் ஒதுக்கப்படுகின்றன. முழுவதும் பிரிமியம் ரயில் என்றால், சொல்லவே வேண்டாம்.

ஒரே ரயில் வசதி மட்டுமே உள்ள வழித்தடத்தில் ஓடும் ரயிலைகளையும் கோவில்கள் மற்றும் சுற்றுலா மய்யங்களுக்கு செல்லும் ரயில்களையும் பிரிமியம் ரயில்கள் என மாற்றி விட்டனர். சென்னையில் இருந்து செங்கோட்டைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இப்போது பிரிமியம் ரயில். இந்த வழித்தடத்தில் ஓடும் ஒரே பிரதான ரயில். சென்னையிலிருந்து தென்காசிக்கு இரண்டாம் வகுப்புக் கட்டணம் ரூ.355. அதுவே தட்கலில் 455. விடுமுறை காலங்களில் இன்னும் கூடும். இப்போது அந்த ரயில் பிரிமியம் ரயில் ஆகிவிட்டதால் குறைந்தது ரூ.900 கொடுக்க வேண்டும்.

ஒரு நபரிடம் கூடுதலாக ரூ.500 என்றால், ஆயிரம் பேரிடம் ரூ.5 லட்சம். ஒரு நாளில் ஒரு தடவையில். 30 நாட்களுக்கு ரூ.1.5 கோடி. இது இரண்டாம் வகுப்பில் மட்டும் கூடுதலாக வசூலிப்பது. 3ஆம் வகுப்பு ஏசி சாதாரணக் கட்டணம் ரூ.957. பிரிமியத்தில் குறைந்தது ரூ2500. நூறு பயணிகளுக்கு ரூ.2,50,000. இன்னும் 2ஆம் வகுப்பு ஏசி வேறு இருக்கிறது. தென்காசி, குற்றாலம் பகுதிப் பொதுமக்களும் வியாபாரிகளும் பொதிகை ரயில் பிரிமியம் ரயிலாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளார்கள். கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 133 பிரிமியம் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்போது பிரிமியம் ரயில்களின் எண்ணிக்கை 800அய் தாண்டும். இதுபோக எல்லா எக்ஸ்பிரஸ் ரயில்களிலேயும் பிரிமியம் டிக்கட் முறை உள்ளது. 7000 ரயில்களுக்கு மேல் எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான். ஒரு நாளில், ஒரு தடவையில் பல லட்சம் கோடிகள் ரயில் பயணிகளிடம் டைனமிக், பிரிமியம் என்று வசூல் வேட்டை நடக்கிறது. ரயில்களின் எண்ணிக்கையைக் கூட்டாமல், வசதிகளைச் செய்து தராமல் அவசரத் தேவையைப் பயன்படுத்தி பகல் கொள்ளையடிக்கிறது மோடி அரசு.

கொள்ளையின் அடுத்த கட்டமும் ஆரம்பமாகிவிட்டது. சதானந்த கவுடா போய் சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சரானார். ரயில்வே உள் கட்டமைப்பை மேம்படுத்த மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிறார். ரயில்வே நிகழ்ச்சி ஒன்றில் ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளி இவருக்கு கேக் ஊட்டுவதுபோல் போட்டோ வேறு. தொழிலாளியின் தோழனாம். நாட்டில் உள்ள 30,348 ரயில்வே லெவல் கிராஸிங்குகளில் 11,563 ஆளில்லா லெவல் கிராஸிங்குகள். பள்ளிக் குழந்தைகள், உழைக்கும் மக்கள், கோவிலுக்கு சென்றவர்கள் என லெவல் கிராஸிங்குகளில் ரயில் மோதி இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. 

ஆளில்லா லெவல் கிராஸிங்குகளால்தான் 59% ரயில் விபத்து இறப்புகள் ஏற்படுகின்றன என்று ரயில்வே உயர்மட்டக் குழு அறிக்கை கூறுகிறது. அதுவும் பகல் நேரத்தில்தான் 89% விபத்துக்கள் நடக்கின்றன என்கிறது. ஆபத்தான இந்த ஆளில்லா லெவல் கிராஸிங்குகளுக்கு ஆட்களை நியமிப்பதற்கோ அல்லது பாலங்கள் கட்டுவதற்கோ தயாராக இல்லாத மோடியின் ஆட்கள் புல்லட் ரயில்கள் பற்றியும் ரயில்வேயின் உள்கட்டமைப்பைப் பற்றியும் பசப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆளில்லா லெவல் கிராஸிங்குகளுக்கு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டால் சுமார் 40,000 பேருக்கு வேலை கிடைக்கும். 59% ரயில் விபத்து இறப்புகள் தடுக்கப்படும்.

கடந்த அக்டோபர் மாதம் கோரக்பூரில் நடந்த ரயில் விபத்தில் பலர் இறந்தார்கள். பல பேர் காயமுற்றார்கள். ரயில்வே நிர்வாகம் விபத்துக்கு காரணம் லோகோ ஓட்டுநர்கள்தான் என்று அவர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. உண்மையில், அந்த ரயிலை ஓட்டி வந்த ராம்பகதூருக்கும் ராம்ஜித்திற்கும் ஓய்வே கொடுக்கப்படவில்லை. 81,000 ஓட்டுநர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 65000  பேர்கள் தான் உள்ளனர். அதிலும் 5000த்திற்கும் மேற்பட்டவர்களை மற்ற வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள் என்கிறது அனைத்து இந்திய ரயில்வேமென் கூட்டமைப்பு.

தொழிலாளர் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடு, பழைய தொழில் நுட்பம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகள், பயணிகளுக்கு பாதுகாப்பின்மை ஆகியவற்றை சரிசெய்வதற்கு பதிலாக ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பது பற்றி ஆலோசனை சொல்ல டி.கே. மிட்டல் தலைமையில் ஒரு குழுவை கடந்த டிசம்பர் 4 அன்று நியமித்தார் சுரேஷ் பிரபு. டிசம்பர் 30 அன்று தரப்பட்ட குழுவின் அறிக்கை, புறநகர் ரயில்களுக்கான கட்டணங்களை, சீசன் டிக்கட்டுகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டும், பயணிகள் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்த வேண்டும், அதையும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும், குறைந்தபட்சத் தொலைவு சாதாரண வண்டிகளில் 10 கி.மீ. என்று இருப்பதை 20 கி.மீ. என்றும் விரைவு வண்டிகளில் 20 கி.மீ. என்றிருப்பதை 50 கி.மீ என்றும் மாற்ற வேண்டும் என்று பரித்துரைத் துள்ளது. மானியம் வழங்கப்படுவதால் ஏற்படும் இழப்பை, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தி சரி செய்ய வேண்டும் என்கிறது மிட்டல் குழு. விமானக் கட்டணம்போல், நெகிழ்வான கட்டணம், (Flexi Fares)  விருப்பமான இட வசதிக் கட்டணம், விடுமுறை காலக் கட்டணம் என பல வகைக் கட்டணங்களை கொண்டு வர வேண்டும், ரயில்வே சுற்றுலா சேவை நடத்த வேண்டும் என்கிறது.

அதன்படி, பாரம்பரிய நகரங்களை, சுற்றுலாத் தலங்களைப் பார்க்க, ஏழு நட்சத்திர ஓட்டலுடன் அதிநவீன “மகாராஜா எக்ஸ்பிரஸ்” என்ற சொகுசு சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே. 23 பெட்டிகள் உள்ள இந்த ரயிலில் 88 பேர் மட்டுமே பயணிக்கலாம். 14 விருந்தினர் படுகைகள். 20 டீலக்ஸ் அறைகள். 18 ஜ÷னியர் சூட்கள்.அம்பானியின் மும்பை வீடுபோல. இது ஆசியாவிலேயே மிக அதிகமான கட்டணம் கொண்டதாம். பெரியவர்களுக்கு ரூ.2.39 லட்சம் முதல் ரூ.14.75 லட்சம் வரை, சிறியவர்களுக்கு (5-12வயது) ரூ.1.20 லட்சம் முதல் ரூ.7.40 லட்சம் வரைதானாம். இது போல் இன்னும் பல ரயில்களை விட உள்ளார்களாம்.

ரயில்வேயில் ரயில் கட்டுமானம், பராமரிப்பு மட்டுமின்றி ஓட்டுநர்கள், ஸ்டேசன் மாஸ்டர், கார்டு வரை அனைத்து வேலைகளையும் அந்நியருக்கு கொடுக்க முடிவெடுத்து, படிப்படியாக அமல்படுத்திக் கொண்டிருக்கும் மோடி அரசு, 2032ஆம் ஆண்டுவரை ரயில்வேக்கு 35 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது அதை அந்நிய முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப் போகிறோம் என்கிறது. மோடிமஸ்தான் வேலை காட்டுகிறார் மோடி. எந்த கார்ப்பரேட் முதலாளியாவது தன் கையில் உள்ள மூலதனத்தைத் தருவானா? ரயில்வேயில் இருந்து அள்ளிக் கொண்டு போக வேண்டுமானால் வருவார்கள்.

டில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் லைன் பெரும்பாலும் சுரங்கப்பாதையைக் கொண்டது. இந்தத் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஆரம்பித்தது டில்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன். ரூ. 5700 கோடி திட்டம். டில்லி மெட்ரோ ரூ.2815 கோடியும் ரிலையன்ஸ் ரூ.2885 கோடியும் போட்டதாகக் கூறினார்கள். வேலையை இழுத்தடித்து, திட்டத்திற்கு திறப்பு விழா நடத்தினர். 20ரூபாய்க்கு பதில் 150 ரூபாய் டிக்கட் வைத்து காசு பார்த்தது ரிலையன்ஸ் நிறுவனம். கொஞ்ச நாளில் ரிலையன்ஸ் கட்டிய சுரங்கப் பாதை ஒழுகியது. கட்டுமானங்கள் கழன்று விழுந்தன. ஓராண்டிலேயே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுதான் தனியார் பங்களிப்பு!. 27 முறைக்கும் மேலாக சென்னை விமான நிலையக் கூரை இடிந்து விழுந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதானியின் முந்த்ரா துறைமுகத்திற்கு குறுக்கு வழி போடுவதற்காகவே கட்ச் ரயில்வே கம்பெனி திட்டத்தை உருவாக்கினார்கள். இப்படி அதானிகளையும் அம்பானிகளையும் மேலும் கொழுக்கச் செய்யவே நமோ, “ஏழைகள் ரயில். என் அன்பு ரயில்” என்றெல்லாம் ஏழை மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

இந்தியாவிற்கு இருப்புப் பாதைத் திட்டத்தைக் கொண்டு வந்த இங்கிலாந்து நாட்டிலேயே ரயில்வேயை தனியாரிடமிருந்து அரசாங்கம் கையில் எடுக்க முடிவு செய்திருக்கும் போது, இந்தியாவில் அரசாங்கத்திடமிருந்து ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைத்து கொள்ளையடிக்கத் துடிக்கும் மோடியின் முகத்திரை விரைவில் கிழியும்.

முகமூடி இல்லாமல் பல்லிளிக்கும் பார்ப்பனியம்

“மக்களுக்காக நான், மக்களால் நான் - ஜெயலலிதா” என்று கொட்டை எழுத்தில், (நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட) ஜெயலலிதாவின் படத்தோடு பகட்டாக எழுதப்பட்டு பள்ளிக் கல்வித் துறையால் அமைக்கப்பட்ட  அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் அணிவகுத்துக் கொண்டிருந்த வேளையில், திருச்சியில் தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள், தமிழக அரசின் ஆணை: 92க்கு எதிராக தங்களை கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்வதைக் கண்டித்து வீதியில் அமர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள்.

திருச்சி சிரகனூரில் உள்ள தனியார் தொழில் நுட்பக் கல்லூரி நிர்வாகம், கல்லூரியில் பயிலும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஜனவரி 24 தேதிக்குள் தங்களது கல்விக் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும், இல்லையென்றால், அனைவரும் தகுதியிழப்பார்கள் என்று உத்தரவிட்டது. பல தனியார் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் நிர்வாகங்கள், அரசாணை 92க்கு எதிராக, பட்டியலின மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கல்விக் கட்டணத்தை வசூல் செய்துகொண்டுதான் இருக்கின்றன.

அரசாணை 92ன்படி அரசு மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் தலித், பழங்குடியின மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் மூலம் அரசு செலுத்தி விடும். இதற்கான அரசாணை 92 போடப்பட்டு ஆண்டுகள் பல ஆனபோதும், அது பற்றி கண்டு கொள்ளாமல் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கொள்ளையடிக்க அனுமதித்துக் கொண்டிருந்த தமிழக அரசைத் தட்டிக் கேட்டு போராட்டம் நடத்தின அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும். அரசாணை 92அய் அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. நீதிமன்றத்தில் அரசாணை 92அய் முழுமையாக அமல்படுத்திடுவோம் தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால், இன்று வரை முழுமையாக அமல்படுத்தப்படாமல் பல மாவட்டங்களில் அது ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது.

இந்த நிலையில், கல்வியைக் காவிமயமாக்க, கல்விக் கூடங்களை வர்ணாசிரம சனாதனக் கொள்கைகளைப் பரப்பும் சாமியார்களின் மடங்களாக்க துடித்துக் கொண்டிருக்கிற மோடியின் மத்திய அரசு, தலித், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையையே இல்லாமல் செய்வதற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. அதைச் செயல்படுத்த, மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித் தொகையை நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்துடன் இணைத்து வங்கிகள் மூலம் நேர டியாக மாணவர்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதை உத்தரவாதப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு எல்லா பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்காக, பொது நிதி நிர்வாக முறையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களை பதிவு செய்து கொள்ள கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத் தளம் வாயிலாக மாணவர்கள் அனுப்பும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நேரடியாக உதவித் தொகைகளை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமாம். அதை எடுத்து மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள்.

மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் பாரபட்சமின்றி இடையூறு இல்லாமல் உதவி கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் நேரடி மானியத் திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கில் கல்வி உதவித் தொகை சேர்க்கப்பட உள்ளது என்று மத்திய அரசு இதற்குக் காரணம் சொல்கிறது. நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்துடன் இணைக்கப்படும் மாணவர்களின் வங்கிக் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நாட்டில் பார்சி இனத்தவர்கள்தான் சிறுபான்மையினர் என்று கூறிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப் துல்லா, சிறுபான்மையினருக்குரிய மேற்படிப்பிற்கான உதவித் தொகை, தகுதி மற்றும் வருமான அடிப்படையிலான உதவித் தொகைகளை நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அடுத்த கட்டமாக, பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைகளையும் நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அனைத்து சிறுபான்மையின மாணவர்களும் ஆதார் திட்டத்துடன் இணைப்பது விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்தக் கல்வி உதவித் தொகைகள் மத்திய அரசு 75% மாநில அரசு 25% பங்களிப்பில் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மாநில அரசுக்கு அனுப்பி மாநில அரசுகள் உதவித் தொகைகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றன. அதில் பல ஊழல்கள்,  பாரபட்சங்கள் இருந்த போதிலும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்துவிடும் என்கிற குறைந்தபட்ச நம்பிக்கையாவது இருக்கும். அரசாணை 92அய் அரசு அமல்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களுக்குப் பின்னர் கல்வி உதவித் தொகை பெறும் தலித், சிறுபான்மை மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. கல்வி நிறுவனங் கள் குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் பணத்தைக் கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாநில அரசு உத்தரவாவது போட முடிந்தது. இனி, தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மட்டுமல்ல. அரசுக் கல்வி நிறுவனங்களும் தலித், சிறுபான்மை மாணவர்களிடம் “வங்கியில் பணம் வரும் போது நீ எடுத்துக் கொள். எங்கள் பணத்தை முதலில் கட்டு” என்பார்கள். இதனால் பல தலித் மற்றும் சிறுபான்மையினர் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் கடும் நெருக்கடிக்குள்ளாவார்கள். அவர்களின் படிப்பு பாதியில் நிறுத்தப்படும்.

படிப்பை பாதியில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. ஏழ்மையும் வசதியின்மையும் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில், கிராமப்புறங்களில் பள்ளிகள் இல்லாமையும், பெற்றோர்கள் வேலை தேடி வேறு வேறு இடங்களுக்குச் செல்வதும் பள்ளிகளில் போதிய வசதிகள் குறிப்பாக பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லாமையும் அதற்குக் காரணம் என்கிறது அந்த ஆய்வு.

தமிழ்நாட்டில் 1-5 வகுப்புகளில் சேர்க்கப்படுவர்கள் எண்ணிக்கை 2005-2006ல் 61.86 லட்சமாக இருந்தது 2012 -13ல்  60.40 லட்சமாகக் குறைந்து 2014 - 15ல் 57.69 லட்சமாகக் குறைந்துவிட்டது. 6 -8 வகுப்புகளுக்கான சேர்க்கை 2012 - 13ல் 37.36 லட்சமாக இருந்தது 2014 - 15ல் 36.26 லட்சமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், பெரும்பாலும் அரசின் உதவித் தொகையை நம்பியே வெளியூர்களுக்குச் சென்று விடுதிகளில் தங்கிப் படிக்கும் தலித், சிறுபான்மையின மாணவர்களின் படிப்பும் நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தால் இனி கேள்விக்குறியாகும். ஏற்கனவே ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கான கூலிப் பணம் முறையாக வங்கியில் செலுத்தப்படாமல் அவர்கள் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களுக்கும் பணம் முழுமையாக வங்கிக் கணக்கில் வந்து சேருமா? உதவித் தொகையில் மாநில அரசின் பங்கு என்னவாகும்? அப்படியே பணம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தாலும் அது முறையாகக் கல்விக்கு மட்டும் பயன்படுமா?

எல்லாருக்கும் வங்கிக் கணக்கு, நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் ஆகியவை மக்களுக்கான மானியங்களை, அரசு உதவிகளை காலி செய்வதற்காகவே திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன. சமையல் எரிவாயுவிற்கு அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை எரிவாயு நிறுவனங்களிடமே நேரடியாகக் கொடுத்துவிடலாமே. எதற்காக அது மக்களின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும்? இப்போது வசதி படைத்தவர்களுக்கு மானியம் கிடையாது என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

தலித், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவித் தொகைகளை அரசே செலுத்துவதற்கு மாறாக, எதற்காக மாணவர்களின் கையில் பணத்தைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தலித், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை படிப்படியாக குறைத்து, முற்றிலுமாக இல்லாமல் செய்து அவர்கள் கல்வி கற்பதை, மேல்படிப்பிற்கு வருவதைக் தடுக்க நினைக்கிறது மோடி அரசு. ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்கள், பழங்குடியினர் வராமல் செய்வதற்காகவே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதி என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. அதை மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் அமல்படுத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதையும் மீறி தப்பித் தவறி தலித், பழங்குடியின மக்கள் படித்து மேலே வந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான கல்வி உதவியைக் காலி செய்கிறது மத்திய மோடி அரசு.

அடுத்து தலித் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்வதற்காக, தலித் மாணவர்களின் தகுதி மேம்படுத்துதலுக்கான மத்திய திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தலித் மாணவர்கள் கல்வித் தரத்தில் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர், அதனால், அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் கிடைக்கக் கூடிய இடங்களைக் கூட அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை, அப்படியே அவர்கள் சலுகைகள் மூலம் இடத்தைப் பெற்றாலும் அவர்களால் படிப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை அல்லது படிப்பை முடிக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்கள், அவர்களின்  பற்றாக்குறையான கல்வித் தகுதியினால் அவர்களால் வேலை வாய்ப்பில், அதற்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. ஆகவே, அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தின் மூலம் 9ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை படிக்கும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வாயிலாக சிறப்பான வகுப்புகள் நடத்தப் போகிறோம் என்று மத்திய அரசு சொல்கிறது.

இந்த திட்டத்தின்படி மாநில/யுனியன் பிரதேச அரசுகள் அவரவர் விரும்பப்படி அந்தந்த மாநிலத்தில் கல்வியறிவில்லாத தலித் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான, தகுதியான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத்  தேர்வு கொண்டு, அதில் படிக்கப் போகும் தலித் மாணவர்களையும் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமாம்.
 அந்தப் பள்ளிக்கூடங்கள் தலித் மாணவர்க்கு தங்கள் வீடு போல் உணரும் வகையில் வசதிகள் இருந்தால்தான் தேர்வு செய்யப்படுமாம்.

ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ஆண்டுக்கு 2,050 மாணவர்கள்தான் சேர்க்கப்படுவார்களாம். இதில் ஆண்களும் பெண்களும் 50:50. மாற்றுத் திறனாளிகளுக்கு 3%.மாற்றுத் திறனாளிகளில் கண் தெரியாத தலித் மாணவர்களுக்கு வாசிப்பாளர் படியாக ரூ.200. மாற்றுத் திறனாளி மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கவில்லை என்றால், அவருக்கு போக்குவரத்து படியாக மாதம் ரூ.100 தரப்படுமாம். அதுபோல், மிக மோசமான மாற்றுத் திறனாளிக்கு பாதுகாப்பாளர் படி மாதம் ரூ.100 கொடுக்கப்படுமாம்.

ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 இந்தத்திட்டத்தில் மத்திய அரசு செலவு செய்யுமாம். அதில் ரூ.15,000 மாணவருக்காம். (அதில் ரூ.9,000 பத்து மாதத்திற்கு சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்கும். கைச் செலவுக்கு ரூ.3,000. புத்தகங்களுக்கு ரூ.3,000.) மீதி ரூ.10,000 பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்திற்கு மோடியின் ஆட்சியில் விலைவாசி, போக்குவரத்துக் கட்டணம் எல்லாம் காலணா, அரையணா என்று இருப்பதாக எண்ணம் போலும். இந்த உதவித் தொகையையும் நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மாணவர்களின் வங்கியில் சேர்த்துவிடுவார்களாம்.

மாணவருக்கு ஆதார் எண் கண்டிப்பாக இருக்க வேண்டுமாம். இந்தப் பணம் ஒழுங்காக மாணவருக்கு சென்று சேர்கிறதா என்று ஆதார் கொண்டு கண்காணிப்பார்களாம்.

இந்தத் திட்டத்திற்குப் பெயர் தலித்/பழங்குடியினர் அறிஞர் பட்டத் திட்டம். இந்தத் திட்டத்தில் 18 மாநிலங்களும் 1 யூனியன் பிரதேசம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை பேர் என்றும் கூட நிர்ணயித்துவிட்டார்கள். தமிழ்நாடு இதில் சேர்க்கப்படவில்லை.

கோடிக்கணக்கில் உள்ள தலித், பழங்குடியின மக்கள் அடிப்படைக் கல்விக்கே வகையற்று இருக்க, அவர்களில் வெகு சிலருக்கு கல்வி உதவித் தொகை, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் கிடைத்து அரிதாகக் கிடைத்து வரும் கல்வி அறிவையும் ஒழித்துக் கட்டி விட்டு, ஆண்டுக்கு நாடு முழுவதிலும் இருந்து 2,050 தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை மட்டும் அறிஞர்கள் ஆக்கப் போகிறார்களாம்.

பாஜக அரசு திட்டமிட்டு தலித் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வியை காலி செய்ய முயற்சிக்கிறது. தலித் மாணவர் களை, அவர்களின் அறிவை கொச்சைபடுத்துகிற செயலை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இறுமாப்பாகச் செய்கிறது. பாஜகவின் வர்ணா சிரம, சனாதன, பார்ப்பனிய கோர முகம் முக மூடியே இல்லாமல்  பல்லிளிக்கிறது மோடியின் ஆட்சியில்.

Search