COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, January 4, 2017

தலையங்கம்

ஜெயலலிதா அரசியலின் விளைபொருளே
பன்னீர்செல்வம் - சசிகலா ஆட்சி

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

தமிழ்நாட்டு மக்கள். அவர்களது வாழ்க்கை. அவர்களது வேலை. அவர்களது வருமானம். அவர்களது விவசாயம். அவர்களது வியாபாரம். தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம். தமிழ்நாட்டின் மின்தேவையும், அளிப்பும். தமிழ்நாட்டின் மருத்துவம், கல்வி. தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சாதியாதிக்கம். தமிழ்நாட்டின் மதச் சிறுபான்மையினரும் பெண்களும் அச்சமற்ற சுதந்திரத்துடன் வாழ முடியாத நிலை. தமிழ்நாட்டில் தொடரும் இயற்கை வளக் கொள்ளை. தமிழ்நாட்டில் அணு உலை, பட்டாசு, கட்டுமானம், கழிவகற்றல் என நீண்டு விரியும் கொலைக் களங்கள். தமிழ்நாட்டின் அரசுத் துறை, காவல்துறை அராஜகங்கள். தமிழ்நாட்டின் தள்ளிப் போன உள்ளாட்சித் தேர்தல். மேலே உள்ள பட்டியலில் உள்ள விசயங்கள், தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்ச்சிநிரலாகி இருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனை சென்றதில் இருந்து அவரது உடல்நிலை, பின்னர் அவரது மரணம், அடுத்து கட்சி மற்றும் ஆட்சியில் அதிகார மாற்றம், இவற்றோடு கூடவே மருத்துவமனை மர்மங்கள், சதிகள் பற்றிய கதைகள்... இவையே ஊடக கவனத்தைக் கவர்ந்துள்ளன.
ஸ்டாலின் திமுக மீது இன்னமும் தமது கட்டுப்பாட்டை முழுமையாக நிறுவ முடியவில்லை. அறிக்கைகள் விடுவது தாண்டி, சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் எதிர்க்கட்சி யாக, திமுக செயல்படுவதில்லை. வைகோ, தான் அமைப்பாளராக இருந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, தானே முதல் ஆளாக வெளியேறிவிட்டார். அவர் பாஜக பாசத்துடன், அஇஅதிமுக எதிர்ப்பை பிளக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு, அவரே, அவரது நடவடிக்கைகளால் வலுச் சேர்க்கிறார். ரூ.1000 ரூ.500 நாணய மதிப்பகற்றியதற்காக, மோடியை வாயாரப் புகழ்கிறார். திருமாவளவன் ஒருபுறம் மோடி கூட்டாளிகளை, இந்துத்துவா ஜோதியில் கரைந்த ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அதாவலே, உதித் ராஜ் என்ற மத்திய அமைச்சர் களைத் தம் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்; மறுபுறம், புதுச்சேரியில், மதச்சார்பின்மை நலன் கருதி, காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமியை ஆதரிக்கிறார். சசிகலாவைச் சந்தித்து அவரது தன்னம்பிக்கையைப் புகழ்கிறார். இககவும் இகக(மா)வும் திருமாவளவனோடு, மக்கள் நலக் கூட்டணி தொடர்வதாக உறுதியாகச் சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் அஇஅதிமுகவின் பொதுக் குழு டிசம்பர் 29 அன்று சென்னையில் நடைபெற்றது.
அதற்கு முன்பான, பரபரப்பான விஷயங்கள் என்றால், அவை சேகர் ரெட்டியின் கைதும், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டிலும் அலுவலகத்திலும் நடந்த சோதனைகளும்தான். பன்னீர்செல்வத்தின் உற்ற நண்பர் (உடன்பிறவா சகோதரரா என நமக்குத் தெரியாது) சேகர் ரெட்டி, பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர். ரூ.34 கோடி மதிப்புடைய புதிய ரூ.2000 நோட்டுகள் உட்பட ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்க நகை ஆபரணங்கள், இவர் வீட்டில் கைப்பற்றப்பட்டன. இவரும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவும் பேசிய அலை பேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், ராம மோகன ராவ் ஜெயலலிதா உடலுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு, சொத்துக்களைப் பாதுகாப்பாக வைப்பது பற்றி ஆலோசனை தந்ததாகவும் சொல்லப்படுகிறது. தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும், மத்திய துணை இராணுவப் பாதுகாப்பில் நடந்த சோதனையைதமிழ்நாட்டின் மக்கள், மத்திய, மாநில அரசு உறவுச் சிக்கலாகக் காணவில்லை; மாறாக, ஓர் ஊழல் அதிகாரி சிக்கினார் எனவே மகிழ்ந்தனர். ஊழல் எந்த அளவுக்குப் புரையோடிப் போயுள்ளது, சூறையாடும் கூட்டம் ஒன்றின் பிடியில் தமிழ்நாடு சிக்கியுள்ளது என்பதற்கான வெளிப்பாடே இந்தச் சோதனை எனப் பார்த்தனர். ஊழல் எதிர்ப்பு - ஊழலுக்கு தண்டனை வழங்கும் லோக் ஆயுக்தா சட்டம் வேண்டாம் என்பதில், மாநில அரசு உரிமைகள் என்ற கோணத்தில், அஇஅதிமுக - திமுக ஒற்றுமை இருந்தது. 2016 மே தேர்தலில், இரண்டு கழகங்களும், லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவதாக வாக்குறுதி தந்தன. ஆனால், சட்டமன்றத்தில் அதுபற்றிப் பேசப்படவில்லை. 2017ல், விரைந்து லோக் ஆயுக்தா சட்டம் வேண்டும், அன்புநாதன் -சேகர் ரெட்டி - ராம மோகன ராவ் ஊழல் சங்கிலியில் அவர்களோடு அவர்களது அரசியல் கூட்டாளிகளும் லோக் ஆயுக்தா சட்டம் மூலம் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக எழுந்துள்ளது. குறிப்பாக, ஆற்று மணலில் இருந்து இயற்கை வளங்கள் கொள்ளை வரை விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஜெயலலிதா சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை கிஞ்சித்தும் இல்லை. அவரது சிகிச்சை ஏதோ போயஸ் தோட்டத்து விவகாரம் போல், அஇஅதிமுக விவகாரம் போல், சசிகலா சொற்படி நடக்க வேண்டிய விஷயமாகக் கருதப்பட்டது. மக்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு, தெரிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு கடமை உண்டு என்ற ஜனநாயகக் கோட்பாட்டை அரசுகள் மீறின. நீதிமன்றமும், வழக்கு வந்தும், அப்போது கேள்வி கேட்கவில்லை. அதனால், இப்போது, சதி, புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுப்பது பற்றி எல்லாம் பேசப்படுகிறது. சசிகலா வகையறாக்கள் கையாண்ட ரகசியம், இப்போது அவர்களுக்கு எதிரான கோபமாக, வெறுப்பாக, சாபங்களாக மாறுகிறது. அஇஅதிமுக தொண்டர்களும், இயல்பாக இரக்க குணம் கொண்ட சாமான்ய மக்களும், குறிப்பாக பெண்களும், கொள்ளைக் கூட்டம் ஒன்றின் பிடியில் ஜெயலலிதா சிக்கி இறந்தார், இப்போது அவர்களே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி விட்டார்கள் எனப் பேசுகிறார்கள். இந்தப் பின்னணியில் நடந்த அஇஅதிமுக பொதுக் குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்றத்திலும் அதன் மேலவையிலும், தமிழ்நாட்டு மக்கள் தந்த 50 எம்பிக்களை வைத்திருக்கிற அந்தக் கட்சி, 14 தீர்மானங்களில் ஒரு தீர்மானத்தில் கூட, தமிழ்நாட்டு மக்களைப் பற்றிப் பேசவில்லை. ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா, நோபல் பரிசு, மகசேசே விருது வழங்குவது, ஜெயலலிதா பிறந்த நாள் விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட வேண்டும் போன்றவற்றைக் கோரிய அந்தக் கட்சி, சின்னம்மா சசிகலாவை தற்காலிகமாக பொதுச் செயலாளராக நியமித்த அந்தக் கட்சி, வர்தா புயல் பாதிப்புகள் பற்றியோ, நிவாரணங்கள் பற்றியோ, நாளும் சாகும் விவசாயிகள் பற்றியோ, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை பற்றியோ, ரூ.1000 ரூ.500 நாணய மதிப்பு அகற்றுதலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியோ, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
நாட்டை ஆளும் கட்சிக்கு, மக்களைப் பற்றிப் பேச ஏதும் இல்லை. மக்களுக்காக நான் மக்களால் நான் என்றவரின் அரசியல் பாரம்பரியம், வழிமரபு, அவர் மரணத்தை அடுத்து நடந்த பொதுக் குழுவில் நன்றாகவே அம்பலமானது. ஜெயலலிதாவின் கட்சிக்கு, ஊழல் ஒடுக்குமுறை கூட்டாளி சசிகலா பொதுச் செயலாளர் ஆவதும், காலில் விழும் பன்னீர்செல்வம் முதல்வராக இருப்பதும் பொருத்தமானதே.
தமிழக அரசின் மீது, அஇஅதிமுக கட்சியின் மீது, பாஜகவும் மத்திய அரசும் செல்வாக்கு செலுத்துவது நாடறிந்த இரகசியம். அன்புநாதன், நத்தம் விசுவநாதன் மீது நடந்த சோதனைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அஇஅதிமுக பிரமுகர்கள் வைத்துள்ள பல்லாயிரம் கோடி சொத்துக்கள் ஆகியவற்றால், அஇஅதிமுக, பாஜகவுக்கு அடிபணிந்தே ஆக வேண்டும். மற்றபடி, வெங்கைய்யா நாயுடு சொல்வது போல், அந்த இரண்டு கட்சிகளும் ஒத்த இயல்பு கொண்டவை. பாஜகவுக்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50 எம்பிக்கள் இருக்கும் ஒரு கட்சி, கைப்பிடிக்குள் இருப்பது, மிக மிக வசதியாகவே உள்ளது.
அஇஅதிமுகவில், எடப்பாடி பழனிச்சாமி எதிர் பன்னீர்செல்வம் முரண் உள்ளது, சசிகலா, எடப்பாடி முதல்வராக விரும்பினார், ஆனால் பாஜக பன்னீர்செல்வத்தைத் திணித்தது, சசிகலாவே பொதுச் செயலாளராகவும் முதல மைச்சராகவும் முயற்சி எனப் பல அரசியல் கிசுகிசுக்கள் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, அஇஅதிமுகவினரை, அதிகாரம் என்ற பசை பிணைத்துள்ளது என்பதுதான் அடிப்படையான விஷயமாகும். அவர்கள் பாஜகவைப் பகைத்துக் கொண்டு ஆட்சியை இழக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் திமுகவுக்குப் போய் முக்கியத்துவம் இழக்க  விரும்பமாட்டார்கள். 4ணீ ஆண்டுகள் பதவியில் இருக்கும், சம்பாதிக்கும் வாய்ப்பை இழக்கும் அளவுக்கு, அவர்களிடம் எந்தக் கொள்கையும் எந்த தியாக உணர்வும் கிடையாது. உடனடி எதிர்காலத்தில் அஇஅதிமுகவினர் தமக்குள் ஒரு சமரசத்திற்கு வந்து, பாஜகவுக்கு, மத்திய அரசுக்கு இணக்கமான ஓர் ஆட்சி நடத்தவே நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

ஜெயலலிதா மறைந்துவிட்டார். 2016 முடிந்து விட்டது. முடியும்போது, 70 விவசாயிகள் வரை விவசாய நெருக்கடிக்கு பலியாகியுள்ளனர். டிசம்பர் 31 அன்று மோடியின் நாணய மதிப்பகற்றுதலுக்கு எதிராக போராடிய இகக மா மற்றும் அவர்களது இளைஞர், பெண்கள் அமைப்பு தோழர்கள் காவல்துறையினரால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டுள்ளனர். 2017ல், மக்களின் வாழ்வாதார விஷயங்களை, ஜனநாயக கோரிக்கைகளை, மக்கள் போராட்டங்களை இடதுசாரிகள் முன்னுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். மக்களின் நலன்கள் அடிப்படையிலான, இடதுசாரிகளின் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக, 2017அய் மாற்றியாக வேண்டும்
நரேந்திர மோடியும் நாட்டு மக்களும் நவம்பர் 8ம்

எஸ்.குமாரசாமி

(மாலெ தீப்பொறி 2017 ஜனவரி 01 – 15)

நவம்வர் 8 பின்மாலையில் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் அறிவித்தார். ‘ஊழல் கருப்புப் பணம், பயங்கரவாதம் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன. பயங்கரவாதிகள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுகிறார்கள். அதிகரித்த அளவிலான பணப் புழக்கம், ஊழலோடு தொடர்புடையது. கருப்புப் பணத்தோடும் சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தோடும் தொடர்புடைய ஹவாலா வர்த்தகத்தை உயர் மதிப்பு நோட்டுக்களின் புழக்கம் வலுப்படுத்துகிறது. நவம்பர் 8 நள்ளிரவுக்குப் பின் தேசவிரோத சமூக விரோத சக்திகள் பதுக்கி வைத்துள்ள ரூ.500 ரூ.1000 நோட்டுக்கள் செல்லாக் காசாகி விடும். நாட்டின் பொருளாதாரத்தைத் தூய்மைப்படுத்த துவக்கப்பட்டுள்ள மகாயாகத்தில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும்’.
பாசிச அரசியலில், பாசிச ஆட்சி முறை, இராணுவ சர்வாதிகாரம் போல் அல்லாமல், தனது தவறான கொள்கைகளுக்கு அத்துமீறல்களுக்கு, மக்கள் திரளின் சம்மதத்தைப் பெறுகிறது. (அல்லது தனது சிந்தனை மேலாதிக்கத்தால் மக்கள் சிந்தனைகளை வெல்கிறது; அல்லது குழப்புகிறது). மக்கள் திரளின் விருப்பங்கள், அச்சங்கள், கவலைகள், தப்பெண்ணங்கள் மீது விளையாடுகிறது. அவற்றை அடிப்டையாகக் கொண்டு, இதோ எதிரிகள், இதோ இவர்களுக்கெதிரான போராட்டம் எனச் சொல்லி திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடுக்கிறது.
மக்கள் திரளுக்கு, கருப்புப் பணம் பற்றிய பல புனைகதைகளில் நம்பிக்கை உள்ளது. இந்தப் புனை கதைகளுக்கு நிச்சயமாய் சில திட்டவட்டமான யதார்த்த அடிப்படைகள் உண்டு. ஊழலும் கருப்புப் பணமும், தம் வாழ்வை தம்மை அழுத்தும் சுமைகள் என தம் மனங்களின் அடி ஆழத்திலிருந்து நினைக்கும் மக்கள், எதிர்காலம் பற்றிய அச்சங்களால், நிகழ்காலத்தில் பெருகும் ஏற்றத்தாழ்வுகளால் சீற்றமுற்று இருக்கின்றனர்.
இந்த நிலையில் இருக்கும் மக்களிடம், மோடி, அசவுகரியங்களை மட்டும் நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், உங்கள் எதிரிகளை அரசு எந்திரத்தை ஏவி ஒழித்துவிட்டு, உங்களுக்கு சில நிவாரணங்களைமீட்பராகிய ரட்சகராகியநானே அளிக்கிறேன் என்றார்.
இந்த கருத்து, கருப்பு பணத்திற்கு எதிரான, ஊழலுக்கு எதிரான போர் என்ற கருத்து, நல்ல கருத்துதான், இந்த எண்ணம், நல்ல எண்ணம்தான் என, மம்தா, கெஜ்ரிவால் நீங்கலான அரசியல் கட்சிகள், மின்னணு, அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் பேசினார்கள். காங்கிரஸ் துவங்கி திமுக வரை, நல்ல கருத்துதான், நல்ல எண்ணம்தான் என ஒப்புக்கொண்டு, அமலாக்கம் சரி இல்லை என இழுத்தார்கள்.
நாட்டு மக்கள் முன்பு, ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்ற முடிவின் அமலாக்கம், இந்த முடிவின் தாக்கம் (இம்ப்ளி மெண்டேஷன், இம்பாக்ட்) ஆகியவை மட்டும் விவாதத்துக்கு வந்தன. கருத்தும் நோக்கமும் (அய்டியா, இன்டென்ட்) பெருமளவுக்குக் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மக்கள் ஏன் மவுனமாய் மனப்புழுக்கத்தோடு நடமாடுகிறார்கள், ஏன் வெடிப்புக்கள் கலகங்கள் எழவில்லை எனக் கேட்பவர்கள், மேலே உள்ள விஷயத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் செய்வதாக மக்கள் நம்புகிறார்கள்தொழிலதி பர்களும் பணக்காரர்களும் மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர் என மக்கள் நம்புகிறார்கள். நாம்தான் வரிகள் கட்டுகிறோம், விதிகள்படி நடக்கிறோம், பணக் காரர்கள் வரி கட்டுவதில்லை, விதிகள் படி நடப்பதில்லை என நம்புகிறார்கள். மக்களின் இந்த நம்பிக்கைகளுக்கும் நிஜவாழ்க்கைக்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு. ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தால், பணக்காரர்கள் தூக்கம் இழப்பார்கள், நிம்மதியைத் தொலைப்பார்கள். கண்ணீர் சிந்துவார்கள், நீங்கள் எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களை மனதில் கொண்டு, கொஞ்சம் அசவுகரியங் களைத் தாங்கிக் கொள்ளுங்கள் என மோடி மக்களிடம் சொன்னபோது மக்கள் யோசிக்கவே செய்தார்கள். தயங்கினார்கள். குழம்பினார்கள்.
ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்ற முடிவின் அமலாக்கம் மக்கள் வாழ்வின் மீது நாசகரமான தாக்கத்தைச் செலுத்தத் துவங்கிவிட்டது. திருமணங்கள், இழவுகள், கல்வி, மருத்துவச் செலவு, வியாபாரம், விவசாயம், வேலை, கூலி எல்லாமே பாதிக்கப்படுகின்றன. நாட்டின் கணிசமான பகுதி மக்கள், ‘உங்கள் பணம் உங்களுக்குக் கிடைக்காதுஎன நாள் கணக்கில் பல மணி நேரம் வரிசைகளில் அலைகழிக்கப்படுவதை வெறுக்கிறார்கள். ஒரு சிறுபிரிவினர் மத்தியில் இருந்த, ‘புனிதப் போரில்பங்கேற்கும் பெருமிதம், நாளாக நாளாகத் தேய்ந்து கரைந்தது. பணக்காரர்கள் யாரும் துன்பப்படவில்லை, ஊழல் அழியவில்லை, கருப்புப் பணம் ஒழியவில்லை என மக்கள் காணத் துவங்கிவிட்டார்கள். இப்போது, மக்கள் மத்தியில், ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பின் முகத்திரையைக் கிழிக்க, திருப்பி அடிக்க, மக்களை அழைக்க சரியான நேரமும் வாய்ப்பும் வந்துள்ளன.
மோடி தந்திரசாலி. செப்பிடுவித்தைக்காரர். ஆட்டம் துவங்கிய பிறகு தன் வசதிக்கேற்ப ஆட்ட விதிகளை மாற்றுவதோடு மட்டும் அல்லாமல், கோல் போடும் இடத்தையே கூட மாற்றி விடுகிறார். மக்களுக்காகவும், ஊழல் பேர்வழிகளைத் குழப்பவுமே விதிகளை மாற்றுவதாக மாய்மாலம் பேசுகிறார். நம்புங்கள், நல்லதே நடக்கும் என்கிறார். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கள் ஜனவரி 4 அன்று வர உள்ள பின்னணியில், மோடி மக்களைக் கவர மக்களைத் திசை திருப்ப சில புதிய அறிவிப்புக்களை வெளியிடலாம்.
நவம்பர் 8 அன்று நரேந்திர மோடி
நாட்டு மக்களிடம் சொன்னது நடந்ததா?
மத்திய நிதி இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேகால் நாடாளுமன்ற மேலவையில் நவம்பர் 29 தந்த பதில்படி, நவம்பர் 8 அன்று ரூ.500 நோட்டுக்கள் ரூ.8.58 லட்சம் கோடி மதிப்பிலும், ரூ.1000 நோட்டுக்கள் ரூ.6.86 லட்சம் கோடி மதிப்பிலும், ஆக மொத்தம் ரூ.15.44 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தன. புழக்கத்தில் இருந்த நோட்டுக்களில் ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் 86% இருந்தன. மற்றவை வெறும் 14%. 125 கோடி மக்கள் வாழும் நாட்டில், 86% நோட்டுக்கள், செல்லாக் காசாக்கப் பட்டன. பெரிய நோட்டு = கருப்புப் பணம் = ஊழல் ஆகியவற்றை செல்லாக் காசாக்கி அழித்துவிட்டேன் என்றார் மோடி. மோடி பக்தர்கள், கருப்புப் பண மூட்டைகளிடம் ரூ.5 லட்சம் கோடியாவது தங்கிவிடும், வங்கிகளுக்கு நல்ல பணம் ரூ.10.5 லட்சம் கோடி வரை வரும், நாட்டிற்கு ரூ.5 லட்சம் கோடி லாபம் எனப் பேசினார்கள். ஜன்தன் கணக்கில் பணம், விவசாயிக்குப் பணம், ஏழைக்கு வீடு எனப் பசப்பினார்கள். (சுவிஸ் வங்கி, வெளிநாட்டு வங்கி கருப்பு பணத்தை மீட்டு, குடும்பத்துக்கு ரூ.15 இலட்சம் தருவோம் என்று மோடி சொன்னதை, பின்னர் தேர்தலுக்கு சும்மா சொன்னோம் என அமித் ஷா சொன்னார்). இப்போது டிசம்பர் 25 வாக்கிலேயே, வங்கிகளிடம் கிட்டத்தட்ட ரூ.14.5 இலட்சம் கோடி வரை திரும்ப வந்துவிட்டது. கருப்புப் பணம், ஊழல் பணம் தங்கிவிடும், திருட்டுப் பணக்காரர்கள் அழிவார்கள் என்பது எதுவும் நடக்காமல் எல்லா பணமும் திரும்பிவிட்டது.
சிதம்பரம் கேட்டார்: எலியைப் பிடிக்க ஏன் மலையை தோண்ட வேண்டும். மோடி சொன்னார்: எலிதான் ஏழைகளின் செல்வத்தைத் சூறையாடுகிறது. ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர் குருமூர்த்தி குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என அசராமல் சொன்னார்: ‘புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15.5 லட்சம் கோடியில் ரூ.5 லட்சம் கோடி வரை திரும்ப வராது என தப்பு கணக்கு போட்டு விட்டோம். அதனால் என்ன? கருப்புப் பணம் வங்கிக்குள் வந்துவிட்டது. இனி வெளியே போகும்போது கவனமாகக் கண்காணிப்போம்’. பாவம் குருமூர்த்தி. தாம் உளறுகிறோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியும் என்பது கூட அவருக்குப் புரியவில்லை.
சுழற்சியில் இருந்த ரூ.15.5 லட்சம் கோடி ரூ.1000 ரூ.500 வெள்ளை வெளேர் என வங்கிகளுக்கே வந்துவிட்டது எனும்போது, கொலைகார அறிவிப்பால் 105க்கும் மேற்பட்டவர்களை ஏன் சாகடிக்க வேண்டும்? 90 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏன் சின்னாபின்னமாக்க வேண்டும்? இங்கேதான், ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததன் பின் உள்ள உண்மையான கருத்தும் நோக்கமும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
2016 துவக்கத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், இந்திய வங்கிகள் படுகாயமுற்று ரத்தம் இழப்பதாகவும், பேண்ட் எய்ட் போட்டு சிகிச்சை செய்ய முடியாது என்றும் அபாய அறிவிப்பு தந்தார். 31.12.2015 நிலவரப்படி பங்குச் சந்தையில் பதிவாகி இருந்த 24 தேசிய வங்கிகளின் சந்தை மதிப்பு ரூ.2,62,955 கோடி. ஆனால் அவர்களின் செயல்படா சொத்துக்கள் (வாராக் கடனாக மாறக் கூடியவை) ரூ.2,93,035 கோடியாகும். 2014 - 2015 கணக்குப்படி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ரீஸ் ரூ.1,57,070 கோடி, அனில் அம்பானியின் நிறுவனம் ரூ.1,24,966 கோடி, ரூயா சகோதரர்களின் எஸ்ஸôர் நிறுவனம் ரூ.1,01,461 கோடி, அனில் அகர்வாலின் வேதாந்தா ரூ.1,03,340 கோடி, கவுதம் அதானியின் நிறுவனம் ரூ.96,031 கோடி, டாடா ஸ்டீல் ரூ.8,701 கோடி, மனோஜ் கவுரின் ஜேபி நிறுவனம் ரூ75,163 கோடி, சஜ்ஜன் ஜிண்டாலின் நிறுவனம் ரூ.58,171 கோடி, எல்எம் ராவின் லேன்கோ ரூ.47,102 கோடி, ஜி.எம்.ராவின் ஜி.எம்.ராவ் குரூப் ரூ.47,976 கோடி, வி எம் வீடியோகான் ரூ.45,400 கோடி, ஜிவிகே ரெட்டியின் ஜிவிகே குரூப் ரூ.33,933 கோடி என ஒரு டஜன் தொழிலதிபர்களின், டாப் 12 பேரின் வங்கிக் கடன்கள் ரூ.10,01,304 கோடி இருந்தது. நோயுற்ற உடலுக்கு, காயமுற்ற மனிதர்களுக்குச் சில நேரம் மொத்த இரத்தமும் மாற்றப்படும் (ஆப்ர்ர்க் ற்ழ்ஹய்ள்ச்ன்ள்ண்ர்ய்). இப்போது மக்களின் வங்கிப் பணம் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் போய் வங்கிகள் திவாலாகும் நிலை வந்ததால், கார்ப்பரேட்களுக்கு கடன் தரும் வங்கிகளின் ஆற்றலை அதிகரிக்க, திரும்பவும் மக்கள் கைகளில் இருக்கிற மொத்தப் பணத்தையும் ஒட்ட வழித்து எடுத்துக் கொண்டுவிட்டார் நரேந்திர மோடி. இந்த மூலதனச் சேவையை மறைக்க, திசை திருப்ப, கருப்புப் பண ஒழிப்பு நாடகம் ஆடினார். அப்படியே, இந்த நாடகம் மூலம், உத்தரபிரதேசம், உத்தர்கண்ட், பஞ்சாப் தேர்தல்களில் அரசியல் ஆதாயம் அறுவடை செய்ய முயன்றார்.
டிசம்பர் துவக்கத்திலேயே ரூ.15.5 லட்சம் கோடியும் வெள்ளையாகத் திரும்பும் என மோடிக்கும் அருண் ஜெட்லிக்கும் தெரிந்துவிட்டது. அதனால் ஆட்டத்தில் கோல் போடும் இடத்தை மாற்றிவிட்டார்கள். ரூ.1000 ரூ.500 செல்லாது என்ற அறிவிப்பு, இந்தியாவை ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்றார்கள். எல்லா பரிமாற்றங்களும் மின் அணுப் பரிமாற்றங்கள் ஆகும், ஊழல் கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்றார்கள். உலகத்திலேயே ஊழல் மிதமிஞ்சிப் போய் பொருளாதாரத்தை நாசமாக்கும் நைஜீரியாவில், ரொக்கமில்லாப் பொருளாதாரம்தான் உள்ளது.
உலக மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததால், தேவை சுருங்கிப் போனதால், மூலதனம், தொழில்களில் சேவைகளில் முதலீடு செய்வது சிரமமாகிறது. அது ஊகவணிக சூதாட்டத்தில் ஈடுபடுகிறது. அது போக, நிதி மூலதனம்  இறையாளுமை கொண்ட எல்லா நாடுகளையும் மிரட்டிப் பணிய வைத்து, இது வரை இல்லாத இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைகிறது. மோடியும் ஜெட்லியும் பாஜகவும் சிறுவர்த்தகர்களின் ஆட்கள் என நினைப்பவர்கள் ஏமாளிகள். அவர்கள் நிதி மூலதன விசுவாசிகள். நிதி தொழில்நுட்ப (ஊஐசஅசஇஐஅக பஉஇஏசஞகஞஎவ) நிறுவனங்கள் வளர எல்லா வாய்ப்புகளும் தருகிறார்கள். பேடிஎம், மாஸ்டர் கார்ட், விசா, மொபிகுவிக் ஆகிய நிறுவனங்களின் வியாபாரம் பெருகும்; நவம்பர் 8க்குப் பிறகு பேடிஎம்முக்கு ஒவ்வொருநாளும் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பணம் ஆன டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மூலம் அமேசான், பிளிப்கார்ட் போன்றோர் வியாபாரம் பெருகும். உலக நிதி மூலதனச் சுழற்சிக்கு வெளியே உள்ள மாபெரும் இந்தியச் சந்தையை மிச்சமில்லாமல் நிதி மூலதனம் கைப்பற்ற மோடி வழியமைத்துள்ளார்.
கருத்தும் நோக்கமும் தவறு என்பது புரிகிறது. கருப்புப் பணமும் ஊழலும் எப்படித்தான் உருவாகின்றன?
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முறையான, சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு அக்கம்பக்கமாகவே அவற்றோடு சேர்ந்தே கருப்புப் பணமும் சட்டவிரோதச் செல்வமும் உருவாகிறது. அது அப்படியே கோணிப் பையில், தலையணையில், இரகசிய அறைகளில் இருக்காது. பணம், திரும்பவும் பணம் பண்ணும். அது ரவுண்ட் ட்ரிப் அடிக்கும்.
அனில் அம்பானியின் கணக்கு காட்டாத பணம் (கருப்பு) லண்டன் போய், அங்கிருந்து இந்தியாவுக்கு முதலீடாக வரும். வரவு செலவு கணக்கு, மூலப்பொருட்கள் இயந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்குவதில் விற்பதில் அண்டர் இன்வாய்சிங், ஓவர் இன்வாய்சிங் தில்லுமுல்லுகள் என கருப்புப் பணம், சட்ட விரோதச் செல்வம் உருவாகிறது. இந்திய பங்குச் சந்தைகளில், பி நோட் என்கிற பார்ட்டிசிபேட்டரி நோட்கள் மூலம், மூலதனம் நுழைகிறது. முதலீடு போடப்படுகிறது. இது யாருடைய பணம் எனக் கண்டறிய சட்டத்தில் இடமில்லை. இந்த கருப்புப் பணம் மீது மோடி கை வைத்தால், அவர்கள் மோடி ஆட்சி மீது கை வைத்து விடுவார்கள்.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் மோடிஉணர்ச்சி வசப்பட்டு’, பங்குச் சந்தைகளில் ஆதாயம் அடைபவர்கள், நாட்டிற்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார். பங்குச் சந்தை கொந்தளித்தது. மோடி சொன்னதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள், கேப்பிடல் கெய்ன்ஸ் வரி போடும் எண்ணம் ஏதும் இல்லை என, அருண் ஜெட்லி, மறுநாளே அவசரஅவசரமாய்த் தெளிவுபடுத்தினார்.
இறுதி ஆராய்ச்சியில், முதலாளித்துவப் பொருளாதாரம், தான் உரசல் இல்லாமல் இயங்க, முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு, தளபதிகளுக்கு, நீதிமான்களுக்கு, கீரிஸ் எண்ணெய் போல் ஊழல் வருமானத்தை, செல்வத்தை தேடித் தரும். முதலாளித்துவப் பொருளாதாரம் உள்ள வரை, முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்தில் உள்ள வரை, கருப்புப் பணமும் ஊழலும் தொடரும்.
மோடியால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்கள் உள்ளன. இந்திய மக்கள் தொகையில், 1% மட்டுமே உள்ள பணக்காரர்க ளிடம், 125 கோடி பேரில் ஒரு கோடியே 25 லட்சம் பேர் கைகளில், நாட்டின் 58.4% செல்வம் உள்ளது. 50% மக்களிடம், 62.5 கோடி பேரிடம் 1% செல்வம் உள்ளது. கருப்புப் பண ஒழிப்பு, வரி ஏய்ப்பு தடுப்பு பற்றி பேசும் மோடி, 2005ல் இருந்து 2017 வரை சிங், மோடி ஆட்சிகளில் ரூ.42 லட்சம் கோடி தொகை, கார்ப்பரேட் வருமான வரி, சுங்கவரி, கலால் வரி என பணக்காரர்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என்பதை மறைத்து கூரை ஏறிக் கூப்பாடு போடக் கூடாது.
கடைசி கடைசியாய் பார்க்கும் போது, ஏழை எளிய உழைக்கும் மக்கள், நடுத்தர மக்கள், தெரு ஓர வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வயிற்றில் அடித்து, அவர்கள் வருமானம் மற்றும் செல்வத்தைப் பிடுங்கி, அரசியல் அதிகாரம் துணை கொண்டு, அவற்றை சில பணக்காரர்கள் கைகளில் மறுவிநியோகம் செய்வதற்கான, ஒரு பெரிய தாக்குதலே, ரூ.1000 ரூ.500 செல்லாது என்ற அறிவிப்பாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மோடி சசிகலா தலையில் கை வைத்து ஆசி வழங்கியபோது, பன்னீர் செல்வத்தை ஆரத் தழுவி ஆறுதல் சொன்னபோது, அவரது ஊழல் எதிர்ப்புப் போராளி முகத்திரை கிழிந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு, நாணய மதிப்பகற்றல் நடவடிக்கை மூலம், அவர்கள் வாழ்வோடு விளையாடிய மோடி அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் கடமையோடு, சாதி ஆதிக்க, ஆண் ஆதிக்க, மதவெறி பாசிச பாஜக, தமிழ்நாட்டில் காலூன்றாமல் தடுக்கும் கடமையும் காத்திருக்கிறது

Search

Loading...